பள்ளியை விட்டு நின்ற மாணவர்களை தேடித் தேடி பிடிக்கும் போலீஸ்!



*நெகிழ வைக்கும் கோவை காவலர்கள்

குழந்தைகளுக்கு சோறு ஊட்டும்போது அழிச்சாட்டியம் செய்தால், ‘அதோ பூச்சாண்டி வர்றான் புடிச்சுக் கொடுத்துடுவேன்...’ என்று அச்சுறுத்தி உண்ணக் கொடுப்பது தொன்றுதொட்டு நம் மக்களிடையே இருந்து வரும் வழக்கம். பூச்சாண்டியை இன்று வரை பார்த்தவரும் இல்லை. கேட்டவரும் இல்லை. அதேசமயம் குழந்தைகள் அழிச்சாட்டியம் செய்யும் அதே நேரத்தில் காக்கிச் சட்டை அணிந்த போலீஸ்காரர் போனால் போதும், ‘அதோ... போலீஸ் அங்கிள்கிட்ட புடிச்சுக் கொடுத்துடுவேன்!’ என்று நம் தாய்மார்கள் சொல்வதையும் நாம் கேட்டிருக்கிறோம்.

நம் குழந்தைகள் பூச்சாண்டிக்கு  பயப்படுமோ இல்லையோ எதிரே போகும் போலீசுக்கு பயந்து ஒரு கவளத்திற்கு ரெண்டு மூணு கவளம் கூட சாப்பிட்டு விடும்.
இப்படித்தான் போலீஸ் நம் குழந்தைப் பருவத்திலேயே அறிமுகமாகி, காலம் போன கடைசிவரை நீடிக்கிறார்கள். அதேபோல் ஒரு வீட்டிற்குப் போலீஸ் வந்து சென்றாலே அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் இமை மூடாமல் பார்ப்பார்கள். ‘ஏதோ தப்பு செஞ்சுட்டான்... அதுதான் போலீஸ் எல்லாம் அவன் வீட்டுக்கு வருது!’ என்பதான கண்ணோட்டம் இது.

இப்படியான சூழலில் சமீபத்தில் கோவை மாநகர போலீசார் பள்ளியில் இடைநின்ற குழந்தைகளை நிஜமாலுமே வீடு தேடிப் போய், அவர்களிடமும், பெற்றோரிடமும் பேசி பள்ளியில் திரும்ப சேர்த்து விட்டுள்ளனர். இப்படி பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய 173 பேரை திரும்ப பள்ளியில் சேர்த்துள்ளனர். மீண்டும் பள்ளியில் சேர்ந்த இந்த மாணவ - மாணவியர், பெற்றோர் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேச ஒரு நிகழ்ச்சி நடத்திப் பாராட்டியும் உள்ளார் கோவை போலீஸ் கமிஷ்னர் பாலகிருஷ்ணன்.

கோவை மாநகர போலீசார், பள்ளிக்குழந்தைகள், பெற்றோர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் நடந்த விஷயங்கள் அனைத்தும் படு உருக்கமான ரகம். ‘‘புருஷன் கூட சண்டை, அவர் விட்டுட்டுப் போயிட்டார்... அதனால பிள்ளையை பள்ளிக்கூடம் அனுப்ப முடியலை. அவன் கூலி வேலை செஞ்சுட்டு வந்தால்தான் சோறு!’’ என்ற பெற்றோர்கள் தொடங்கி, ‘‘எனக்கு அப்பா இல்லை... அம்மா இல்லை, ரெண்டு பேருமே இல்லை... யாரு படிக்க வைப்பாங்க?’’ என்று கண்ணீருடன் பேசும் குழந்தைகள் வரை இங்கே காண முடிந்தது.

போலீஸ் அதிகாரிகளும், ‘‘நீங்க கவலைப்படாதீங்க... படிப்புதான் வாழ்க்கைக்கு முக்கியம். படிங்க. உங்க குடும்ப பொருளாதார சூழல் சரியில்லை என்றால் நாங்க உங்களுக்கு வெளியே உதவிகள் வாங்கிப் படிக்க வைக்கிறோம்!’’ என்று சொல்லி அவர்களைத் தேற்றுவதையும் காண முடிந்தது. இப்படி கண்ணீர்க் கதைகள் சொன்ன சில குழந்தைகளை, பெற்றோரை தனியே சந்தித்துப் பேசினோம்.

ஜக்காரியா 52 வயது. இவருக்கு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் கூலி வேலை. கொேரானா காலத்தில் தொழில் இல்லை. உடல்நலக்குறைவும் ஏற்பட, 6ம் வகுப்பு படிக்கும் தன் பிள்ளை ஜம்சீரைப் படிக்க அனுப்பவில்லை. 2 - 3 வருடங்களாக தனக்கு உதவி செய்ய அழைத்துச் சென்றார். அவரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் பெண் காவலர் ரிதா. தொடர்ந்து இவர்கள் வீட்டிற்கும் சென்று கவுன்சிலிங் தந்திருக்கிறார்.

இப்போது பையனை கோட்டைமேடு மன்பஉல் பள்ளியில் 8ம் வகுப்பு சேர்த்துள்ளனர். ஜக்காரியா பேசும்போது, ‘‘எனக்கு கூலி வேலை. ரெண்டு பெண் குழந்தைகள். ஒரு ஆண். இரண்டு பெண்களைக் கட்டிக் கொடுத்து விட்டேன். எப்படியாவது இந்தப்பையனை படிக்கவைக்கலாம்ன்னுதான் நினைச்சேன். குடும்ப சூழ்நிலை முடியலை. அதனால நிறுத்திட்டேன். இப்ப இந்த வருஷம் கேரளாவில் சொந்தக்காரங்க வீட்ல விட்டு, அங்கே பள்ளியில் படிக்கட்டும்னு டிசி வாங்கறதுக்கு முடிவு செஞ்சிருந்தேன்.

இடையில் போலீஸ்காரங்க வந்து பேசினதில் மனசு மாறிடுச்சு. இதே பள்ளிக்கூடத்துல சேர்த்து விட்டேன்!’’ என்றவரிடம், ‘‘போலீஸ்ல பேசறேன்னு சொன்னாலே ஒரு மாதிரி பதட்டம் வரும். வீட்டுக்கு போலீஸ் வந்தா அக்கம்பக்கத்துக்காரங்க ஒரு மாதிரி பார்ப்பாங்க. நீங்க அதை எப்படி சமாளிச்சீங்க?’’ என்று கேட்டோம்.‘‘முதல்ல போலீஸ் மேடம் லைன்ல வந்தபோது கொஞ்சம் பதட்டமாத்தான் இருந்தது. நாம எந்தத் தப்பும் பண்ணலையேங்கிற தைரியத்துலதான் பேசினேன். இப்படி புள்ளைய பள்ளிக்கூடம் அனுப்பச் சொல்லிக் கேட்டபோது ஆச்சர்யமா இருந்தது.

போலீஸ்காரங்க கூட இந்த வேலையைச் செய்யறாங்களான்னு சந்தேகமும் வந்தது. அவங்களே வீட்டுக்கு வந்தபோது முழுசா நம்பிக்கை வந்தது.

இரண்டு தடவை வீட்டுக்கு வந்தபோது ரொம்ப பொறுமையா அன்பா பேசினாங்க. ‘பள்ளிக்கூடம் போகலைன்னா பையனோட எதிர்காலமே கெட்டுப் போகும். நல்ல பையனா வளர்றது முக்கிமில்லையா’ன்னும் பேசினாங்க. அக்கம் பக்கத்துல முதல்ல ஒரு மாதிரிதான் நெனைச்சாங்க. இந்தச் சூழல்ல வந்து நின்ன போலீஸ்காரங்க, ‘நாங்க வேறு எந்த நோக்கத்திலும் வரலை. பள்ளிக்கூடம் போகாத பிள்ளைகளை ஸ்கூல்ல சேர்க்கத்தான் வந்திருக்கோம். உங்க வீட்ல யாரும் பள்ளிக்கூடம் போகாம புள்ளைக இருக்காங்களா’ன்னு கேட்டப்ப அக்கம்பக்கத்தினரால் நம்ப முடியலை.

போலீஸ்காரங்க இப்படியெல்லாமா வருவாங்கன்னு ஆச்சர்யமா பார்த்தாங்க!’’ என்று அப்போது நடந்த விஷயத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் ஜக்காரியா.

உக்கடம் ஹவுசிங் யூனிட்டில் பெட்டிக்கடை வைத்து நடத்தும் ஷர்மிளாவுக்கு கணவர் இல்லை. இரண்டு பெண்கள். ஒரு பையன். பையன் அப்துல்நிஜார் 6ம் வகுப்பு மைக்கேல் பள்ளியில் படித்து வந்துள்ளார். அவருக்கு அடிக்கடி ஃபிட்ஸ் (வலிப்பு) வந்துவிடுமாம். அதனால் பள்ளியை விட்டு நிறுத்த முடிவு செய்து ஒரு மாதம் முன்பே அழைத்து வந்து விட்டார் ஷர்மிளா.

இப்போது போலீசார் பேசி உள்ளனர். நேரிலும் வந்து சந்தித்துள்ளனர். மாணவனுக்கு மருத்துவ உதவி முதற்கொண்டு செய்து தருவதாகவும், இந்த உடல்பாதிப்பு இருப்பதற்காக படிப்பிலிருந்து நிறுத்துவது சரியல்ல என்றும் சொன்ன பிறகு சம்மதித்திருக்கிறார். இன்று திரும்ப பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார் அப்துல் நிஜார்.

இதேபோல் முகைதீன், 17 வயது ஆகிறது. ப்ளஸ் ஒன் சேரும்போது ஃபர்ஸ்ட் குரூப் எடுத்துள்ளார். அந்தப் பாடம் கடுமையானது என்பது அனுபவத்தில் தெரிந்திருக்கிறது. எனவே பள்ளியை விட்டு சென்ற ஆண்டே நின்று விட்டார்.

அவரிடம் போனில் பேசி, வீட்டிற்கு நேரிலும் வந்த போலீசார் கவுன்சிலிங் கொடுத்துள்ளனர். பையனுக்கு சரியான படிப்பு, ஐடிஐ தொழிற்கல்வி என முடிவு செய்து அங்கே டர்னர் படிப்புக்கு சேர்த்து விட்டுள்ளனர்.  அடுத்து கவிதா, கெம்பட்டி காலனியைச் சேர்ந்தவர். 9வது படித்து வந்துள்ளார். அப்பா பயங்கர குடிகாரர். அம்மாவுக்கு வீட்டு வேலை. மூன்று குழந்தைகள். அதனால் படிப்பை நிறுத்தி விட்டார். அம்மாவிடமும், மகளிடமும் போலீசார் பேசி சரி செய்து பள்ளியில் சேர்த்துள்ளனர்.

குப்புராஜ் ப்ளஸ் ஒன் படிக்கும்போதே நின்றுவிட்டார். காரணம், அப்பா அம்மாவுடன் சண்டை பிடித்துக்கொண்டு சென்று விட்டார். அம்மா வீட்டு வேலைக்குப் போனால்தான் சாப்பாடு. எனவே, தானும் வேலைக்குப் போக முடிவு செய்து மீன் கடை வேலைக்குப் போயிருக்கிறார். போலீசார் சென்று பேசி அவரை ப்ளஸ்டூ டுட்டோரியலில் சேர்த்து 12ம் வகுப்பு தேர்வை பிரைவேட்டாக எழுத ஏற்பாடு செய்துள்ளனர். இவருக்கான கல்விச் செலவை கவசம் பவுண்டேஷன் என்று அமைப்பு ஏற்றுக்கொள்ள முன்வந்திருக்கிறது.

இப்படி ஒவ்வொருவரிடமும் நெஞ்சை உருக்கும் நிஜக் கதைகள். இவர்களை சந்தித்துப் பேசிய போலீசாரிடம் பேசியபோது, ‘‘கோயமுத்தூரில் 357 பள்ளிகளும், 64 கல்லூரிகளும் உள்ளன. இங்கு படிக்கும் மாணவ மாணவியர் குற்றம் குறை பிழைகள் இல்லாமல் கற்றுத்தேர்ந்து வரும்போது எதிர்கால சமூகம் குற்றமற்றதாக இருக்கும். ஒருவர் குற்றம் செய்த பின்பு கண்டுபிடித்து சிறையில் அடைத்து தண்டனை வாங்கித் தருவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் அந்தக் குற்றம் நடக்காமல் இருக்கவும், குற்றவாளி உருவாகாமல் இருப்பதைத் தடுப்பதும் ஆகும்.

அந்த அடிப்பிடையில்தான் கோவையில் நம் போலீஸ் கமிஷனரின் சிறப்பு ஏற்பாட்டில் ‘அக்கா போலீஸ்’ என்ற குழு உருவாக்கப்பட்டுள்ளது.  ஒரு ஸ்டேஷனுக்கு இரண்டு பெண் போலீசார் வீதம் 18 ஸ்டேஷனுக்கு 36 போலீஸ் அக்காக்கள் இருக்கிறோம். நாங்கள் கல்லூரி, பள்ளிகளில் சென்று குழந்தைகளுக்கு கவுன்சிலிங் கிளாஸ் நடத்துகிறோம். அதன் அடிப்படையிலேயே இந்த இடைநின்ற குழந்தைகளையும் கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டது!’’ என்றனர்.

இதுகுறித்து கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்துப் பேசினோம்.‘‘கோவை மாநகரில் ஆப்பரேசன் ரீபூட் (Operation reboot) என்ற பெயரில் குற்றங்களை நீண்டகால அடிப்படையில் தடுப்பதற்கும், இளம் குற்றவாளிகள் உருவாகாமல் காப்பதற்கும் ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். கடந்த வருடம் 163 பள்ளி இடைநின்ற குழந்தைகளை சேர்த்தோம். இந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 173 குழந்தைகளை பள்ளியில் சேர்த்திருக்கிறோம்.

ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொருவிதமான சூழல் காரணமாகவே பள்ளியை விட்டு நின்றுள்ளது. அந்த விவரங்களை பள்ளிக்கல்வித்துறை, மாநகராட்சியிடமிருந்து வாங்கி, அவர்கள் ஒத்துழைப்புடன்தான் இந்தக் குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் திரும்ப சேர்த்துள்ளோம். இந்தப் பணியை பள்ளியில் ஆசிரியர்களே செய்கிறார்கள். ஆனால், அவர்களால் முழுமையாகச் செய்ய முடியவில்லை. அந்த இடைவெளியை நிரப்புவதற்காகவே போலீசார் இந்தப் பணியைச் செய்து வருகின்றனர்.

அவர்கள் குடும்பத்தில் என்ன குறைகள், உடல்நிலை சரியில்லை என்றாலும் எந்த மாதிரி என்றெல்லாம் ஆராய்ந்து அதற்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறோம். சிலபேருக்கு எல்லாம் இருந்தாலும், ‘படிச்சு என்ன ஆகப்போவுது’ என்ற மனநிலை இருக்கிறது. அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கிறோம்!’’ என்று தெரிவித்தார் கோவை போலீஸ் கமிஷ்னர் பாலகிருஷ்ணன்.

கா.சு.வேலாயுதன்