பண்பாடு, பாரம்பரியம் மாறாமல் பார்போற்றும் மகத்தான திருவிழா!



மலை நகரம், மதுராநகர், பாண்டிய மாநகர், மல்லிகை மாநகர், வைகை நகரம், நான்மாடக் கூடல், திருஆலவாய், சுந்தரேசபுரி, மீனாட்சி நகரம் போன்ற பல்வேறு பெயர்களால் மதுரை சிறப்பு பெற்றிருந்தாலும், மதுரைக்கே உரிய தனிச்சிறப்பு என்றால் அது சித்திரைத் திருவிழாதான். 
மீனாட்சி திருவிழா, அழகர் திருவிழா என மொத்தம் 15 நாட்கள் இந்த திருவிழாவானது நடைபெறுகிறது. அழகர் திருவிழாவில் முக்கிய நிகழ்வான அழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என்பது திருவிழாவின் கூடுதல் சிறப்பு.

*ஒருங்கிணைந்த திருவிழா

மதுரையில் இருந்து சுமார் 21 கிமீ தொலைவில் அழகர்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா 9 நாட்கள் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்படுகிறது. ஊர் முழுக்க வேடிக்கை, அலங்காரப் பந்தல், ஆட்டம், பாட்டம் என இந்த திருவிழாவினையொட்டி களைகட்டி இருக்கும். மதுரையில் நாயக்கர் ஆட்சி வரும் வரை அழகர்கோவிலில் இருந்து கிளம்பும் சுந்தரராஜ பெருமாள் அலங்காநல்லூர், சம்பகுளம், வயலூர், விட்டங்குளம் வழியாக தேனூர் சென்று அங்குள்ள வைகையாற்றில் எழுந்தருள்வது வழக்கமாக இருந்தது.

மேலும் மதுரை மீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாண வைபவமும் அதனையடுத்து தேரோட்டமும், காலம் காலமாக மாசி மாதத்தில்தான் நடைபெற்று வந்தன. தை மாதம் மக நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கி மாசிமகவிழா 48 நாட்கள் நடைபெறும். இந்த இரு திருவிழாக்களும் முதன் முதலாக மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில்தான் (கிபி 1623 - 1659) மாற்றி அமைக்கப்பட்டு சைவ, வைணவ விழாக்கள் ஒன்றிணைக்கப்பட்டன.

அதன்படி மாசியில் நடந்த திருக்கல்யாணம் சித்திரை மாதத்திற்கும்; அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்திற்காக தேனூர் செல்வதை மாற்றி கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, மூன்று மாவடி, தல்லாகுளம், ஆழ்வார்புரம் வழியாக வைகையாற்றில் இறங்கும் விழாவாக பயணப்பாதை மாற்றியமைக்கப்பட்டது. அன்றிலிருந்து இவ்விழாக்கள் ஒருங்கிணைந்த சித்திரை திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

*தல புராணம் சொல்லும் கதை

சுதப முனிவர் திருமாலிருஞ்சோலையில் உள்ள நூபுர கங்கை எனும் சிலம்பாற்றில் நீராடும்போது எதிர்ப்பட்ட துர்வாசமுனிவரை கவனிக்காமல் இருந்ததால், கோபமடைந்த துர்வாசர் சுதப முனிவரை மண்டூகமாக (தவளை) மாறும்படி சாபமிட்டார். சாபம் நீங்க சுதப முனிவர் வைகை ஆற்றில் மண்டூக வடிவில் நீண்டகாலம் தவம் புரிந்ததால், சித்ரா பவுர்ணமி அன்று அழகர் (சுந்தரராஜ பெருமாள்) மூலம் சாபம் நீங்கப்பெற்றார். இது தல புராணம் சொல்லும் அழகர் ஆற்றில் இறங்கும் கதை.

*மக்கள் கூறும் மரபுக் கதை

மதுரை மாநகரில் மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. திருமாலின் அவதாரமாக விளங்கும் சுந்தரராஜப்பெருமாள் தன் தங்கை மீனாட்சியின் திருமணத்தைக் காண அழகர்மலையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு வருகிறார்.

ஆனால், அழகர் வருவதற்குள் திருமணம் நடந்து முடிந்து விடுகிறது. வைகை வடகரையில் செய்தி கேட்ட அழகர் கோபம் கொண்டு வண்டியூர் சென்று விடுவதாக மக்களிடத்தே ஒரு மரபுவழிக் கதை வழக்கத்தில் உள்ளது. புராண வழக்கத்தின்படி அழகராகிய திருமால், மீனாட்சியாகிய பார்வதிக்கு அண்ணன் முறையாகிறது. 

அந்த வகையில் தங்கையின் கல்யாணத்திற்கு சீர் கொண்டுவருவது வழக்கம். அவ்வாறு அண்ணன் தங்கைக்கு சீர் கொண்டு வரும் நிகழ்ச்சி நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் மக்களிடம் உயிர்ப்புடன் வைத்திருப்பதை உணரலாம். ஆனால், இதுபோன்ற தாலாட்டுப் பாடல்கள் மற்றும் வர்ணிப்பு பாடல்கள் வாய்மொழியாக கடந்து வந்ததால், நிறைய பேர் வர்ணிப்பு பாடல்களை மறந்துவிட்டனர்.

*கொண்டாட்டம் நிறைந்த எதிர்சேவை

அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு அழகர் கள்ளர் கோலத்தில் கண்டாங்கி பட்டு உடுத்தி, வளரி, தடிக்கம்பு, காதில் கடுக்கண், உருமா கட்டி பல்லக்கில் வருகிறார். மூன்று மாவடிக்குள் நுழையும் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெறுகிறது. நேர்த்திக்கடனாக தண்ணீர் பீய்ச்சுபவர்கள் (துருத்தி நீர் தெளிப்பவர்கள்) அழகரை எதிர்நோக்கிச் சென்று வரவேற்பார்கள். மதுரை நோக்கி வரும் அழகருக்கு வழிநெடுக மண்டகப்படிகள் உள்ளன.

அழகர்கோவிலில் இருந்து வண்டியூர் வரைக்கும் சுமார் 500க்கும் மேல் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி அவர்கள் கொடுக்கும் பிரசாதமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.
அவுட் போஸ்ட் அம்பலக்காரர் மண்டகப்படியில் எழுப்பப்படும் வேட்டு சத்தம் அழகர் மதுரைக்கு வந்ததை உணர்த்துகிறது. அன்று இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் அழகர் தங்குகிறார்.

அன்று இரவு முழுவதும் திரி எடுத்து ஆடுவோர், துருத்தி நீர் தெளிப்போர், சாட்டை அடித்து ஆடுவோர் கொட்டு மேளம் முழங்க மதுரையின் வீதிகளில் உலா வருவர். மதுரை சுற்று வட்டாரத்தில் இருக்கும் கிராம மக்கள் திருவிழாவினைப் பார்க்க குவிந்த வண்ணம் இருப்பார்கள். தூங்கா நகரத்தில் எதிர்சேவை அன்று தூக்கத்திற்கு வேலை கிடையாது. வீதி எங்கும் நிறைந்திருக்கும் மக்கள், விடிய விடிய திறந்திருக்கும் உணவுக் கடைகள், சித்திரை பொருட்காட்சி, ராட்டினங்கள் என கண்களுக்கும், வயிற்றுக்கும் விருந்தளிக்கும் பல்வேறு விஷயங்கள் இந்த திருவிழாவில் உண்டு.

*நொண்டிச்சாமியும், கருப்பணசாமியும்

சித்திரைத் திருவிழா பெருந்தெய்வத்திற்கு எடுக்கப்படும் திருவிழா என்றாலும் அதில் நாட்டார் தெய்வங்கள், நாட்டார் மரபுகள், பண்பாட்டுக் கூறுகள் நிரம்பி இருக்கின்றன.
அழகர்கோவிலில் இரணியன் கோட்டையைக் கடந்ததும், விண்ணுயர ராஜகோபுரம் நம்மை வரவேற்கும், அந்த ராஜகோபுர கதவுகளில் 18ம்படியில் கருப்பண சாமி குடியிருப்பதாக நாட்டார் மக்கள் நம்புகின்றனர்.

இந்த கருப்பண சாமி குறித்து ஒரு மரபுக்கதையும், கதை பாடலும் சொல்லப்படுகிறது. மலையாளத்தில் இருந்து 18 லாடர்கள் அழகர்கோவிலில் கருவறையில் உள்ள அழகரின் களையை (இறைவனின் அருளொளியை) திருடி செல்வதற்காக வருகின்றனர். 

அவர்கள் அனைவரும் மாந்திரீக மந்திர மையை பூசிக்கொண்டிருப்பதால் யார் கண்ணிற்கும் தெரியமாட்டார்கள். அவர்கள் இரவு நேரங்களில் கருவறைக்குள் புகுந்து இறைவனின் களையை மந்திர வலிமையால் தாங்கள் கொண்டு வந்த கும்பத்திற்குள் அடைத்துவிடுவர். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக இறைவனின் களையை இறக்கி கொண்டே வந்தனர். ஒரு நாள் பட்டர் கனவில் தோன்றிய பெருமாள் நடந்ததை எடுத்துக் கூற, பட்டரும் மறுநாள் நாட்டார்களைத் திரட்டி இச்செய்தியைச் சொன்னார்.

அவர்கள் அனைவரும் ஒரு திட்டம் தீட்டி அதன்படி பட்டர் பூசை முடிந்து மிக அதிகமாக ஆவி பறக்கும் சுடுசோற்றை இறைவனுக்கு படைத்துவிட்டு கருவறையை பூட்டிவிட்டு வந்துவிட்டார். சூடான சோற்றில் இருந்து கிளம்பிய ஆவி லாடர்களின் கண்ணில் இருந்த மையைக் கரைத்துவிட்டது. 

அவர்கள் மற்றவர்கள் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தனர். அவர்களை நாட்டார்கள் பிடித்துக்கொண்டு 18 பேரின் தலையையும் வெட்டி கோபுரவாசல் அடியில் புதைத்துவிட்டனர். அவர்களுடன் வந்த கருப்பசாமி என்ற தெய்வம் ‘‘என்னை விட்டு விடுங்கள். நான் இந்த கோபுர வாசலில் நின்று கோயிலைக் காவல் காத்துக்கொள்கிறேன்...’’ என்று கூறியதாக ஒரு மரபுக்கதை மக்களிடத்தில் வழக்கத்தில் உள்ளது.

அதன்படி இந்த 18ம் படி கருப்பணசாமியை மக்கள் காவல் தெய்வமாக வணங்கி வருகின்றனர். இந்த கருப்பண சாமிக்கு தனியாக திருவிழாக்கள் கிடையாது. ஆடி மாதம், அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கதவுகளுக்கு சந்தனம் சாத்தி வழிபாடு நடத்தப்படுகிறது. மேலும் அர்த்தசாமப் பூசைக்கு கோயில் இறைவனுக்கு படைக்கப்படும் தளிகை (உணவு), சாத்தப்படும் மாலை முதலியவற்றை கோயில் பணியாளர்களுக்கோ, அடியவர்களுக்கோ கொடுக்காமல் சேஷப்பிரசாதமாக (உண்டும் அணிந்தும் எஞ்சியவை) 18ம் படி சன்னதியில் உள்ள கருப்பண சாமிக்கு பிராமண பரிசாரகர் படைக்கின்றனர்.

இதேபோல் அழகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி செல்லும் சாலையில் 500 அடி தூரத்தில் இடப்புறம் திரும்பினால் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அ.வலையபட்டி என்ற சிற்றூர் உள்ளது. இந்த ஊரில் உள்ள நொண்டிச்சாமி என்ற காவல் தெய்வத்தை சுற்று வட்டாரத்தில் உள்ள 18 கிராமங்களும் வணங்கி வருகின்றனர். இந்த நொண்டிச்சாமி அழகர்கோவிலில் உள்ள அனைத்து கதவுகளுக்கும் காவல் நிற்பதாக ஊர் மக்கள் கூறுகின்றனர்.

‘‘நொண்டிச்சாமி கோயில் இருக்கும் கோபுரக் கூண்டு பகுதியில் இருந்து மாட்டுவண்டி மூலம் செம்மண் அழகர்கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அர்த்தசாம பூஜைகள் முடிந்து கோயில் கதவு சாவித் போட்டு பூட்டியதும், நொண்டிச்சாமி கோயிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட மண்ணை தண்ணீர் ஊற்றி பிசைந்து சாவித் துவாரத்தில் சாத்துகின்றனர்.

அதன்பிறகு மறுநாள்காலையில் கதவினைத் திறக்கும்போது அந்த மண்ணை எடுத்துவிட்டு கதவு திறக்கப்படுகிறது. அது மட்டுமின்றி நொண்டிச்சாமி கோயில் எல்லைப்பகுதியில் செருப்பு அணிந்து செல்லக்கூடாது, ஒரு குறிப்பிட்ட தூரம் வரை கையில் செருப்பை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும், வேஷ்டியை மடித்துக் கட்டி செல்லக்கூடாது, தோளில் துண்டு போட்டு நடக்கக்கூடாது, அதே போல் கை வீசியும் நடக்கக்கூடாது. இதனை மீறிச் செய்தால் நொண்டிச்சாமி தண்டிக்கும்...’’ என தெரிவிக்கின்றனர்.

*திருவிழாவும், பண்பாடும்

ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கலையுணர்வு, மரபுகள், பண்பாட்டுக் கூறுகள் இவற்றை எல்லாம் அச்சமூகத்தைச் சேர்ந்த தனிமனிதனிடம் முழுமையாக க் காண முடியாது. அதே வேளையில் திருவிழாக்களில் மரபுகள், கலையுணர்வு இவற்றை பரவலாகக் காண முடியும். அழகர் திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் துருத்தி நீர் தெளிப்பர், திரி எடுத்து ஆடுவர், சாட்டையடித்து ஆடுவர். இதற்காக இவர்கள் தயார் செய்யும் ஆடைகள், அலங்காரங்கள் அனைத்தும் கலையுணர்வு மிக்கது.

திரி எடுத்து ஆடுபவர்கள் இடுப்பில் கச்சை எனப்படும் சிவப்பு நிற அரைக்கால் சட்டை, அதன் மேல் கருப்பு அல்லது சிவப்பு நிறத்தில் கருங்கச்சை எனப்படும் பட்டுத்துணி, தலையில் முக்கோண வடிவில் அமைந்த சிவப்பு நிறமுடைய லேஞ்சி எனப்படும் சிறிய துண்டு, கையில் திரி, காலில் சலங்கை ஆகியவற்றை அணிந்திருப்பர். 

இவர்கள் அழகர் மதுரைக்கு வந்து சேர்ந்ததும் சப்பரத்தடி கருப்பண கோயில் முன்பாக மருள் ஏறி ஆடுகின்றனர். அதேபோல் குறியும் சொல்கின்றனர்.குறி கேட்பவர் ‘ஆமாம் சாமி அத்தனையும் உண்மை’ என்பார். ‘இனி ஒழுங்காக இருக்க வேண்டும்’ எனக் கூறிவிட்டு அவருக்கு மறுவாக்கும் கொடுக்கிறார்.

அதாவது குறைகளைக் கூறி கண்ணீர் விட்டு நிற்போருக்கு திரியாட்டக்காரர்கள் வரமும் கொடுக்கின்றனர். இப்படி பாரம்பரியமும், பண்பாடும் நிறைந்த திருவிழாவினை வாழ்வில் ஒருமுறையாவது நேரில் கண்டு ரசித்து மகிழ்ந்துவிட்டு வாருங்கள்.

செய்தி: வ.செந்தில்குமார்

படங்கள்: வீரணன்