சிறுகதை-அறை எண் 207



ஹோட்டல் ரெட் மூன். அறை எண் 207ன் கதவைப் பூப்போல சாத்திவிட்டு, தோளில் தொங்கிய ஹேண்ட் பேகில் கைக்குட்டை எடுத்து, நெற்றியில் அரும்பியிருந்த வியர்வைத் துளிகளை ஒற்றி எடுக்கும் பூஜாவுக்கு வரும் பிப்ரவரி 5ல் 30 முடிகிறது.
பூஜாவுக்கு இலகுவான ரோஸ் நிற மெழுகு உடல். சராசரி உயரம். மாடலாக வைத்து பெண் சிற்பம் செய்ய பொருத்தமான அமைப்பு. ஆண் ஜீவராசிகள் அத்தனையும் பார்த்ததும் கண்களை விரிய வைக்கிற அளவுக்கு அத்தனை அழகு. நெற்றியிலிருந்து தாடை வரை சுருண்டு ஊசலாடும் முடிச்சுருள் கூடுதல் கவர்ச்சி. ‘லிப்ஸ்டிக்’ தடவிய உதட்டில் நிரந்தர ஈர்ப்பு விசை.

படிகளில் இறங்கியபடி, தற்போதைய உழைப்புக்கு பெற்ற ஊதியத் தொகையை சரிபார்த்து வைத்துக்கொண்டாள். கொடுத்தவன் முன் எண்ணிப் பார்ப்பது அநாகரீகம்; நம்பிக்கையில்லாத் தன்மை.மொபைல் எடுத்துப் பார்த்தாள். 12 மிஸ்ட் கால். அனைத்தும் அருணிடமிருந்து.அழைத்தாள். ‘‘ஹலோ... கஸ்டமர் கூட இருக்கும்போது அட்டண்ட் பண்ண மாட்டேனு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். ரெண்டாவது தடவையும் எடுக்கலேன்னா புரிஞ்சுக்க மாட்டியா? மூடைக் கெடுத்திட்டேன்னு திட்டுவானுங்கடா... சரி... ரொம்ப அர்ஜெண்டா..?”

‘‘ஆமா...”
‘‘இண்டர்வியூ போனியே, என்னாச்சு..?”‘‘அதப் பத்திதான் பேசணும், வா...”கேரிபேகில் அருணுக்குப் பிடித்த மஷ்ரூம் பிரியாணியும், அவளுக்குப் பிடித்த சப்பாத்தி மட்டன் சுக்காவும் சில்வர் பாக்ஸில் சூடாக இருந்தன.

பூஜா வீடு திறந்திருந்தது. உள்ளே  வந்தவள் பார்சலை டைனிங் டேபிளில் வைத்துவிட்டு அருணைப் பார்க்க, அவன் சோபாவில் படுத்து சீலிங் ஃபேன் சுற்றுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.  ரெஸ்ட் ரூம் சென்று திரும்பியவள் நைட்டிக்கு மாறியிருந்தாள்.

அருண் எழுந்து உட்கார்ந்தான். அவனுக்கு எதிரே அமர்ந்து, “சொல்லு... என்ன சொன்னாங்க..?” என்றாள்.‘‘ஒருத்தர்தான். சாந்தகுமார்னு. அவர்தான் மேனேஜர். நல்லா பேசுனார். ‘சொந்த ஊர்’, ‘சென்னைக்கு எப்போ வந்தே’, ‘கூடப் பொறந்தவங்க’, ‘எங்க தங்கிருக்க..?’ எல்லாம் விசாரிச்சார். அவர் ஒரு சைன் பண்ணா போதும். ஜாப் கன்ஃபார்ம்...”
“என்ன... எதாச்சும் எதிர் பார்க்கிறாரா..?”‘‘தெரியலை. மழுப்புறார். ஆனா, கொஞ்சம் சபலம்னு மட்டும் புரிஞ்சது...”‘‘வீட்டு அட்ரஸ் கொடுத்தாரா..?”

‘‘வீடில்ல. ஒரு லாட்ஜ். இல்லீகல் மீட்டிங்னா அங்க வெச்சிதான் சந்திப்பாராம்...” பர்ஸில் இருந்து பச்சை கலர் அட்டையை எடுத்து நீட்டினான்.
வாங்கி மனதில் பதிந்து கொண்டு திருப்பிக் கொடுத்தாள்.‘‘சரி ரூமுக்குப் போ. நாளை சண்டே. ஈவ்னிங் ஒனக்கு கால் பண்றேன்...”
அருண் எழுந்து தயங்கி நின்றான். ‘நா இருக்கேன் போ’ என்று தைரியத்தை கண்களில் ஆமோதித்தாள்.

‘‘சரி... சாப்டு போ...”
‘‘வேணாம். பசிக்கலை...”
‘‘பசிக்கிறப்போ சாப்பிடு...” அவனுக்கான பார்சலை எடுத்து நீட்ட... வாங்கிக் கொண்டு கிளம்பினான்.அருண் பாவம். மிகவும் கஷ்டப்படுகிறான். அவனுக்கு இந்த வேலை கிடைக்க வேண்டும். ஏதோ தன்னால் முடிந்த சேவை. 20 ஆயிரங்கள் அவள் வரவில் நஷ்டம்தான். அருணுக்காக இது கூடச் செய்யவில்லை என்றால் எப்படி..?  
அருண், பூஜாவுக்கு ஒரு கஸ்டமராகத்தான் முதலில் அறிமுகமானான். அந்த நாள் இன்றைக்கும் நினைவில் இருந்தது.

மூன்று இளைஞர்கள். அதில் ஒருவன் பூஜா கஸ்டமர்.மொபைலில் போட்டோ காட்டினார்கள். ‘இவன் பேரு அருண். எங்க ஃபிரெண்ட். ரொம்ப ஷை டைப். நாளை இவனோட பர்த்டே. கிஃப்ட்டை விட ஒரு புது அனுபவத்தை அவனுக்கு கொடுக்கணும்.அருண் ஆரம்ப அஜித் போல் இருந்தான். இதுபோன்ற அழகன் எப்பொழுதாவதுதான் கிடைப்பான்.

‘‘இவருக்கு அனுபவம் இல்லேங்கிறதை நம்ப முடியல..? சிரிப்புக்கே விழுவாளுங்களே...’’   ‘‘அதான் சொன்னனே... கூச்சமே கூசுற அளவுக்கு கூச்சப்படுவான்...’’ என்றவன் தடித்த கவரை நீட்டி, ‘‘இதுல டொண்டி தவுஸண்ட் இருக்கு. இந்த பர்த்டேவை அருண் மறக்கக் கூடாது...’’வாங்கிக் கொண்டாள். அருணை மற்ற கஸ்டமர் போல் அவசரப் படுத்தக் கூடாது. நேரம் கணக்கில்லை. அவனே ‘போ’வெனும் வரை இருக்க தீர்மானித்தாள். ‘‘இவர் பில்லை வாட்ஸ்அப்புக்கு அனுப்பி வை...’’வந்தது. ஒரு தரம் ஜூம் பண்ணிப் பார்த்துக் கொண்டாள்.

‘‘அன்னைக்கு வந்த வீட்டுக்கே வந்துரு. நாங்க நைட் ஷோ படத்துக்குப் போயிருவோம். அருண் மட்டும் இருப்பான்...’’  
இரவு 7 மணி. பூஜா கதவின் பக்கவாட்டில் இருந்த பொத்தானை அழுத்த அருண் கொஞ்சமாய்த் திறந்து வினாவுடன் பார்க்க, கதவை அகலப்படுத்தி உள்ளே வந்து தாழிட்டாள்.
‘‘உங்களுக்கு யார் வேணும்..?’’ கழுத்து சங்கு ஏறி இறங்கியது. எச்சில் விழுங்கினான்.   

‘‘நீதான்...’’
‘‘நானில்ல. ஃபிரெண்ட்ஸா இருக்கும்...’’
‘‘... அவங்க ஃபிலிம் போயிருக்கானுங்க. நைட் ஷோ. ‘விடுதலை’ ஐநாக்ஸ் போயிருக்கானுங்க. வர பத்தரை ஆகும்...’’
அத்தனை விவரங்களும் அவள் சொல்ல ஆச்சர்யமாகப் பார்த்தான். ‘‘வர்ற வரைக்கும் அருண்ங்கிற பர்த்டே பேபிய பாத்துக்கன்னு சொல்லிட்டுதான் போனானுங்க...’’ பூஜா சேலை நழுவாதிருக்க குத்திய ஊக்கைக் கழற்றினாள்.‘‘இதெல்லாம் பிடிக்காது... பிளீஸ் வெளிய போங்க...’’மடித்து செருகப்பட்ட கொசுவச் சுருளை படிப்படியாய் உருவினாள்.

‘‘ஹலோ... உங்ககிட்டதான் பேசிட்டு இருக்கேன்...’’அங்கிருந்த டேபிள் மீது புடவையை கசங்காது வைத்தாள். ரவிக்கை மேல் ஊக்கில் கை வைத்தபோது திரும்பிக் கொண்டான். ‘‘பிளீஸ்... போயிடுங்க. நா அந்த மாதிரி பையன் கிடையாது. எனக்குன்னு ஒருத்தி வருவா. அவளுக்கு என்னை முழுசா காப்பாத்திக் கொடுக்கணும்...’’ குரலில் இயல்பில்லை. கரகரப்பாய் இருந்தது.

அழுகிறானா..?பூஜா அவன் முன் சென்று முகம் தூக்கிப் பார்க்க கண்கள் கலங்கியிருந்தன.‘‘அதுக்கு அழுவியா..? சரி வேண்டான்னா விடு...’’ அப்படியே கட்டிலில் அமர்ந்தாள்.

திரும்பியவன் புடவையை எடுத்து அவளிடம் கொடுத்தான். கட்டிக் கொண்டாள். வெட்டப்பட்ட கேக்கில் மிச்சத்தை கொஞ்சமாக எடுத்து அவனுக்கு ஊட்டிவிட்டு வாழ்த்து சொன்னாள். ஹேண்ட் பேகில் அருணுக்காக பெறப்பட்ட கவரும் பிரிக்கப்படாமல் இருந்தது.

அதில் இருந்த 500 ரூபாய் தாள்களில் 20 எண்ணி அருணிடம் நீட்டி, ‘‘இந்தா... இது நீ என்னை தொடாததற்கு... உனக்குப் பாதி... உன்னை நான் தொடாம இருந்ததுக்கு எனக்குப் பாதி...’’ அவன் கையில் திணித்தாள்.அப்போது முதல் அருணைப் பிடித்துப் போயிற்று.

இருவரும் எதையும் பகிர்ந்து கொள்கிற அளவுக்கு நட்புச் சிலந்தி அழகாய் வலை பின்னிக்கொண்டது.சிரித்துக்கொண்ட பூஜா அலங்கரித்திருந்தாள். அருண் காட்டிய மேனேஜர் அறை எண்ணை ஒருதரம் நினைவுபடுத்திக் கொண்டாள். கண்டிப்பாக அருணுக்கு இந்த வேலை கிடைக்க வேண்டும். சாந்தகுமாரோ, சாதாரண குமாரோ... அந்த மேனேஜர் முரடனா, சேடிஸ்டா, குடிகாரனா எதுவும் தெரியாது.

எதுவாக இருந்தால் என்ன..? அருணுக்கு வேலை வேண்டும். அவன் படும் வேதனையைப் பார்க்க சகிக்கவில்லை.எதற்கும் பாதுகாப்பாக இருக்கட்டும் என பேகில் பெப்பர் ஸ்பிரே வைத்துக் கொண்டாள். விலை உயர்ந்த வாசனைத் திரவியம் பீய்ச்சிக் கொண்டாள். 

பணத்துக்காக அலங்கரித்துக் கொண்டவள் இன்று ஒரு நல்ல விஷயத்துக்காக தயாரானது பூஜாவுக்கு பெருமையாக இருந்தது.ஹோட்டல் தலையில் பெயர் பார்த்து ஆட்டோவிலிருந்து இறங்கிக்கொண்ட பூஜா, அறைகளில் எண்கள் பார்த்துக்கொண்டு படியேறினாள்.  207. இதுதான். பித்தளை எண்கள் பளபளத்தன. பூஜா அழைப்பு பொத்தானை அழுத்திவிட்டு காத்திருந்தாள்.

43 வயது மதிக்கத்தக்க சாந்தகுமார் கதவு திறந்து பூஜாவைப் பார்த்த கண்களில் ‘யார்...’ இருந்தது. தலையில் சுருண்ட கேசம். லுங்கி, சிவப்பு நிற ஜிப்பா போன்ற இலகுவான ஆடைகள் உடுத்தியிருந்தான்.   ‘‘ஹாய் மிஸ்டர் சாந்தகுமார்..?” பூஜாவின் கேள்விக்கு ‘‘எஸ்...” என்றுவிட்டு அவளுக்குப் பின்னால் தேடினான்.‘‘அருண் வேலை சம்பந்தமா உங்களைப் பார்க்க வந்தேன்...”‘‘பிளீஸ் சிட்டவுன்...” இருக்கை காட்டினான்.‘‘அருணை ரொம்ப வருஷமா தெரியும் சார்.

கஷ்டப்படுற ஃபேமிலி. இந்த வேலை கெடைச்சா குடும்பத்தை கரை சேர்த்துருவான். நான் வந்தது அவனுக்குத் தெரியாது. நீங்க எதிர்பார்க்கிறது பணம் இல்லைங்கிறது ஓரளவுக்கு தெரிஞ்சுகிட்டுதான் வந்திருக்கேன். அருண் ஜாப்புக்கு உத்தரவாதம் கொடுங்க... அது போதும்...” தோளில் இருந்த பேகை எடுத்து வைத்தாள்.அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த சாந்தகுமார், ‘‘அந்த ஹாண்ட்ஸம் மேன் அருண் வரலையா..? அவரை வரச்சொல்லுங்க. ஜாப் கன்ஃபார்ம் பண்றேன்...” என்றவனின் வார்த்தைகளில் நளினம் தெரிந்தது.

பூஜா புரியாமல் சாந்த குமாரைப் பார்த்தாள்.பார்க்கப் பார்க்க புரிந்தது.அருண் இதற்கு சரிப்பட்டு வரமாட்டான்...தீர்மானத்துடன் பூஜா பேகை மாட்டிக் கொண்டு சேரிலிருந்து எழுந்தாள்.

எம்.ஜி.கன்னியப்பன்