சும்மா வாட்டமா இருக்குறியே வாட்டர் பாக்கெட் மூஞ்சி!



‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ ப்ளாக் பஸ்டர் படமாக வசூல் சாதனை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இதற்கு ஈடாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வேற லெவல் என்பதோடு செம வைரல். சந்தோஷ் நாராயணன், ஸ்வேதா மேனன் பாடிய ‘வாட்டர் பாக்கெட்...’ பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடலை எழுதியவர் கானா பாடகர் கானா காதர். திரையில் இதுதான் இவருக்கு முதல் பாடல்!

கானா காதர் - அறிமுகம் ப்ளீஸ்?

பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னைல. குழந்தையாக இருக்கும்போதே அப்பா, அம்மாவை இழந்துவிட்டேன். என்னையும் என் சகோதரர்களையும்  பாட்டிதான் வளர்த்தார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக எட்டாம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடர முடியவில்லை. நடைபாதை செருப்புக் கடையில் ஐம்பது ரூபாய் சம்பளத்தில் வாழ்க்கை ஆரம்பிச்சது. ஒரு வேளை உணவுக்கு கஷ்டப்பட்ட காலங்களையும் கடந்து வந்துள்ளேன். இப்போது எனக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். பெயிண்ட் வேலைக்கு சென்றுதான் குடும்பத்தை நடத்துகிறேன்.

பிரபல கானா பாடகர்கள் பழனி, புண்ணியர், அந்தோணி ஆகியோரை சிறுவயதிலிருந்து கேட்டு வளர்ந்தவன் நான். விளைவு... வீட்ல இருக்கிற தட்டு முட்டு சாமான்களை கையிலெடுத்து நானே சொந்தமாக கானா பாடல்கள் பாட ஆரம்பிச்சேன். புகழ் பெற்ற கானா பாடகர் டோலக் ஜெகன் எனக்கு முதன் முறையாக ஒரு வாய்ப்பு கொடுத்தார். அது ஒரு சாவு வீடு. தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பாட வாய்ப்பு கிடைச்சது.ஒரு கட்டத்தில் ஃபிரெண்ட்ஸ், அம்மா, தல - தளபதி என தனிப் பாடல்கள் பாட ஆரம்பிச்சேன். அந்தப் பாடல்கள் பல மில்லியன் பார்வையாளர்களைச் சென்றடைந்தது.

சினிமா மீது ஆர்வம் எப்படி?

சினிமாவில் நடிகராக வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. கெளதம் கார்த்திக் நடித்துள்ள ‘சிப்பாய்’ படத்தில் எனக்கு முக்கியமான ரோல் கொடுத்தார்கள். ‘சிலம்பாட்டம்’ சரவணன் இயக்கியுள்ள படம் அது. அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. தொடர்ந்து பல கம்பெனிகளில் வாய்ப்பு தேடி அலைந்தேன். எதுவும் ஒர்க் அவுட்டாகவில்லை. கானா கச்சேரி, கூலி வேலை என மறுபடியும் பழைய வாழ்க்கையை தொடர ஆரம்பிச்சேன்.

சினிமா சான்ஸ் தேடும்போது குடும்பம் நடத்த சிரமமா இருக்கும். பாட்டுப் பாடினா பிழைக்க முடியுமா, வேலைக்கு எங்கேயாவது போலாமேன்னு அக்கம்பக்கத்துல சொன்னாலும் என் மனைவி என் மீது நம்பிக்கை வெச்சு ‘உங்க விருப்பப்படி செய்யுங்க’ன்னு சுதந்திரம் கொடுத்தார். கிடைக்கும் சொற்ப வருமானத்துல சிக்கனமா குடும்பம் நடத்தினார். 

‘ராயன்’ வந்த பிறகு என் வாழ்க்கையில் வெளிச்சம் வீச ஆரம்பிச்சிருக்கு. இப்போது பேசாதவங்க பேசுறாங்க, போன் பண்ணாதவங்க போன் பண்றாங்க. ஏரியாவுக்கே பெருமை சேர்த்துட்டேன்னு மனசார பாராட்டுறாங்க. இந்தப் பெருமை எல்லாம் ‘சன் பிக்சர்ஸ்’, தனுஷ், ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்தது. அதை வாழ்நாளுக்கும் மறக்க முடியாது.

‘ராயன்’ வாய்ப்பு பற்றி சொல்லுங்க..?

எதிர்பார்க்காத வாய்ப்புன்னுதான் சொல்லணும். தனுஷ் சாரின் உதவி இயக்குநர்கள் வட சென்னையில் ஃப்ரெஷ்ஷா கானா பாடகர்கள் இருக்கிறார்களா என்று விசாரிக்க வந்துள்ளார்கள். அப்போது என்னுடைய நண்பர் என்னைக் குறித்து சொல்ல, தனுஷ் சார் உதவியாளர்கள் எனக்கு போன் பண்ணினார்கள். அப்போது நான் தூக்கத்தில் இருந்ததால் ஃபோன் எடுக்க முடியவில்லை. பிறகு நடந்த விஷயத்தை நண்பர் சொன்னார்.ஆனாலும் நான் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில், அதற்கு முன் சினிமாவில் எனக்கு ஏற்பட்ட முன் அனுபவங்கள்தான் காரணம்.

பிறகு ஆடிஷனுக்காக தனுஷ் சார் ஆபீஸ் போனேன். லவ் கான்செப்ட்ன்னு சொன்னார்கள். முதல் சிச்சுவேஷன் கேட்டு அடுத்த நாளே எழுதிக் கொடுத்துவிட்டேன். அதன் பிறகு பாடல் பற்றி அப்டேட் இருக்கிறதா என்று அடிக்கடி தனுஷ் சார் டீமிடம் கேட்பேன். ஒரு நாள் ‘சன் பிக்சர்’ஸில் இருந்து ப்ரொமோஷனுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் சார் ஸ்டூடியோவுக்கு வாங்கன்னு சொன்ன பிறகுதான் என்னுடைய பாடல் வரப்போகுதுன்னு தெரிஞ்சது.

ஏ.ஆர்.ரஹ்மான் - தனுஷ் என்ன சொன்னார்கள்?

ப்ரொமோஷனுக்கான வீடியோவை ஷூட் பண்ணும்போதுதான் ரஹ்மான் சாரையும், தனுஷ் அண்ணனையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது. ஸ்டூடியோ கதவைத் திறந்து உள்ளே போனதும் இருவரும் சிரிச்ச முகத்தோட வரவேற்பு கொடுத்தாங்க. நான் எழுதிக் கொடுத்த பாடலை அப்படியே யூஸ் பண்ணியிருந்தாங்க. பாடல் எழுதிய விதம் குறித்துதான் அதிகமாக பேசினார்கள். அவர்கள் நினைத்திருந்தால் பாடலுக்கான கிரெடிட் மட்டும் கொடுத்திருக்கலாம்.

ஆனால், என்னை நேரில் வரவெச்சு வீடியோ எடுத்து தெரு முனைகளில் பாடிக் கொண்டிருந்த என்னை உலகம் முழுசும் தெரியும்படி முகவரி கொடுத்துள்ளார்கள். இதை வெச்சு சினிமாவுல ஜெயிச்சுடலாம் என்ற நம்பிக்கை அதிகமாகியுள்ளது. ரஹ்மான் சார், குடும்பத்தைக் குறித்து அதிகமாக விசாரிச்சார். என்னுடைய இயல்பான பேச்சைக் கேட்டு உங்களுக்கு ஹியூமர் சென்ஸ் நல்லாயிருக்குன்னு பாராட்டினார்.

ஒரு கானா பாடல் பாடச் சொன்னார். ‘சிலாக்கி சில்பி...’ என்ற கானா பாடலைப் பாடிக் காட்டினேன். அது மட்டுமல்ல, ஆடியோ நிகழ்ச்சியிலும் என்னை மேடை ஏற்றி அறிமுகம் செய்து வைத்தார். அந்த நிகழ்ச்சிக்கு என்னுடைய மாமனார், மாமியார் என குடும்பம் சகிதமா சென்றேன். விழாவில் என்னைப் பற்றி பேசியதில் எல்லோருக்கும் மகிழ்ச்சி.

சினிமாவில் எனக்கு கிடைச்ச இந்த வாய்ப்பு பெரிய கிஃப்ட். மலேஷியா, சிங்கப்பூர் என பல நாடுகளிலிருந்து கூப்பிட்டு பாராட்டுறாங்க. தியேட்டர்ல ரசிகர்கள் படத்தை கொண்டாடுகிறார்கள். தனுஷ் சார் ரசிகர்கள் ‘வாட்டர் பாக்கெட்...’ பாடல் செம வைப்ன்னு உற்சாகத்துல துள்ளினார்கள்.இப்போது நிறைய வாய்ப்புகள் வருது. பிரபல இசையமைப்பாளர்கள் இசையில் சில பாடல்களை எழுதி பாடியிருக்கிறேன். பாடுவதோடு மட்டுமல்லாமல் நடிகனாகவும் பேர் வாங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

செய்தி: எஸ்.ராஜா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்