இந்தியப் பெண்கள் அதிகம் பாதிப்படைய வெப்பம் காரணமா..?



‘‘2010 மற்றும் 2019க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் ஆண்களின் இறப்பைவிட பெண்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருந்ததை வைத்து பார்க்கும்போது ஒருவேளை இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலைகள்தான் இந்த இறப்புக்கு காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது...’’ என்று சொல்கிறது அண்மைய ஆய்வு ஒன்று.
லண்டனைச் சேர்ந்த பிரபல ஆய்வு அமைப்பான ‘ராயல் புள்ளி விபர அமைப்பு’ ( ராயல் ஸ்டேடிஸ்டிகல் சொசைட்டி), ‘சிக்னிஃபிகன்ஸ்’ (Significance) இதழில் மேற்சொன்ன ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவரான ரணித் தேப்நாத் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்களில் ஒருவர்.

தேப்நாத் என்ன சொல்கிறார்?

‘‘இந்தியாவில் தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படும் இறப்பு மற்றும் நோய்கள் குறித்த டேட்டாக்கள் போதுமானவையாக இல்லை. இதை கருத்தில்கொண்டே ஜிபிடி எனப்படும் கிளோபல் பர்டன் ஆஃப் டிசீசஸ் (Global Burden of Diseases) தரவுகளை நாங்கள் ஆய்வு செய்ய நேர்ந்தது. இந்த குளோபல் பர்டன் தரவுகள் சுமார் 204 நாடுகளில் எடுக்கப்பட்டது. அதில் இந்தியாவும் ஒன்று. 

இந்த ஆய்வில்தான் இந்தியாவின் தடபவெப்ப நிலைக்கும் அதனால் விளையும் சுகாதாரக் கேடுகள் பற்றியதுமான சுமார் 70 ஆண்டுகால (1950 முதல் 2019 வரை) நிலையை அறிந்துகொண்டோம்...’’ என்று சொல்லும் தேப்நாத், இந்த அறிக்கையிலும் முழுமையாக இந்தியாவின் தட்டவெப்ப நிலை, அதன் விளைவான இறப்பு, நோய்களை  அறிந்துகொள்ளமுடியாது என்கிறார்.

‘‘இந்த குளோபல் தரவுகளுடன் இந்தியாவின் தினசரி தட்பவெப்ப நிலை பற்றிய டேட்டாவையும் 1990 முதல் 2019 வரை திரட்டினோம். இந்த இரண்டு அறிக்கையிலிருந்தும் பார்க்கும்போது 2005 முதல் இந்தியாவில் ஆண்களைவிட பெண்களே தட்பவெப்ப நிலையால் அதிகம் பாதிக்கப்படுவதாக ஒரு யூகத்தில் சொல்லலாம்...’’ என்று சொல்லும் தேப்நாத் மேலும் கூறுகிறார்.

‘‘2000 முதல் 2010 வரை தட்பவெப்ப நிலையால் ஆண்கள் பாதிக்கப்படுவது 23.11 சதவிகிதமாக இருக்க அது 2010 - 2019க்கு இடையில் 18.7 சதவிகிதமாக குறைந்தது. இதுவே பெண்களைப் பொறுத்தளவில் தட்பவெப்ப நிலையால் பாதிக்கப்படுவது அதே 2000 முதல் 2010 வரை 2.63 சதவிகிதமாக இருந்தது. ஆனால், 2010 முதல் 2019க்கு இடைப்பட்ட காலத்தில் 9.84 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.

இதற்கு காரணம் 2005 முதலே இந்தியாவில் ஆண்களைவிட பெண்களின் இறப்பு அதிகரித்திருப்பதற்கு முடிச்சுப் போட்டாலும் அது தட்ப வெப்ப நிலையால்தான் என்று அறுதியிட்டுக் கூறமுடியாது. இந்த உயர்வுக்கு பெண்களின் சமூக பொருளாதார சூழல் அல்லது உடல் அமைப்பு கூட காரணமாக இருக்கலாம். 

பொதுவாக மேற்குலக நாடுகளில் தட்ப வெப்ப நிலை மாற்றம் பெண்களைத்தான் அதிகம் பாதிக்கிறது என்று அறுதியான முடிவுகள் இருக்கின்றன. ஆனால், இந்தியா போன்ற கிழக்கு நாடுகளில் சுமார் 54 சதவீதப் பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்தாலும் தட்பவெப்ப நிலையால் அவர்கள் பாதிக்கப்படுவதில்லை என்று முடிவாகச் சொல்லிவிடமுடியாது.

காரணம், அந்த வீட்டுச் சூழலே நெருக்கடியாக இருந்துவிட்டால் தட்பவெப்ப நிலையின் தாக்கம் கட்டாயம் இருக்கும். மொத்தமாகப் பார்த்தால் பெண்களின் சமூக பொருளாதாரச் சூழல், வீட்டுச் சூழல், உடலமைப்பு போன்ற எல்லாவற்றுக்கும் தட்பவெப்ப நிலை மாற்றத்துக்கும் போதுமான தரவுகள் இருந்தால்தான் பெண்களின் அதிகரித்த இறப்புக்கு சரியான விளக்கங்கள் கூறமுடியும். இதனால்தான் இந்தியா இந்த விஷயத்தில் போதுமான தரவுகளைச் சேகரிக்கவேண்டும் என்று கூறுகிறோம்...’’ என்கிறார் தேப்நாத்.

டி.ரஞ்சித்