கல்யாண சமையல் சாதம்... ஜி20-யில் பிரமாதம்!



ஜி20 உச்சி மாநாட்டை பிரமாண்டமாக நடத்திக் காட்டியிருக்கிறது ஒன்றிய அரசு. சாப்பாட்டிலும்தான்!

ஜி20 மாநாட்டுக்காக பல்வேறு நாடுகளில் இருந்தும், முன்னணி தலைவர்கள் உட்பட சுமார் 10 ஆயிரம் பேர் தில்லிக்கு வந்ததை ஒட்டி அவர்கள் சாப்பிட லீலா பேலஸ், ஐடிசி ஹோட்டல்ஸ், ஹயாத் ரீஜென்ஸி, ஓபராய் ஹோட்டல்ஸ் உட்பட 11 நட்சத்திர ஹோட்டல்களில் அறைகள் ஒதுக்கப்பட்டன. இவர்களுக்கு உணவு பரிமாறும் பாத்திரங்களை தங்கம் மற்றும் வெள்ளி முலாம் பூசப்பட்ட உலோகங்களில் தயாரித்து வைத்தார்கள்.

இந்த தங்கம் மற்றும் வெள்ளி முலாம் பூசப்பட்ட பாத்திரங்களை ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யும் பொறுப்பை ஜெய்ப்பூரைச் சேர்ந்த Iris என்ற நிறுவனம் ஏற்றது. “இந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை ஜி20 மாநாட்டில் கலந்துகொள்பவர்களுக்கு விளக்கும் வகையில் தட்டுகள், டம்ளர்கள், கோப்பைகள் போன்றவை வடிவமைக்கப்பட்டன. ஜெய்ப்பூர், உதய்ப்பூர், வாரணாசி மற்றும் கர்நாடக கலைநயத்தை பின்பற்றி இவை வடிவமைக்கப்பட்டன.

பெரும்பாலான பொருட்களில் நம் தேசிய பறவையான மயிலின் உருவத்தை கலையழகுடன் பொறித்தோம். பல்வேறு கட்ட தர சோதனைக்குப் பிறகே விருந்தினர்களின் டேபிளை இவை சென்றடைந்தன. இந்த தட்டுகள் மற்றும் கோப்பைகளில் தலைவர்கள் மற்றும் அவர்களுடன் வரும் விஐபிக்களுக்கு ‘மகாராஜா தாளி’ வகை விருந்து படைத்தோம்...’’ என்கிறது Iris நிறுவனம்.உணவுகளைப் பரிமாற பாத்திரங்களை பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்ததைப் போலவே உணவு வகைகளையும் பார்த்துப் பார்த்து சமைத்திருக்கிறார்கள்.

தில்லியில் பிரபலமாக உள்ள ஸ்ட்ரீட் ஃபுட்கள் முதல், சிறுதானிய உணவுகள் வரை இந்தியாவின் ருசியை உலகுக்கு உணர்த்தும் வகையிலான உணவுகளை தயாரித்து பரிமாறியுள்ளார்கள்.

ஐநா அமைப்பு இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளதால் சிறுதானியங்களைக் கொண்டு செய்யப்பட்ட உணவுகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் அசைவ உணவைவிட சைவ உணவுகளுக்கு அதிக இடம் ஒதுக்கப்பட்டது. தலைவர்களுக்கான உணவைச் சமைக்க இந்தியாவின் முன்னணி சமையல் கலை நிபுணர்களான குணால் கபூர், அஜய் சோப்ரா, அனஹிதா தோண்டி, குஷா மாத்தூர் மற்றும் நிகிதா மெஹ்ரா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்காக ருசியான உணவு வகைகள் ஒருபுறம் தயாராக, மறுபுறம் மாநாட்டை முன்னிட்டு 10ம் தேதிவரை தில்லியில் அறிவிக்கப்படாத லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. அதாவது, ஆன்லைன் மூலம் உணவு வழங்கும் நிறுவனங்களுக்குக்கூட தடை விதிக்கப்பட்டது. எனவே, பலர் உணவின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

என்.ஆனந்தி