மினிமம் பேலன்ஸ்...கொள்ளையா அல்லது நடவடிக்கையா..?
கடந்த 2023 - 24 நிதிஆண்டில் 11 பொதுத்துறை வங்கிகள் தமது வாடிக்கையாளர்களிடம் இருந்து சுமார் ரூ.2,331 கோடி ரூபாயை மினிமம் பேலன்ஸ் வைக்கவில்லை என்ற காரணத்தால் அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பிடித்துள்ளது.கடந்த நிதியாண்டை விட இது 25.63% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.5,614 கோடி ‘மினிமம் பேலன்ஸ்’ கணக்கில் வசூல் செய்துள்ளது.
இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய இணை (நிதி) அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கடந்த 5 ஆண்டுகளில் ரூ.8500 கோடியை மினிமம் பேலன்ஸ் இருப்பு வைக்காத மக்களிடம் வசூல் செய்ததாக தெரிவித்துள்ளார்.ஒன்றிய பாஜக அரசு ஆட்சி அமைத்த சில மாதங்களில் மக்களின் சேமிப்பு பணத்தை வங்கிக்கு கொண்டு வர அனைவரும் வங்கிக் கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்றது.
அடித்தட்டு மக்களும், ‘100 நாள் வேலை உள்ளிட்ட பணத்தை வங்கிக் கணக்கில் போடப்படும்’ என அரசு அறிவித்த காரணத்தால் வேறு வழியின்றி நம்பி வங்கிக் கணக்கைத் தொடங்கினர். நூறு நாள் வேலை, சிலிண்டர் மானியம், உர மானியம் உள்ளிட்ட மானியங்களை வங்கிக் கணக்கில் அரசு செலுத்த ஆரம்பித்தது.
தொடக்கத்தில் வந்த கேஸ் மானியம் 450 ரூபாய்! இது சுருங்கி இன்று 25 ரூபாய்க்கு வந்திருப்பதை அனைவரும் அறிவோம். பல மாநிலங்களில் சரியான தேதியில் நூறு நாள் வேலைக்கான சம்பளம் வரவு வைக்கப்படவில்லை.
இதனால் பல நேரங்களில் மக்களின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாத நிலையே இருந்தது.இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள ஒன்றிய அரசு முடிவெடுத்தது. மினிமம் பேலன்ஸ் மெயிண்டைன் பண்ணாத வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும் என நவம்பர் 2014 அன்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த ஏப்ரல் 2024 வரை ரூ.21,000 கோடி அபராதமாக ஏழை மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளது.பொதுத்துறை வங்கிகளே இப்படி செய்யும்போது தனியார் வங்கிகள் சும்மா இருக்குமா? இந்த ‘நல்வாய்ப்பை’ பயன்படுத்தி அவர்களும் மினிமம் பேலன்ஸ் அபராதம் விதித்து மக்களிடம் வசூலிக்கத் தொடங்கியுள்ளனர்.
அதே நேரம் கடந்த 10 ஆண்டுகளில், அதாவது பாஜக பதவிக்கு வந்தது முதல், கார்ப்பரேட்டுகளுக்கு எண்ணற்ற சலுகைகளை அளித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் 35 சதவீதமாக இருந்த கார்ப்பரேட் வரியானது, பாஜக ஆட்சியில் 26 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. ஆனால், மக்களைப் பாதிக்கும் தனிநபர் வருமான வரியின் பங்கு 21 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜான்சி
|