இதுதான் ரியல் சந்திரமுகியின் கதை!
ராகவா லாரன்ஸின் லகலக சீக்ரெட்
தமிழ் சினிமாவின் ஐகானிக் வெற்றிப் படமான ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகம் ‘சந்திரமுகி 2’, லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, ராதிகா, மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் பிரம்மாண்ட திரைப்படம் இது. பட வெற்றி குறித்து நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

பேய்களுக்கும் உங்களுக்கும் அப்படி என்ன பந்தம்? ஆரம்பத்தில் நானும் நாகார்ஜுனா சாருடன் ‘மாஸ்’, ‘டான்’; பிரபுதேவா மாஸ்டர் உடன் ‘ஸ்டைல்’; பிரபாஸுடன் ‘ரிபெல்’ இப்படியான கமர்ஷியல் ஆக்ஷன் படங்கள்தான் இயக்க ஆரம்பிச்சேன். பொதுவா எனக்கு ஆக்ஷன் திரைப்படங்கள் ரொம்ப பிடிக்கும்.  அதுதான் என்னுடைய பாதை அப்படின்னும் தீர்மானம் செய்து அதிலே தான் பயணிச்சிட்டு இருந்தேன். டான்ஸ், ஆக்ஷன் படங்களும் செய்தாச்சு. அடுத்து என்னனு யோசிச்சபோதுதான் ‘முனி’ படத்தின் கதை தோணுச்சு. பொதுவாக ஹாரர் படங்களா இல்லாம குடும்பம் குழந்தைகள் இவர்களை ரசிக்க வைக்க என்னால் என்ன செய்ய முடியும்ன்னு யோசிச்சேன். அதுக்கு இந்த ஹாரர் கான்செப்ட் சரியா பொருந்துச்சு.  அங்கே ஆரம்பிச்சது... ‘காஞ்சனா’ என்னை பாலிவுட் வரையிலும் கொண்டு சென்றது. அந்த வரிசையில் ‘சந்திரமுகி 2’ல் நடிக்கிறீங்களானு கேட்கும்போது எப்படி வேண்டாம்னு சொல்ல முடியும்..? தொடர்ந்து ‘ஜிகர்தண்டா டபுள் XL’, ‘அதிகாரம்’, ‘துர்கா’ உள்ளிட்ட படங்களில் நடிச்சிட்டு இருக்கேன். இருந்தாலும் ஹாரர் கான்செப்ட் பர்சனலா எனக்கு ஒர்க் அவுட் ஆக ஆரம்பிச்ச காரணம் அதையும் ஒரு பக்கம் செய்துட்டு இருக்கேன்.

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’?!இப்படி தலைப்பு பார்க்கறதே என் அதிர்ஷ்டம்தான். ஒரு காலத்தில் சந்திரமுகி வெளியான போது தியேட்டரில் தலைவரைப் பார்த்தவுடன் மெய் சிலிர்த்து விசில் அடித்து, கொண்டாடிப் பார்த்த திரைப்படத்தில் அதிலும் அந்தப் பாத்திரத்தில் நான் நடிப்பதெல்லாம் பெரிய ஆசீர்வாதம். இந்தப் படத்தில் இந்த கேரக்டரில் வாசு சார் என்னை யோசித்ததுக்கு நான் முதலில் நன்றி சொல்லணும். அதற்கு லைகா ஒப்புதல் கொடுத்ததற்கும் நான் நன்றி சொல்லணும். ரொம்ப சந்தோஷமான தருணமா இருக்கு.
இயக்குநர் வாசு உடன் இணைந்து வேலை செய்த தருணம் எப்படியிருந்தது..?
என்கிட்ட இருந்து தலைவர் ரஜினியை தனியா பிரிச்சு எடுக்கவே ரொம்ப கஷ்டப்பட்டார் வாசு சார். வேட்டையன் ராஜா கெட்டப் போட்டு நின்றாலே ஆட்டோமேட்டிக்கா தலைவர்தான் உள்ளே வந்துடறார். நடை உடை பாவனை இப்படி எதை யோசித்தாலும் ரஜினி சார்தான் எனக்குள்ள வந்திடுவார்.
ஒவ்வொரு டேக் எடுக்கும் பொழுதும் வாசு சார் எங்கே இருந்தாவது ‘மாஸ்டர்... தலைவர் வராரு’னு அலர்ட் செய்திட்டே இருப்பார். ‘சரி நீங்கள் ஒரு தடவை நடிச்சு காண்பிங்க’னு சொன்னா அவருக்கும் ரஜினி சார் ஸ்டைல்தான் வரும்! எங்க ரெண்டு பேருக்குள்ளேயும் இருக்கும் ரஜினி சாரை ஓரமாக ஒதுக்கி வைக்கவே நாங்க ரொம்ப கஷ்டப்பட்டோம்.
வாசு சார் செம கூல் பர்சன். எவ்வளவு படங்கள்... எவ்வளவு ஹிட் ஆனாலும் அதெல்லாம் காண்பிச்சுக்கவே மாட்டார். என்னை ரஜினி சார் கேரக்டரில் வாசு சார் யோசிச்சதே பெரிய விஷயம்.
தேசிய விருதும், ஆஸ்கர் விருதும் ஒன்றுசேர்ந்து இந்தப் படத்தில் வேலை செய்திருப்பது பற்றி சொல்லுங்க..?
‘சந்திரமுகி 2’ படத்தில் நான்... இதுவே பெரிய லக். அடுத்து தேசிய விருது பெற்ற கங்கனா படத்தின் நாயகினு சொன்னாங்க. தொடர்ந்து ஆஸ்கர் விருது பெற்ற கீரவாணி சார் படத்துக்கு இசை... ஒவ்வொரு தகவலும் வரும்பொழுதெல்லாம் எனக்கு பொறுப்புகள் அதிகமாகிட்டே இருக்கற மாதிரி இருந்துச்சு. ஸோ, படப்பிடிப்பு சமயத்துலயே ‘சந்திரமுகி 2’ பான் இந்தியா படமாக மாறிடுச்சு. கங்கனா முதன் முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்பொழுது துப்பாக்கி ஏந்தின பாடிகார்ட்கள் சூழ வந்தாங்க.
முதல் இரண்டு நாட்கள் நாங்க யாருமே பேசக்கூட இல்ல. ‘ஹலோ மேடம்’னு சொன்னதோடு சரி. நான் பரவாயில்லை, வடிவேலு அண்ணன் அதுக்கு மேல! ‘ஏப்பா... இந்த புள்ளகிட்ட பேசலாமா இல்லையா? ஏதாவது தப்பா பேசி கண்ண காமிச்சு நம்ம மேல gunஐ வச்சிருவாங்களோன்னு பயமா இருக்கேப்பா’னு எல்லாருமே தயங்கினோம்.
ஆனால், ஒரு வாரம் கூட ஆகல... பயங்கர ஃபிரெண்ட்லியா, வடிவேலு அண்ணனே ‘ஏப்பா, குழந்தைப்பா அது’னு சொல்ற அளவுக்கு சூழல் மாறிடுச்சு.அவங்க ஊரிலேயே ஷூட்டிங் செய்த போது கூட சாப்பாடு எல்லாம் எடுத்துட்டு வந்து எங்களை உபசரிச்சாங்க. நிஜமாவே ஒரு தேசிய விருது பெற்ற நாயகியானு யோசிக்கிற அளவுக்கு அவ்வளவு ஃபிரெண்ட்லி. ரொம்ப ஜாலியா எப்ப பார்த்தாலும் எங்க கூட உட்கார்ந்து சிரிச்சு பேசிக்கிட்டே இருப்பாங்க.
கீரவாணி சார் பற்றி நான் என்ன சொல்றது... ஆஸ்கர் வரையிலும் போயிட்டு வந்துட்டார். அவர் இசையில் நான் ஹீரோ. இந்தப் படம் எப்படி யோசித்தாலும் என்னுடைய கனவு ப்ராஜெக்ட்னுதான் சொல்லணும். ரஜினி மட்டுமல்ல வெங்கடேஷ், மோகன்லால் இப்படி எல்லா மொழிகளிலிருந்தும் கூட அழுத்தங்கள் இருக்குமே... இதையெல்லாம் எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
எல்லா மொழியிலும் ‘சந்திரமுகி’யின் எல்லா வெர்ஷனும் நானும் பார்த்திருக்கேன். மற்ற மொழிகளைத் தாண்டி எனக்கு ரஜினி சார் கேரக்டரில் நான்... அதுதான் பெரிய அழுத்தமாகவும், பொறுப்பாகவும் இருந்துச்சு. குறிப்பா வேட்டையன் ராஜா டிரஸ்சை போட்டுக்கிட்ட அடுத்த கணம் உடம்பெல்லாம் சிலிர்க்க ஆரம்பிச்சிடுச்சு. ஒரு வித பயமும் வந்துடுச்சு. தலைவர் கிட்ட அப்பப்போ போன் செய்து பேசிட்டேதான் இருந்தேன்.
‘சந்திரமுகி’ படத்தில் நான் நடிக்கப்போறேன்னு தலைவருக்கு தகவல் சொன்னபோது வாழ்த்து சொன்னார். தொடர்ந்து படத்தின் ப்ரொடக்ஷன் வேலைகளில் இருந்த போதும் தலைவரே கூப்பிட்டு, ‘என்னப்பா? எப்படி போகுது’னு கேட்டு தெரிஞ்சுக்கிட்டார். சமீபத்தில் தலைவரை சந்தித்து ஆசீர்வாதமும் வாங்கிட்டேன். அந்தப் புகைப்படம் கூட பார்த்திருப்பீங்க. தொடர்ந்து வேட்டையன் கேரக்டர் நடிக்கும் பொழுதுதான் ரொம்ப பயந்து போய் தலைவருக்கு போன் அடிச்சேன்.
‘உங்களுக்கு எப்படி நடிக்கணும்னு தெரியும். அதிகமாவும் செய்துடாதீங்க குறைவாகவும் செய்துடாதீங்க. உங்களுக்கு அந்த மீட்டர் தெரியும். அதை மட்டும் பிடிச்சு தைரியமா செய்யுங்க. நிச்சயமா நல்லா வரும்’னு தைரியம் கொடுத்தார். அந்த வார்த்தைகள் எனக்குள்ள ஏதோ மேஜிக் செய்துச்சு. என்னால எந்த அளவுக்கு பெஸ்ட் கொடுக்க முடியுமோ கொடுத்திருக்கேன். மற்ற மொழி பட கதைகளில் இருந்து நிச்சயமா இந்தப் படம் வேறுபடும். அதனால் எனக்கு மத்த மொழி அழுத்தம் பெரிதா இல்லை.
ரஜினியுடன் உங்களையும்; ஜோதிகாவுடன் கங்கனாவையும் ஒப்பிட்டு நிறைய செய்திகளும் கருத்துகளும் சுற்றி வருதே?
‘சந்திரமுகி’ படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு கமர்சியல் மாஸ்டர்பீஸ். நிச்சயமா அதனுடைய பாகம் 2 எடுத்தா இப்படியான ஒப்பீடு எல்லாம் வரத்தான் செய்யும். எதிர்பார்ப்புகளும் கூட அதிகமாக இருக்கும். ஆனால், அந்தப் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் ஒரே கனெக்ஷன் நம்ம வடிவேலு அண்ணன்தான். மத்தபடி இந்தப் படத்தின் கதையும் கருவும் மொத்தமாகவே வேறு.
ஜோதிகா மேடம்குள்ள சந்திரமுகி ஆத்மா இறங்கினதால அவங்க தன்னை சந்திரமுகியா நெனச்சு நடிச்சாங்க. ஆனா, கங்கனாவைப் பொறுத்தவரை அந்த சந்திரமுகியே இவங்கதான்!
‘சந்திரமுகி’ முதல் பாகத்தில் கூட வேட்டையன் ராஜா கேரக்டர் துவங்கி அத்தனையுமே ஜோதிகா தன்னைச் சுற்றி இருக்கும் கேரக்டர்ஸை அந்தந்த கதாபாத்திரங்களில் பொருத்திப் பார்த்தாங்க.
ஆனா, கங்கனாதான் ரியல் சந்திரமுகி. சொல்லப்போனால் இனிமேல்தான் சந்திரமுகி கதையே உங்களுக்கு தெரியப் போகுது! அதனால் இந்த கதையும் அந்தக் கதையும் நிச்சயமா வேறு வேறுதான். படம் ரிலீஸ் ஆனதும் ஆட்டோமேட்டிக்கா இந்த ஒப்பீடு எல்லாம் மறைஞ்சிடும்.
சந்திரமுகி இப்படி இருந்திருப்பாங்களோனு நினைச்சுகிட்டு ஜோதிகா மேடம் கற்பனையா வாழ்ற கதை அது. ஆனா, உண்மையான சந்திரமுகி எப்படி இருந்தாங்கன்னு இதுவரையிலும் யாருமே பார்த்ததில்லை... இந்தப் படத்தில் பார்க்கப் போறோம். நிறைய சமூக சேவைகள் செய்றீங்க... அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லையா?
அரசியலுக்கு வந்தால் என்ன செய்யப் போகிறோம்... மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கே சேவை செய்யப் போகிறோம்... அதை நான் இப்போவே என்னுடைய பணத்தில் நானே செய்யறேன். இதற்குமேல் அரசியல் எதுக்கு!
‘சந்திரமுகி 2’?
ஃபர்ஸ்ட் ஆஃப் ரஜினி சார் படம். அதையே ‘என்னடா சார் பாதி படத்திலே ஊருக்குக் கிளம்பிடுறார்... அடுத்து என்ன செய்யப் போறாங்க... இப்படியெல்லாம் யோசிச்சேன். ஆனா, வேட்டையன் ராஜா கெட்டப் வந்தப்பதான் ‘ஓஹோ இதனால்தான் தலைவர் இந்தப் படத்துக்கு ஓகே சொல்லியிருக்கார்’னு புரிஞ்சது.
இன்னைக்கு அந்த ஹிட் தமிழ் சினிமா மக்களால் மறக்க முடியாது. ஒப்பீடுகள் இருக்கும். ஆனா, எல்லாத்தையும் கடந்த ஒரு குடும்பப் படமா, கலர்ஃபுல் கமர்சியல் படமா ‘சந்திரமுகி 2’ இருக்கும். ஆனா, அந்தப் பாம்பு பத்தி மட்டும் வாசு சார் இப்பவும் எதுவும் சொல்ல மாட்டேங்கறார்! அது ஒரு கணக்குனு சொல்லிட்டார். ஒருவேளை பார்ட் 3, 4 களில் பாம்பு குறித்த உண்மை இருந்தாலும் இருக்கும்!
ஷாலினி நியூட்டன்
|