மீண்டும் கமல்...மீண்டும் அபிராமி!



‘உன்னைவிட இந்த உலகத்தில் ஒசந்தது யாரும் இல்ல...’ என்ற ‘விருமாண்டி’ பாடலைக் கேட்கும்போதெல்லாம் மனசுக்குள் மத்தாப்பாக வந்து போகும் அசத்தல் அழகி  அபிராமி.

கமல், பிரபு, அர்ஜுன், பிரபுதேவா என தமிழ் சினிமாவின் அத்தனை முன்னணி நடிகர்களுடன் நாயகியாக நடித்து நற்பெயர் பெற்றவர் இப்பொழுது தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் செம பிஸி.
சென்னை, ஹைதராபாத், திருவனந்தபுரம் என நாற்திசையிலும் பயணித்துக் கொண்டிருக்கிறார். கமலின் ‘தக் லைஃப்’ மற்றும் ‘ஒன்ஸ் அப்பான் ஏ டைம்’, ‘ஜாலியோ ஜிம்கானா’ என பல படங்களில் பிசியாக இருக்கும் அபிராமி குடும்பத்துடன் பெங்களூருவில் செட்டிலாகியுள்ளார்.

பொதுவாக  நடிகர், நடிகைகளின் கம்பேக் ஹிட்டடிக்காது. ஆனால், இவர் கம் பேக் வரும்போது அதே வேல்யூ, கைநிறைய படவாய்ப்பு என பிசியாக இருக்கிறார். அதற்கு, இவரின் அணுகுமுறை, பழகும்விதம், தொழில் பக்திதான் காரணம் என்கிறார்கள்.

இரண்டாவது இன்னிங்ஸ் எப்படியிருக்கு?

சூப்பராயிருக்கு. மீண்டும் நடிக்க வருவேன்னு நானே நினைச்சுப் பார்க்கல. சின்னச் சின்ன நிகழ்வுகளின் தொடர்ச்சியாதான் மறுபடியும் பிசியா நடிக்க ஆரம்பிச்சிருக்கிறேன். இது எனக்கு கிடைச்ச போனஸ்.தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் அழுத்தமான வேடங்கள் கிடைச்சிருக்கு. 
சினிமா எனக்கு பிடிக்கும். அப்படி எனக்கு பிடிச்ச சினிமாவை மீண்டும் அதே வேகத்துடன் பண்ணமுடிகிறது. நிறைய புது இயக்குநர்கள் வந்திருக்கிறார்கள். கதையை அணுகும் விதத்தில் அவர்களிடம் வித்தியாசத்தைப் பார்க்க முடிகிறது. மலையாளம், தெலுங்கு என தென்னிந்தியப் படங்கள் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகின்றன.

அப்படி, வெரைட்டியான ஸ்டோரிகளில் எனக்காக எழுதப்பட்ட கேரக்டர்கள் பல வருது. நடிக்க வந்தப்ப என்னுடைய படங்களில் இயக்குநர்கள் ஜாம்பவான்களா இருந்தார்கள். அது எனக்கு பெருமைமிக்க தருணம். இப்போது சம நிலையில் உள்ள வயதுக்காரர்களுடன் வேலை செய்வதும் அவர்கள் என்னை பெருமிதமாக பார்ப்பதும் சிறந்த அனுபவத்தைக் கொடுத்துள்ளது.
சில இயக்குநர்களிடம் உங்கள் படங்கள் பிடிக்கும்னு சொல்லும்போது அவர்கள் முந்திக்கொண்டு ‘மேடம் நான் உங்கள் ரசிகை’ என்று சொல்லும்போது மகிழ்ச்சியா இருக்கு.

‘விருமாண்டி’ அபிராமி என்று அழைப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

எந்தவொரு நடிகையும் தன் சினிமா பயணத்தில் புதுப்புது எல்லைகளைத் தொட விரும்புவார்கள். அப்படி ‘விருமாண்டி’ மாதிரியான மைல்ஸ்டோன் படத்தில் நடிப்பதை மிகப் பெரிய பாக்யமா பார்ப்பார்கள். எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சது. ஒவ்வொரு நடிகையும் தங்கள் மீது விழும் இமேஜை அடுத்தடுத்த படங்களில் உடைச்சுப் பண்ண முயற்சி எடுப்பாங்க.
அப்படி ‘விருமாண்டி’ எனக்கான சவால் மட்டுமல்ல, எனக்கான கெளரவமாகவும் பார்க்கிறேன். ‘விருமாண்டி’ அபிராமி அப்படியே இருக்கட்டுமே! அது நான் கஷ்டப்பட்டு பண்ணின படம்.

கமலுடன் நடிச்சது எதிர்பார்த்த வாய்ப்பா அல்லது எதிர்பார்க்காத வாய்ப்பா?

அது எதிர்பார்க்காத வாய்ப்பு. கேரளாவில் இருந்த என்னை தமிழ் சினிமாவில் கமல் சார் நடிக்க வெச்சது, சினிமாவை விட்டு விலகி அமெரிக்காவில் இருந்த என்னை மீண்டும் கமல் சார் அழைச்சு ‘விஸ்வரூபம்’ படத்துல டப்பிங் பேச வெச்சது, மீண்டும் ‘தக் லைஃப்’ல நடிக்க வெச்சது உட்பட எதுவுமே எதிர்பார்த்த வாய்ப்பு அல்ல.

‘தக் லைஃப்’?

மணிரத்னம் சார், கமல் சார், ஏ.ஆர்.ரஹ்மான் சார் என ஜாம்பவான்கள் இணைந்திருக்கும் படத்தில் நானும் இருப்பது எனக்கான பெரிய அங்கீகாரம். ஒவ்வொரு ஆர்ட்டிஸ்ட்டுக்கும் மணி சாருடன் ஒரு படமாவது பண்ண வேண்டும் என்ற விஷ் லிஸ்ட் இருக்கும்.ஏற்கனவே மணி சார் டைரக்‌ஷன்ல இரண்டு படங்கள் கதை கேட்ட பிறகு பண்ண முடியாத சூழ்நிலை வந்துச்சு. அதை மணி சாரிடம் சொன்னபோது அவருடைய ஸ்டைலில் சிரிச்சார். ‘விருமாண்டி’ படத்துக்குப் பிறகு கமல் சாருடன் இணைந்திருப்பது பலமடங்கு மகிழ்ச்சி.

கமல்?

நான் சொல்லி புதுசா எழுத என்ன இருக்க முடியும். கமல் சாரிடம் தனிப்பட்ட விதத்தில் பிடிச்சது அவருடைய சென்ஸ் ஆஃப் ஹியூமர். சாதாரணமாகவும் ஜோக் அடிப்பார். அதே சமயம் நமக்கே தெரியாதபடி டிரோலும் பண்ணுவார். எல்லா மொழிகளிலும் காமெடியில் பிச்சு உதறுவார். மலையாளத்தில் பண்ணும்போது மலையாளி காமெடி பண்ணுவதைப்போலவே இருக்கும்.

‘ஒன்ஸ் அப்பான் ஏ டைம்’ல உங்கள் கேரக்டர் பற்றி சொல்லுங்கள்?

ஒரு சம்பவத்தில் நான்கு பேர் எப்படி சம்பந்தப்படுகிறார்கள் என்பதுமாதிரி திரைக்கதை எழுதப்பட்டிருக்கும். அதில் ஒரு பகுதியில் நான் இருப்பேன். மற்ற பகுதியில் பரத், ஷான் உட்பட பலர் இருப்பார்கள். எனக்கு தூய்மைப் பணியாளர் வேடம். தூய்மைப் பணி பெரும்பாலும் இரவு நேரங்களில் நடப்பதால் படப்பிடிப்பும் இரவு நேரங்களில் நடந்துச்சு. படப்பிடிப்பு நடக்கும்போது நிஜ பணியாளர்களும் வேலை செய்து கொண்டிருப்பார்கள்.

ஒரு முறை அதிகாலையில் படப்பிடிப்பு நடந்துச்சு. பேட்டரி வண்டியில் என்னைத் தாண்டிப்போன ஒரு பணியாளர் என்னை ஊழியர் என்று நினைத்துப் பேச ஆரம்பித்தார். அதன்பிறகு நானும் அவரும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். அவரிடமிருந்த குப்பை அள்ளும் பேட்டரி வாகனத்தை ஓட்டிப் பார்க்கவும் செய்தேன். 

அதெல்லாம் என்னுடைய கேரக்டர் டெவலப்புக்கு யூஸ்ஃபுல்லா இருந்துச்சு. தூய்மைப் பணியாளர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் பல சமயங்களில் மறந்துவிடுவோம். தூய்மைப் பணியாளர்கள் தங்களை மாசு, தொற்றுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முகத்தில் மாஸ்க், தலையில் தொப்பி, துப்பட்டா என்று தங்களை மறைத்து வேலை செய்வார்கள்.  

ஆனால், நான் கவனிச்சவரை பெண்களின் கம்மல், மூக்குத்தி க்யூட்டா இருக்கும். குப்பைக்கு மத்தியில் குண்டுமணி தங்கம் ஜொலிக்கும் அழகே தனி.தூய்மைப் பணியாளர்கள், இரவு பகல் பார்க்காமல் வேலை செய்யும் காவல்துறை போன்ற பொதுத்துறை அமைப்புகள் இல்லையென்றால் சமூகம் எப்படியிருக்கும்? இதை மிக அழகாக படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பிரசாத்.தவிர, ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில்  ‘ஜாலியோ ஜிம்கானா’, கர்ணா இயக்கும் ‘ஐபிஎல்’, விஜய் மில்டன் இயக்கும் வெப் சீரீஸ் உட்பட பல ப்ராஜெக்ட்ஸ் கை
வசம் இருக்கு. தெலுங்கு, மலையாளப் படங்களும் இருக்கு.

சீனியர் நடிகையான உங்கள் ஆக்டிங் முறையில் சமீபத்தில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதா?

கேரக்டர் பொறுத்து பிராசஸ் மாறும். சில கேரக்டர் வித்தியாசமா இருந்தால் யோசிச்சுப் பண்ணணும். அதற்கு கூடுதல் உழைப்பு தரணும். சில கேரக்டர்களுக்கும் எனக்கும் ஒற்றுமை இருக்கும். சமீபத்துல ‘கோடை மழை’ என்ற வெப் சீரீஸ் பண்னினேன். அதுல என்னையே பிரதிபலித்த மாதிரி இருந்துச்சு.

விஷால் வெங்கட் இயக்கத்தில் ஒரு படம் பண்றேன். அதுல வித்தியாசமான வேடம். அந்தவகையில் கேரக்டர் பொறுத்து ஆக்டிங் பிராசஸ் மாறும். சில சமயம் இயக்குநர் டிமாண்ட் பொறுத்து பிராசஸ் மாறும். எப்படியிருந்தாலும் படத்துடன் ஒன்றிணைந்து பண்ணுவது பிடிக்கும்.

எந்த ஹீரோவுடன் பண்ணும்போது கெமிஸ்ட்ரி அதிகம் ஒர்க் அவுட்டான மாதிரி இருக்கும்?

அசெளகரியம், இடைவெளி யாரிடமும் இருந்த மாதிரி தெரியல. நடிகர்களைவிட இயக்குநர்களுடன் அதிகம் ஜெல்லாகியிருப்பேன். இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், விஷால் வெங்கட் போன்றவர்களுடன் ஃப்ரெண்ட்லியா பழக முடிஞ்சது.

உங்கள் படங்களை மறுபடியும் பார்த்துள்ளீர்களா?

ரிலீஸ் டைம்ல பார்ப்பதோடு சரி. என் கணவர் மலையாளி. மதுரை வட்டார மொழியை புரிய வைப்பதற்காக ‘விருமாண்டி’ படத்தை மீண்டும் பார்த்தேன். மீண்டும் படம் பார்க்கும்போது, இப்படி பண்ணியிருக்கலாமேனு தோணும். அதனால் மீண்டும் படம் பார்ப்பதை தவிர்த்துவிடுவேன்.

உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதவர் யார்?

பலர் இருக்கிறார்கள். நம்மை மோட்டிவேட் பன்ணுவதற்கு சாதனையாளர்கள் இருக்கணும்னு அவசியம் இல்லை. நம்மைச்சுற்றி நண்பர்கள், குடும்பத்தினர் என பலர் அதுமாதிரி இருப்பார்கள். அப்படி என் கணவர், நண்பர்கள் பலர் என்னை என்கரேஜ் செய்துள்ளனர்.

உங்க கணவர் ராகுல் பாவனன் பற்றி?

நாங்க ரெண்டு பேரும் சின்ன வயசுலயிருந்து ஃப்ரெண்ட்ஸ். ஒண்ணாதான் படிச்சோம். என்னுடைய வெற்றி, தோல்வியை பார்த்தவர். அவரும் அவருடைய துறையில் பிசியா இருப்பவர். நான் ஷூட்டிங்ல இருக்கும்போது அவர்தான் குழந்தை, குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார். என்னுடைய கணவர்தான் என்னுடைய முதுகெலும்பு.

எஸ்.ராஜா