11 முறையில் சொல்லப்படும் முதல் படம்!



பதினொரு கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்ட முதல் திரைப்படமாக வெளியாகவுள்ளது ‘சிறகன்’. பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் அப்பா கஜராஜ் லீட் கேரக்டரில் நடிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் வெங்கடேஷ்வராஜ் இயக்கியுள்ளார். இவர் சிம்புவின் ‘ஆத்மன்’ ஆல்பத்தின் எடிட்டர்.‘‘இது ஹைபர்லிங்க் நான்லீனியர் முறையில் 11 கோணங்களில் சொல்லப்பட்டிருக்கும் முதல் சினிமாவாக இருக்கும்...’’ சிறிய முன்னோட்டத்துடன் பேச ஆரம்பித்தார் வெங்கடேஷ்வராஜ்.

டைட்டில் நல்லாயிருக்கே?

கதைக்குத் தேவையான டைட்டிலாகவும் அதே சமயம் ரசிகர்களிடம் இம்பேக்ட் ஏற்படுத்துற டைட்டிலாகவும் இருக்கணும்னு நெனைச்சோம். இது வக்கீலுக்கும் போலீஸுக்கும் இடையே நடக்கும் கதை என்பதால் அதுக்கேற்ற மாதிரி பொதுவான டைட்டிலா ‘சிறகன்’னு வெச்சோம்.வண்ணத்துப் பூச்சிகளில் ‘பஞ்சன் சிறகன்’ என்ற வண்ணத்துப்பூச்சி வகை உள்ளது. பட்டர்ஃபிளை எஃபெக்ட் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். அதுமாதிரி இதன் திரைக்கதைக்கும் பட்டர்ஃபிளை எஃபெக்ட்டுக்குமான கனெக்‌ஷனை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியுள்ளோம்.

இந்த வகை வண்ணத்துப்பூச்சியின் சிறகு ஒரு பக்கம் கருப்பு, வெள்ளையாகவும்; இன்னொரு பக்கம் காக்கி நிறமாகவும் இருக்கும். அப்படி பஞ்சனை எடுத்துட்டு சிறகனை டைட்டிலா வெச்சுக்கிட்டோம்.

கிரைம் த்ரில்லர் கதையில் புதுசா என்ன சொல்லப்போறீங்க?

இந்தக் கதையை எழுதக் காரணம் லோகேஷ் கனகராஜின் ‘கைதி’. அந்தப் படத்தைப் பார்த்த பிறகு நாமும் அதே மாதிரி ஓர் இரவில் நடப்பது போல ஒன் லைன் ஸ்டோரி பண்ணணும்னு யோசிச்சுப் பண்ணிய கதை இது.கிரைம் த்ரில்லர்ல குற்றவாளியை கண்டுபிடிப்பதை முடிவா வெச்சிருப்பாங்க. ஆனால், அதோட ரியாலிட்டியை டீடைல் பண்ணியிருக்க மாட்டாங்க. இதுல க்ரைம் ஏரியாவுல நடக்கும் ரியாலிட்டி அனைத்தையும் டீடைலா சொல்லியிருக்கிறோம்.

உதாரணத்துக்கு, குற்ற வழக்கில் உயர் அதிகாரி விசாரணையில் காவலர் அருகில் இருப்பதுபோல் படங்களில் பார்த்திருப்போம். ஆனால், வழக்கு விசாரணையின்போது காவலர் அருகில் இருக்கவேண்டிய அவசியமில்லை. 

அது நடைமுறையிலும் இல்லாதது. அதே மாதிரி குற்றம் நடந்த பிறகு தடய அறிவியல் துறையின் பணி எப்படியிருக்கும் என்பதை முழுமையா காண்பித்திருக்கிறோம். அப்புறம்  கொலைக்களத்தில் ஃபிங்கர் பிரிண்ட் எடுத்துச் செல்வதைப் போல் திரைப்படங்களில் பார்த்திருப்போம். அது பல சமயங்களில் சாத்தியமற்றது.

ஏனெனில், இறந்தவரின் உடலில் சில நிமிடங்களுக்குப் பிறகு இரத்த ஓட்டம் முழுமையாக நின்றுபோயிருக்கும். அந்த சமயத்தில் எந்த ரேகையையும் பதிவு செய்ய முடியாது. ஆனால், திரைப்படங்களில் பல மணி நேரம் கழிச்சு ரேகை பதிவு செய்வதுபோல் பார்த்திருப்போம். அதையும் மீறி ரேகையைப் பதிவு செய்ய சில வழிமுறைகள் உள்ளன. அதையெல்லாம் டீடைலா சொல்லியிருக்கிறோம்.

கதையைப் பற்றி சொல்வதாக இருந்தால், அரசியல்வாதியின் மகன் காணாமல் போகிறார். அந்த தேடலில் அரசியல்வாதி மர்மமான முறையில் இறந்து விடுகிறார். அரசியல்வாதியின் கொலை எப்படி மொத்த கதையிலும் தொடர்கிறது என்பதை நான் லீனியர் பேட்டர்னில் சொல்லியுள்ளோம்.

வழக்கமான க்ரைம் திரில்லர் கதையாக இருக்கக்கூடாது என்பதற்காகவே  கதைக்காக பல மாதங்கள் களப் பணி செய்தோம். படம் இயக்குவதற்கு முன் காவல்துறைக்காக ‘வெல்வோம்’ என்ற குறும்படம் பண்ணியிருந்தோம். சசிகுமார் சார், சமுத்திரக்கனி சார் நடிச்சாங்க. அதுல பல விழிப்புணர்வு தகவல்கள் சொல்லியிருந்தோம். அந்த அனுபவம் இந்தப் படத்தை வித்தியாசமா சொல்வதற்கு கைகொடுத்துச்சு.

ஹீரோ யார்?

படத்துல 11 கேரக்டர்ஸ் இருக்காங்க. ஸ்டீரியோடைப் கேரக்டர்களை உடைச்சு இந்தக் கதைக்கு யார் பொருந்திப்போனார்களோ அவர்களைத்தான் காஸ்டிங் பண்ணினோம்.கஜராஜ் சார் மெயின் லீட் பண்றார். வெர்சடைல் நடிகரா பல படங்கள் பண்ணியவர். இதுல அவருடைய கேரக்டர் பேசப்படுமளவுக்கு அற்புதமா பண்ணினார். ஜீவா ரவி, ஆனந்த் நாக், பெளசியா ஹிதயா, விநோத், ஹரிஷிதா ராம், மாலிக், பாலாஜி வெங்கட்ராமன், பூவேந்தன், ரயில் ரவி, சானு, விக்கி நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு ‘சேட்டை’ சிக்கந்தர். ‘சேட்டை’ படத்தில் லைட்மேனா வாழ்க்கையை ஆரம்பிச்சவர். இதுல கேமராமேனா அறிமுகம் செய்கிறோம். டைம் லைன் மேட்ச் பண்ணுவது, ஹைபர்லிங்க் ஆர்ட்டிஸ்ட்டுக்கு பொருத்தமா இருப்பது, நிகழ் காலத்தை இரவிலும், கடந்த காலத்தை பகலிலும் காட்டுவது என டெக்னிக்கலா பல சவால்கள் இருந்துச்சு. அதையெல்லாம் பிரமாதமா ஹேண்டில் பண்ணினார்.

ராம் கணேஷ்.கே இசையமைத்துள்ளார். அவருடைய ‘புளியோதரை பொங்கல்’ இணையத்தில் செம வைரலாச்சு. 3 பாடல்கள். எல்லாமே கதையோட கலந்திருக்கும்.
ஃபிலிம் டெக்னாலஜியில் மாஸ்டர் டிகிரி முடிச்ச நான் எடிட்டராதான் என்னுடைய பயணத்தை ஆரம்பிச்சேன். ஏராளமான குறும்படங்கள், தனிப்பாடல்களுக்கு எடிட் பண்ணியிருக்கிறேன். அந்த அனுபவத்துல எடிட்டிங் வேலையையும் நானே எடுத்துக்கிட்டேன்.

முதல் பட இயக்குநருக்கு தயாரிப்பாளர் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. முதல் வாய்ப்புக்காக பல போராட்டங்களை சந்திச்சிருக்கிறேன். அதைப் பார்த்துவிட்டு என்னுடைய அக்கா துர்கா பேட்ரிக் படம் தயாரிக்க முன்வந்தார். ‘உத்ரா’ புரொடக்‌ஷன்ஸ் வெளியீடு.வாழ்க்கையில் நடக்கும் எந்த நிகழ்வும் காரணம் இல்லாமல் நடக்காது. நடப்பவை எல்லாமே காரணத்தோடுதான் இருக்கும் என்பதுதான் படத்தோட மெசேஜ்.

எஸ்.ராஜா