உலகின் விதைப் பெட்டகம்!



24 மணிநேரமும் சூரியன் இருக்கும் இத்தீவில்தான் உலகின் 13 லட்சம் பயிர் விதைகள் பாதுகாக்கப்படுகின்றன!

ஸ்வல்பார்டு... ஆர்க்டிக் பெருங்கடலில் அறுபது சதவீதம் பனியாலும், உறைந்துபோன பனிக்கட்டிகளாலும், அடர்ந்த மலைத்தொடர்களாலும் நிறைந்த ஒரு தீவுக்கூட்டத்தின் பெயர் இது.
உலக வரைபடத்தின் விளிம்பில் துருவப் பகுதியிலுள்ள இந்தத் தீவுக்கூட்டம் நார்வே நாட்டிற்குச் சொந்தமானது. ஸ்பிட்ஸ்பெர்ஜென், நார்டாஸ்ட்லேண்டட், எட்ஜ் ஆகிய மூன்று தீவுகள் அடங்கிய இந்த தீவுக்கூட்டம், உலகின் பொக்கிஷங்களில் ஒன்று என்றால் அது மிகையல்ல. இதற்கு நிறைய காரணங்களும் இருக்கின்றன.

ஆம். இங்குதான் உலகின் உன்னதமான பயிர் பன்முகத்தன்மைக்கான பாதுகாப்புப் பெட்டகம் உள்ளது. தவிர, ஆர்க்டிக் பிரதேசங்களை ஆய்வு செய்யும் ஆய்வுக்கூடம், துருவக் கரடிகள், துருவ இரவு, நள்ளிரவு சூரியன் உள்ளிட்ட பல்வேறு ஆச்சரியங்களும் நிரம்பியுள்ளன. அத்துடன் கியாகிங், ஸ்நோமொபைல் எனப்படும் பனிவண்டி பயணம், நாய்கள் வண்டியை இழுத்துச் செல்லும் சஃபாரி உள்ளிட்டவை இருக்கின்றன. இதனாலேயே பல ஆண்டுகளாக இது சிறந்த சுற்றுலாத்தலமாகவும் விளங்கி வருகிறது.

சரி, அதென்ன உலகின் பயிர் பன்முகத்தன்மை?

அதைப் பற்றி பார்க்கும்முன் இந்தத் தீவுக்கூட்டத்தைப் பற்றி இன்னும் சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்ப்போம். இந்தத் தீவுக்கூட்டத்தில் ஸ்பிட்ஸ்பெர்ஜென் தீவே பெரியது. இதில் மட்டுமே மனிதர்கள் வசிக்கின்றனர்.
2023ன் கணக்குப்படி இங்கு மொத்தம் 2 ஆயிரத்து 530 பேர்கள் வாழ்கின்றனர்.இதில், நார்வேயர்கள், ஜெர்மானியர்கள், ரஷ்யர்கள், போலந்துக்காரர்கள், ஸ்வீடன்காரர்கள், டென்மார்க்கைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். பெரும்பாலானவர்கள் கிறிஸ்துவர்கள். இதில் பலர் நிலக்கரிச் சுரங்க வேலைக்காக வந்து செட்டிலானவர்கள்.

இந்தத் தீவுக்கூட்டத்தினை 1596ம் ஆண்டு டச்சுக்காரர் வில்லெம் பேரண்ட்ஸ் முதலில் கண்டறிந்தார். பிறகு, 1604ம் ஆண்டு பிரிட்டிஷ் கப்பல் இந்தத் தீவிற்கு வந்து அங்குள்ள வால்ரஸ் எனப்படும் பனிக்கடல் யானைகளை வேட்டையாடியது.  தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தீவிற்கு அவர்கள் பயணம் மேற்கொண்டு வில் தலை திமிங்கலங்களை (Bowhead Whale) வேட்டையாடினர். இது தனித்துவிடப்பட்ட தீவு என்பதால் பிரிட்டிஷ், டேனிஷ், டச்சு, பிரஞ்சு எனப் பல நாட்டினரும் உரிமை கொண்டாடினர்.

பின்னர் 17ம் நூற்றாண்டில் இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் திமிங்கலங்களின் வேட்டைக்காக சிறிய குடியிருப்புகளை உருவாக்கினர். தொடர்ந்து இந்நூற்றாண்டின் முடிவில் வந்த ரஷ்யர்கள் ஆர்க்டிக் பிரதேசத்தின் பெயர்போன துரவக் கரடி, ஆர்க்டிக் நரி உள்ளிட்டவற்றை வேட்டையாடினர். நார்வேகாரர்கள் வால்ரஸ் எனப்படும் பனிக்கடல் யானைகளை வேட்டையாடினர்.

1820ம் ஆண்டு வரை ஸ்பிட்ஸ்பெர்ஜெனில் திமிங்கல வேட்டை இருந்தது. பின்னர் டச்சு, டேனிஷ், பிரிட்டிஷ் உள்ளிட்டவர்கள் ஆர்க்டிக் பிரதேசத்தில் உள்ள வேறு தீவுகளுக்கு நகர்ந்தனர். இதனால், வேட்டையாடுவது குறைந்தது.

1890 களில் ஸ்வல்பார்ட் தீவுக்கூட்டங்கள் ஆர்க்டிக் சுற்றுலாவுக்கான ஒரு முக்கிய இடமாக மாறியது. அங்கே நிலக்கரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், சுரங்கங்கள் தோன்றின. தவிர, இத்தீவுக்கூட்டம் ஆர்க்டிக் பற்றிய ஆய்வுக்கான தளமாகவும் ஆனது. 1920ம் ஆண்டு ஸ்வல்பார்ட் ஒப்பந்தம் மூலம் இந்தத் தீவு நார்வே நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்டது. 1925ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததுடன் முதல் கவர்னர் ஜோஹன்னஸ் கெர்க்கென்ஸ் பாஸ்ஸோ பதவியேற்றார்.

ஸ்வல்பார்ட் என்றால் நார்வே மொழியில் ஸ்வல் என்பது குளிரையும், பார்ட் என்பது விளிம்பையும் குறிக்கிறது. உலகின் விளிம்பில் உள்ள குளிர்பிரதேசம் என்பதை குறிக்க ஸ்வல்பார்ட் எனப் பெயர் வைத்துள்ளனர். 

இந்தத் தீவுக்கூட்டத்தின் மிகப்பெரிய நகரான லாங்இயர்பேய்ன் நிர்வாக மையமாகச் செயல்படுகிறது. இந்நகரிலேயே ஆளுநர் அலுவலகம், விமான நிலையம், மருத்துவமனை, ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி, பல்கலைக்கழகம், நீச்சல்குளம், நூலகம், கலாச்சார மையம், சினிமா, பேருந்து போக்குவரத்து, ஹோட்டல்கள், வங்கி மற்றும் பல அருங்காட்சியகங்கள் உள்ளன.

அதுமட்டுமில்லாமல் ‘ஸ்வல்பார்ட்போஸ்டன்’ என்கிற வார நாளிதழும் இங்கிருந்து வெளிவருகிறது. இப்போது முன்புபோல் இல்லாமல் சுரங்க நடவடிக்கைகளும் குறைந்த அளவிலேயே உள்ளன.

இங்கு சுற்றுலா வருபவர்கள் கோடைக்காலத்தில் நள்ளிரவு சூரியனையும், குளிர்காலத்தில் துருவ இரவுகளையும் தரிசிக்கலாம். இதனைக் கண்டுகளிக்க வேண்டி நிறைய சுற்றுலாப் பயணிகள் இத்தீவிற்கு படையெடுத்து வருகின்றனர். 

நள்ளிரவு சூரியன் என்பது அத்தீவில் நள்ளிரவு 12 மணிக்கும் சூரியன் தெரிவதைப் பார்க்கலாம். குறிப்பாக 24 மணி நேரமும் சூரியன் தெரியக்கூடியதாக இருக்கும். அதேபோல், துருவ இரவு என்பது 24 மணி நேரத்தைத் தாண்டியும் இரவு தொடரும். துருவப் பகுதியில் இத்தீவு இருப்பதால் இந்நிகழ்வுகள் கோடைகாலத்திலும் குளிர்காலத்திலும் சில மாதங்கள் ஏற்படுகின்றன.

இங்குதான் உலகின் உன்னதமான பயிர் பன்முகத்தன்மைக்கான பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, என்றாவது ஒருநாள் கடும் இயற்கை பேரிழவுகளாலோ, நோய்களாலோ, போர்களாலோ அல்லது ஏதேனும் காரணங்களாலோ உலக நாடுகள் தங்களின் மரபணு விதை வங்கிகளை இழக்க நேர்ந்தால் என்ன செய்வது? அதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் இந்தப் பெட்டகம்.இன்னும் சொல்லப்போனால் ‘2012’ திரைப்படத்தில் உலகம் அழியும்போது அதிலிருந்து மனிதர்கள் தப்பிக்க ஒரு கப்பலை நிர்மாணிப்பார்கள் அல்லவா?

அதுபோல மேற்சொன்ன பேரிழவுகளால் நாளை உலகம் அழிந்தாலும் எஞ்சியிருக்கும் மனிதர்களுக்கான உணவு சப்ளையில் எந்தத் தடங்கலும் வந்துவிடக்கூடாது என்பதற்காக உலகிலுள்ளமொத்த பயிர் விதைகளை இங்கு பாதுகாத்து பத்திரப்படுத்தி வருகின்றனர். 

அதனாலேயே இந்தத் தீவுக்கூட்டம் மிகமுக்கியமான பொக்கிஷமாகக் கருதப்படு
கிறது. 1980ல் இந்த விதைப் பெட்டகத்திற்கான கருத்தாக்கம் உருவானது. இதனையடுத்து 1984ம் ஆண்டு லாங்இயர்பேய்ன் நகரில் கைவிடப்பட்ட நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் நார்வே நாடு மரபணு விதை வங்கியை உருவாக்கியது. காலப்போக்கில் உலகளவில் இந்த ஐடியா பரவியது.

தொடர்ந்து 2006ம் ஆண்டு  இந்த விதைப் பெட்டகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அன்று நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்தின் பிரதமர்கள் சம்பிரதாயமாக இதற்கான முதல் கல்லை நட்டு வைத்தனர்.

பின்னர், 2008ல் நார்வே பிரதமர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், ஐரோப்பிய யூனியன் தலைவர் ஜோஸ் மானுவல் பரோசோ, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் இயக்குநர் ஜெனரல் ஜாக்ஸ் ,அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற வாங்காரி மாத்தாய் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது.

அன்றைய மதிப்பில் 8.8 மில்லியன் அமெரிக்க டாலரில் இந்த விதைப் பெட்டகம் உருவாக்கப்பட்டது. இதற்கான முழுச் செலவையும் நார்வே அரசே ஏற்று செய்தது. பின்னர், ஒவ்வொரு நாடாக தங்கள் விதைகளை இங்கே பத்திரப்படுத்த கொடுக்க ஆரம்பித்தன. முதலாமாண்டு நிறைவிலேயே 90 ஆயிரம் விதை மாதிரிகள் வந்து சேர்ந்தன.அப்படிச் சேர்ந்து இப்போது இந்த விதைப் பெட்டகத்தில் 13 லட்சம் விதை மாதிரிகள் உள்ளன. மைனஸ் 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்து இந்த விதைப் பெட்டகம் பாதுகாக்கப்படுகிறது.

இந்த விதைப் பெட்டகம் உள்ள இடத்தில் டெக்டானிக் செயல்பாடு இல்லாததும், பெர்மாஃப்ரோஸ்ட் எனும் நிலத்தடி உறைபனி இருப்பதும் அந்த விதை மாதிரிகளின் பாதுகாப்பிற்கு உதவுகின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த விதைப் பெட்டகம் கடல் மட்டத்திலிருந்து 130 மீட்டர், அதாவது 430 அடி உயரத்தில் இருப்பதால், ஒருவேளை நாளை காலநிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் உருகினாலும் ஆபத்து இல்லை என்கின்றனர்.  

தற்போது 90க்கும் மேற்பட்ட வைப்பாளர்கள் தங்கள் பயிர் மாதிரிகளை இந்த விதைப் பெட்டகத்தில் பாதுகாத்து வைத்துள்ளனர். சர்வதேச மக்காச்சோளம் மற்றும் கோதுமை மேம்பாட்டு மையம் சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் விதை மாதிரிகளையும், சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் ஒரு லட்சத்து 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதை மாதிரிகளையும், அரைக்கோள வறண்ட வெப்ப மண்டலத்திற்கான சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனம் ஒரு லட்சத்து 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதை மாதிரிகளையும், உலர் பகுதிகளின் வேளாண் ஆராய்ச்சிக்கான சர்வதேச மையம் 98 ஆயிரம் விதை மாதிரிகளையும், வெப்பமண்டல வேளாண்மைக்கான சர்வதேச மையம் 57 ஆயிரம் விதை மாதிரிகளையும், உலக காய்கறி மையம் 29 ஆயிரம் விதை மாதிரிகளையும், சர்வதேச வெப்பமண்டல விவசாய நிறுவனம் 23 ஆயிரம் விதை மாதிரிகளையும் பாதுகாத்து வைத்துள்ளன.

இதுதவிர அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா, ஸ்வீடன், தென்கொரியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் தங்கள் விதை மாதிரிகளை இங்கு பாதுகாத்து வருகின்றனர். இதனால்தான் ஸ்வல்பார்டு தீவு ஒரு பொக்கிஷமாகப் பார்க்கப்படுகிறது.

பேராச்சி கண்ணன்