தென்னிந்தியாவின் முதல் ஐமேக்ஸ் வித் லேசர் திரையரங்கம்!



கோயம்புத்தூர் என்றாலே சிறுவாணி தண்ணீர், அரிசிம் பருப்பு சாதம், மக்களோட மரியாதையான பேச்சு, சில்லென்ற காற்றுதான் முதலில் நினைவுக்கு வரும்.
ஆனால், சினிமா காதலர்களுக்கு கோயம்புத்தூர் என்றாலே ‘பிராட்வே சினிமாஸ்’தான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு சினிமா காதலர்களைத் தன்வசப்படுத்தியிருக்கிறது இந்த மல்டிபிளக்ஸ் திரையரங்கம். இங்கே திரைப்படங்களைப் பார்ப்பதற்காக ஹைதராபாத், தில்லி, சென்னை, கொச்சி, திருவனந்தபுரம் என தொலை தூரத்திலிருந்து எல்லாம் சினிமா காதலர்கள் வருகின்றனர்.

கோயம்புத்தூர் வாசிகள் யாரிடம் வழி கேட்டாலும் திரையரங்கு இருக்கும் இடத்துக்கான பாதையைக் காட்டுகின்றனர். திறக்கப்பட்ட சில நாட்களிலேயே இந்தியாவின் முக்கியமான மல்டிபிளக்ஸாக பரிணமித்துவிட்டது, ‘பிராட்வே சினிமாஸ்’. ஆம்; இந்த மல்டிபிளக்ஸ் திறக்கப்பட்டு ஒரு வருடம் கூட நிறைவடையவில்லை.

அப்படி இங்கே என்ன இருக்கிறது என்கிறீர்களா?

தென்னிந்தியாவின் முதல் ஐமேக்ஸ் வித் லேசர் திரை, தமிழ்நாட்டின் முதல் எபிக் பிரீமியம் பெரிய திரை மற்றும் தமிழ்நாட்டின் சொகுசான முதல் கோல்டு திரை உட்பட மொத்தம் ஒன்பது திரைகளுடன் அமர்க்களப்படுத்துகிறது ‘பிராட்வே சினிமாஸ்’. அத்துடன் இதன் கட்டட வடிவமைப்பும், உள் அரங்கமைப்பும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு சவால் விடுகின்றன. 
ஐமேக்ஸ் வித் லேசர்வழக்கமான திரையைவிட மூன்று அல்லது நான்கு மடங்கு பெரிதான பிரமாண்ட திரை, நெஞ்சை அதிர வைக்கும் துல்லியமான 12 சேனல் சவுண்ட் சிஸ்டம், தெள்ளத்தெளிவான காட்சிகளுக்கு 4k லேசர் ப்ரொஜக்‌ஷன், பார்வையாளர்களுக்கு இடையூறு தராத விசாலமான இருக்கை வசதிகள், முழுத்திரையையும் நிரப்புகின்ற 1.90:1 ஆஸ்பெக்ட் ரேஷியோ, திரைக்குள்ளே நம்மை இழுத்துச்செல்லும் 3டி என உலகத்தரத்துடன் மகத்தான சினிமா அனுபவத்தைக் கொடுக்கிறது ‘பிராட்வே சினிமாஸி’ல் அமைந்திருக்கும் ‘ஐமேக்ஸ் வித் லேசர்’ திரையரங்கம்.

இங்கே சினிமா பார்க்கும்போது கிடைக்கும் அனுபவத்தை வார்த்தைகளில் விவரிப்பது அவ்வளவு எளிதல்ல. இங்கே ஒருமுறை படம் பார்த்தவர்கள் வேறு திரையரங்குக்குச் செல்ல மாட்டார்கள். அந்தளவுக்கு நம்மை வசீகரிக்கிறது இந்த திரையரங்கம். இன்று உலகம் முழுவதும் 1,700க்கும் அதிகமான ஐமேக்ஸ் திரையரங்குகள் உள்ளன. வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகரிக்கலாம்.

‘‘உண்மையில் ஐமேக்ஸ் போன்ற பிரமாண்ட திரையரங்குகள்தான் மக்களை மீண்டும் திரையரங்குக்கு இழுத்து வருகிறது. நாளைய சினிமா ஐமேக்ஸை நம்பித்தான் இருக்கிறது...’’ என்கின்றனர் சினிமா நிபுணர்கள். ஐமேக்ஸ் திரையரங்குகளில் பெரும்பாலும் ஹாலிவுட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களைத்தான் வெளியிடுகின்றனர்.

எல்லா படங்களையும் ஐமேக்ஸில் வெளியிட முடியாது. காரணம், ஐமேக்ஸில் படங்களை வெளியிட வேண்டுமென்றால் அதற்குரிய வடிவத்தில் படம் எடுக்க வேண்டும். இதற்காக ஐமேக்ஸ் சான்றிதழ் பெற்ற பிரத்யேகமான கேமராக்கள் இருக்கின்றன.

இப்போது வழக்கமான கேமராக்களில் எடுக்கப்பட்ட படங்களைக் கூட ஐமேக்ஸ் திரையரங்குக்கு ஏற்ப மாற்றம் செய்து வெளியிடுகின்றனர். அந்தளவுக்கு ஐமேக்ஸ் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. தவிர, கிறிஸ்டோ ஃபர் நோலன், டெனிஸ் வில்னவ் போன்ற உலகப்புகழ்பெற்ற இயக்குனர்கள் கூட ஐமேக்ஸ் திரையரங்கை நோக்கமாக வைத்தே படங்களை இயக்குகின்றனர்.

சமீபத்தில் இந்தியாவின் முன்னணி இயக்குநர்கள் கூட ஐமேக்ஸ் திரையரங்குக்கு உகந்த படங்களை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய ஐமேக்ஸ் திரையரங்குகள் இந்தியாவில் 29 இடங்களில் மட்டுமே இருக்கின்றன. இவற்றில் லேசர் தொழிநுட்பத்துடன் கூடிய ஐமேக்ஸ் வித் லேசர் திரையரங்குகள் தில்லி, மும்பை, நொய்டா, கோயம்புத்தூர் ஆகிய சில நகரங்களில் மட்டுமே இருக்கின்றன.

இந்த 29 ஐமேக்ஸ் திரையரங்குகளில் மிகச்சிறப்பான அனுபவத்தைத் தரக்கூடிய திரையரங்கமாக மிளிர்கிறது ‘பிராட்வே சினிமாஸி’ல் வீற்றிருக்கும் ஐமேக்ஸ் வித் லேசர்.
இங்கே படங்களைப் பார்ப்பதற்காகத்தான் வெவ்வேறு மாநிலங்களிலிருந்து எல்லாம் கோவையை நோக்கி படையெடுக்கின்றனர். நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து படம் பார்ப்பதற்குத் தகுதியான ஒரு திரையங்கம் இது. சினிமா காதலர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய இடமும் கூட.

*எபிக்க்யூப் சினிமா

திரைப்படத்துறைக்கு வழங்கிய கொடைதான் இந்த எபிக். ‘பிராட்வே சினிமாஸி’ல் இருக்கும் இந்த திரையரங்குக்குள் நுழைந்ததுமே நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது ராட்சத எபிக் திரை. 71 அடி அகலமும், 37 அடி உயரமும் கொண்ட பிரமாண்டம் இது. தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய திரை இதுதான். ஐமேக்ஸ் வித் லேசருக்குப் பிறகு ‘பிராட்வே சினிமாஸை’ நோக்கி வெளி மாநிலத்தவர்கள் படையெடுக்க காரணமும் இந்த எபிக் திரைதான்.

இங்கே தமிழ் மற்றும் மலையாளப் படங்களைப் பார்ப்பது தனி அனுபவம். பெரும்பாலும் எபிக் திரையில் உள்நாட்டுப் படங்களைத்தான் வெளியிடுகின்றனர். ஆங்கிப்படங்களைப் பார்க்க சிறந்த வடிவம், ஐமேக்ஸ் என்றால் நம் இந்தியப் படங்களைப் பார்ப்பதற்குச் சிறந்த வடிவம் எபிக்தான் என்று அடித்துச் சொல்லலாம். 

அதுவும் ‘பிராட்வே சினிமாஸி’ல் கம்பீரமாக காட்சியளிக்கும் எபிக் திரையரங்கிற்கு நிகரான இன்னொரு திரை தமிழ்நாட்டிலேயே இல்லை. மட்டுமல்ல, மைதான வடிவிலான இருக்கை வசதி, பார்கோ ஆர்ஜிபி லேசர் ப்ரொஜக்‌ஷன், முழுத்திரையையும் ஆக்கிரமிக்கும் தனித்துவமான 1.89 ஆஸ்பெக்ட் ரேஷியோ, மகத்தான சவுண்ட் சிஸ்டம், 4k ரெசல்யூஷன் கன்டென்ட் என அசத்துகிறது எபிக்.

*கோல்டு திரை

திரைப்படம் பார்ப்பதையே சொகுசான அனுபவமாக மாற்றும் திரையரங்கம் இது. ‘பிராட்வே சினிமாஸி’ன் தனித்த அடையாளம் இது. கால்களை நீட்டிப் படுத்துக்கொண்டே சினிமாவைப் பார்ப்பதற்கான ஆடம்பரமான இருக்கை வசதி, உணவுப்பொருட்களை வைப்பதற்கான இட வசதி, திரைக்கும் இருக்கைக்கும் இடையில் இருக்கும் தாராளமான இட வசதி என ஆடம்பரத்தின் அடையாளமாக மிளிர்கிறது இந்த திரையரங்கம்.

சொகுசான திரையனுபவம் வேண்டுபவர்கள் கட்டாயமாக செல்ல வேண்டிய திரையரங்கம் இது. ஆடம்பரமான இருக்கை வசதி கொண்ட தமிழ்நாட்டின் முதல் திரையரங்கமும் இதுவே. மற்ற ஆறு திரைகளும், உணவகங்களும் தரமான முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.

த.சக்திவேல்