திருவாரூர் தினேஷ்... சினிமாவுக்காக தீனா!



நடிகர் தீனாவிற்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. ‘கைதி’ படம் மூலம் ரசிகர்களின் இதயத்திற்குள் நுழைந்தவர். விஜய்யுடன் ‘மாஸ்டர்’ படத்தில் முத்திரை பதித்தவர். இப்போது காமெடி நடிகராக மட்டுமில்லாமல் ஸ்கிரிப்ட் ரைட்டராகவும், டயலாக் ரைட்டராகவும் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.சமீபத்தில் வெளியான ‘கள்வன்’ திரைப்படம் ஒரு நடிகராக தீனாவை இன்னும் கவனிக்க வைத்திருக்கிறது.

‘‘‘கள்வன்’ படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது சந்தோஷமாக இருக்கு. நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்திட்டே இருக்கு. இதுக்கிடையில் ஒரு படத்துக்கு வசனமும் எழுதுறேன்...’’ அத்தனை உற்சாகமாக பேசுகிறவரிடம், லைஃப் கிரா ஃபிலிருந்து தொடங்கினோம். 
‘‘சொந்த ஊர் திருவாரூர் பக்கத்துல நாராயணமங்கலம்னு ஒரு கிராமம். என் இயற்பெயர் தினேஷ். சினிமாவுக்காக தீனாவானேன். தாத்தா, அப்பா எல்லோருமே விவசாயிகள். கொரோனா நேரத்துல நான் மாடுகளுடன் இருக்கிற படத்தைப் போட்டிருந்தேன். அதுக்கு பலரும் பலவிதமாக கமெண்ட் போட்டாங்க.

மாடுகளைப் பராமரிக்கிறதும் விவசாயிகளுடைய வேலைதானே. இப்பவும் நான் வீட்டுக்குப் போனால் மாடுகளைப் பராமரிப்பேன். என்னுடையது விவசாயக் குடும்பம்.
ஆனா, அப்பா படிப்பு முக்கியம்னு நினைப்பவர். என்னை மயிலாடுதுறை ஏவிசி எஞ்சினியரிங் காலேஜ்ல படிக்க வச்சார். அங்க இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் கண்ட்ரோல் எஞ்சினியரிங் முடிச்சேன்.  சின்ன வயசுல இருந்தே சினிமா ஆர்வம் இருந்தது.

கல்லூரியில் ரொம்ப கலாய்ச்சிட்டே இருப்பேன். நண்பர்கள் எது பேசினாலும் கவுண்டர் கொடுப்பேன். ஏதாவது காமெடி பண்ணிட்டே துறுதுறுனு இருப்பது என் இயல்பிலேயே இருந்தது. இதனால், என்னை சுத்தியிருக்கிறவங்க எல்லோரும் சிரிச்சிட்டே இருப்பாங்க.அப்புறம் ஸ்போர்ட்ஸ், கல்ச்சுரல்ஸ்னு இருந்தேன். குறிப்பாக ஸ்போர்ட்ஸ்ல நேஷனல், இன்டர்நேஷனல் அளவுக்குப் போகணும், கல்ச்சுரல்ஸ்ல கலந்துக்கிட்டு பரிசு வாங்கணும்னு எல்லாம் அப்ப நிறைய ஆசை இருந்தது. ஆனா, எதுவும் நடக்கல.

அந்நேரம்தான் டிவிகளுக்கு முயற்சி செய்யலாமேனு தோணுச்சு. ஆனா, வீட்டுல ஏத்துக்கல. நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராதுப்பானு அம்மா சொல்லிட்டாங்க. உள்ளூர்லேயே வேலை பாருனு அப்பா சொன்னார்.சரினு தேர்வெல்லாம் எழுதி முடிச்ச மறுநாளே சென்னைக்கு படிப்பு சம்பந்தமான வேலைக்குப் போறேன்னு சொல்லிட்டு பஸ் ஏறிட்டேன். கொஞ்ச நாட்கள் வேலை தேடினேன். பெரும்போராட்டத்துக்குப் பிறகு என் படிப்பு சார்ந்து ஒரு வேலை கிடைச்சது. சேல்ஸ் டிபார்ட்மெண்ட்ல வேலை. அதை செய்திட்டே சினிமா, டிவி வாய்ப்புகளைத் தேடி அலைஞ்சேன்.

அப்ப ஒரு தனியார் சேனல்ல நிகழ்ச்சி இயக்குநரைச் சந்திச்சேன். அவர் என் ஸ்கிரிப்ட்டைப் பார்த்துட்டு அவருடைய டீம்ல உதவி இயக்குநராக வேலை பார்க்கச் சொன்னார். அங்கேதான் ஸ்கிரிப்ட் ரைட்டிங் பத்தி ஆழமாகக் கத்துக்கிட்டேன். அங்கிருந்து என் டிவி ஜர்னி தொடங்குச்சு. என் வாழ்க்கையும் மாறுச்சு...’’ எனக் கலகலக்கும் தீனா, அந்த ஷோவில் பிராங்கால் செய்து பங்கேற்பாளர்களைக் கதிகலங்க வைத்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார்.

‘‘அந்த ஷோ நல்ல ரீச் தந்தது. என்னை ‘பிராங்க்’ தீனானு கூப்பிட ஆரம்பிச்சாங்க. அந்த ஷோவுல நானும் ஒரு பங்கேற்பாளராக பங்கேற்று இறுதிப்போட்டி வரை வந்தேன். அதுல என்னுடைய காமெடி சென்ஸை பார்த்துட்டு நடிக்க சான்ஸ் கிடைச்சது. அதுவும் ‘ப.பாண்டி’ படத்துல தனுஷ் சாருக்கு நண்பனாக நடிக்கிற வாய்ப்பு. அங்கிருந்து சினிமாவை கத்துக்க ஆரம்பிச்சேன்.

ஏன்னா, ஷோ வேறு; சினிமா வேறு. ரெண்டுக்குமான ஸ்கிரிப்ட்டும் வேறு. அப்ப தனுஷ் சார் தன்னுடைய முதல் படத்துல என்னென்ன கத்துக்கிட்டாரோ அந்த அனுபவத்தை எனக்கு அவருடன் நடிச்ச அந்தப் பத்து நாட்களில் சொல்லித் தந்தார். அதுல நிறைய கத்துக்கிட்டேன்.

அப்புறம், காமெடி மட்டுமில்லாமல் எல்லா கேரக்டரும் பண்ணணும்னு ஆசை வந்தது. அதுக்காக நிறைய ஹோம் வொர்க் பண்ண ஆரம்பிச்சேன். பகல் முழுவதும் ஆக்ட்டிங்னா இரவில் ஸ்கிரிப்ட் எழுதுறதுனு இருந்தேன். இப்பவும் நடிப்பு, ஸ்கிரிப்ட் ரைட்டிங், டயலாக் ரைட்டிங்னு மூணு குதிரையில் சவாரி செய்திட்டு இருக்கேன்...’’ என்கிறவர், ‘கைதி’ பட அனுபவங்கள் பற்றிப் பேசினார்.

‘‘ஒருநாள் லோகேஷ் அண்ணா திடீரென போன் பண்ணி, ‘நீ நடிச்சா ஹீரோவாதான் நடிப்பேனு கேள்விப்பட்டேன். எனக்கு ஒரு கேரக்டர் ரோல் தேவைப்படுது; நீ செய்வியா’னு கேட்டார். எனக்கு ஷாக் ஆகிடுச்சு. ‘அப்படியெல்லாம் இல்லணா... நான் எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பேன்ணா’னு சொன்னேன். பிறகு, காமாட்சி கேரக்டர் கொடுத்தார். உண்மையில் அந்தக் கேரக்டர்தான் இப்பவரை என்னை மக்கள்கிட்ட கொண்டு சேர்த்திட்டு இருக்கு. இன்னைக்கும் நிறைய பேர் அந்தக் கேரக்டரைச் சொல்லிப் பாராட்டுறாங்க.

அடுத்து ‘மாஸ்டர்’ படத்திலும் லோகேஷ் அண்ணன் சான்ஸ் கொடுத்தார். இதுல அப்படியே எதிர்ப்பதமாக நெகட்டிவ் ரோல். அதுவும் விஜய் சாருக்கு வில்லனாக நடிச்சேன். இது வேறொரு அனுபவமாக இருந்தது. அப்புறம், ‘தும்பா’ படம் பண்ணினேன். 

பிறகு, ‘அன்பறிவு’ படத்துல ஹிப்ஹாப் ஆதி அண்ணனுடன் படம் முழுவதும் நடிச்சேன். இந்த ஆண்டு முதல்ல ‘மறக்குமா நெஞ்சம்’ ரிலீசானது.  நானும் ரக்‌ஷன் அண்ணனும் நடிச்சோம். இந்தப் படத்துல டைரக்டர் யோகேந்திரன் சார் எனக்கு அடிஷனல் டயலாக் ரைட்டர்னு என் பெயரையும் படத்துல சேர்த்தது எனக்குக் கிடைச்ச பெரிய கிஃப்ட்!

இப்ப ‘கள்வன்’ படம் வெளியாகி இன்னும் கவனிக்க வச்சிருக்கு. இந்தப் படம் ஒரு பெரிய ட்ராவல். ஜி.வி.பிரகாஷ் எனக்கு ஒரு நல்ல நண்பர் ஆகிட்டார். என்னை டார்லிங்னு அன்பா கூப்பிடுவார். அவர்கிட்ட இருந்தும் நிறைய கத்துக்கிட்டேன்.

அதுமட்டுமல்ல. இதுல இயக்குநர் இமயம் பாரதிராஜா சாருடன் நடிச்சது பெரிய பாக்கியம்னு சொல்லணும். கடந்த ஆண்டு எனக்கு திருமணம் நடந்தப்ப முதல் மனிதராக என் ஊருக்கே வந்து என்னையும் என் மனைவியையும் ஆசீர்வதிச்சார். என் வாழ்நாள்ல மறக்கமுடியாத தருணம் அது.

இப்ப சினிமாவில் ஒரு இடம் கிடைச்சிருக்கு. நிறைய பாராட்டுகளும் கிடைக்குது. தளபதி விஜய் சார் நான் நடிப்பதைப் பார்த்துட்டு, ‘டேய் நீ வேற லெவல் டா’னு பாராட்டினார். அவரைப் போல கார்த்தி அண்ணன், சிவகார்த்திகேயன் அண்ணன், ஜி.வி.பிரகாஷ் அண்ணன், லோகேஷ் அண்ணன், வெற்றிமாறன் சார் எல்லோரும் பாராட்டியிருக்காங்க.

ஸ்கிரிப்ட் ரைட்டராக இருக்கிறதால நான் நடிக்கிற படங்கள்ல அந்தக் கேரக்டரை செதுக்குற வாய்ப்பும் எனக்குக் கிடைக்குது. லோகேஷ் அண்ணன் படத்துல நடிச்சப்ப சீன் பேப்பரை என்கிட்ட கொடுத்திட்டார். இதுல என்ன ஆர்ட் உன்னால பண்ணமுடியுமோ அதை நீயே பண்ணிக்கோனு சொல்லி நம்பிக்கையூட்டினார். அது எனக்குக் கிடைச்ச பெரிய கிரெடிட்.  

அதேபோல இப்ப ஜி.வி.பிரகாஷ் அண்ணன் தயாரிப்புல ‘கிங்ஸ்டன்’ படம் வரவிருக்கு. அந்தப் படத்துக்கு டயலாக் ரைட்டிங் என்னைப் பண்ணச் சொல்லிக் கொடுத்திருக்காங்க. எல்லாவற்றையும் நம்பிக்கையாகவும் சந்தோஷமாகவும் ஏற்று செய்றேன்.இப்ப, ‘டீசல்’னு ஒரு படத்துல நடிக்கிறேன். இதுல ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்கிறார். 

தவிர, அடுத்தடுத்து படங்கள்ல பேசிட்டும் இருக்கேன். இப்போதைக்கு செய்கிற வேலைகளைச் சிறப்பாகச் செய்யவே ஆசைப்படுறேன். எதிர்காலத்தைப் பொறுத்தவரை ஒரு சிறந்த இயக்குநராக வரவேண்டும் என்பதே என் கனவு...’’ நம்பிக்கையாகச் சொல்கிறார் தீனா.

ஆர்.சந்திரசேகர்