இந்தியாவில் No peace..? சுட்டிக் காட்டுகிறது ஆய்வு



சமீபத்தில் உலக அமைதிக்கான குறியீட்டு தரவரிசையை வெளியிட்டுள்ளது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம். இதில் இந்த ஆண்டு இந்தியா 116வது இடத்தைப் பிடித்து கொஞ்சம் முன்னேற்றம் கண்டுள்ளது.  இன்று உலகளவில் ஆங்காங்கே போர்கள் நடந்து வருகின்றன. ஒருபுறம் ரஷ்யா - உக்ரைன் போர் உக்கிரமாக நடக்கிறது என்றால் மறுபுறம் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் - இஸ்ரேல் இடையிலான போர் படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

இதுதவிர மியான்மர், சூடான், சோமாலியா, புர்க்கினோ ஃபாசோ உள்ளிட்ட நாடுகளில் உள்நாட்டுப் போரால் பலர் மடிந்துள்ளனர். கூடவே இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் எல்லைப் பிரச்னையால் நடக்கும் மோதல்கள் இன்னும் இறப்பின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. ஒரு செய்திக்குறிப்பின்படி, கடந்த 2023ம் ஆண்டு மட்டும் உலகில் போர் மற்றும் வன்முறை மோதல்களால் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் மடிந்துள்ளதாகத் தெரிகிறது. ஆக, உலகமே அமைதியின்மையால் வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில்தான் இந்த அமைதிக்கான குறியீட்டுத் தரவரிசை வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வரும் இந்தத் தரவரிசை, ஒரு நாட்டின் பல்வேறு விஷயங்களைக் கவனத்தில் எடுத்துக் கொண்டே வெளியிடப்படுகிறது. குறிப்பாக, உள்நாட்டு மோதல்களின் எண்ணிக்கை மற்றும் அதன் கால அளவு, இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை, வெளிநாடுகளுடனான மோதல்களின் எண்ணிக்கை மற்றும் அதன் இறப்புகள், அண்டை நாடுகளுடனான உறவுகள், சமூகத்தில் உள்ள குற்றச் செயல்பாடுகள், அரசியல் ஸ்திரமின்மை, பயங்கரவாதத்தின் தாக்கம், கொலைகளின் எண்ணிக்கை, வன்முறைகளின் நிலை, சிறையில் உள்ளவர்களின் எண்ணிக்கை, மக்களின் மகிழ்ச்சி விகிதம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இராணுவத்திற்கான செலவு, ஐநா அமைதி காக்கும் பணிகளுக்கான நிதிப் பங்களிப்பு, அந்த நாடு வைத்துள்ள அணு மற்றும் கனரக ஆயுதங்களின் திறன்கள் எனப் பல்வேறு விஷயங்கள் பட்டியலிடப்படுகின்றன.

இதன்படி 2024ம் ஆண்டு மனிதநேய பார்வையின் தரவுகளின் கீழ் அமைதியான நாடுகளைப் பட்டியலிட்டுள்ளது அந்தப் பொருளாதார நிறுவனம். இதில் உலகின் அமைதியான நாடு என முதலிடத்தில் ஐஸ்லாந்து உள்ளது.

கடந்த 2008ம் ஆண்டிலிருந்து ஐஸ்லாந்து தொடர்ந்து தனது முதலிடத்தைத் தக்க வைத்து வருகிறது. இதற்குக் காரணம் நிறைய இயற்கை நிலப்பரப்புகளுக்கும், முன்னோக்கிச் சிந்திக்கும் சமூகக் கொள்கைகளுக்கும் பெயர் பெற்றது ஐஸ்லாந்து.தவிர, ஐஸ்லாந்தில் நிலையான இராணுவம் கிடையாது. பாதுகாப்பிற்காக அதன் சிறிய கடலோர காவல்படையையும் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்களையுமே நம்பியுள்ளது.

அடுத்த இரண்டாவது இடத்தில் அயர்லாந்தும், மூன்றாவது இடத்தில் ஆஸ்திரியாவும், நான்காவது இடத்தில் நியூசிலாந்தும், ஐந்தாவது இடத்தில் சிங்கப்பூரும், ஆறாவது இடத்தில் சுவிட்சர்லாந்தும், ஏழாவது இடத்தில் போர்ச்சுக்கலும், எட்டாவது இடத்தில் டென்மார்க்கும், ஒன்பதாவது இடத்தில் ஸ்லோவேனியாவும் பத்தாவது இடத்தில் மலேசியாவும் உள்ளன.
மொத்தம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 163 நாடுகளில் அமைதி குறைவான நாடுகளாக கடைசி பத்து இடங்களை மாலி, இஸ்ரேல், சிரியா, ரஷ்யா, காங்கோ, உக்ரைன், ஆப்கானிஸ்தான், தெற்கு சூடான், சூடான், ஏமன் ஆகியவை பிடித்துள்ளன.

கடைசி இடத்தில் ஏமன் இருப்பதற்குக் காரணம் உள்நாட்டுப் போர்தான். அங்கு தலைநகர் சனாவைக் கைப்பற்றியுள்ள ஹவுத்தி குழுவினருக்கும் சவுதி ஆதரவு அரசுக்கும் நடக்கும் போர். இதனால், வேலையின்மை, பொருளாதாரம் சீர்குலைந்தது எனப் பல விஷயங்கள் உள்ளன. இதில் இந்தியா 116வது இடத்தில் உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு 121வது இடத்தில் இருந்தது.

அதிலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி உள்ளது. பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற அண்டை நாடுகளுடனான தனது உறவுகளில் இந்தியா தொடர்ந்து சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
அதே வேளையில் உள்நாட்டு மோதல்கள், குற்றவியல் உணர்வுகள் மற்றும் பயங்கரவாத தாக்கத்தின் குறியீடுகளில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றங்கள் கண்டுள்ளதாகக் குறிப்பிடுகிறது அந்தத் தரவரிசை.

பேராச்சி கண்ணன்