சிறுகதை - எந்த பூவிலும் வாசம் உண்டு



அப்பா அழைத்ததின் பேரில் சதாசிவம் உடனே புறப்பட்டு ஊருக்கு வந்தான்.அவன், சினிமாவில் ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர். சென்னைக்கு வந்து ஏழு வருடங்கள் ஆகிறது. விஸ்காம் முடித்தவன். அப்படி இப்படி அலைந்து ஒரு பெரிய டைரக்டரிடம், ஏ டி யாக சேர்ந்தான். இப்போது வேலைபார்த்துக் கொண்டிருப்பது அவனுக்கு நான்காவது படம். ஜெயம் ரவி ஹீரோ. திரிஷா ஹீரோயின்.

வேலையில் படு கில்லாடி. டிரஸ் கண்டினியூட்டி, ஆக்‌ஷன் கண்டினியூட்டி என எதுவும் அவனிடம் தப்பாகாது. நிறைய புத்தகங்கள் படிப்பான். தினம் ஒரு படம் பார்ப்பான். தமிழ்தான் என்றில்லை. எல்லா மொழிப்படங்களையும் பார்ப்பான். டைரக்டருக்கே எதாவது சந்தேகம் வந்தால், அவனிடம்தான் கேட்டுத் தெரிந்துகொள்வார். கேள்விக்கான விடையை, புள்ளி விபரத்துடன் அடுக்குவான்.

அவனுடைய கனவு, ஒரு தரமான படத்தை டைரக்ட் பண்ண வேண்டும் என்பதுதான். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறான்.ட்ராவல் பேக்கை தனது ரூமில் வைத்துவிட்டு, முகம் அலம்பி வெளியே வந்தவனிடம், ஒரு நிமிட இடைவெளிகூட கொடுக்காமல் “எப்பப்பா கல்யாணம் பண்ணிக்கப் போற..?’’ எனக் கேட்டார் அப்பா.

“அதான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லியிருக்கனேப்பா... படம் பண்ணதும் கல்யாணம் பண்ணிக்குறேன்னு...’’“நாலஞ்சு வருஷமா அதையேதான் சொல்லிக்கிட்டு இருக்க. எனக்கும் வயசாகிட்டு வருதுல்ல...’’“ரெண்டு மூணு கம்பெனில கதை சொல்லியிருக்கேன்ப்பா. ஓகே ஆகுற மாதிரி இருக்கு...’’“அதுபாட்டுக்கு ஆகட்டும். அதுக்காக கல்யாணத்த எதுக்கு தள்ளிப் போடனும்..?’’

“முதல் படம் பண்ணும் போது எந்த இடையூறும் இல்லாம இருக்கணும்ப்பா. எவ்வளவு ஈடுபாட்டோட வேலை பாக்குறோமோ அவ்வளவு தூரம் சக்ஸஸ் பார்க்கலாம்...’’
சிறிது நேரம் அமைதியாக இருந்தவர் “அதெல்லாம் சரிதான். ஆனா, எங்க நிலமையையும் கொஞ்சம் யோசிச்சு பாரு. நாங்க உயிரோட இருக்கும்போதே உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுடணும்ன்னு நினைக்குறோம். இல்லன்னா, புள்ளைக்கு கூட கல்யாணம் பண்ணி வைக்காம செத்துப் போய்ட்டான் பாருன்னு, ஊர் உலகம் கரிச்சு கொட்டும்...’’ என கவலையுடன் கூறினார்.

“உங்க ஆதங்கம் எனக்கு புரியுது. சரி, உங்க விருப்பப்படியே செய்ங்கப்பா...’’அம்மா காபி எடுத்து வந்து அவனிடம் தந்தாள்.  “மயிலாடுதுறைல ஒரு பொண்ணு இருக்காம். ஒரே பொண்ணாம். சொந்த வீடு, நிலபுலன்னு நிறைய சொத்து  இருக்காம். உனக்கு ஓகேன்னா நாளைக்கே போய் பாக்கலாம்...’’“நா சினிமாவுல வேலை பாக்குற விபரத்தை சொல்லிட்டிங்களாப்பா..? அங்க போனதுக்கப்புறம் முகம் சுளிக்கப் போறாங்க...’’“அதெல்லாம் சொல்லிட்டேன். பையன் நல்ல பையனாவும், குடும்பம் நல்ல குடும்பமாவும் இருந்தா போதும்ன்னு சொல்லிட்டாங்க...’’
“அப்ப போய் பார்க்கலாம்...’’

அப்பா, அம்மாவுடன் ஒரு டாக்ஸி வைத்துக் கொண்டு மயிலாடுதுறை வந்து சேர்ந்தான். நியூ சினிமா தியேட்டர் அருகே இருந்தது பெண்ணின் வீடு. பெண்ணின் அப்பா ஒரு ட்ராயிங் மாஸ்டர். வீட்டை அழகாக வடிவமைத்திருந்தார். வாசலில் டாக்ஸி வந்து நிற்கவே, அவரும் அவரது மனைவியும் வெளியே ஓடி வந்து, அவர்களை வரவேற்றார்கள். அதில் அன்பும், பணிவும் தெரிந்தது. ஹாலிற்கு அழைத்து வந்து அங்கு கிடந்த சோபாவில் உட்காரச் சொன்னார்கள்.

உட்கார்ந்ததும், அறிமுகப் படலம் நடந்தது. அதன்பின் பெண்ணின் அம்மா பெண்ணை அழைத்து வருவதாகக் கூறி உள்ளே போனாள். சிறிது நேரத்தில், பெண் கையில் காபியுடன் அவர்கள் முன்னால் வந்து நின்றாள். அவளைப் பார்த்ததும் சதாசிவம் சற்று அதிர்ச்சி அடைந்தான். காரணம், பெண் எடை கூடி பருமனாகக் காட்சியளித்தாள். அவன் எதிர்பார்த்து
வந்தது வேறு. இங்கு நடப்பது வேறு. என்ன செய்வது என தெரியாமல் தடுமாறிப்போய் உட்கார்ந்திருந்தான். அப்பா அந்த வீட்டின் மேலேயே கண்ணாக இருந்தார்.

பெண்ணின் அப்பாவிடம் “வீடு எத்தனை கிரவுண்ட், மாடி போர்ஷன் இருக்கா..?’’ என விசாரித்துக் கொண்டிருந்தார். அவன், அவள் நீட்டிய பிளேட்டிலிருந்து காபி டம்ளரை எடுத்துக் கொண்டான். அப்பாவும் அம்மாவும் கூட எடுத்துக் கொண்டார்கள். அந்தப் பெண் அவனைப்பார்த்து லேசாகப் புன்னகைத்துவிட்டு உள்ளே போனாள்.

காபி மணமாகத்தான் இருந்தது. ஆனால், அவனின் மனதில்தான் பல யோசனைகள் ஓடிக் கொண்டிருந்தன. ஓரளவிற்கு பருமனாக இருந்தால் பரவாயில்லை. நடைப்பயிற்சி செய்யச் சொல்லி குறைத்து விடலாம். அளவிற்கு அதிகமான எடையில் இருப்பவள், என்னதான் நடந்தாலும் இயல்பு நிலைக்கு திரும்புவாளா என்பது சாத்தியமில்லை.

அப்பாவும், ட்ராயிங் மாஸ்டரும் ஏறக்குறைய அந்த சம்பந்தம் முடிந்துவிட்டது போல் பேசிக்கொண்டிருந்தார்கள். அம்மா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் என்ன நினைக்கிறான் என்பது அவளுக்குப் புரியும்.அவன் யாரையும் காதலித்ததில்லை. விஸ்காம் படிக்கும்போது அவனுடன் படித்தவள் மதுமிதா. 

துருதுருவென்று அழகாக இருப்பாள். அதி புத்திசாலி. அத்தனை பசங்களும் அவள் பின்னால் சுற்ற, அவள் சதாசிவத்தைச் சுற்றி வருவாள். காரணம், அவளுக்கு அவன் மேல் லேசான காதல் உண்டு. அவன் சினிமாவில் பெரிதாக சாதிப்பான் என்கிற நம்பிக்கை உண்டு. ஒருநாள் தனது காதலை அவனிடம் சொன்னாள். அவன் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

“என்னடா ஒண்ணும் பேச மாட்டங்குற..?’’

“இல்ல மது... இதெல்லாம் ஒத்து வராது. என்னோட கனவு ரொம்ப பெருசு. இப்ப நம்பர் ஒன் பொஸிஷன்ல இருக்குற டைரக்டர்களையெல்லாம் ஜெயிச்சு அந்த இடத்துக்கு நா வரனும்ன்னு ஆசைப்படுறேன். அதுக்கு ரொம்ப மெனக்கடனும். காதல் அது இதுன்னு குறுக்க வந்து நின்னா, அந்த இடத்தை ரீச் பண்றது கஷ்டமாயிடும்...’’
மதுமிதாவின் கண்களில் நீர் வழிந்தது.

“ஸாரி மது...’’“ஓகேடா. ஆல் த பெஸ்ட்...’’டீஸன்ட்டாக விலகிக் கொண்டாள். இப்போது அவள் எங்கு இருக்கிறாள் என்பது கூட அவனுக்குத் தெரியாது. அத்தனை அழகான பெண்ணையே தன்னுடைய லட்சியத்திற்காக நிராகரித்தவன், இந்த எடை கூடிய பெண்ணையா ஏற்றுக் கொள்ளப் போகிறான்?

கல்யாணம் செய்து கொள்வதுகூட ஓகேதான். ஆனால், இந்த மாதிரி ஒரு பெண்ணை, அதுவும், படம் பண்ணுவதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், அவனால் யோசிக்கவே முடியவில்லை. கடவுளே இது என்ன சோதனை?

ட்ராயிங் மாஸ்டர் “கல்யாண செலவு முழுக்க எங்களோடது. நூறு பவுனுக்கு மேல நகை வாங்கி வச்சுருக்கோம். மாப்பிள்ளை விரும்புற மாதிரி ஒரு கார் வாங்கித் தரோம்...’’ என லிஸ்ட்டை அடுக்கிக்கொண்டே போனார். 

அவர் சொல்வது, அவனை விலை பேசுவது மாதிரி இருந்தது. தப்பில்லை. சாதாரணமாக இருக்கும் ஒரு பெண்ணிற்கு கல்யாணம் செய்து வைப்பதே இந்தக் காலத்தில் கஷ்டம். அப்படி இருக்கும்போது, இதுமாதிரி பெண்ணிற்கு  என்ன செய்ய முடியும்? தேடி வருகிறவர்களை ஒப்புக்கொள்ள வைக்கத்தானே முயற்சி செய்வார்கள்... அப்பா அவர் சொன்ன எல்லாவற்றிற்கும் தலையாட்டினார்.

அவன் சட்டென்று குறுக்கிட்டு “சார், ஒரு ரெண்டு நாள் டயம் தறீங்களா... யோசிச்சு சொல்றேன்...’’ என்றான்.ட்ராயிங் மாஸ்டர் முகம் உடனே வாடியது. உள்ளே ஹாலில் நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணின் முகத்தில் கலக்கம் ஏற்பட்டது.அப்பா “அவன் புரியாமல் பேசுறான்...’’ என்றார். அவன் “இல்லப்பா... புரிஞ்சுதான் பேசுறேன். யோசிக்குறதுக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்...’’ என்றான்.

ட்ராயிங் மாஸ்டர் “புடிச்சுருக்கோ புடிக்கலையோ இப்பவே சொல்லிடுங்க தம்பி... ரெண்டு நாள்ங்குறது பாரமா நகரும். அந்த கஷ்டம் ஒரு பொண்ணோட தகப்பனா இருக்குறவங்களுக்கு மட்டும்தான் புரியும்...’’ என்றார் கவலை தோய்ந்த குரலில். தன்னுடைய மகள் பருமனாக இருக்கிறாள் என்பதனால்தான் அவன் யோசிக்கிறான் என்பது அவருக்குப் புரிந்துவிட்டது. அதனால்தான் முடிவை இப்போதே சொல்லி விடுங்கள் என்கிற கட்டாயத்தை வைக்கிறார்.

ஒருவேளை அவளை நிராகரிப்பதாக இருந்தால் அதை முகத்திற்கு நேராகச் சொல்ல அவனாலும் முடியாது. அந்தப் பெண்ணை வைத்துக் கொண்டு அவர்கள் படுகிற சிரமம் அவனுக்குப் புரிந்தது. அதனால்தான் கொஞ்சம் யோசித்து முடிவெடுக்கலாம் என நினைத்தான்.

“சார்... புடிக்கலன்னா இப்பவே சொல்லிடுவேன்... உங்க நிலமைய பார்க்கும்போது எனக்கும் ரெண்டு மனசாதான் இருக்கு. அதனாலதான் கொஞ்சம் டயம் கேக்குறேன்...’’
“சரிங்க தம்பி அப்புறம் உங்க இஷ்டம்...’’ என்று கூறி “ஆனா, ஒரு ரிக்வெஸ்ட்...’’ என்றார்.

“சொல்லுங்க சார்...’’
“என் பொண்ணு உங்ககிட்ட தனியா பேசனும்ங்குறா...’’
அவன் குழப்பமாகப் பார்த்தான்.
“என்ன தம்பி யோசிக்குறீங்க..?’’

“இல்ல அந்த மீட்டிங் எவ்வளவு தூரம் பாஸிட்டிவ்வா இருக்கும்ன்னு எனக்கு தெரியல... எனி வே, மீட் பண்ணலாம்...’’வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் ஏற்பாடு செய்தார்கள். அப்பா “நல்ல முடிவா எடுப்பா...’’ எனச் சொல்லி அவனை அனுப்பி வைத்தார். அவன் தோட்டத்திற்கு வந்தான். அது ஒரு அழகிய நந்தவனமாகக் காட்சி அளித்தது. 

ரோஜா, சாமந்தி, நந்தியாவட்டை, அடுக்கு மல்லி, கனகாம்பரம் என அங்கு இல்லாத பூச்செடிகளே இல்லை என்று சொல்லலாம். அவ்வளவு இருந்தன. அத்தனையும் நேர்த்தியாக வளர்க்கப்பட்டிருந்தன. அதை அவன் மிகவும் ரசித்தான்.“இதெல்லாம் நா வளர்த்து ஆளாக்குனதுதான்...’’ என்றாள் அந்தப்பெண்.

“ஓ... நைஸ்...’’“என் பேரு மீனாட்சி. செல்லமா மீனான்னு கூப்பிடுவாங்க. ப்ளஸ் டூ படிக்குற வரைக்கும் ஒல்லியாதான் இருந்தேன். அதுக்கப்புறம்தான் தைராய்டு பிரச்னை வந்து இப்படி ஆயிட்டேன். உடம்புதான் இப்படி ஆயிடுச்சேன்னு நா கவலைப்பட்டுகிட்டு உட்கார்ந்துடல. படிப்புல காலேஜ் டாப்பரா வந்தேன். படிச்சு முடிச்சதும் வேலைக்கு போகணும்ன்னு ஆசைப்பட்டேன். அப்பாதான் வேண்டாம்ன்னுட்டார். அதுக்காக நானும் சும்மா இல்ல.

பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல ஒரு ஆர்ஃபனேஜ் இருக்கு. அங்க இருக்குற குழந்தைகளுக்கு தினமும் போய் இலவசமா பாடம் சொல்லிக் குடுத்துட்டு வரேன். அதுக்கப்புறம் வீட்டுல சமைக்குறது, சுத்தம் செய்றது, தோட்டத்தை பராமரிக்குறதுன்னு என்னோட நேரத்தை பயனுள்ளதா கழிக்குறேன்...’’அவன் அவளை ஆச்சரியமாகப் பார்த்தான். “சினிமா பாக்குற பழக்கம் இருக்கா..?’’ எனக் கேட்டான்.

“நல்ல படமா இருந்தா பார்ப்பேன்...’’
“சமீபத்துல பார்த்த நல்ல
படம்..?
“‘மஞ்சுமல் பாய்ஸ்’... அப்புறம் ‘பிரேமலு’...’’
அவனது ஆச்சரியம் மேலும் கூடியது.
“படம் புடிச்சுருந்துதா..?’’
“ம்...’’

“என்னைப்பத்தி என்ன
புரிஞ்சுகிட்டிங்க..?’’
“சினிமாவுல அசிஸ்டெண்ட் டைரக்டரா  இருக்கிங்க... சீக்கிரமே படம் பண்ணப் போறீங்க...’’
“அது அவ்வளவு சாதாரணமான விஷயமில்ல. போராடிக்கிட்டு இருக்கேன்...’’
“தெரியும். டைரக்டர்ஸோட இண்டர்வியூ எல்லாம் யூ ட்யூப்ல பாத்துகிட்டுதான இருக்கேன்...’’
“அப்படியா..?’’

“ஆமாம். கவலைப்படாதிங்க. முழு ஈடுபாட்டோட ஒரு காரியத்தை செய்யும்போது அதுல தோல்விக்கு இடம் இல்ல. எனக்கு நீங்க ஜெயிப்பீங்கன்ற நம்பிக்கை நிறைய இருக்கு...’’
“எப்படி சொல்றீங்க..?’’“ஒருவேளை நீங்க இந்த சந்திப்புக்கு ஒத்துக்காம போயிருந்திங்கன்னா எனக்கு அந்த அபிப்ராயம் வந்துருக்காது...’’“புரியல..?’’“இந்த மாதிரி இருக்குற ஒரு பொண்ணு ஒரு கோரிக்கை வைக்குறா... 

அதை அலட்சியப்படுத்தாம புரிஞ்சுகிட்டு உடனே ஒத்துக்கிட்டிங்க பாருங்க... அதுல தெரியுது உங்க மனசு...’’“பார்க்காம போய்ட்டன்னா நீங்க கஷ்டப்படுவீங்களோங்குற யோசனை... அதனாலதான்...’’“இதுதான்... அடுத்தவங்க கஷ்டப்படக் கூடாதுன்னு நினைக்குற இந்த அக்கறைதான், உங்கள பெரிய உயரத்துக்கு கொண்டு போய் உட்கார வைக்கப் போவுது. ஆல் த பெஸ்ட்...’’அவன் ஆழமாக அவளைப் பார்த்தான்.

“சதா, கண்டிப்பா உங்களுக்கு நா பெரிய சப்போர்ட்டா இருப்பேன். என்னால எந்த வேலையும் பார்க்க முடியும். அப்பாகிட்ட இருக்குற காசு பணத்தை விடுங்க... நா படிச்ச படிப்புக்கு என்னால சம்பாதிக்க முடியும். நீங்க அசிஸ்டெண்ட் டைரக்டரா வேலை பார்த்திங்கன்னா உங்களால படம் பண்றதுல கான்சன்ட்ரேட் பண்ண முடியாது. அதனால வேலைய விட்டுட்டு ட்ரை பண்ணுங்க. அதுக்கு எக்கனாமிக்கலா நா சப்போர்ட் பண்றேன்.

உங்களுக்கு எப்படி வாழ்ந்து காட்டணும்ன்னு ஆசை இருக்கோ அது மாதிரி எனக்கும் இந்த உடம்ப வச்சுகிட்டு வாழ்ந்து காட்டணும்ங்குற ஆசை இருக்கு. அதுவும் ஒரு பெரிய டைரக்டரோட பொண்டாட்டின்னா சும்மாவா..?’’அந்த வார்த்தைகளில் அவன் நெகிழ்ந்து போனான்.தான், வெற்றி பெற, தனக்கு இப்படி ஒரு துணை அவசியம் தேவை என்பதை அந்த கணத்தில் முடிவு பண்ணினான்.அவள், தோற்றத்தில் கனகாம்பரமாக இருந்தாலும் மனதில் வாசனை வீசும் ரோஜாவாகத் தெரிந்தாள்.

- இயக்குநர் மணிபாரதி