சூர்யாவுடன் அருவா டிராப் ஆனது பத்தி பேச விரும்பலை... ரத்னம் பத்தி நிறைய பேசலாம்!



‘தமிழ்’, ‘சாமி’, ‘ஐயா’, ‘தாமிரபரணி’, ‘சிங்கம்’, ‘யானை’ என பல வெற்றிப் படங்களைத் தந்த முன்னணி இயக்குநரான ஹரி, இப்போது மூன்றாவது முறையாக விஷாலுடன் இணைந்து

‘ரத்னம்’ படத்தை இயக்கியுள்ளார். 
‘‘துரத்தி துரத்தி வெட்டணும்...  விரட்டி விரட்டி அடிக்கணும்... கவுத்துப்போட்டு மிதிக்கணும்... நிமித்தி வெச்சு உதைக்கணும்... என்பது மாதிரியான அனல் தெறிக்கும் ஆக்‌ஷன்தான் இந்த ‘ரத்னம்’ படம்...’’ முன்னுரையுடன் ஆரம்பித்த ஹரியை அவருடைய அலுவலகத்தில் சந்தித்தோம்.

‘ரத்னம்’ எந்தவிதத்துல ஸ்பெஷல்?

‘சிங்கம்’, ‘சாமி’ மாதிரி இது ஆக்‌ஷன் ஜானர். ஹீரோ வாழ்க்கையில் சின்ன பிரச்னை வருது. அது பெரிய பிரச்னையா எப்படி மாறுது என்பதை பரபரப்பான திரைக்கதையில் சொல்லியிருப்போம்.
கதையில் சின்ன வித்தியாசம் இருக்கும். ஃபேமிலி, சென்டிமென்ட் போர்ஷன் கொஞ்சமாகவும் ஆக்‌ஷன் அதிகமாகவும் இருக்கும். வழக்கமான ஆக்‌ஷன் படமாக இருந்தால் ரசிகர்களுக்கு போரடித்துவிடும் என்பதால் சுவாரஸ்யமான கதைக் களத்தை தேர்ந்தெடுத்து அதுல கதையில் ஸ்பீட், திரைக்கதையில் பரபரப்பு இருக்கிற மாதிரி ரெடி பண்ணினோம்.

அப்படி கதைக்குள் நிறைய ஆக்‌ஷன் ப்ளாக் வருது. அதுல பெரிய சவால் என்றால் எந்த ஆக்‌ஷன் சீனையும் ஆடியன்ஸ் ஏன், எதுக்கு ஃபைட் வந்துச்சுன்னு யோசிக்காத
படி பண்ணினோம். படத்துல மொத்தம் 8 ஆக்‌ஷன் ப்ளாக் இருக்கு.என்னுடைய கதைகள் பெரும்பாலும் தென் மாவட்ட பின்னணியில் நடக்கும். இது வட மாவட்டங்களை மையமா வெச்சு நடக்கிற கதை. வேலூர், காட்பாடி திருத்தணி என பல இடங்களில் கதை பயணிக்கும். இது எனக்கே புது அனுபவமா இருந்துச்சு.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திச்ச ‘ரத்னம்’ யார்?

நிறைய ரத்னங்கள் இருக்கிறார்கள். பலபேர் தாங்கள் யார் என்பதை அறியாதவர்களாக இருப்பார்கள். சமூகத்தில் அநியாயம் நடக்கும்போது அதைத் தட்டிக் கேட்பவர்களை பொறுக்கி, முரடன், ரெளடி என்று பட்டம் கட்டுவார்கள்.பொறுக்கித்தனம் பண்ணுபவர்கள்தான் பொறுக்கி. அவனுக்கு எந்த கொள்கையும் இருக்காது. ஆனா, தட்டிக் கேட்பவர்களை ரெளடின்னு
சொல்வாங்க. நல்லவனா, கெட்டவனா என்றே பலருக்கு தெரியாது. இந்த அனலைஸேஷன்தான் ஹீரோ கேரக்டர்.

ஹீரோவுக்கு, தான் யார் என்ற புரிதல் இருக்கும். அது சிலருடைய பார்வையில் பொறுக்கித்தனமா தெரியலாம். ஆனால், எனக்கு கொள்கை இருக்கு, அதன்படிதான் நடப்பேன் என்பதுதான் ஹீரோவுடைய கேரக்டர்.

என்ன சொல்கிறார் உங்கள் ஹீரோ விஷால்?

எட்டு வருஷங்களுக்கு ஒரு படம் என்பது மாதிரி நானும் விஷாலும் படம் பண்றோம். ‘தாமிரபரணி’, ‘பூஜை’ சேர்ந்து பண்ணினோம். ‘ரத்னம்’ கொஞ்சம் முன்னாடியே பண்ண வேண்டியது. தாமதத்தைத் தவிர்க்க முடியல. எப்போது கதை பண்ணாலும் விஷாலையும் மைண்ட்ல வெச்சு ஒரு கதையை யோசிப்பேன்.நான் மட்டுமல்ல, எந்த இயக்குநரும் விஷாலுடன் சுதந்திரமா படம் பண்ண முடியும். அவ்வளவு ஒத்துழைப்பு தருவார். இந்தப் படத்தை அவ்வளவு இன்வால்வ்மென்ட்டுடன் பண்ணினார்.

அவர் இருக்கும் இடத்தை சந்தோஷமா வெச்சிருப்பார். வேலை செய்வதற்கு நல்ல சூழலை ஏற்படுத்துவார். நான் இருக்கும் இடம் ரணகளமா இருந்தாலும் அவர் வந்த பிறகு செட் ஜாலியா மாறிடும். விஷால் சைட்ல ஃபுல் ஃப்ரீடம் கிடைக்கும். நெனச்சதை சாதிச்சுக்கலாம். எதையும் யோசிக்காம செஞ்சு தருவார். கேள்வி கேட்கமாட்டார். அப்படியே கேட்டாலும், யோசிச்சு கேட்பார்.

அவர் கதைக்குள் வரும்போது ‘மார்க் ஆண்டனி’ ஃபீல் இருந்துச்சு. ‘ரத்னமா’ வாங்கன்னு சொன்னேன். அவரும் மாத்திக்கிட்டு ரத்னமா வந்தார். ‘தாமிரபரணி’க்கு உடல் மொழி, லுக் வேணும்னு கேட்டேன். அது மாதிரி வந்தார். இந்தப் படத்துல சேஸிங், ஆக்‌ஷன் அதிகம். நின்னு ஃபைட் பண்ற மாதிரி எந்த ஃபைட்டும் இருக்காது. ஒரு நாளைக்கு பத்து கிலோமீட்டராவது ஓட வேண்டும். மற்ற உடற்பயிற்சியைவிட ரன்னிங் பயிற்சி எடுத்துக்குங்கன்னு சொன்னேன். அதையெல்லாம் சரியா பண்ணினார்.

மீண்டும் பிரியா பவானி சங்கர்?

ஹீரோயினுக்கு சவாலான வேடம். படம் முழுக்க வரக்கூடிய கேரக்டர். பிரியா மாதிரியான ஆர்ட்டிஸ்ட் இருந்தா நல்லாயிருக்கும்னு யோசிச்சு பிரியாவை நடிக்க வெச்சோம்.
பிரியா கேரக்டர் பற்றி ரொம்ப சொன்னா கதையைச் சொன்ன மாதிரி ஆயிடும். அவர் பண்ணிய படங்களில் இது முக்கியமா இருக்கும். 

மிடில் கிளாஸ் கேரக்டர். சிறப்பா பண்ணினார். 8 பக்க  டயலாக்கை சிங்கிள் ஷாட்டில் ஓகே பண்ணினார். எல்லாமே மூவ்மெண்ட்ல எடுத்தது. தமிழ் தெரிஞ்ச பெண்ணால் மட்டுமே அதைச் செய்ய முடியும். அந்தத் திறமை ப்ரியாவிடம் உண்டு என்பதால் அவரை செலக்ட் பண்ணினோம். அவரும் அதற்கு நியாயம் செய்தார்.

வில்லன்களாக முரளி சர்மா, ஹரீஷ் பேரடி, முத்துகுமார். என்னுடைய படங்களில் வில்லனுக்கு என கொள்கைகள் வெச்சிருப்பேன். குறிப்பிட்டளவுக்குதான் வில்லன் தப்பு செய்வான். எல்லை மீறி தப்பு பண்றதா இருந்தால் அவனுக்கே அது தெரியாது. வில்லன் என்று காட்டியிருக்கமாட்டேன். 

வில்லனும் சூடு, சொரணை இருக்கிற மாதிரி இருப்பான். இவங்களோடு சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், விஜயகுமார், ஜெயப்பிரகாஷ், வி.டி.வி.கணேஷ்,  துளசி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் இருக்காங்க. யோகி பாபுவுக்கு அழுத்தமான கேரக்டர். எந்த இடத்திலும் காமெடியனா பார்க்க முடியாது.

சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரமாதமான கேமராமேன். மியூசிக் தேவி  பிரசாத். ஆரம்பத்துல ஒரு பாடல் மட்டும்தான் தந்தார். மீதி பாடலுக்கு நானே ஷூட் பண்ணி, எடிட் பண்ணிக் கொடுத்தேன். அதுல இம்ப்ரஸ்ஸாகி கொடுத்த டியூன் டபுள் இம்பேக்ட் கொடுத்துச்சு. எங்க காம்பினேஷன்ல இது ஆறாவது படம். ‘புஷ்பா’வுக்குப் பிறகு அவர் புகழ் பெரியளவில் ரீச். அவர் எங்கள் படத்தில் இருப்பது பெரிய பலம். தயாரிப்பு ஸ்டோன் பெஞ்ச்.

நீங்களும் சூர்யாவும் நண்பர்கள். அப்படியிருந்தும் ‘அருவா’வை தொடர முடியாமல் போனது ஏன்?

நாங்கள் எப்பவுமே நட்போட இருக்கிறோம். படங்கள் பண்றதுக்கும், நட்புக்கும் சம்பந்தம் இல்லை. ஒரு படம் ஆரம்பிப்பதற்கும் ஆரம்பிக்காமல் இருப்பதற்கும் நடைமுறை காரணங்கள் நிறைய இருக்கும். அதை வெளியே சொல்லக்கூடாது. சொல்லாமல் இருப்பதுதான் தொழிலுக்கான மரியாதையாகவும் இருக்கும். மற்றபடி சேர்ந்து படம் பண்ணாததற்கு எந்த வருத்தமும் இல்லை. 5 படம் பண்ணியதற்கு சந்தோஷப்பட வேண்டும். ‘அருவா’, ‘வணங்கான்’, பெண் இயக்குநரின் படம் என தொடர்ந்து சூர்யாவின் படங்கள் டிராப் ஆகிவிட்டது.

இதில் நண்பராக உங்கள் பார்வை எப்படி?

கற்பனை பதில் சொல்ல விருப்பமில்லை. நடைமுறை வாழ்க்கையிலிருந்து சொல்வதாக இருந்தால், நிறைய பேருக்கு படம் ஆரம்பிச்சு பாதியில் நின்னிருக்கு. அப்படித்தான் இதைப் பார்க்கிறேன். உண்மை என்ன என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குதான் தெரியும். இது வியப்பளிக்கும் செய்தி கிடையாது. நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என எல்லோருடைய சினிமா பயணத்திலும் இது நடந்துள்ளது. 

சமூக வலைத்தளங்கள் ஸ்ட்ராங்கா இருப்பதால் அது பெரியளவில் பேசுபொருளா மாறுவதோடு அது உடனுக்குடன் கேள்வியாகி உடனுக்குடன் பதில் தரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சினிமாவில் நான் அதிகமா டிராவல் பண்ணியிருக்கிறேன். அப்படி என் வாழ்க்கையில் இதுபோன்ற நிகழ்வுகளை நிறைய பார்த்திருக்கிறேன்.  ஹரி படம் என்றால் கத்தி, அருவா மட்டும்தானா...

அதைவிட்டுட்டு வர்ற ஐடியா இல்லையா?

‘ரத்னம்’ படத்துல ஐந்து வித கத்தி, அருவாவை அதன் எடை, மெட்டீரியல் எல்லாத்தையும் நாங்களே டிசைன் பண்ணி செஞ்சோம். பொதுவா ஃபைட் எப்படி இருக்கணும், எத்தனை பேரை உதைக்கணும், எத்தனை பேரை வெட்டணும், எத்தனை பேர் எழுந்து ஒடணும் என்று ஃபைட் சீன் எப்படி இருக்கணும்னு டிஸ்கஷனிலேயே பேசி முடிவு செய்வோம். எத்தனை பேரை போலீஸ் அரெஸ்ட் செய்யும் என்பதையும் எழுதுவோம்.

இது மாஸ்டர் கையில் போனதும் அவர்கள் இம்ப்ரவைஸ் பண்ணுவார்கள். இதுல கனல் கண்ணன், பீட்டர் ஹெயின், திலீப் சுப்பராயன், விக்கி உட்பட ஐந்து மாஸ்டர்கள்
இருக்கிறார்கள்.அருவா ஆசை இன்னும் முடியல. இன்னும் டிசைன் பண்றோம். கண்ணாடியை வெட்டணும்னா அருவா எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கணும், கைப்பிடி எப்படி இருக்கணும் என்பதை யோசிச்சுப் பண்றோம்.

என் ஆபீஸ்ல 85 அருவா இருக்கு. எந்த ஃபைட்டுக்கு எந்த அருவா யூஸ் பண்ணணும்னு மாஸ்டர்களுடன் டிஸ்கஸ் பண்ணும்போது பூ, புஷ்பம்னு எப்படி கதை பண்ண முடியும்..? அந்த மாதிரி படங்கள் நிறைய வருது. அது ரசிக்கும்படி உள்ளது. ‘அயோத்தி’, ‘டாடா’ன்னு பல படங்கள் பிரமாதமா இருந்துச்சு. என்னளவில் ஆக்‌ஷன் படத்தைக் கரெக்ட்டா பண்ணணும்னு நினைக்கிறேன். இந்த மாதிரி படம் பண்ணவும் இயக்குநர் வேணும். அதற்குரிய இயக்குநரா இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.

எஸ்.ராஜா