இறந்தவர்கள் மீண்டும் நடிப்பது வரமா... சாபமா..?



‘இவருக்கு பதில் இவர்...’ இந்த வார்த்தைகளை இந்திய சின்னத்திரை வரலாற்றில் இருந்து பிரிக்கவே முடியாது. அந்த அளவுக்கு பல வரலாறுகளை உருவாக்கிய வார்த்தைகள் இவை.
ஏதேனும் ஒரு சீரியலில் சில பல காரணங்களால் அத்தொடரில் நடித்து வரும் யாரே னும் ஒரு நடிகர் விலகினால் அவருக்கு பதிலாக அந்தக் கதாபாத்திரத்தில் வேறு ஒருவர் நடிப்பது இயல்பாகிவிட்டது.சின்னத்திரையில் மட்டுமல்ல... திரைப்படத்திலும் இப்படி நிகழ்ந்திருக்கிறது.

1976ம் ஆண்டு ‘பத்ரகாளி’ படம் வெளியானது நினைவில் இருக்கலாம். ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் சிவகுமார், ராணி சந்திரா நடிப்பில் உருவான அப்படத்தின் இறுதிக் கட்டத்தில், கதாநாயகியாக நடித்த ராணி சந்திரா கலாசார நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுப்பதற்காக தனது குழுவினருடனும் குடும்பத்தினருடனும் துபாய் சென்றார். 
கலை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 1976 அக்டோபர் 11ல் பம்பாய் வழியாக சென்னை திரும்புகையில், அவர்கள் பயணம் செய்த விமானம் தீப்பிடித்து, விமான நிலையத்திற்கு அருகே மோதி விபத்துக்குள்ளானது.ராணி சந்திரா உட்பட அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.

இதனால், அவர் நடிக்க இருந்த மீதிக் காட்சியை ஓரளவு அவரைப் போன்றே உருவ அமைப்புள்ள ‘பட்டிக்காட்டு ராஜா’ படத்தில் நடனமாடிய புஷ்பா என்ற துணை நடிகையை நடிக்க வைத்து எடுத்து முடித்தார் இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர். ஒருவேளை அந்தப் படம் இப்போது எடுக்கப்பட்டிருந்தாலோ அல்லது இப்போது இருக்கும் AI தொழில்நுட்பம் அப்போது இருந்திருந்தாலோ உருவ ஒற்றுமையுள்ளவர்களை நடிக்க வைத்திருக்க மாட்டார்கள்! மாறாக, விபத்தில் காலமான ராணி சந்திராவே இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பார்!
யெஸ். சமீபத்தில் வெளியான ‘இந்தியன் 2’ படம் அதற்கு மாபெரும் சான்று.

மறைந்த நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு, மாரிமுத்து உள்ளிட்டோரை AI தொழில்நுட்பத்துடன் திரையில் தோன்றச் செய்து ஆச்சர்யப்படுத்தினார்கள்.
உண்மையில் இந்த AI டெக்னாலஜிக்கான விதை 1927ம் ஆண்டே விதைக்கப்பட்டு விட்டது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?

ஆம். 1927ம் ஆண்டு ‘மெட்ரோபோலிஸ்’ என்னும் ஜெர்மன் படத்தில்தான் முதல் மனித ரோபோ அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகைக் கட்டி ஆள்வது போல் படம் எடுத்திருந்தார்கள். 100 வருடங்கள் முன்பே பறக்கும் கார்கள், மேலே செல்லும் மெட்ரோ ரயில்கள், மனித ரோபோக்கள்... என பல விஞ்ஞான வித்தைகள் நிறைந்த படமாக அது முத்திரை பதித்தது. இதனைத் தொடர்ந்து ஏராளமான ரோபோ, AI படங்கள் அவ்வப்போது உருவாகின.

இதன் அடுத்தகட்டமாக முந்தைய படத்தின் காட்சிகளைக் கொண்டு கிராஃபிக்ஸில் மறைந்த நடிகர் ஒருவரை மீண்டும் திரையில் தோன்றச் செய்யும் தொழில்நுட்பம் அறிமுகமானது.
உலகமே வியப்பில் விழி விரித்தது. அப்படி திரையில் தோன்றிய - ஏற்கனவே காலமான - நடிகர் வேறுயாருமல்ல... ஹாலிவுட் ஆக்டரான வாக்கர்தான். இறந்தும் அவர் தோன்றிய அந்தப் படம், ‘ஃபாஸ்ட் & ஃபியூரியஸ்’. 2015ம் ஆண்டு வெளியான ‘ஃபாஸ்ட் 7’ படம்தான் இந்த சீரிஸில் பால் வாக்கர் நடித்த கடைசி பாகம்.

அப்படத்தின் பாதி படப்பிடிப்பிலேயே பால் வாக்கர் இறந்துவிட்டார். எனவே கிளைமாக்ஸில் காரில் பால் வாக்கர் செல்வது போலவும், வின் டீசல் ‘போய் வா நண்பா...’ எனச் சொல்லி அவரை வழியனுப்பி வைப்பதாகவும் முடித்தார்கள்.ஆச்சர்யம், வியப்பு இத்துடன் நிற்கவில்லை. சென்ற வருடம் வெளியான ‘ஃபாஸ்ட் X’ படத்தில் பால் வாக்கர் தோன்றினார்!

1927ம் ஆண்டு விதைக்கப்பட்ட AI, ஒரு தொழில்நுட்பமாக எவ்வித பிசிறும் இன்றி முழுமையாகவும் கம்பீரமாகவும் இன்று வளர்ந்து நிற்கிறது. அதனால்தான் தற்போது இறந்த நடிகர்களையும், கலைஞர்களையும் மீண்டும் திரையில் கொண்டு வரும் யுக்தி உலக அளவில் பிரபலமாகி வருகின்றது.

இது ஒரு பக்கம் நல்ல கலைஞர்களுக்கு சாகா வரம் பெற்ற சூழலை உருவாக்கினாலும், அங்கே நடிக்க வேண்டிய இன்னொரு வாழும் கலைஞருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகும் நிலையும் உண்டாகலாம் என்ற அச்சம் மறுபக்கம் எழுந்திருக்கிறது. கடந்த வருட இறுதியில் ஹாலிவுட் எழுத்தாளர்களும், சில நடிகர்களும் AI தொழ்நுட்பத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியது இதனால்தான்.

இத்தொழில்நுட்பத்தை எழுத்தாளர்கள் எதிர்க்க என்ன காரணம்?

AI தொழில்நுட்பமே திரைக்கதை எழுதலாம் என்பதால்தான்!இதனைத் தொடர்ந்து, சில கட்டுப்பாடுகளுடன் ஹாலிவுட் உலகம் இனி AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவோம் என உறுதியளித்துள்ளது. இந்த வெப்பம் தணிவதற்குள் அடுத்த வெடிகுண்டு. 

இம்முறை ஆடியோ வடிவில்.டிஜிட்டல் ஆடியோ புத்தகங்களை வெளியிடும் நிறுவனம் ஒன்று, இந்த வருட ஆரம்பத்தில், விஷன் AI லேப் நிறுவனத்துடன் இணைந்து 1950களில் ஹாலிவுட்டில் மிகப்பெரும் ஜாம்பவான் நடிகர்களாக ஜொலித்த மர்லின் மன்றோ, ஜேம்ஸ் டீன், ஜூடி கார்லண்ட், பர்ட் ரெய்னால்ட்ஸ், லாரன்ஸ் ஆலிவர் உள்ளிட்ட பலரின் குரல்களில் ஆடியோ புத்தகங்களை வாசிக்கலாம் என்னும் அறிவிப்பை வெளியிட்டது.

அவ்வளவுதான். பல வருடங்களாக தங்கள் குரல் மூலம் வருமானம் ஈட்டி வரும் கலைஞர்கள் வெகுண்டெழுந்துள்ளனர். AI தொழில்நுட்ப உதவியுடன் இறந்தவர்கள் பேசத் துவங்கினால் வாழ்ந்து வரும் எங்களின் வாழ்வாதாரம் என்ன ஆகும் என கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.இதெல்லாம் ஹாலிவுட் சமாசாரம்... என ஒதுக்க முடியாது. இன்று உலகமே கையளவுக்கு வந்துவிட்டது என்னும்போது AI டெக்னாலஜி மட்டும் தன் விஸ்வரூபத்தை நம் ஊரில் காண்பிக்காமல் இருக்குமா?

AI கொண்டு முழு நீளப் படமே உருவாகிக் கொண்டிருப்பதுதான் நம் ஊரின் வளர்ச்சி. ‘மஹராஜா இன் டெனிம்ஸ்’ என்னும் 2014ம் ஆண்டு வெளியான நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க AI தொழில்நுட்பத்தில் நடிகர்கள், டெக்னீஷியன்கள் உட்பட அனைத்தும் செயற்கை நுண்ணறிவு மயமாக உருவாகிறது இப்படம்.
சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இந்தியாவின் முதல் முழுநீள AI படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.

AI பாடல் எழுத... ‘சுனோ’ என்னும் AI இசையமைக்க... போதாதா..? வாழும் இசையமைப்பாளர்கள் மத்தியில் சலசலப்பு எழுந்துள்ளது தனிக்கதை.தமிழில்? நல்ல மாற்றங்கள் உருவாகத் தொடங்கியுள்ளன. மறைந்த பவதாரிணியின் குரலில் வெளியாகவிருக்கும் விஜய்யின் ‘GOAT’ படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல் அப்படியான வளர்ச்சிதான்.

போலவே ‘வெப்பம்’ படத்தின் ஃபிளாஷ்பேக்கில் AI தொழில்நுட்ப உதவியோடு இளமையான சத்யராஜ் தோன்றியிருப்பார். இந்நிலையில் 1983ம் ஆண்டு, தான் இயக்கிய ‘மசூம்’ படத்தின் 2ம் பாகத்தை இப்பொழுது இயக்க இந்தி இயக்குநர் சேகர் கபூர் காத்திருக்கிறார். இதற்கான திரைக்கதை, வசனத்தை AIதான் எழுதியிருக்கிறது!

சென்ற வருடம் அனில் கபூர் தனது முகம், குரல், நடை, உடை பாவனைகளை AI தொழில் நுட்பத்தில் பயன்படுத்தியதற்காக வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்.
இன்னொரு புறம் சில சினிமா கலைஞர்கள் இதனால் பெரிய பாதிப்பு இப்போது இல்லை என்கிறார்கள். இந்திய ஒளிப்பதிவாளர் சுதீப் சாட்டர்ஜி, ‘ஏற்கனவே சேகரித்து வைக்கப்பட்ட டேட்டாக்களை பயன்படுத்திதான் AI தொழில்நுட்பம் செயல்படுகிறது. 

அதற்கு மூளை இல்லை. எனவே கற்பனையோ, யோசிக்கும் திறனோ இல்லை. ஸோ, இப்போது நாம் பாதுகாப்பாகவே இருக்கிறோம். எதிர்காலத்தில் யோசிக்கும், கற்பனை காணும் அளவுக்கு AI தொழில்நுட்பம் வளரலாம். அப்பொழுது அதனை எதிர்ப்பதே சரியாக இருக்கும்’ என்கிறார்.

திரைப்படத்துக்கு இவர் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால், புத்தக வாசிப்பு, ஆடியோ புத்தக ஏரியாக்களில் இதுநாள் வரை மனிதர்கள் ரத்தமும் சதையுமாக செய்து வந்த பணிகளை AI மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. 

இதனால் இத்துறை நலிவை நோக்கி நகர்வதாக வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள்.இன்னொரு பக்கம் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, அலியா பட் உள்ளிட்டோரின் டீப் ஃபேக் வீடியோக்கள் வெளியாகி அவர்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுத்தது நினைவிருக்கலாம். இப்படியான ஆபாசத் தாக்குதல்கள் இனிவரும் காலங்களில் நடிகைகள் மேல் அதிகளவில் தொடுக்கப்படும் என்கிறார்கள்.

இதற்கிடையில் ‘மோனிகா’, ‘இராஹ்’ (Irah) உள்ளிட்ட மலையாளப் படங்கள் செயற்கை நுண்ணறிவால் உண்டாகப்போகும் பிரச்னைகள், பலன்கள் குறித்து அலசும் படங்களாக உருவாகி வருவதாக சொல்கிறார்கள். என்ன நகைமுரண் என்றால், இப்படங்களும் 70% அளவுக்கு AI தொழில்நுட்பத்தில்தான் உருவாகின்றன! மொத்தத்தில் AI தொழில்நுட்பம் விஷுவல் உலகுக்கு வரமா சாபமா?காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

ஷாலினி நியூட்டன்