ஏசி, ஃபிரிட்ஜ் அல்ல... ஃபேன்தான் மின் கட்டணம் அதிகரிக்கக் காரணம்!
ஆளே இல்லாத ஊரில் டீ ஆத்துவது போல யாருமே இல்லாத பல வீடுகளில் ஏதாவது ஒரு மின்விசிறி தேமே என்று சுத்துவதை பலர் பார்த்திருப்போம். இந்த அலட்சியத்துக்குக் காரணம் ‘மின்விசிறிகள் கரண்டை அதிகம் சாப்பிடாது’ என்ற பலரின் எண்ணம். ஆனால், ஓர் ஆய்வு, நம் வீட்டில் பயன்படுத்தும் பல மின்சாதனங்களில் மின்விசிறிகள்தான் சுமார் 20 சதவீத மின்சாரத்தை உறிஞ்சிவிடுகின்றன என்று சொல்கிறது.
 ‘ஏசிதானே அதிகம் மின்சாரத்தை சாப்பிடும்’ என்று கேட்கும் மேதாவிகளுக்கு ‘ஏசி-யை விட எண்ணிக்கையிலும் பரவலிலும் மின்விசிறிகள் அதிகம் இருப்பதால் ஏசி உறிஞ்சும் மின்சாரத்துக்கு சமமாக மின்விசிறிகளும் இருக்கின்றன’ என்று சொல்கிறது அந்த ஆய்வு. உதாரணமாக சுமார் 88 சதவீத வீடுகளில் ஒரு மின்விசிறியாவது இருக்கிறது என்பதே மின் விசிறிகளின் தாக்கத்தை எடுத்துச் சொல்கிறது.
 இப்படி வீட்டு மின்சாதனப் பொருட்களிலேயே துச்சமாக கருதப்படும் மின்விசிறிகளுக்குக் கடிவாளம் போடுவதன் மூலம் மின்சார நுகர்வையும், அதன் மூலம் கரியமில நச்சு வாய்வையும் கட்டுப்படுத்தவே ஒன்றிய அரசின் அமைப்பான பீரோ ஆஃப் எனர்ஜி எஃபிசன்சி - பி.இ.இ (Bureau of Energy Ffficiency) அதாவது தரமான எரிசக்திக்கான அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன் இறங்கியது.
நம் வீட்டில் உபயோகிக்கும் பல மின்சாதனப் பொருட்கள் ஸ்டார் ரேட்டிங் அடிப்படையில் சந்தையில் விற்கப்படுவதைப் பலர் அறிந்திருப்போம். உதாரணமாக ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவற்றுக்கு ஸ்டார் ரேட்டிங் உண்டு. காசுக்கு ஏற்ற தோசை மாதிரி விலைக்கு ஏற்ப ஸ்டார் பொருட்களை நாம் வாங்கிக்கொள்ளலாம். இந்த ஸ்டார் ரேட்டிங் ஒன்று முதல் ஐந்து வரைக்கும் இருக்கும். ஒன் ஸ்டார் உள்ள பொருள் சுமார் மூஞ்சியில் இருந்தால், ஃபைவ் ஸ்டார் பொருளின் விலை சூப்பர் விலையில் இருக்கும்.
பி.இ.இ அமைப்பு சுமார் 28 வீட்டு உபயோகப் பொருட்களுக்கு இப்படி ஒரு ஸ்டார் சிஸ்டத்தை படிப்படியாகக் கொண்டுவந்தது. ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பொருட்கள் பலகாலமாக ஸ்டார் ரேட்டிங் சிஸ்டம் முறையிலேதான் சந்தையில் விற்கப்படுகின்றன. ஆனால், மின்விசிறி பலகாலமாக இந்த சிஸ்டத்துக்குள் வரமுடியாமல் இருந்தது. ஸ்டார் சிஸ்டம் எனும் முறை ஒரு பொருளின் தரத்தைப் பொறுத்தே இருக்கும்.
உதாரணமாக அதிக ஸ்டாருடைய பொருள், மின்சாரத்தை குறைந்தளவே உறிஞ்சும். மற்ற வீட்டு மின்சாதனங்களைவிட மின்விசிறிகளின் மின்சார நுகர்வின் அளவைப் பார்த்து மலைத்துப்போன பி.இ.இ அமைப்பு மின்விசிறிகளுக்கும் இதுமாதிரியான ஸ்டார் ரேட்டிங் சிஸ்டம் வந்தால் நேரடியாக நுகர்வோருக்கும் மறைமுகமாக கரியமில மாசுவையும் கட்டுப்படுத்தலாம் என்று யோசித்தது. இந்த யோசனைகளை கடந்த ஜனவரி முதல் அமல்படுத்தவும் சொன்னது. அந்த வகையில் கடந்த ஜனவரி முதல் மின்விசிறி உற்பத்தியாளர்கள் ஸ்டார் ரேட்டிங் அடிப்படையில் மின்விசிறிகளை உற்பத்தி செய்யவும் ஒரு அறிவுறுத்தலைச் செய்தது. ஆனாலும் இன்றுவரை பெரிதளவும் சந்தையில் கிடைப்பது ஸ்டார் ரேட்டிங் இல்லாத பழைய வகை மின்விசிறிகளே. பழைய வகை மின்விசிறிகளை வேண்டும் என்றால் ஒரு ஸ்டாருக்கு இணையாக சொல்லலாமே தவிர அதை சூப்பர் ஸ்டார் அளவுக்கு மதிக்கமுடியாது.
ஆனால், ஃபைவ் ஸ்டார் விசிறிகளை உற்பத்தி செய்யவேண்டும் என்றால் அதற்குத் தேவையான பல பாகங்களை இறக்குமதிதான் செய்யவேண்டும். உதாரணமாக இன்று ஃபைவ் ஸ்டார் ஃபேன்களுக்கு பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை பி.எல்.டி.சி (BLDC - Brushless Direct Current) என்கிறார்கள்.
இது வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த விசிறிகள் சந்தைகளில் சுமார் கால்பங்குதான் இருக்கிறது. வீடுகளில் என்றால் வெறும் 3 சதவீதம்தான். ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போல விசிறிகளுக்கும் ஸ்டார் அந்தஸ்தும் அதன் மூலம் மின்சார சேமிப்பும், மின் கட்டணத்தில் குறைப்பும், மறைமுகமாக கரியமிலவாயுவின் தொல்லையிலிருந்தும் மீளமுடியுமா என்ற ரீதியில் சென்னையில் இருக்கும் கன்ஸ்யூமர் சிட்டிசன் அண்ட் ஆக்ஷன் க்ரூப்பின் உறுப்பினரும் ஆய்வாளருமான பரத் ராமிடம் பேசினோம். ‘‘வீட்டில் ஏற்கனவே இருக்கும் மின்சாதனப் பொருட்களைக் கொண்டே மின்சாரத்தை சேமிக்கும் முறைகளைப் பற்றி நுகர்வோருக்கு பலமுறை விளக்கமும் பயிற்சியும் கொடுத்திருக்கிறோம்.
உதாரணமாக டிவியை ஆஃப் செய்ய வேண்டுமென்றால் ரிமோட்டில் ஆஃப் செய்யாமல் மெயின் ப்ளக்கில் இருக்கும் சுவிட்சை ஆஃப் செய்யவேண்டும் என்று சொல்வோம்.
அதேபோல ஃபேன்கள் வேகமாக சுத்துவதற்கு ஒன்று, இரண்டு, மூன்று என்று இருக்கும் சுவிட்சுகளுக்கு (எலக்ட்ரானிக்ஸ் சுவிட்ச்) பதிலாக ஒரே நேரத்தில் ஒன்றிலிருந்து அதிகபட்சமாக சுத்துவதற்கான ஆட்டோமேட்டிக் சுவிட்சை பலர் பயன்படுத்துவதை பார்த்திருப்போம்.
இந்த ஆட்டோமேட்டிக் சுவிட்சில் ஒன்று முதல் கடைசி வேகம் வரை ஒரே மாதிரியான கரண்ட்தான் பாஸ் ஆகும். ஆகவே ஒன்று, இரண்டு, மூன்று என ஒவ்வொரு ஸ்டெப்பாக செயல்படும் எலக்ட்ரானிக்ஸ் சுவிட்களை பயன்படுத்தும்படி கேட்டுக்கொண்டிருக்கிறோம்...’’ என்று சொல்லும் பரத் ராம், ஃபேன்களுக்காக கொண்டுவரப்பட்டிருக்கும் ஸ்டார் முறையைப் பற்றி பேசினார்.
‘‘குண்டு பல்புக்கு பதிலாக எல்இடி பல்புக்கு மாறியதுபோல ஸ்டார் ரேட்டிங் ஃபேன்களுக்கு உடனடியாக மாறுவது கொஞ்சம் கடினம்தான். ஆனால், ஃபேனுக்கான ஸ்டார் ரேட்டிங்கில் பல நன்மைகள் உண்டு என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும்.
உதாரணமாக, இன்று ஒரு சாதாரண பேன் ரூ.1500 ரூபாயில் விற்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஃபைவ் ஸ்டார் ஃபேன் ரூ.3000 ரூபாய்க்கு விற்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஒரு ஃபேன் சுமார் 10 வருடமாவது ஓடும். அந்த வகையில் இந்த இரண்டு ஃபேனுக்காகவும் நாம் 10 வருடத்தில் எவ்வளவு செலவழிக்கிறோம் என்று கணக்குப் பார்த்தால் ஸ்டார் ரேட்டிங் ஃபேனில்தான் நமக்கு பெரிய லாபம் இருக்கிறது என்பதை ஒரு சிறு கணக்கு போட்டாலே போதுமானது...’’ என்று சொல்லும் பரத் அந்தக் கணக்கையும் நமக்கு போட்டுக் காண்பித்தார்.
‘‘ஒரு சாதாரண விசிறியின் வாட்ஸ் 80. இதை ஒரு மணிநேரத்துக்கு பெருக்கினால் ஒருமணி நேரத்துக்கான வாட்ஸ் ஹவர் கிடைக்கும். அது 4800. கிலோ வாட்சைத்தான் யூனிட் என்கிறோம். கிலோ வாட்சைப் பெறுவதற்கு 4800ஐ 1000ல் வகுக்கவேண்டும். வகுத்தால் கிடைப்பது 4.8. அதாவது 4.8 யூனிட்.
இது ஒரு மணிநேரத்துக்கு. 24 மணிநேரத்துக்கு வேண்டும் என்றால் இந்த 4.8 யூனிட்டை 24 ஆல் மீண்டும் பெருக்கவேண்டும். இப்போதைக்கு ஒருமணி நேரத்துக்கு 4.8 யூனிட் என்று வைத்துக்கொள்வோமே. ஃபைவ் ஸ்டார் ஃபேன் என்றால் 35லிருந்து 55 வரைக்கும் வாட்ஸ் இருக்கும். 50 என்று எடுத்துக் கொண்டாலே ஒரு மணிநேரத்துக்கு 3 யூனிட் வரும்.
சராசரியாகப் பார்த்தால் சாதாரண விசிறியைவிட பாதி அளவே மின் கட்டணம் வரும். இரண்டு வருடத்துக்குப் பிறகு ஒரு ஸ்டார் விசிறிக்காக கொடுத்த விலை பெரிய லாபம் சம்பாதிக்கும்...’’ என்று சொல்லும் பரத்திடம், ஸ்டார் ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போல ஸ்டார் விசிறிகளுக்கும் விலைக் குறைப்பு ஏற்படுமா என்று கேட்டோம். ‘‘இப்போதைக்கு பி.எல்.டி.சி டெக்னாலஜியை கொண்டுதான் ஃபைவ் ஸ்டார் விசிறிகள் பெரும்பான்மையும் உற்பத்தி செய்யப்படுகின்றன. மற்ற மின்சாதனங்கள் ஸ்டார் அந்தஸ்தில் விற்கப்பட்டாலும் அவை பெரும்பாலும் இந்திய மற்றும் இந்திய - வெளிநாட்டு கூட்டுறவு உற்பத்திகள். அத்தோடு அவற்றின் மூலப் பொருட்களில் பெரும்பான்மையும் உள்ளூரில் உற்பத்தியாகின்றன. இதனால் இந்த ஸ்டார் பொருட்கள் போட்டி போட்டுக்கொண்டு விலைக் குறைப்பில் ஈடுபடுகின்றன.
ஆனால், விசிறிகளைப் பொறுத்து இந்த பி.எல்.டி.சி டெக்னாலஜி இறக்குமதி மட்டுமே செய்யப்படுகிறது. ஒருவேளை சாதாரண விசிறிகளிலேயே ஸ்டார் சிஸ்டத்தைக் கொண்டுவரமுடியுமா என்பதற்கான அறிவியல் ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அது வெற்றியானால் விலை குறையும். ஆனாலும் பி.எல்.டி.சி விசிறிகளிலேயே சாதாரண விசிறிகளைவிட நீண்ட காலத்துக்கு லாபமும், பயனும் இருப்பதால் அதற்கு மாறுவதற்கான வாய்ப்பைத்தான் நுகர்வோர் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்...’’ என்கிறார் பரத் ராம்.
டி.ரஞ்சித்
|