தமிழகத்தின் சுவையை 100 வருடங்களுக்கு முன்பே உலகுக்கு கொண்டு சென்றவர்!
தமிழகத்தில் கிடைக்காது... வெளிநாடுகளில் மட்டுமே விற்பனையாகும் கறி பவுடரின் கதை இது!
‘மாஸ்கோவில் மழை பெய்தால் சென்னையில் குடை பிடிப்பார்கள்’ என தமிழக கம்யூனிஸ்டுகளை கிண்டலடிப்பதுண்டு. ஆனால், நிஜமாகவே சென்னையில் சுமார் 100 வருடத்துக்கு முன் அறிமுகமான ஒரு மசாலாப் பொடி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பல வெளிநாட்டு மக்களின் நாவுக்கு சுவையை கூட்டியுள்ளது; அதன் பெயரை கேட்டாலே அவர்களின் நாக்கு அதிரும்!அந்த மசாலாப் பொடியின் பெயர் ‘வெங்கட் மெட்ராஸ் கறி பவுடர்’ (Vencat Madras Curry Powder). அதன் சொந்தக்காரர் பி.வெங்கடாசலம்.
 தமிழகத்தின் உள்ளூர் பொருளை உலகத் தரத்திலான பொருளாக மாற்றிய தமிழர்களில் பி.வெங்கடாசலம், ஒரு ஆதிதிராவிட முன்னோடி என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது வாரிசுகளில் பலர் வணிகம் மட்டும் அல்லாது தமிழக அரசியலிலும் கோலோச்சியபோது வெங்கடாசலத்தின் பெருமையான அதே மசாலாத் தொழிலை 6வது தலைமுறையாக பின்பற்றுகிறார் அவரது வாரிசுகளில் ஒருவரான பி.வி.எஸ்.வெங்கடசுப்ரமணியம்.
 ‘‘எனது முன்னோரான பி.வெங்கடாசலம், சென்னையில் அப்போது இருந்த மயிலாப்பூர் கிறிஸ்தவ பிஷப்பின் அலுவலகத்தில் பணிபுரிந்ததாக சொல்வார்கள். அந்த பிஷப்பின் பண உதவியுடன்தான் அவர் 1860ம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் இருக்கும் கச்சேரி ரோட்டில் ஒரு குடிசைத் தொழிலாக இந்த மசாலாப் பொடியை ஆரம்பித்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். அப்போது ஒருமுறை குதிரை வியாபாரம் செய்யும் ஒரு ஆஸ்திரேலியாக்காரன் அவரிடம் அந்த மசாலாப் பொடியை வாங்கிக்கொண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருக்கிறான்.
 அந்தப் பொடியை ருசித்த அந்த நாட்டு மக்கள்தான் அதை ஏராளமாக கிடைக்கச் செய்யமுடியுமா என்று கேட்டிருக்கிறார்கள்...’’ என்று சொல்லும் சுப்ரமணியம், பிறகு அந்த மசாலாப் பொடியின் மொத்த ஏற்றுமதிதான் அந்த பொடிக்கு ஒரு வெளிநாட்டு சந்தையை ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் கூறுகிறார்.‘‘அந்தக் காலத்தில் சிறுசிறு பாக்கெட்டுகளாகத்தான் ஏற்றுமதி செய்திருப்பார்கள். அந்தப் பாக்கெட்டிலேயே ‘வெங்கட் மெட்ராஸ் கறி பவுடர்’ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். பாக்கெட்டில் மயில் மார்க் லோகோவும், வெங்கடாசலத்தின் கையெழுத்தும் இருக்கும்.
இந்த பிராண்ட்தான் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிறகு நியூசிலாந்து மக்களிடையே பிரபலமாகியிருக்கும். வெங்கடாசலத்துக்குப் பிறகு அவரது வாரிசுகளில் ஒருசிலர்தான் அந்தத் தொழிலை தொடர்ச்சியாகச் செய்து வந்தார்கள். அதில் நான் 6வது தலைமுறையாக அந்தத் தொழிலைச் செய்கிறேன். இந்தத் தொழிலைச் செய்த 4வது தலைமுறையான பி.வி.எஸ்.வெங்கடாசலம் சென்னையின் ஷெரீஃபாக இருந்திருக்கிறார்.
அவரது மனைவி, அதாவது என் பாட்டி ஜோதி வெங்கடாசலம், ராஜாஜி, காமராஜர் மற்றும் பக்தவத்சலம் போன்ற தமிழக முதலமைச்சர்களின் அமைச்சரவையில் முதல் பெண் அமைச்சராகவும் இருந்து பெருமை சேர்த்திருக்கிறார்...’’ என்று அறிமுகம் கொடுக்கும் சுப்ரமணியம், ‘வெங்கட் கறி பவுட’ரின் உலகளவிலான விற்பனை மற்றும் அதன் பிரபலம் பற்றிப் பேசினார்.
‘‘பி.வெங்கடாசலம் மெட்ராஸ் மசாலாப் பவுடரை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே தயாரித்தவர். வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வருவதும் அவர்கள் சொந்த நாட்டுக்கு போவதுமாக இருந்ததால்தான் இந்த பவுடர் உலகுக்கு அறிமுகமானது. ஆனால், அந்த பவுடருக்கு ஒரு சுவையும் மணமும் கட்டாயம் இருந்திருக்கவேண்டும். இல்லையானால் அது மக்களிடையே பிரபலமாகியிருக்காது.
பி.வெங்கடாசலத்துக்குப் பிறகு பலரும் மெட்ராஸ் கறி பவுடர் என்று சந்தையில் விற்றிருப்பார்கள். அதுவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகியிருக்கும். ஆனால், பி.வெங்கடாசலத்தின் மெட்ராஸ் கறி பவுடருக்கு பிராண்ட் பெயரான ‘வெங்கட் மெட்ராஸ் கறி பவுடர்’ என்று இருந்ததால் அதனுடன் போட்டி போட மற்ற மெட்ராஸ் கறி பவுடர்களால் முடியவில்லை. ‘வெங்கட் கறி பவுட’ருக்கு என்று ஒரு தனிப்பட்ட டேஸ்ட்டும் சுவையும் இருந்திருக்கும். அதனால்தான் அது இன்றும் வெளிநாட்டுச் சந்தையில் ஒரு மாற்றமுடியாத பிராண்டாக இருக்கிறது...’’ என்று சொல்லும் சுப்ரமணியம், 2010 வரை வெங்கட் கறி பவுடர் டின்களிலும் பாக்கெட்டுகளிலும் அடைக்கப்பட்டு வெளிநாடுகளில் சக்கை போடு போட்டதாகவும் கூறுகிறார். ‘‘மெட்ராஸ் கறி பவுடர் என்பதை யாரும் வணிக ரீதியாக பதிவு செய்யமுடியாது.
ஆனால், ‘வெங்கட் மெட்ராஸ் கறி பவுடர்’ என்பதை பதிவு செய்யலாம். அப்படித்தான் செய்திருந்தார்கள். டின்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைத்து ஏற்றுமதி செய்வது அதிக செலவும் பயண நெருக்கடியும் மிக்கது. அதனால் இன்று வெளிநாட்டில் இருக்கும் சில நம்பகமான ஏஜெண்டுகளுக்கு மசாலாப் பொடிக்கு தேவையான பொருட்களை முழுமையாக ஏற்றுமதி செய்கிறோம். அங்கே அவர்கள் தேவைக்கு ஏற்ப டின்களிலோ அல்லது பாக்கெட்டுகளிலோ அடைத்து ‘வெங்கட் மெட்ராஸ் கறி பவுடர்’ என விற்கிறார்கள்.
இப்போதைக்கு ஒருநாளில் சுமார் 3000 டன் பொருட்களை சென்னையில் பதப்படுத்தி தயாரித்து ஏற்றுமதி செய்கிறோம்...’’ என்று சொல்லும் சுப்ரமணியம், வெங்கட் மெட்ராஸ் கறி பவுடரின் சில சீக்ரெட்களையும் நம்மிடம் இரகசியமாக சொன்னார்!‘‘குழம்பு மசாலாத் தூளில் சுமார் 15லிருந்து 20 வரையான பொருட்கள் இருக்கும். உதாரணமாக மல்லி, மிளகாய், மஞ்சள், சீரகம், வெந்தயம், பூண்டு, பட்டை, சோம்பு, லவங்கம், ஏலக்காய். இதில் மிளகாயை தவிர்த்து எல்லாவற்றையும் வறுத்து பொடியாக்கினால்தான் டேஸ்ட் வரும். வறுக்காவிட்டால் சுவை குறைவாக இருக்கும்.
யாழ்ப்பாண மசாலாப் பொடிக்கு மிளகாயையும் வறுக்கவேண்டும். ஆனால், மிளகாயை வறுப்பது கடினமானதுடன் மனிதர்கள் அந்த இடத்தில் இருக்கவே முடியாது. முன்பு கடாயில் வறுத்தார்கள். என் காலத்தில் எல்லாமே மெஷின்கள்தான் செய்கின்றன. சென்னையில் ரெட் ஹில்ஸ் பக்கத்தில் ஃபேக்டரி இருக்கிறது...’’ என்று சொல்லும் சுப்ரமணியத்திடம், தமிழக சந்தையில் ஏன் வெங்கட் கறி பவுடர் இல்லை என்று கேட்டோம்.
‘‘சில காலம் முயற்சி செய்து பார்த்தோம். ஆனால், தமிழக சந்தை பெரியது; மட்டுமல்லாமல் அதற்கு பெரிய பண பலமும் அவசியம். அத்தோடு ‘வெங்கட் மெட்ராஸ் கறி பவுடர்’ கொஞ்சம் காரம் குறைவானது. இதுவும் வெளிநாட்டினைக் கவர்ந்த ஒன்று. தமிழகத்தைப் பொறுத்தளவில் காரத்தை எதிர்பார்ப்பார்கள். ஒரு சமையல் பொருள் என்பது ஏரியாவுக்கு ஏரியா மாறுபடும்; சுவையும் மணமும் வித்தியாசப்படும். தமிழகத்தையே எடுத்துக்கொண்டால் கோவை, செட்டிநாடு, மதுரை, சேலம், திருச்சி என்று சுவையில் வித்தியாசம் இருக்கும்.
இதை எல்லாம் மீறி குழம்புப் பொடி இருக்கவேண்டும். அத்தோடு சந்தைப்படுத்துதல் என்பது மிகவும் கடினமான செயல். அதையும் நாமே பார்க்கமுடியாது. இன்னொருவருக்குத்தான் கொடுக்கவேண்டும். அவர்களும் சின்சியராக பார்ப்பார்களா என்று சொல்லமுடியாது. ஒருவேளை அவர்கள் சரியாகப் பார்க்காவிட்டால் செய்த பொருள் சேதமாகவிடும். சேதமானாலும் அடுத்த முயற்சிக்கு போக பணம் வேண்டும். இது எல்லாம் பெரிய ஜாம்பவான்களால்தான் முடியும்.
எல்லா சந்தைகளையும் போலவே தமிழகமும் ஏ, பி, சி என மூன்றுவிதமான சென்டர்களுடன் இருக்கிறது. ஏ சென்டர் என்றால் சூப்பர் மார்க்கெட், பி என்றால் மளிகைக் கடை, சி என்றால் குடிசைப் பகுதிகள். சிலர் ஏ சென்டரிலேயே இருப்பார்கள். அது அவர்களுக்கு போதுமானது. சிலர் பி-யிலே இருப்பார்கள். சிலர் சி-யில் இருந்து ஆரம்பித்து பி, ஏ-வுக்கு போவார்கள். இதை எல்லாம் செய்ய சரியான பணபலமும், திட்டமிடலும் அவசியம்.
எங்களுக்கு வெளிநாடுகள் செட்டாகிவிட்டது. அதுதான் சுமார் 163 வருடங்களாகக் கைகொடுக்கிறது. அதை ஏன் விணாக்கவேண்டும்..? ‘மெட்ராஸ் கறி பவுடர்’ என்று தமிழகத்திலும் வெளிநாடுகளிலிலும் ஏகப்பட்ட பொருட்கள் இருந்தாலும் ‘வெங்கட் மெட்ராஸ் கறி பவுடர்’தான் வேண்டும் என்று சொல்பவர்களின் விருப்பத்தை நாங்கள் நிறைவேற்றினாலே போதுமானது.
தமிழகத்திலும் பல பெரிய பிராண்ட் மசாலா பொருட்கள் இருந்தாலும் உள்ளூர் அளவிலும் சில லோக்கல் பிராண்டுகள் பிசினஸ் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றன..? சுவையும் மணத்தையும் பிராண்டால் ஒன்றும் செய்யமுடியாது. பெரிய பிராண்டுகள் பெரிய அளவில் வியாபாரம் பார்த்தால் சின்ன பிராண்டுகள் சிறிய அளவில் கோலோச்சிக் கொண்டுதான் இருக்கும். இதுதான் பல பிசினஸ்களின் சூத்திரம்...’’ என்று முடித்தார் சுப்பிரமணியம்.
செய்தி: டி.ரஞ்சித்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|