என்னை இயக்குநரா அங்கீகரிச்சது குங்குமம் தான்!



‘‘‘குங்குமம்’ பத்திரிகை எனக்குச் செய்த உதவியை மறக்கவே முடியாது. ‘ஹேப்பி சிங்கிள்டைன்ஸ் டே’ என்கிற ஷார்ட் ஃபிலிம் வந்தபோது இதே ‘குங்குமம்’ பத்திரிகைதான் என்னைப் பேட்டி எடுத்திருந்தாங்க. இவ்வளவு பெரிய பத்திரிகையிலே என்னுடைய பேட்டியான்னு சந்தோஷப்பட்ட நாள் அது.
 இதோ இப்பவும் ‘குங்குமம்’ பேட்டி, ஹேப்பியா இருக்கு...’’ உற்சாகமாகப் பேசுகிறார் ‘வல்லவன் வகுத்ததடா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் விநாயக் துரை. ‘‘எங்களின் 2 வருட போராட்டம்தான் இந்தப்படம். தனஞ்செயன் சார் படம் பார்த்திட்டு பிடிச்சிருக்குன்னு சொன்னார். அவர்தான் கால் பண்ணிப் பேசுகிறாரா என ஆச்சரியமா இருந்துச்சு. ‘நல்ல க்யூட் படம்’ என பாராட்டி அவர் பேனரையும்  கொடுத்தார்.

இது ஹைபர்லிங்க் கதைக்களம். ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லி எல்லாம் ஓகே ஆகியிருந்த நிலையில், அவர் எனக்கு செக் சைன் பண்ணும்போது அவர் அறையிலே பாம்பு படமெடுத்து நின்றிருக்கு. 

அத்தோடு அந்தத் தயாரிப்பாளர் அப்படியே போய்விட்டார்...’’ பல சிந்தனைகள் மனதுக்குள் ஓடியவராக தொடர்ந்தார் விநாயக் துரை. ‘‘சொந்த ஊர் சென்னைதான். என் அப்பாவைப் பொருத்தவரை நான் ஒரு அயோக்கியன். அப்பாவுக்கு நான் ஒரு ஏசி ரூமில் உட்கார்ந்து வேலை செய்து கை நிறைய சம்பாதிக்கணும்னு ஆசை, கனவு.

எனக்கு விஸ்காம் படிச்சு சினிமாவில் சாதிக்கணும்னு ஆசை. ஆனா, அப்பாவுக்கு தெரிஞ்சா நிச்சயம் சம்மதிக்க மாட்டார். அதனாலேயே இந்தப் படிப்பு படிச்சா ஐடி துறையில் வேலை கிடைக்கும்னு அப்பாவை ஏமாற்றி விஸ்காம் சேர்ந்தேன். இது சினிமா படிப்பு அப்படின்னு தெரிஞ்சபோது ரொம்ப பெரிய ஏமாற்றத்தை அப்பா சந்தித்தார். படிச்ச படிப்புக்கு ஒரு தனியார் சேனலிலும் வேலை கிடைச்சது. ஆனா, அதையும் விட்டுட்டேன். அப்பாவிற்கு அடுத்த ஏமாற்றம்.

எங்களுக்கு ஒரு சின்ன நிலம் இருந்துச்சு. அதை அக்கா கல்யாணத்திற்காக வித்துட்டு பாதி அக்கா கல்யாணத்திற்கும் மீதியை என்னுடைய வங்கிக் கணக்கிலும் அப்பா போட்டார். ‘குறைந்த பட்சம் இதன் மூலமா ஏதாவது வருமானம் வரும், உன்னை நீ பார்த்துக்கோ’னு கொடுத்தார். 

ஆனா, அதையும் என் நண்பருடன் சேர்ந்து சாண்ட்விச் கடை வைக்கப் போகிறேன்னு பொய் சொல்லி அந்தக் காசை வைத்துதான் இந்தப் படத்தை எடுத்து முடிச்சேன்!இந்த விஷயத்தை அப்பாவிடம் சொன்னப்ப ரொம்ப பெரிய ஏமாற்றத்தை சந்தித்தவரா ஒரு நிமிஷம் பேசாம அப்படியே உட்கார்ந்திட்டார். தொடர்ந்து இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய தனஞ்செயன் சார் ஒப்புக்கொண்டார்னு சொன்னபோது, ‘நான்தான் படிக்காதவன், இவரைப் பார்த்தால் நல்ல படித்த மனிதரா வடநாட்டுக்காரர் மாதிரி இருக்கார்... இவரை எப்படிடா ஏமாத்தினே’னு கேட்டார்!

இதைவிட அடுத்த காமெடி, பத்திரிகையாளர் சந்திப்புனு அப்பாவிடம் சொன்னப்ப, ‘என்னை ஏமாத்திட்ட... இவரை ஏமாத்திட்ட... சரி... அது எப்படிடா பத்திரிகையாளர்கள் உன்னை நம்புவாங்க! நிச்சயமா அடி வாங்கிட்டுதான் வரப்போற’னு சொன்னார்...’’ சின்ன புன்முறுவல் முகத்தில் தோன்ற படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விபரங்களைக் கூறினார் விநாயக் துரை. ‘‘ஒரு பெரும் தொகையான பணம் 5 பேர் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதுதான் கதை.

வில்லன் நடிகர் சரண்ராஜ் சார் மகன் தேஜ் சரண்ராஜ் நாயகன், ராஜேஷ் பாலசந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, ரெஜின் ரோஸ், விக்ரமாதித்யா... அத்தனை பேரும் என்மேலே வெச்ச நம்பிக்கையால்தான் இந்தப் படம் முழுமை அடைஞ்சிருக்கு. ‘சென்னை டு சிங்கப்பூர்’, ‘கொடுவா’ படங்களில் வேலை செய்த கார்த்திக் நல்லமுத்து இந்தப் படத்துக்கு
சினிமாட்டோகிராபி. இந்தப் படத்துக்காக எந்த லொகேஷனிலும் நாங்கள் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே இயல்பா எடுத்திருக்கோம். அதற்கு கார்த்திக்தான் காரணம்.
 
இசை, சகிஷ்னா சேவியர். ஆரம்பத்தில் ஒரு பாடல்தான்னு திட்டம் செய்திருந்தோம். ஆனா, படத்தின் ப்ரொமோஷனுக்காகவும் ஒரு பாடல் உருவாக்கிக் கொடுத்திருக்கார்.
‘வெண்ணிலா கபடி குழு 2’, ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டிங் செய்த அஜய் இந்தப் படத்துக்கு எடிட்டிங். படத்தின் நீளத்தை மட்டுமே மூணு தடவைக்கு மேல நான் எடிட்டிங் செய்திருக்கேன். அத்தனையும் ஏத்துக்கிட்டு பொறுமையா எனக்கு எடிட் செய்து கொடுத்தார்.

அறிவியல் கோட்பாடுபடி ‘தகுதியுடையவை தப்பிப் பிழைக்கும்’னு ஒரு வாக்கியம் இருக்கு. அப்படி இந்த உலகமே வல்லமை பொருந்தியவங்களாலதான் சுத்திக்கிட்டு இருக்கு.
இதை மையமாக வைத்துதான் இந்தப் படத்துக்கு ‘வல்லவன் வகுத்ததடா’ என்கிற ‘கர்ணன்’ படத்தின் பிரபல பாடல் வரியை தலைப்பா வெச்சிருக்கேன். படம் பார்த்துட்டு சொல்லுங்க...’’ புன்னகைக்கிறார் விநாயக் துரை.

ஷாலினி நியூட்டன்