தோனி தலையைக் கோதினார்;ரஜினி அங்கிள் கூட நடிச்சத இப்போ சொல்லமாட்டேன்!
தமிழ் சினிமா பல்வேறு குழந்தை நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அவர்களில் சிலர் பின்நாட்களில் பெரிய நட்சத்திரங்களாகவும் ஜொலித்துள்ளனர்.அந்த வகையில் தமிழ்சினிமாவுக்கு குழந்தை நட்சத்திரமாக சமீபத்திய வரவு கணேஷா ஷ்யாம். ‘7ஜி’ திரைப்படம், ‘தாத்தா’ குறும்படம் போன்றவற்றில் நடித்துள்ள இவர், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். கூடவே பல்வேறு விளம்பரப் படங்களிலும் கலக்குகிறார்.
‘‘டிவிஎஸ் எக்ஸ்எல் 100 விளம்பரத்துல என்னைப் பார்த்திருக்கிறீங்களா அங்கிள்? அதுல நம்ம தோனி அங்கிள் கூட நடிச்சிருக்கேன். அவர் கிரவுண்ட்ல இருந்து வர்றப்ப, ‘அங்கிள்’னு கத்துவேனே... அது நான்தான். அவர் என் தலையில் கை வச்சிட்டு போவார்...’’ என கீச்சுக் குரலில் சொல்லும் கணேஷா ஷ்யாம், அந்த விளம்பரப் படத்தை தன் அப்பாவின் செல்போனில் போட்டு நமக்குக் காண்பித்து பூரிக்கிறார். ‘‘எங்களுக்குப் பூர்வீகம் காசர்கோடு. என் மனைவி பெயர் ரெஜிதா. 2017ல் மகன் கணேஷா ஷ்யாம் பிறந்தான். ஆரம்பத்துல நான் மகாராஷ்டிராவுல வேலை செய்தேன். இப்ப சென்னைக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகுது. இங்க விருகம்பாக்கத்தில் உள்ள வங்கியில் மானேஜராக இருக்கேன்...’’ என ஒரு சின்ன இன்ட்ரோ கொடுத்தார் கணேஷா ஷ்யாமின் அப்பா சரத்குமார். பின்னர் ஷ்யாமின் சினிமா என்ட்ரி குறித்து தொடர்ந்தார் அம்மா ரெஜிதா; ‘‘ஷ்யாமிற்கு இரண்டு வயசு இருக்கும்போது பெண் வேஷம் போட்டு சும்மா வீடியோ எடுத்தோம். அதை சமூக வலைத்தளங்களில பதிவிட்டோம். அப்ப எல்லாரும் இவனை பெண் குழந்தைனு நினைச்சிட்டாங்க. அது செமயா வைரலாச்சு. ‘மலையாள மனோரமா’ பத்திரிகையிலும் வந்தது. அப்புறம்தான் ஷ்யாமை சினிமாவில் நடிக்க வைக்கலாமானு யோசிச்சோம். எங்களுக்கும் அந்த ஆசை இருந்தது. அது நடக்குமா, நடக்காதானு எல்லாம் நினைக்காமல் ஒரு முயற்சி செய்து பார்ப்போம்னு தோணுச்சு.
அவனும் வீட்டுல நிறைய குறும்பு பண்ணுவான். அப்புறம், ரஜினி சார், கமல் சார், விஜய் சார், சூர்யா சார்னு எல்லா ஹீரோக்களின் படங்களையும் பார்த்து அதுமாதிரி நடிச்சுக் காட்டுவான். அவங்க படங்களில் வரும் பாடல்களை ரசிப்பான். டான்ஸ் பண்ணுவான். அவனுக்கும் சினிமா ஆர்வம் இருப்பது தெரிஞ்சது. அப்பதான் எங்க பக்கத்து தெருவில் சினிமா ஆபீஸ் இருப்பதைக் கேள்விப்பட்டோம். ஷ்யாம் அப்பா சரத், அவனை அழைச்சிட்டு அந்த ஆபீஸிற்குப் போனார். அங்க டைரக்டர் ஹாரூன் சார் இருந்தார். அவரிடம் ஷ்யாமிற்காக வாய்ப்பு கேட்டார். அது கிளிக் ஆச்சு.
அவரின் இரண்டாவது படமான, ‘7ஜி’யில் ஷ்யாமை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். அது ஹாரர் மூவி. நடிகை ஸ்மிருதி வெங்கட்டிற்கு மகனாக நடிச்சான். அப்ப ஷ்யாமிற்கு ஐந்து வயசுதான்.நல்லா நடிக்கிறான்னு இயக்குநர் ஹாரூன் சாரே அவனைப் புகழ்ந்து பாராட்டினார். அது எங்களுக்கு ரொம்ப பெருமையாக இருந்துச்சு. அந்தப் படம் வெளியானதும் நிறைய பேர் இவனைப் பாராட்டினாங்க.
அடுத்து, இயக்குநர் நரேஷ் சார் இயக்கிய ‘தாத்தா’ குறும்படத்துல நடிகர் ஜனகராஜ் சாரின் பேரனாக நடிச்சான். இதுக்கிடையில் அவனின் சுட்டித்தனத்தைப் பார்த்து நிறைய விளம்பரப் பட வாய்ப்புகளும் வந்துச்சு.அப்படியாக டிவிஎஸ் எக்ஸ்எல் 100 விளம்பரத்துல தோனியுடன் நடிச்சான். இதுவரை ஆறு விளம்பரப் படங்கள் பண்ணிட்டான்...’’ என அம்மா ரெஜிதா சந்தோஷமாக நிறுத்த, ஷ்யாமின் அப்பா சரத்குமார் தொடர்ந்தார்.
‘‘இந்த விளம்பரத்துல நிறைய சைல்டு ஆர்ட்டிஸ்ட்ஸ் மஞ்சள் கலர் பனியன் போட்டுக்கிட்டு நடிக்க வந்தாங்க. சென்னை நேரு ஸ்டேடியத்துல ஷூட்டிங் நடந்துச்சு. அப்ப எல்லோரும் ‘தோனி, தோனி’னு கத்துவாங்க. அவர் மைதானத்துல இருந்து பெவிலியன் நோக்கி வரும்போது இவனும் ‘தோனி அங்கிள்’னு கத்துவான். தோனி இவன் தலையைக் கோதிவிடுவார். இப்படியான காட்சியில் அழகாக நடிச்சான்.
அப்புறமாக இவனிடம் ‘ஹாய்’ சொல்லி தோனி பேசினார். ஆனா, நிறைய பேர் இருந்ததால போட்டோ எடுக்க முடியல. இப்ப ரஜினி சார் நடிப்பில் த.செ.ஞானவேல் சார் இயக்கும் ‘வேட்டையன்’ படத்துல ராணா டகுபதி சாரின் மகனாக நடிக்கிறான்...’’ என அப்பா சரத்குமார் சொல்லும்போதே இடைமறித்த கணேஷா ஷ்யாம், ராணா அங்கிள் என்கிட்ட, ‘‘உன் பேர் என்ன, என்ன படிக்கிறனு எல்லாம் கேட்டு என்னைப் பாராட்டினாங்க’’ எனச் சொல்லிச் சிரித்தார்.
‘‘இந்தப் படத்துல டைரக்டர் த.செ.ஞானவேல் சார் ஷ்யாமுடன் ரொம்ப நல்லா பழகினார். இப்ப நிறைய பட வாய்ப்புகள் வந்திட்டு இருக்கு. அதேநேரம் இவன் படிப்பும் பாழாகாமல் நல்லபடி பார்த்துக்கிறோம். நன்றாகவும் படிக்கிறான். எதிர்காலத்தில் நிச்சயம் நல்லதொரு ஹீரோவாக நடிப்பில் ஷ்யாம் முத்திரை பதிப்பான்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு...’’ என உற்சாகமாகச் சொல்கின்றனர் கணேஷா ஷ்யாமின் அப்பா சரத்குமாரும் அம்மா ரெஜிதாவும்.
ஆர்.சந்திரசேகர்
|