டார்க்நெட்



13. தகவல் எனும் தங்கச் சுரங்கம்

உங்கள் ஊரில் இருக்கும் கடைத் தெருவிற்கு ஒரு நாள் செல்கிறீர்கள். பரப்பரப்பான கடைவீதி நடுவில் புதிதாக ஒரு பெரிய கடை. ஆர்வமாக அதனுள் சென்று பார்த்தால் உங்களுக்கு அதிர்ச்சி.
அந்தக் கடையில் உங்கள் ஊர் மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் பணக்காரர்கள் யார்... அவர்களின் விலாசம்... அவர்களின்  வீட்டுக் கதவுகளில் உள்ள பூட்டுகளைத் திறக்க மாற்று சாவிகள்... அவர்களின் வீட்டு பணப்பெட்டியைத் திறக்கும் மாற்று சாவிகள்...

அவர்கள் எந்த நாட்களில் வெளியூர் செல்வார்கள்... எப்போது அசந்து தூங்குவார்கள்... என விலாவாரி யான தகவல்கள் தயாராக விற்பனைக்கு உள்ளன!
சில நூறு அல்லது ஆயிரங்களைக் கொடுத்தால் மாற்று சாவியை வாங்கிவிடலாம்! அடுத்த கடைக்கு சென்றால் உங்களுக்கு தலையே சுற்றுகிறது. அங்கு நீங்கள் சில ஆயிரம் ரூபாய்களை கொடுத்தால் போதும்... கனகச்சிதமாக எப்படி பணத்தை திருடுவது என கற்றுக்கொடுக்கிறார்கள்!

இதெல்லாம் கற்பனையல்ல. டார்க்நெட்டில் சைபர் கிரிமினல்களின் சந்தை இதுதான். டார்க்நெட்டில் நுழைந்து அந்தக் குறிப்பிட்ட வலைதளத்தை ரகசியமாகத் திறந்துவிட்டால் போதும்... என்ன அதை திறக்கத்தான் உங்களை நம்பும் ஒருவர் அறிமுகப்படுத்தி அழைத்துச் செல்ல வேண்டும்!டார்க்வெப்பில் உருவாக்கி வைக்கப்பட்டிருக்கும் பல ஷாப்பிங் தளங்களைக் கொண்டு, நீங்கள் மிக எளிதாக பொருட்களை மற்றும் சேவைகளைப் பெறலாம்.இந்த டார்க்நெட்டில் முன்பு கோேலாச்சிய போதைப் பொருட்கள், துப்பாக்கிகளை விட இப்போது ஒரு விஷயத்திற்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.அதுதான் மக்களின் தகவல்கள்.

உங்களின் தகவல்கள்!

ஒருவரின் பயனர் கணக்கு, பாஸ்வேர்ட்கள், வங்கி தகவல்கள், அந்தரங்கத் தகவல்களுக்கு மிகப் பெரிய மார்க்கெட் ஏற்பட்டுள்ளது. நமக்கே தெரியாமல் நம் தகவல்கள் திருடப்படுவது வெறும் பணத் திருட்டிற்கு மட்டுமல்ல, நாடுகளின் பொருளாதாரத்தை - முதுகெலும்பையே உடைக்கும் சைபர் யுத்தத்திற்காகவும்தான்.இதைப் பற்றி பின்னால் விரிவாகப் பார்க்கலாம். இப்போதைக்கு தகவல் சந்தை குறித்து அறியலாம்.

தகவல் கிரிமினல்கள்

டார்க்வெப்பில் போதை மருந்து, சிறார் பாலியல் படங்கள் என ரகசிய ஆன்லைன் விற்பனை கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியதும் போலீசார் உஷாராகத் தொடங்கினார்கள். உள்ளூர் போலீசிலிருந்து இன்டர்போல் வரை டார்க்வெப்பை ஆராயத் தொடங்கினார்கள். பல கைதுகளையும் செய்யத் தொடங்கினார்கள். டார்க்வெப் தளங்களை சாதாரணமாகப் பார்க்க முடியாது. நீங்கள் பல வழிகளில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தி நுழைய வேண்டும். 

அப்படியே நுழைந்தாலும் ஆட்களை அவ்வளவு சாதாரணமாகப் பிடித்துவிட முடியாது. ஏனென்றால் விற்பனையாளர்கள் பல மென்பொருட்களைப் பயன்படுத்தி தங்கள் ரகசியத்தை காப்பாற்றுவார்கள். அவர்களின் கணினிகளை, அவர்களைப் பற்றிய தகவல்களையும் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்.

ஆனால், சைபர் போலீஸ்கள் உருவாக்கப்பட்டு டார்க்வெப்பைப் பற்றி அறிந்து கொள்ளத் தொடங்கினார்கள். போலீசார் உள்நுழைந்ததும் டார்க்வெப் விற்பனையாளர்கள் தங்களின் வழிமுறைகளை, மென்பொருட்களை மேம்படுத்திக் கொள்ளத் தொடங்கினார்கள். இன்று அவர்களின் விற்பனைத் தளங்கள் மிகவும் நேர்த்தியாகவும், ஒழுங்குமுறையுடனும், ரகசியமாகவும், வாடிக்கையாளர்களுக்கு எளிதாகவும், அவர்களைக் கவரும் வண்ணம் மேம்படுத்தப்பட்டவையாகவும் இருக்கிறது.

இன்றைய அமேசான், ஃப்ளிப்கார்ட் வலைதளங்களுக்கு நிகரான மேம்படுத்தபட்ட தொழில்நுட்பத்துடன் டார்க்வெப் தளங்கள் உள்ளன. எல்லாம் சரிதான்... மேம்படுத்தப்பட்ட டார்க்வெப்பில் வேறு ஒரு மாற்றமும் வந்துள்ளது. 

முன்பெல்லாம் டார்க்வெப் என்றால் போதை மருந்து அல்லது சிறார் பாலியல் படங்கள் என்றிருந்தன. ஆனால், இன்று அதிலும் ஒரு மாற்றம் வந்துள்ளது. இன்றைய டார்க்வெப்பில் அதிக  டிமாண்ட் என்ன தெரியுமா..? அந்தரங்க தகவல்களுக்குத்தான்! சுமார் 56% டார்க்வெப் விற்பனை என்பது முழுக்க முழுக்க தகவல் சார்ந்ததுதான் என்கிறது அண்மைய ஆய்வு.

தகவலா..? என்ன தகவல்..? தகவல்களை வைத்துக்கொண்டு அவர்கள் என்ன செய்யபோகிறார்கள்..? பல நபர்களின் பாஸ்வேர்ட்களையும் பல லட்சம் டாலர்கள் கொடுத்து வாங்க அவர்கள் என்ன பைத்தியக்காரர்களா?

இதற்கு விடைதான் தகவல் அரசியல்.சைபர்வெளியில் ஒரு நல்ல தகவல் என்பது வெறும் பணம் திருட மட்டுமல்ல, ஒரு நிறுவனத்தையோ, ஒரு நாட்டையோ கூட காலி செய்துவிடும்.
டார்க்வெப்பில் என்ன மாதிரியான தகவல்கள் விற்பனை செய்யப் படுகிறது என்பதை நீங்கள் தெரிந்துகொண்டால், அதை வைத்து என்ன செய்யலாம் என்பதும் உங்களுக்கு விளங்கிவிடும்.
டார்க்வெப்பில் சுமார் ஆறு வகையான தகவல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

அவை -தனிநபர் தகவல்கள்: இவை சாதாரணமான தகவல்கள்தான். பெயர், முகவரி, மின்னஞ்சல், செல்போன் நம்பர், சோஷியல் செக்யூரிட்டி எண் (இந்தியாவில் ஆதார் எண்) போன்றவை.

பணப் பரிவர்த்தனை தகவல்: ஒருவரின் வங்கிக் கணக்கு, அதன் தொடர்பான போன் நம்பர்கள், கடனட்டை தகவல்கள், ஸ்மார்ட்போனில் பயன்படுத்தும் இ-வாலட்(UPI) பற்றிய தகவல்கள்.
பயனர் கணக்கு தகவல்கள்: ஒரு தனிநபரின் பயனர் கணக்கு தகவல்கள் என்பவை பாஸ்வேர்ட்கள், நீங்கள் ஆன்லைனில் பயன்படுத்தும் பணப்பரிவர்த்தனை மற்றும் சமூக வலைதள தகவல்களும் சேர்ந்தது. உங்கள் மின்னஞ்சல் கணக்குகளும்தான் உள்ளடக்கம்.

பிற பயனர் கணக்கு தகவல்கள்: இதில் திரைப்படங்கள், செய்திகள், இன்னபிற பொழுதுபோக்கு சேவைகள் போன்றவற்றின் பயனர் கணக்கு தகவல்கள், பாஸ்வேர்ட்கள் அடக்கம்.
சைபர் க்ரைம் வழிகாட்டிகள்: புத்தகங்கள், வழிகாட்டி கைடுகள், எளிய வழிகாட்டிகள்... அதாவது சைபர் க்ரைம் செய்ய வழிகாட்டிகள்... உதாரணத்திற்கு எப்படி ஹேக்
செய்வது... தகவல்களை திருடுவது... எப்படி போலி வங்கிக் கணக்கை உருவாக்குவது... போன்ற வழிகாட்டிகள் பற்றிய தகவல்கள்தான் சைபர் க்ரைம் வழிகாட்டிகள்.
சைபர் க்ரைம் மென்பொருட்கள் / கருவிகள்: நீங்கள் எதுவும்

செய்ய வேண்டியதில்லை. பாஸ்வேர்ட்களை ஹேக் செய்யும் நவீன மென்பொருட்களை பணம் கொடுத்தால் போதும். அவர்களே விற்கிறார்கள். உளவு பார்க்கும் கருவிகளும் - அதாவது சைபர் திருட்டில் ஈடுபடும் மென்பொருட் களும், வன்பொருட்களும் கிடைக்கும்.

இப்படியான தகவல்களை வைத்து என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். மன்னிக்கவும். உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால், இதன் பயன்பாடுகள் நாமே அன்றாட வாழ்வில் கேட்டதுதான்; காண்பதுதான்.சைபர் க்ரைம் என்றால் வெறும் பணம் திருடுவது என்று மட்டும் பார்க்காமல் இன்னும் கொஞ்சம் விரிவாக நுழைந்து பார்த்தால் ஒரு நபரின் தகவல் என்பது சைபர் பணத் திருட்டு முதல் ஒரு அரசியல் கட்சியின் வெற்றியைத் தீர்மானிப்பது வரை பயன்படுவதை அறியலாம்.அதிர்ச்சி அடையாதீர்கள். அதுதான் உண்மை.அதைப்பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

(தொடரும்)

 - வினோத் ஆறுமுகம்