இங்கிலாந்தில் கள்ளுக் கடை!



கேரளாவில் பல இடங்களில் ‘டோடி கடை’ பார்த்திருக்கலாம். அது என்ன ‘டோடி கடை’?

கள்ளுக் கடைதான்!

இந்த கடைகள் கேரளாவில் மிகவும் பிரபலம். கடைகள் மட்டுமில்லாமல் அங்கு வீட்டிலும் பொரும்பாலானவர்கள் கள்ளை ஒரு பானமாகப் பருகுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தென் தமிழகத்தின் பாரம்பரிய பானமான டோடியினை இங்கிலாந்திற்குக் கொண்டு செல்ல விரும்பினார் கேரளாவைச் சேர்ந்த ஜான். அதற்காக பல தடைகளைக் கடந்து அங்கு டோடி கடை ஒன்றை துவங்கியது மட்டுமில்லாமல் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா என நம்முடைய தென் தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளை அதே சுவையில் அங்கு வழங்கியும் வருகிறார் இவர்.

‘‘நான் மேற்படிப்பு படிக்கதான் இங்கிலாந்திற்கு வந்தேன். படிப்பு முடிச்சதும் இந்தியாவில் 5 வருடங்கள் இருந்தேன். இந்தக் காலத்தில் துபாயில் தொழில் துவங்கினேன். அதன் பிறகு சுமார் 47 நாடுகளுக்கு பயணித்து இருக்கிறேன். அதன் அடிப்படையில் இங்கிலாந்திலும் என்னுடைய தொழிலினைத் துவங்கி இப்போது அங்கேயே செட்டிலாகிட்டேன். என்னதான் நான் பல தொழில்களில் ஈடுபட்டு வந்தாலும், எனக்கு உணவகம் ஒன்றைத் திறக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது. அந்தக் கனவு கோவிட் காலத்தில்தான் நிறைவேறியது.

கொரோனா தாக்கம் உலகம் முழுக்க இருந்ததால், எல்லா இடங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் உணவுக் கடைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்திருந்தனர். அந்த சமயத்தில் என்னுடைய மற்ற தொழிலும் பெரிய அளவில் செயல்படுத்த முடியாமல் முடங்கியது. எப்போதும் பிசியாக பயணித்து வந்த எனக்கு, வீட்டில் அடைந்து இருப்பது பெரிய சவாலாகவும் இருந்ததால், என் கனவு பிசினசான உணவகத்தை திறந்தேன்.

இதற்கு ‘தட்டுக்கடை’ என்று பெயர் வைத்தேன். இரண்டு பேர் மட்டுமே வேலைக்கு நியமித்து பார்சலில் உணவுகளை வழங்கி வந்தேன். முழுக்க முழுக்க தென்தமிழக உணவுகளை பாரம்பரிய முறையில் கொடுக்க ஆரம்பித்தேன். காரணம், நான்  இங்கிலாந்தில் படிக்கும் காலத்தில், இங்கு வட இந்திய உணவகங்கள்தான் அதிகம் பார்க்க முடியும். தென் தமிழக உணவகங்கள் என்பது மிகவும் குறைவு.

அப்போதே என் மனதில் இதுபோன்ற உணவகம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதிலும் குறிப்பாக டோடி பானமும் வழங்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். இங்கு மற்ற மதுபானங்கள் கிடைக்கும். ஆனால், டோடி கிடைக்காது. சில சமயம் டோடி பருக வேண்டும் என்பதற்காகவே இந்தியாவிற்கு வந்து சென்றிருக்கேன்...’’ என்றவர் டோடி பானத்தை இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்குக் கொண்டு வருவதற்காகப் பல வருடங்களாகப் போராடியுள்ளார்.

‘‘இந்தியாவில் கேரளா மட்டுமில்லை, தமிழகம், ஆந்திரா போன்ற இடங்களிலும் டோடி  மிகவும் பிரபலம். அதனால் இதனை எப்படியாவது இங்கிலாந்திற்குக் கொண்டு வர விரும்பினேன்.
ஆனால், நான் எடுத்த பல முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்தது. இந்தியாவில் இருந்து பல உணவுப் பொருட்கள் இங்கு ஏற்றுமதி செய்யப்பட்டாலும், இதனை மட்டும் ஏற்றுமதி செய்ய இந்திய அரசு அனுமதிப்பதில்லை. அதனால் இங்கிலாந்திலும் மது சார்ந்த எந்த பொருட்களும் இந்தியாவில் இருந்து கொண்டு வர அனுமதிப்பதில்லை.

எதற்காக இந்த விதிமுறைகள் என்று இன்று வரை எனக்கு புரியவும் இல்லை. நான் ஒரு பிசினஸ்மேன். அதனால் அதன் அடிப்படையில்தான் பார்ப்பேன். இதற்காக பலமுறை போராடினாலும் ஒரு பிசினசாக என்னால் அதனை செயல்படுத்த முடியவில்லை. அதனால் என்னுடைய ‘தட்டுக்கடை’யினை பெரிய உணவகமாக மாற்றாமல் இருந்தேன்.

பிசினஸ் விஷயமாக நான் பல நாடுகளுக்கு பயணிக்க வேண்டி இருக்கும். அப்படி இலங்கை, ஆப்பிரிக்கா, மலேசியா, கானா, வியட்நாம் போன்ற நாடுகளுக்குச் சென்றபோது அங்கு டோடி இருப்பதைக் கண்டேன். ஆனால், ஒவ்வொரு நாட்டிலும் அதனை வேறு பெயர் கொண்டு பயன்படுத்தி வந்தார்கள். 

அதன் சுவையிலும் பெரிய அளவில் மாற்றம் இல்லை.இலங்கையில் விற்கப்படும் டோடி தமிழ்நாட்டு கள்ளு சுவையில் இருக்கும். காரணம், கேரளாவில் தேங்காயில் இருந்துதான் டோடி தயாரிப்பாங்க. ஆனால், தமிழ்நாடு மற்றும் இலங்கையில் பனைமரத்தில் இருந்து எடுப்பாங்க. இது பாலக்காடு மற்றும் கொச்சியில் கிடைப்பது போல் இருக்காது.

அப்போதுதான் இந்தியாவில் இருந்து டோடியை ஏற்றுமதி செய்வதற்கு பதில் இலங்கை மற்றும் மற்ற நாடுகளில் இருந்தும் கொண்டு வரலாம் என்று தோன்றியது. அதற்கான அங்கீகாரம் எனக்கு கிடைத்தது. அப்படித்தான் நான் இந்த டோடி கடையை இங்கிலாந்தில் துவங்கினேன். ஆரம்பித்த போது சாதாரண கடையாகத்தான் துவங்கினேன். அங்கு அமர்ந்து சாப்பிடக் கூடிய வசதிகள் கிடையாது. பார்சல் முறையில்தான் உணவுகளை வழங்கி வந்தோம்.

டோடியினை உணவகத்தில் அறிமுகம் செய்ய ஆரம்பித்தவுடன் என்னுடைய உணவகத்தை பெரிய அளவில் மாற்றி அமைத்தேன். தற்போது 60 பேர் அமர்ந்து சாப்பிட முடியும்...’’ என்றவர் உணவகம் ஆரம்பித்ததற்கான காரணம் குறித்து விவரித்தார்.‘‘எனக்கு உணவு மிகவும் பிடித்தமானது. இங்கிலாந்தில் நான் தங்கியிருந்த போது நம்மூர் உணவுக்காக ஏங்கியிருக்கேன். இப்போது அங்கு தமிழர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு நம்முடைய பாரம்பரிய உணவினைக் கொடுக்க வேண்டும். அதே சமயம் அவர்களுக்கும் டோடியினை அறிமுகம் செய்ய வேண்டும்.

இது எனக்கு மிகவும் பிடித்த பிசினஸ். எந்த ஒரு பிசினசாக இருந்தாலும், அதற்கு சரியான ஆட்களை கண்டறிய வேண்டும். உணவும் அப்படித்தான். இங்கு என்னிடம் வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலானவர்கள் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மாணவர்கள்தான். அதில் ஒருசிலர் படிப்பை முடித்துவிட்டு முழு நேரமாக வேலை பார்க்கிறார்கள். மற்றவர்கள் பகுதி நேரமாக வேலை பார்க்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் இந்தியர்கள். எனக்குத் தேவையான ஆட்களை நான் சரியாகத் தேர்வு செய்திருப்பதால்தான் என்னால் அனைத்து பிசினசிலும் வெற்றிகரமாகச் செயல்பட முடிகிறது.
டோடியினை நான் பல நாடுகளில் இருந்து பெற்றாலும், அதனை பியர் தயாரிப்பது போல்தான் தயாரிப்பார்கள். எல்லாவற்றையும் விட ஒரு பாட்டிலின் சீலை உடைத்துவிட்டால் அதனை ஆறு மணி நேரத்திற்குள் குடித்து முடிக்க வேண்டும். அதே சமயம் குளிர் காலத்தில் ஒன்றரை நாள் வரை தாங்கும். அதுவே சீல் உடைக்காமல் இருந்தால், ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும். இது மற்ற மதுபானம் போல் கிடையாது என்பதால், அதற்கு ஏற்ப பேக்கிங்கில்தான் நாங்க இதனை மற்ற நாடுகளில் இருந்து வாங்குகிறோம்.

அதாவது ஒருவர் மட்டுமே சாப்பிடக்கூடிய 650 மிலி அளவில் மட்டுமில்லாமல் குழுவினராக சாப்பிடக்கூடிய இரண்டு அல்லது ஐந்து லிட்டர் பேக்கிலும் தருகிறோம்.
நம்மூர் மக்கள் மட்டுமில்லாமல் இங்கிலாந்து மக்களுக்கும் டோடி ஏற்கனவே பழக்கப்பட்ட பானமாக உள்ளது. அவர்கள் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் போது டோடியினை சுவைத்திருப்பதாகத் தெரிவித்தனர்.
 
அவர்கள் எல்லோரும் நண்பர்களுடன் இணைந்து டோடியினை விரும்பிச் சாப்பிட உணவகத்திற்கு வருகிறார்கள். உணவகத்தில் ஆந்திரா மற்றும் தமிழக உணவுகள் அளித்தாலும், அதில் கேரளாவின் பாரம்பரிய உணவுகளுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

இந்த உணவகம் துவங்கி ஒரு வருடமாகிறது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனைத் தொடர்ந்து லண்டன் மற்றும் மேன்செஸ்டரில் கிளைகள் திறக்கும் எண்ணம் உள்ளது. அடுத்து மற்ற நாடுகளுக்கும் டோடி ஷாப்பினைக் கொண்டு செல்ல இருக்கிறேன்...’’ என்றார் ஜான்.

ப்ரியா