ரஜினியின் சந்திரமுகிக்கு லாரன்ஸின் சந்திரமுகி 2 நியாயம் செய்யும்!



சொல்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்

இந்திய சினிமாவின் ஆகச் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் ஆர்.டி.ராஜசேகர். ‘காக்க காக்க’, ‘மன்மதன்’, ‘கஜினி’, ‘சில்லுன்னு  ஒரு காதல்’, ‘பில்லா - 2’, ‘இமைக்கா நொடிகள்’ உட்பட
ஏராளமான ப்ளாக் பஸ்டர் படங்களில் இவரின் ஒளிப்பதிவு பேசியதை காலத்துக்கும் மறக்க முடியாது.எப்போதும் கோலிவுட் இயக்குநர்களின் டிலைட்டாக வலம் வருபவர். மாயவரத்துக்காரரான இவரின் மாயாஜால ஒளிப்பதிவுக்கு மயங்காதவர்கள் இல்லை.தமிழ் சினிமாவின் எதிர்பார்ப்புக்குரிய படமாக வெளிவரவுள்ள ‘சந்திரமுகி - 2’ படத்துக்கு இவர்தான் ஒளிப்பதிவு.

‘சந்திரமுகி - 2’ பெரிய எதிர்பார்ப்பை உண்டுபண்ணியுள்ளதே?

பி.வாசு சார் ஆபீஸிலிருந்து ஃபோன் வந்தபோது சந்தோஷமானேன். அந்த சந்தோஷத்துக்குப் பின்னாடி சின்ன ஃப்ளாஷ்பேக் இருக்கு. ‘திங் பிக்’னு சொல்வாங்க. அதுமாதிரி என்னுடைய முதல் படமே ரஜினி சார் படமா இருக்கணும்னு ஆசைப்பட்டேன். 

அப்போது பி.வாசு சார் ‘மன்னன்’ படம் இயக்குவதாக செய்தி வந்துச்சு.அதை அறிந்து பி.வாசு சாரை சந்திச்சு வாய்ப்பு கேட்டேன். அவரோ ‘வேற ஒரு கேமராமேனை ஃபிக்ஸ் பண்ணிட்டேன். கண்டிப்பாக நாம் என்றாவது ஒரு நாள் சேர்ந்து படம் பண்ணுவோம். நேரம் வரும்போது நானே ஃபோன் பண்றேன்’னு சொல்லிட்டார்.

அந்த ஃபோன் முப்பது வருடங்கள் கழிச்சு வந்தால் சந்தோஷம் இருக்கத்தானே செய்யும்! ‘சந்திரமுகி’ என்பது ப்ராண்ட் படம். பிரம்மாண்டமான படம்.  பெரிய வெற்றியடைந்த படம். ரசிகர்கள் அதே எதிர்பார்ப்புடன் படம் பார்க்க வருவாங்கனு தெரியும். அந்தப் படத்தை விட இன்னும் சிறப்பாகப் பண்ணியிருக்காங்கனு சொல்ல வைக்கணும்னு ஆர்வத்துடன் வேலை பார்த்தேன்.

பி.வாசு சார் லெஜண்ட் டைரக்டர். அவருடன் வேலை செய்வது அருமையான அனுபவம். படப்பிடிப்புத் தளத்தில் எதுவுமே தெரியாத மாதிரி இருப்பார். ஆனால், அவ்வளவு ஹோம் ஒர்க் பண்ணிட்டு வருவார். டக் டக்னு அடுத்தடுத்த சீக்வன்ஸை சொல்லிட்டே இருப்பார். எந்த கேள்வியை கேட்டாலும் அதற்கு சரியான பதில் சொல்வார். 

ஒரு ஷாட் ஏன் இருக்கணும், ஏன் இருக்கக்கூடாது என்பதற்கு ஒரு ஆசிரியர் போல் அருமையான விளக்கம் தருவார். திரைக்கதையை அச்சுபிசகாமல் அப்படியே ஞாபகம் வைத்திருப்பார். வயது என்பது அவரைப் பொறுத்தவரை எண்கள் மட்டும்தான் என்று சொல்ல வேண்டும்.

கைவசம் ஏராளமான ஸ்கிரிப்ட் வைத்துள்ளார். ஒரு லைனை ஸ்கிரிப்ட்டா மாத்த இருபது, இருபத்தைந்து நாள் போதும்னு சொல்வார்.ஸ்ரீதர் சாரிடமிருந்து வந்தவர் என்பதால் குழப்பமேயில்லாமல் அடுத்தடுத்த காட்சிகளை விளக்கிச் சொல்வார். அது என்னுடைய தொண்ணூறு சதவீத வேலையைக் குறைத்த மாதிரி இருக்கும். ஒரு கேமராமேனாக அதைப் பண்ணணும், இதைப் பண்ணணும் என்ற பதட்டம் இருக்கும். அந்தப் பதட்டம் இதுல தேவைப்படல.

ஷாட் டிவிஷன் எப்படி இருக்கணும், படத்துக்கான லுக் எப்படி இருக்கணும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து எடுக்கப்பட்ட படம்தான் ‘சந்திரமுகி - 2’.
இரண்டாவது சந்தோஷம் லைக்கா புரொடக்‌ஷன்ஸ். சுபாஸ்கரன் சாரும், தமிழ்க் குமரன் சாரும் கொடுத்த ஒத்துழைப்பு அற்புதம். அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பால் படம் பிரம்மாண்டமாக வந்துள்ளது.

ரஜினி சார் பண்ணிய கதாபாத்திரத்துக்கு பொருந்திப் போகுமளவுக்கு லாரன்ஸ் ராகவேந்திராவின் கதாபாத்திரம் இருக்கும். எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாதளவுக்கு லாரன்ஸ் சார் கதாபாத்திரம் நூறு சதவீதம் ‘சந்திரமுகி - 2’க்கு பொருந்துமளவுக்கு ஸ்கிரிப்ட் இருக்கும்.

இரண்டாம் பாதியில் இப்படியெல்லாம் பண்ண முடியுமா எனுமளவுக்கு லாரன்ஸ் சார் பண்ணியிருக்கிறார். படத்துல ஒரு காட்சியில் குதிரையில் வருவது மாதிரி காட்சி. அவருக்கு குதிரையேற்றம் தெரியுமா, தெரியாதானு தெரியலை. பந்தயத்தில் குதிரை செலுத்துகிறவர் மாதிரி மிக பிரமாதமாக குதிரையில் வேகமாக வந்தார். அந்தக் காட்சியைப் பார்த்து மிரண்டு போனேன்.    

கங்கனாவுடைய கதாபாத்திரமும் படத்துக்கு பலம் சேர்க்கும். அழகு தேவதையாக வருவார். கங்கனாவால் இப்படியும் நடிக்க முடியுமா எனுமளவுக்கு ஆச்சர்யத்தை உண்டுபண்ணி
யிருப்பார். அதே போல்தான் லட்சுமி மேனன், மகிமா நம்பியார் கதாபாத்திரமும் வலுவாக இருக்கும்.வடிவேலு சாருடன் ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்திலிருந்து பழகி வருகிறேன். அவருடைய காட்சிகளுக்கு டிராலி ஷாட் எடுத்தால், ‘என்ன ஆர்.டி.சார் காமெடியனுக்கெல்லாம் டிராலி ஷாட் போட்டு எடுக்கிறீங்க’னு சந்தோஷப்படுவார். அடுத்த படம் சேர்ந்து பண்ணுமளவுக்கு எங்களுடைய நட்பு அதிகமாகியிருக்கு.

‘சந்திரமுகி’ல எப்படி எல்லாரையும் சிரிக்க வைத்தாரோ அதைவிட இரண்டு மடங்கு சிரிக்க வைத்திருப்பார். படத்துல அவருடைய கேரக்டர் அழுத்தமாக வந்திருக்கு.  
ரசிகர்களுக்கு ‘சந்திரமுகி - 2’ என்ன அனுபவம் தரப் போகிறது?

‘சந்திரமுகி’ மாதிரி ஆரம்பிக்கும். இரண்டு ரீலுக்குப் பிறகு ‘சந்திரமுகி - 2’ ஆக எப்படி மாறியதுனு தெரியாதளவுக்கு ஆடியன்ஸை கனெக்ட் பண்ற மாதிரி இருக்கும். எப்படி மாறுச்சுனு ஆச்சர்யப்படுமளவுக்கு திரைக்கதை இருக்கும்.

புதுவிதமான தியேட்டர் அனுபவம் கிடைக்கும். கீரவாணி சார் ஆஸ்கார் விருதுக்குப் பிறகு பண்ணியுள்ள படம். அவருடைய அப்ரோச் புதுசா இருக்கும். பின்னணி இசையும் அற்புதமாக வந்துள்ளது. பி.வாசு சார் மியூசிக் சென்ஸ் உள்ளவர் என்பதால் மியூசிக்கிற்கான முக்கியத்துவம் இருக்கும்.‘சந்திரமுகி’ முதல் பாகம் பார்த்தவர்களையும் திருப்திப்படுத்தும். புதுசா பார்க்கிறவர்களுக்கும்  ஃப்ரஷ் படமாகத் தெரியும்.

உங்களுடைய கேமரா ஒர்க் பேசப்பட்ட பெரிய தருணம் எது? ‘காக்க காக்க’ மறக்க முடியாதே?

கண்டிப்பா. என்னை மீட் பண்றவங்க ‘காக்க காக்க’ பற்றி பேசாம இருக்கமாட்டாங்க. அந்தப் படம் எல்லோர் மனதிலும் இடம் பிடிச்சது. அதுல நான் டிக்கெட் கொடுக்கும் சின்ன கேரக்டர் பண்ணினேன். அதையும் சொல்லி சிலாகிப்பாங்க. அது நடிப்புக்கான ஈர்ப்புனு தெரிஞ்சது. ‘காக்க காக்க’ மேல எனக்கு அன்பும், கெளதம் வாசுதேவ் மேனன் மேல பற்றுதலும் எப்போதும் இருக்கும். ‘காக்க காக்க’ எனக்கு குளோஸ் டூ ஹார்ட் படம்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘கஜினி’, தமிழில் அதன் பட்ஜெட் 9 கோடி. இந்தியில் 90 கோடி. இந்தி வெர்ஷன் பண்ணிய ரவி.கே.சந்திரன் தமிழ்ப் படம் போல் மேட்ச் பண்றதுல பெரிய சவால் இருந்துச்சுன்னு சொன்னார். இதை என் உழைப்புக்கான அங்கீகாரமா நினைக்கறேன்.கிருஷ்ணா இயக்கிய ‘சில்லுன்னு ஒரு காதல்’. இப்போதும் ‘முன்பே வா...’ பாடலை ரசிச்சுப் பேசுறாங்க. சூர்யா, ஜோதிகா, பூமிகா அற்புதமாக பண்ணிய படம் அது.

சிம்பு நடித்த ‘மன்மதன்’, ‘தொட்டி ஜெயா’... நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’, அஜய் ஞானமுத்து இயக்கம். அதுவும் ஹிட். ஆனந்த் சங்கர் இயக்கிய ‘இருமுகன்’, ‘அரிமா நம்பி’, ‘எனிமி’ எல்லாமே பேசப்பட்டது. இப்படி ஒவ்வொரு இயக்குநருடனும் பணிபுரிந்தது மறக்க முடியாத தருணம்.

எந்த மாதிரி கதைகள் ஒளிப்பதிவாளருக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்?

எல்லா படங்களும் ஆர்வம் தரும். அப்படி கமர்ஷியல் படங்களையும் சொல்லலாம். ஆர்ட் படம் என்றால் ஒரேவித மூட்ல எடுக்கலாம். கமர்ஷியல் படம் அப்படி அல்ல. முதல் ஃப்ரேம் டூ கடைசி ஃப்ரேம் வரை ஆடியன்ஸை தக்க வைக்கணும்.ஷங்கர் சார் படம் அப்படி ஒரு உத்தரவாதம் தரும். கமர்ஷியல் பண்ணுவது கஷ்டம். கமர்ஷியல் படங்கள் எனக்குப் பிடிக்கும். கமர்ஷியல் படம் என்றால் காமெடி, ஆக்‌ஷன், எமோஷன் எல்லாமே இருக்கும்.

எனக்கு நைட் எஃபெக்ட் பிடிக்கும். படிக்கும் காலத்தில் சென்னையை இரவு நேரத்தில் நடந்தே ரவுண்ட் அடிப்பேன். ஒவ்வொரு வீடும், ஒவ்வொரு தெருவும் லைட்டிங்ல வித்தியாசமா இருக்கும். அதையெல்லாம் கவனிச்சு படங்களுக்கு கொண்டு வருவேன். லைட்டிங் என்பது தெரியக்கூடாது என்பதால் அதை மைண்ட்ல வெச்சு நேச்சுரலா பண்ணுவேன். ரொம்ப பிடிச்சது லவ் படம். ‘சில்லுன்னு ஒரு காதல்’ மாதிரி மீண்டும் பண்ண ஆசை. ‘96’ அப்படி வந்தது. அது மாதிரியான படங்கள் பண்ண ஆசையாக இருக்கும்.

படத்தின் தரத்தை நிர்ணயிப்பதில் டெக்னீஷியன்களின் பங்கு அதிகம்னு சொல்லலாமா?

சினிமாவுக்கு எல்லோருடைய பங்கும் அவசியம். ‘சந்திரமுகி - 2’ல தோட்டாதரணி சார் அனுபவிச்சு பண்ணியுள்ளார். நல்ல செட் ஒர்க் இருந்தால் லைட்டிங் பிரமாதமா அமையும். எடுத்த காட்சிகளை கட் பண்ண எடிட்டர் முக்கியம். அதை ஆண்டனி பண்ணினார். அதேமாதிரி மியூசிக்ல கீரவாணி சார் பிரமாதமான இசையைக் கொடுத்தார். வாசு சார் டைரக்‌ஷன் எப்போதும் பேசப்படுமளவுக்கு இருக்கும். ஆர்ட்டிஸ்ட் சைட்ல லாரன்ஸ், கங்கனா. அப்படித்தான் ‘சந்திரமுகி - 2’ உருவாகியுள்ளது.

ஹிட் படங்களில் அதை கவனிக்கலாம். சமீபத்துல வெளிவந்த ‘போர் தொழில்’ அப்படிப்பட்ட படம் . சரத் சார், அசோக் செல்வன், கதை என அசத்தலாக இருந்துச்சு. யதார்த்தமான கதைகளில் கிராஃப்ட்மன்ஷிப் இருக்கும். சினிமா என்பது கூட்டு முயற்சி. ஹிட்டுக்கு கேப்டன் எனும் டைரக்டர் முக்கியம். அவர்தான் எல்லோரிடமும் வேலை வாங்கணும். கெளதம் அப்படி வேலை வாங்குவார். நானும், கெளதமும் சேர்ந்து மீண்டும் படம் பண்ணமுடிவாகியுள்ளது.

எஸ்.ராஜா