My Dream Boy..!
‘மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே!’ இந்த வரிகள் வந்தாலே தனுஷ் முகத்தையும் முந்திக்கொண்டு வந்து நிற்பது அழகிய மேகா ஆகாஷ் முகம்தான். முதல் படத்திலேயே உச்சரிப்புடன் தமிழில் வசனங்கள், க்ளோஸ் அப் காட்சிகளில் கூட முகபாவங்களில் தெளிவான உணர்வுகள் என தனித்துவமான நடிப்பில் தமிழக இளைஞர்களுக்கும் கனவுக் கன்னியாக மாறியவர் மேகா ஆகாஷ். ‘ஹாய்’ சொன்னோம். சல்மான்கான் உடன் இந்திப் படம், தெலுங்கில் சொந்தக் குரலில் டப்பிங்... மாஸ் காட்டுறீங்களே?
ரொம்ப ஜாலியா ஒரு படம், சல்மான்கான் சாருடன் ‘ராதே’ படத்தில் நடிச்சேன். கார்ப்பரேட் ஆபீஸில் வேலை செய்வது போல் குறிப்பிட்ட நேரம் மட்டுமே பாலிவுட்டில் ஷூட்டிங்.
சல்மான்கான் சார்... அவ்ளோ பெரிய இந்தியன் ஸ்டார். ஆனாலும் அதை எப்பவும் காட்டிக்கவே மாட்டார். ரொம்ப ஃப்ரெண்ட்லியா எல்லார்கிட்டயும் ஜாலியா பழகுவார்.
தெலுங்கில் இப்பதான் முதல் ப்ராஜெக்ட்டான ‘பூ’ (Boo) ஆன்தாலஜி படத்தில் டப்பிங் பேசி நடிச்சேன். இயக்குநர் விஜய் சார் டைரக்ஷன் என்கிறதால் அந்த வாய்ப்பு கிடைச்சது. அப்பா தெலுங்கு, அதனால் தெலுங்கு நல்லா பேசுவேன்.
நீங்களே டப்பிங் பேசும்போது கிடைத்த பலன்கள் என்ன?
ஒரு காட்சியிலே என்ன உணர்வுகளை நான் கொடுத்து நடிச்சேன்னு எனக்குதான் தெரியும். நானே டப்பிங் பேசும்போதுதான் என் கேரக்டர் முழுமையாகும்.அதற்காக டப்பிங் ஆர்டிஸ்ட்களையும் நாம குறை சொல்லிடவே முடியாது. நம்மை விடவும் திறமைசாலிகள். ஆனாலும் நமக்கான அங்கீகாரம் நாம டப்பிங் பேசி நடிக்கும்போதுதான் கிடைக்கும். அந்த வகையில் என் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி, நான் பிறந்தது சென்னை. படிப்பிலும் இந்தி இருந்தது. ஸோ, தமிழ், இந்தி ,தெலுங்கு, மலையாளம், இங்கிலீஷ் நல்லா பேசவும் எழுதவும் செய்வேன். தமிழில் நடித்த அத்தனை படங்கள் அண்ட் வெப் சீரிஸில் சொந்தக் குரலில் டப்பிங் பேசினேன். தெலுங்கிலும் இப்பதான் ஆரம்பிச்சிருக்கேன். மொழி புரிஞ்சு ஒரு படத்துல நடிக்கும்போதுதான், இயக்குநர் என்ன நினைக்கிறாரோ அதை நடிப்பில் முழுமையாகக் கொண்டு வர முடியும்.
‘மழை பிடிக்காத மனிதன்’?
விஜய் ஸ்கொயர்ட்ன்னு சொல்லலாம். விஜய் மில்டன் சார் மற்றும் விஜய் ஆண்டனி ரெண்டு பேர் கூடவும் வேலை செய்திருக்கேன். மில்டன் சார் படு டெடிகேஷனான நபர். டப்பிங்கில் கூட அவரே உட்கார்ந்து ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து பேச வைப்பார். அதனாலேயே எனக்கு காட்சிகளா பார்க்கும் போதே சினிமாவைத் தாண்டி இயல்பானதா இந்தப் படம் தோணுச்சு.
விஜய் ஆண்டனி சாருடைய பொறுமையை நான் இது வரைக்கும் யார்கிட்டேயும் பார்த்ததில்லை. எனக்குத் தெரிந்து அவருக்கு நடந்த பிரச்னைகள் எல்லாம் மத்த யாருக்கும் வரக்கூடாது. ஒருவேளை வந்தா இவ்வளவு சீக்கிரம் தன்னை ஆறுதல்படுத்தி, இவ்வளவு பாசிட்டிவா கம் பேக் கொடுப்பாங்களா என்பது சந்தேகம்தான்.சின்னக் குழந்தைகள் ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசினா கூட கேட்கற அத்தனை கேள்விக்கும் பதில் சொல்லிட்டு இருப்பார். செம ஃப்ரெண்ட்லி.
விஷுவல் கம்யூனிகேஷன் மாணவி... எப்ப கதை, திரைக்கதை பக்கம் வரப்போறீங்க?
ஹையோ! அதெல்லாம் பெரிய வேலை. அதிலும் கேப்டன் ஆஃப் த ஷிப் இயக்குநர் வேலை. அந்த வேலை எல்லாம் செய்ய நிறைய அனுபவம் வேணும். என்னதான் அப்பா, அம்மா விளம்பர ஃபீல்டில் இருந்தாலும் நான் அந்த ரிஸ்க் எல்லாம் எடுக்க மாட்டேன்.
பாடகியாக அடுத்த பாடல் எப்போது?
இதே கேள்வியை நான் விஜய் ஆண்டனி சார்கிட்டயும் கேட்டேன். ‘சார் குரல் நல்லா இருக்குன்னு சொல்லிட்டே இருக்கீங்க, எப்போ வாய்ப்பு கொடுக்கப் போறீங்க’ன்னு. ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ படத்தில் ‘ஸ்மார்ட் போன் செனோரிட்டா...’ பாடல் பாட வாய்ப்பு கொடுத்தார் மியூசிக் டைரக்டர் லியான் ஜேம்ஸ். இதுவே எதிர்பார்க்காம நடந்தது. பார்க்கலாம், நானும் அடுத்த பாடலுக்காகக் காத்திருக்கேன்.
ஓடிடி புரிதல் இல்லாத காலத்திலேயே நீங்க ரிஸ்க் எடுத்தீங்க... எப்படி?
எனக்கு எல்லாமே நடிப்புதான். எந்த பிளாட்ஃபார்ம் என்கிற கேள்வி எல்லாம் கிடையாது. உலகமே அடுத்து என்னன்னு யோசிச்சிட்டு இருக்கும் போது எனக்கு குறைந்தபட்சம் வாய்ப்புகளாவது வருதே என்கிற எண்ணம் இருந்தது.
அதேபோல் வந்த ப்ராஜெக்ட்களும் வெறுமனே கதைகளாக வரலை. எல்லாமே நல்ல மேக்கிங், பெரிய நடிகர்கள், டெக்னீஷியன்கள் பட்டியல்... இப்படிதான் எனக்குத் தேடி வந்தது. தொடர்ந்து நடிக்கணும். சினிமாவில் நம்மை நிலை நிறுத்திக்கணும். அதற்கு எந்த மீடியமா இருந்தா என்ன? இப்பவும் தெலுங்கில் ஒரு வெப் சீரிஸ் நடிக்கிறேன். இளைஞர்களின் ட்ரீம் கேர்ள் நீங்க... உங்க ட்ரீம் பாய் எப்படி இருக்கணும்?
டெம்ப்ளேட் பதில்னு நினைக்காதிங்க... ஆனால், உண்மை இதுதான். நல்லவரா இருக்கணும், நம்மை எதிலும் அடக்கணும்ன்னு நினைக்கக் கூடாது. ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சுக்கிற பக்குவம் இருக்கணும். இந்தக் குவாலிட்டீஸ் இருந்தாலே போதும்.
அடுத்தடுத்த படங்கள்..?
‘மழை பிடிக்காத மனிதன்’ ரிலீஸ் ஆகிடுச்சு. அடுத்து தெலுங்கில் ‘சர்வம் சக்தி மயம்’ சீரிஸ் மற்றும் ‘ 47 டேய்ஸ்: த மிஸ்டரி அன்ஃபோல்ட்ஸ்’ படம் இயக்கின பிரதீப் மட்டல்லி இயக்கத்தில் ‘விகடகவி’ சீரிஸ் வேலைகள் முடிஞ்சு கூடிய சீக்கிரம் ரிலீஸ் ஆகப் போகுது. தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கில் சில ப்ராஜெக்ட்களில் நடிச்சிட்டு இருக்கேன். ஆனால், இன்னும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட ரிலீஸ் ஆகாத சூழல்... இப்போதைக்கு பெயர் சொல்ல முடியாது. விரைவில் அறிவிப்பு வரும்.
ஷாலினி நியூட்டன்
|