குப்பன் கொடுத்த ஐடியா குப்பன் ஆச்சு!



சினிமாவில் சிலர் மீது அதிக புகழ் வெளிச்சம் விழும், சிலர் மீது அந்த புகழ் வெளிச்சம் விழாவிட்டாலும் பல சாதனைகளை ஓசையில்லாமல் செய்து முடித்தவர்களாக இருப்பார்கள். அப்படியொரு சாதனைக்குரியவர் சரண்ராஜ். 
நாற்பது ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் அறுநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ‘பாட்ஷா’வில் ரஜினியின் நண்பராக வந்த சரண்ராஜ் என்றால் 2கே கிட்ஸ்களும் எளிதில் அடையாளம் கண்டுகொள்வார்கள். இப்போது தன் மகன் தேஜ் நடிக்கும் ‘குப்பன்’ படத்தை இயக்கியுள்ளார்.

இந்திய மொழிகளில் நீங்கள் நடிக்காத மொழியே இல்லை எனுமளவுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஒரியா, பெங்காலி உட்பட பல மொழிகளில் நடித்துள்ளீர்கள். உங்கள் வெற்றி ரகசியம் என்ன?என்னுடைய இயற்பெயர் பிரம்மானந்தா. வாரத்தில் மூன்று நாட்கள் விரதமிருக்குமளவுக்கு அப்பா தீவிர கடவுள் பக்தர். சினிமா, நாடகம் என எந்த பொழுதுபோக்கும் பிடிக்காது.

அப்பா சொந்தமாக டிம்பர் மில் வைத்திருந்தார். ஸ்கூல் படிப்புக்குப் பிறகு கடை நிர்வாகத்தை நான் எடுத்து நடத்த வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருந்துச்சு.
தற்செயலாகத்தான் சினிமாவுக்கு வந்தேன். பிரபல கிடார் மேதை எல்விஸ் பிரிஸ்லியின் தீவிர ரசிகன் நான். இசைமீது இருந்த ஆர்வத்தால் டிரம்ஸ், கிடார் என பல இசைக்கருவிகளை இளம் வயதிலேயே கற்றுத் தேர்ந்தேன்.

பள்ளி விழாக்களில் பல போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பேன். முதல் பரிசும் எனக்குத் தான் கிடைக்கும். எனக்குள் இருக்கும் திறமையை அடையாளம் கண்ட விரு என்ற நண்பன் ‘நீ சினிமாவுக்குப் போனால் ஜெயிக்கலாம்’னு உற்சாகப்படுத்தினான். இந்தி நடிகர் ஷம்மி கபூர் மாதிரி சிவப்பாக இருந்த இன்னொரு நண்பனோ, ‘குரங்கு முஞ்சி மாதிரி இருக்கிற உனக்கு சினிமா கேட்குதா’னு மட்டம் தட்டினான். அது என் தன்மானத்தை உரசிப்பார்த்தது. அப்போதே சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பயணிக்க ஆரம்பித்தேன்.

ஒருமுறை அப்பாவின் கடையில் இருக்கும்போது, அப்பா என்னிடம் ஆறாயிரம் பணம் கொடுத்து, ‘லோடு வந்தால் இறக்கி வை’னு சொல்லிட்டு வெளியே கிளம்பிட்டார். பணம் கையில் வந்ததும் நண்பனின் அவமானம் மனதில் நிழலாட ஆரம்பிச்சது. அப்பா கொடுத்த பணத்துடன் சொந்த ஊரான பெலகாவியிலிருந்து பெங்களூருவுக்கு ரயில் ஏறினேன்.

பெங்களூரு வந்ததும் கையில் வைத்திருந்த பணம் தண்ணியா செலவழிந்ததுதான் மிச்சம். கையில் பணம் இல்லையென்றாலும் சினிமாவில் சாதிக்கணும் என்ற லட்சியம் இருந்ததால் சர்வைவலுக்காக கச்சேரி, நைட் கிளப்ல கிடார் வாசிப்பது என கிடைச்ச வேலையைச் செய்ய ஆரம்பிச்சேன். பகலில் சினிமா சான்ஸ் தேடப் போய்விடுவேன்.

1982ம் ஆண்டு என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டு. நடிகர் முரளியின் அப்பா இயக்குநர் சித்தலிங்கையா முதல் சினிமா சான்ஸ் கொடுத்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டாச்சு. படம் வெளியான வெள்ளிக்கிழமை அன்று என் கையில் அஞ்சு ரூபா இல்ல. திங்கள் கிழமை ஒரு லட்சத்து இருபதாயிரம் அட்வான்ஸ் பணத்தை கையில் வைத்திருக்கிறேன்.

ஒரே சமயத்துல பத்து படங்களில் ஹீரோவாக கமிட்டானேன். முதல் பட ஹிட்டுக்குப் பிறகு அப்பா, அம்மாவை சந்திப்பதற்காக பெங்களூருவிலுருந்து பெல்காமுக்கு விமானத்துல போனேன்.

விமான நிலையத்துல ஆயிரக்கணக்கில் மக்கள் காத்திருந்தார்கள். அரசியல் தலைவரை வரவேற்கக் கூடிய கூட்டமாக இருக்கலாம்னு நெனச்சு விலகிச் செல்லும்போது மக்கள் என்னை நெருங்கி அப்படியே தூக்கி தோளில் சுமந்து கொண்டாட ஆரம்பித்தார்கள்.

அதைப்பார்த்து அப்பாவின் கண்கள் கலங்கி ‘நான் உன்னை தப்பா நெனச்சுட்டேன், ஆனா, நீ ஜெயிச்சுட்ட’னு பரவசமடைந்தார். கன்னடத்துல மட்டுமே ஹீரோவாக முந்நூறு படங்கள் பண்ணியிருப்பேன்.

கன்னடத்தில் ஹீரோவாக நடித்த நீங்கள் தமிழில் வில்லனாக நடிக்க ஆரம்பித்தது எப்படி?

தெலுங்கில் நான் நடித்த ‘பிரதிகட்னா’ என்ற படத்தை தமிழில் ‘பூவொன்று புயலானது’ என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட்டார்கள். அந்தப் படம் தமிழில் ஹிட்டானது. அதைப் பார்த்துவிட்டுதான் எஸ்.ஏ.சந்திரசேகர் சார் அழைத்தார். அவர் இயக்கிய ‘நீதிக்கு தண்டனை’யில் என்னை அறிமுகப்படுத்தினார். தமிழில் என்னுடைய குருநாதர் எஸ்.ஏ.
சந்திரசேகர் சார்.

தமிழில் ஹீரோவாக ‘கழுகுமலை கள்ளன்’, ‘நான் சொன்னதே சட்டம்’ உட்பட நிறைய படங்கள் பண்ணினேன். ஹீரோவாக மட்டுமல்லாமல், கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்ததால் வில்லனாகவும் நடிக்க ஆரம்பித்தேன். ஹீரோ, வில்லன் இரண்டுக்குமே மக்கள் ஆதரவு கிடைச்சது.

சரண்ராஜ் வாழ்க்கையில் ரஜினி யார்?

எல்லோரும் சொல்வதுபோல் ரஜினி சார் பழகுவதற்கு இனிமையானவர். அவருடைய படங்களில் நடிக்க கிடைத்த வாய்ப்பு அனைத்துமே ரஜினி சாரால் கிடைச்சது. ‘பாட்ஷா’வில் மம்மூட்டி பண்ண வேண்டியது. ஏற்கனவே ‘தளபதி’யில் அந்த காம்பினேஷன் வந்ததால் சரண்ராஜ் இருக்கட்டும்னு எனக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்தார் ரஜினி சார். ‘பணக்காரன்’ படத்துலதான் முதன் முதலாக ரஜினி சாருடன் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தேன். பெங்களூருவில் இருக்கும்போதே ரஜினி சாரைத் தெரியும். ஆனால், நெருங்கிய பழக்கம் இல்லை.

ஒருமுறை சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் சந்தித்து பேசும் வாய்ப்பு அமைஞ்சது. அப்போது விரைவில் சேர்ந்து நடிக்கலாம்னு சொன்னார். அந்த சந்திப்புக்குப் பிறகு ‘பணக்காரன்’ வாய்ப்பு கிடைச்சது. ‘தர்மதுரை’, ‘பாண்டியன்’, ‘வீரா’, ‘பாட்ஷா’ என ரஜினி சார் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பிச்சேன். அதுல ‘பாட்ஷா’ மறக்க முடியாதது.
இப்போது மீண்டும் ரஜினி சாருடன் ‘லால்சலாம்’ பண்றேன். ‘ஜெயிலர்’ முதல் நாள் முதல் காட்சி பார்த்து வியந்து போனேன். அமேசிங் ஆக்டிங்!

இளம் நடிகர்களில் யாருடன் நடிக்க ஆர்வமாக இருக்கிறீர்கள்?

எஸ்.ஏ.சந்திரசேகர் படங்கள் பண்ணும்போது விஜய் ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தார். ஸ்கூலில் கொடி நாள் போன்ற நல்ல காரியங்களுக்காக மாணவர்கள் மூலம் நிதி திரட்டுவதுண்டு. அதுபோல் ஒருமுறை விஜய் என்னிடம் டொனேஷன் புக் கொண்டு வந்தார். நானும் பணம் கொடுத்தேன். அந்த முறை ஸ்கூலில் விஜய்தான் அதிக பணம் வசூல் பண்ணிக்கொடுத்ததாக பரிசும் வாங்கினார்.

ரஜினி, அஜித் என பலருடன் நடித்துள்ளேன். விஜய் கூடவும் நடிக்க ஆசை. பொருத்தமான கேரக்டர் அமைந்தால் விஜய் கூப்பிடுவார்னு எனக்குத் தெரியும்.
இப்போது என்ன படங்கள் செய்கிறீர்கள்?

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ஹிட்லர்’. தனா இயக்கம். அருண் காமராஜ் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் ‘லேபிள்’. இந்தப் படங்கள் என்னுடைய கம்பேக் படங்களாக இருக்கும்.
மகனை ஹீரோவாக்குவதற்காகத்தான் ‘குப்பன்’ படத்தை இயக்குகிறீர்களா?

‘குப்பன்’ படம் உருவான விதமே சுவாரஸ்யமானது. நான் பாலவாக்கத்தில் வசிக்கிறேன். எனக்கு நாய், கார், வாட்ச் அதிகம் பிடிக்கும். வீடு அருகே இருக்கும் கடற்கரைக்கு மாலை நேரத்துல நாயுடன் வாக் போவேன். 

இது முப்பது வருட பழக்கம். அங்கு எனக்கு குப்பன் என்ற மீனவ நண்பர் இருக்கிறார். ஒரு முறை பேசும் போது ‘மீனவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் பண்ணுங்க அண்ணா’ என்று உரிமையா கேட்டார். குப்பன் கேட்ட கேள்வி என்னை யோசிக்க வைச்சது. இரவெல்லாம் தூக்கம், சாப்பாடு மறந்து என்ன பண்ணலாம்னு யோசிச்சபோது உதித்ததுதான் ‘குப்பன்’ படம்.

குப்பத்தில் வசிக்கும் மீனவ இளைஞனுக்கும் மார்வாடிப் பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. வெஜ் சாப்பிடும் மார்வாடி பெண்ணுக்கும் நான் வெஜ் சாப்பிடும் மீனவ இளைஞனுக்கும் காதல் மலர்ந்தால் எப்படியிருக்கும் என்பதுதான் படத்தோட ஒன்லைன். அதை மீனவ கிராம பின்னணியில் சண் டை, பாடல், ரொமான்ஸ் என கமர்ஷியலாகச் சொல்லியுள்ளேன்.

என்னுடைய இளைய மகன் தேவ் நாயகனாக அறிமுகமாகிறார். கமர்ஷியல் பைலட் பயிற்சி முடித்தவர். நடிக்க முடிவானதுமே சினிமாவுக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டுதான் வந்தார். முதல் நாள் படப்பிடிப்பு முடிஞ்சதும் டைரக்‌ஷன் டீமிடம் ரஷ் காண்பித்து ஒப்பீனியன் கேட்டேன். யாரையும் இமிட்டேட் பண்ணாத அவருடைய நடிப்பு தனித்துவமா இருந்துச்சுனு சொன்னாங்க.

அது எனக்கு நம்பிக்கை கொடுத்ததால் படப்பிடிப்பை தொடர்ந்தோம். அவருக்கு ஜோடியாக சுஷ்மிதா வர்றார். இன்னொரு ஹீரோவாக ஆதிராம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ப்ரியா அருணாச்சலம் வர்றார். நானும் ஒரு கேரக்டரில் வர்றேன். ஹைட் கார்த்திக் வில்லனாக வர்றார். எல்லோருமே சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட் என்பதால் திட்டமிட்டபடி குறிப்பிட்ட நாட்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.

இலியாஸ் மியூசிக் பண்ணியுள்ளார். சிவமணி டீம்ல இருந்தவர். பாடல்கள், பின்னணி இசை இரண்டிலும் கவனிக்க வைப்பார்.ஜனார்த்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாங்கள் இருவரும் சேர்ந்து நாலைந்து படங்கள் பண்ணியுள்ளோம். அந்த புரிதலால் படத்துக்கான குவாலிட்டியை நான் கேட்காமலேயே கொடுத்தார். சோனிஸ்ரீ புரொடக்‌ஷன் தயாரிப்பு.

இது இரண்டாவது பாகம் வெளிவரும் சீசன். அப்படி உங்கள் படத்தை இரண்டாவது பாகம் எடுப்பதாக இருந்தால் உங்கள் சாய்ஸ் எது?‘நீதிக்கு தண்டனை’. சிவாஜி சார் போல் எனக்கு அந்தப் படத்தில் கலைஞர் ஐயாவின் டயலாக் பேசும் வாய்ப்பு கிடைச்சது.

எஸ்.ராஜா