தயாரிப்பாளரான புத்தக விற்பனையாளர்... இயக்குநரான எழுத்தாளர்!



இயக்கணும்னு ரொம்ப நாட்கள் நினைச்சதுதான். 2011ம் ஆண்டே, ‘அழகர்சாமியின் குதிரை’ படத்துல இணை இயக்குநராக வேலை செய்தநேரம் ஒரு படம் பண்ணணும்னு முயற்சி செய்தேன். அதுக்காக ஒரு திரைக்கதையும் எழுதியிருந்தேன். 
அந்நேரம், சரியான தயாரிப்பாளர்கள் அமையல. அப்புறம் சீரியல், சினிமானு எழுத்து வேலைகள்ல பிஸியாகிட்டேன். நல்ல கதையும், தயாரிப்பாளரும் அமையும்போது பண்ணுவோம்னு மனசுல நினைச்சுக்கிட்டே இருந்தேன்.

இப்பதான் ரெண்டுமே கைகூடி வந்தது. டைரக்டராகிட்டேன்...’’ அத்தனை இயல்பாய் பேசுகிறார், ‘வடக்கன்’ படம் மூலம் அறிமுக இயக்குநராகியிருக்கும் எழுத்தாளர், பத்திரிகையாளர், வசனகர்த்தா, திரைக்கதையாசிரியர் எனப் பன்முகம் கொண்ட பாஸ்கர் சக்தி.
‘மெட்டிஒலி’ தொடரில் தொடங்கி, ‘எம்டன் மகன்’, ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’, ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடு’ உள்ளிட்ட பல படங்களின் வசனகர்த்தாவாக நமக்கு அறிமுகமானவர். ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் இணை இயக்குநராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். இப்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

‘வடக்கன்’ என்ன கதை..?

இன்னைக்கு வடஇந்தியாவில் இருந்து தமிழகத்துக்கு வந்து வேலை செய்றவங்க அதிகமாகிட்டாங்க. குறிப்பாக, சின்னச் சின்ன கிராமங்கள்ல விவசாய வேலை, கட்டட வேலை, சாலை போடுற பணி, மில் வேலை, டீக்கடைனு அவங்க இல்லாத இடமே இல்லைனு சொல்ற அளவுக்கு வந்துட்டாங்க.

இந்தச் சூழல்ல நமக்கும் அவங்களுக்குமான இனம் புரியாத ஒரு உரசல் இருந்திட்டே இருக்கு. அதை அடிப்படையாக வச்சு உருவான படம்தான் ‘வடக்கன்’.பொதுவாக வடஇந்தியர்களை நாம் வடக்கன்னு சொல்வோம். அதையே படத்தின் டைட்டில் ஆக்கியிருக்கேன். நாம் யார், அவங்க யார், நமக்கும் அவங்களுக்கும் என்ன இருக்கு... அதுதான் இந்தப் படத்தின் கதை. இது பெரிய சப்ஜெக்ட்தான். இதை எளிய மனிதர்களை, நாம் அன்றாடம் பார்க்கக்கூடிய நபர்களை வச்சு சொல்லியிருக்கேன்.

இந்தப் படம் ஒரு நிஜ சம்பவத்தின் அடிப்படையில் உருவானது. அந்தச் சம்பவம் என்னனு சொன்னால் படத்தின் சுவாரஸ்யம் குறைஞ்சிடும். அந்தச் சம்பவம் எங்க ஊர் தேனியில் நடந்தது. அது நடந்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். ஆனா, அந்தச் சம்பவம் என் மனசுல இருந்துட்டே இருந்தது. 

அந்தச் சம்பவத்தை வச்சு ஒரு சிறுகதை எழுதலாம் அல்லது குறும்படம் எடுக்கலாம்னுதான் முதல்ல நினைச்சிருந்தேன். ஆனா, எனக்கு அது போதல. நிறைய சொல்ல வேண்டியிருக்குனு தோணுச்சு. அதனால, அதை பெரிய திரைக்கதையாகப் பண்ணி எமோஷனலாகவும் அதேநேரம் ரொம்ப என்டர்டெய்னிங்காகவும் படமாக்கியிருக்கேன்.  

புத்தக விற்பனையாளர், பதிப்பாளராக ‘டிஸ்கவரி’ வேடியப்பன் எல்லோருக்கும் பரிச்சயம். எப்படி படத் தயாரிப்பாளராக இதற்குள் வந்தார்?

வேடியப்பன் சினிமாவுக்காகவே சென்னைக்கு வந்தவர். இயக்குநர் லிங்குசாமியிடம் உதவி இயக்குநராக இருந்திருக்கார். அவர் மனசு முழுவதும் சினிமாத் துறைக்குள் வரணும்னு இருந்தது. அதற்குச் சரியான வாய்ப்புகள் அமையல. 

இந்தத் திரைக்கதை அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. சேர்ந்து பண்ணலாம்னு சொன்னார். நான்கூட ஒருகட்டத்துல செலவுகள் அதிகமாகிவிடுமோனு தயங்கினேன். அவர்தான் நம்பிக்கை தந்தார். பண்ணுவோம்னு தைரியம் கொடுத்தார். நண்பர் என்பதால் சிக்கல் இல்லாமல் வேலை செய்ய முடிஞ்சது.

இயக்குநராக வருகிறபோது சவால்கள் இருந்ததா?

ஒரு படம் இயக்குவதே சவால்தான். எனக்கு 20 ஆண்டுகள் அனுபவம் இருக்கு. ‘மெட்டிஒலி’யில் திருமுருகன் கூட ஆரம்பிச்சது. பிறகு அவருடன், ‘எம்டன் மகன்’ பண்ணியிருக்கேன். அப்புறம், சுசீந்திரன்கூட பணிசெய்திருக்கேன். அவங்க எல்லாம் எப்படி ஒவ்வொரு விஷயங்களையும் கையாள்வாங்கனு எனக்குத் தெரியும். அந்த அனுபவம் எனக்கு இங்கே கைகொடுத்தது.

எப்பவுமே திரைக்கதையை பக்காவாக எழுதி முடிச்சிடணும். அதுலயே நமக்கு பாதி டென்ஷன் குறைஞ்சிடும். அதனால, முதல்ல திரைக்கதையை இனி தொடக்கூடாது என்கிற அளவுக்கு எழுதி முடிச்சேன். அதன்பிறகு, ஃபீல்டுக்குப் போனேன்.

இதுல எல்லோருமே புதுமுகங்கள். தயாரிப்பாளரும் புதியவர். அவருக்கான சுமையை நாம் குறைக்கணும். குறிப்பிட்ட நாளுக்குள் எடுத்து முடிக்கணும். அதுக்கு ஒரே வழி பக்காவான திரைக்கதை முழுவதும் கையில் இருக்கணும். தவிர, டெடிகேட்டட் ஆர்ட்டிஸ்ட்டும் முக்கியம். இதுல ஆர்ட்டிஸ்ட் முடிவானதும் முக்கியமான சீன்களுக்கு மட்டும் முதல்லயே நிறைய ஒத்திகை பண்ணிட்டோம். இது ரொம்ப உதவியாக இருந்தது.

அப்புறம், உடன் பணியாற்றிய டைரக்‌ஷன் டீம் ரொம்ப உதவிகரமாக இருந்தாங்க. குறிப்பாக கரு.அண்ணாமலை, சக்கரவர்த்தி, விக்னேஷ், அகிலா ஸ்ரீதர்... இவங்க எல்லோருமே ரொம்பத் திறமையானவங்க. என்னோட நண்பர்களும்கூட. அதனால, ரொம்ப வசதியாக ஒர்க் பண்ண முடிஞ்சது. அப்புறம், கேமராமேன் தேனி ஈஸ்வர் என் நீண்ட கால நண்பர். அவரின் சப்போர்ட் பெரிய பலம். ஸோ, எப்படி சிறந்த அவுட்புட் வாங்கணும் என்பது மட்டும்தான் என் வேலையாக இருந்தது.

புதுமுகங்கள் பற்றி..?

ஹீரோ குங்குமராஜ், நாடகத் துறையில் அனுபவம் உள்ளவர். ஞாநியின் பரீக்‌ஷா நாடகக் குழுவில் இருந்தவர். நான், ஞாநியின் நெருங்கிய நண்பன் என்பதால் அப்போதிலிருந்தே எனக்கு குங்குமராஜை நல்லா தெரியும். நல்ல நடிகர். இந்தப் படத்துக்கு ஹீரோ தேடும்போது அவர் பொருந்தி வந்தார். அவரை சினிமா நடிப்பிற்காக கொஞ்சம் மாத்தினோம்.

அவர் கோயமுத்தூர்காரர் என்பதால் தேனி ஸ்லாங்கை கத்துக்க தேனியில் உள்ள நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்தோம். அங்குள்ள ஊர்களை சுற்ற வைச்சோம். நிறைய ஹோம்வொர்க் செய்தோம். அவரின் உடல்மொழியும், பேச்சுமொழியும் படத்தில் நல்லா வந்திருக்கு.

ஹீரோயின் வைரமாலா இயக்குநர் இமயம் பாரதிராஜா சார் அறிமுகப்படுத்திய பொண்ணு. அவரின், ‘தெக்கத்திப் பொண்ணு’ சீரியல்ல நடிச்சாங்க. அப்புறம், ‘அன்னக்கொடியும், கொடிவீரனும்’ படத்துல ஹீரோயினுக்கு தோழியாக நடிச்சாங்க. ஆடிஷன்ல அவங்கள பார்த்ததும் இந்தக் கேரக்டருக்கு சரியாக இருந்தாங்க. ஊருக்கான முகம் அப்படியே இருந்தது. அவங்களும் ரொம்பப் பிரமாதமாக நடிச்சிருக்காங்க.  

அப்புறம், என் கல்லூரித் தோழன் நண்பன் ரமேஷ் வைத்யா ஒரு முக்கியமான கேரக்டர்ல நடிச்சிருக்கார். தவிர, படத்துல மூணு பாடல்கள் எழுதி யிருக்கார். அடுத்து, பர்வேஷ் மெகரூனு ஒரு பையன். பூர்வீகம் காஷ்மீர். இப்ப பெங்களூர்ல வேலை செய்றார். ஆடிஷனுக்கு வந்தார். எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. இந்தி கேரக்டர்ல அவரை நடிக்க வச்சோம். எல்லோருமே சிறப்பாக நடிச்சிருக்காங்க. உங்களுக்கு படம் பார்க்கும்போது யாரும் நடிச்சமாதிரியே தெரியாது. அந்தளவுக்கு இயல்பாக பண்ணியிருப்பாங்க.

இதுல இசையமைப்பாளராக எஸ்.ஜெ.ஜனனி அறிமுகமாகுறாங்க. மிகப்பெரிய இசை ஞானம் உள்ளவங்க. கர்நாடக இசை, மேற்கத்திய இசை, இந்துஸ்தானி அப்படினு எல்லாவிதமான இசையிலும் எக்ஸ்பர்ட். நான் படம் பண்ணா அவங்கதான் இசைனு ஏற்கனவே நினைச்சிருந்தேன். இதுல மூன்று பாடல்கள், பின்னணி இசைனு எல்லாமே சிறப்பாக பண்ணி
யிருக்காங்க.

குறிப்பாக, இதுல இன்னொரு விஷயத்தை சொல்லலணும். இந்தப் படத்துல லைவ் சவுண்டை பயன்படுத்தியிருக்கோம். டப்பிங் பண்ணாமல் ஒரிஜினலாக வரணும்னு செய்தோம். இப்ப ஒரு எமோஷனல் சீனை டப்பிங் பண்ணும்போது பத்து சதவீதமாவது அதுல எமோஷன் குறையும். இதுல அது வராது. நடிக்கும்போது உணர்ச்சிபூர்வமாக நடிப்பாங்க இல்லையா. அது குறையாமல் அப்படியே லைவ் சவுண்ட்ல சிங்க் ஆகும். ‘கடைசி விவசாயி’, ‘நட்சத்திரங்கள் நகர்கின்றன’ போன்ற படங்கள் எல்லாமே லைவ் சவுண்ட்தான்.

ஆனா, இதுல கொஞ்சம் மெனக்கெடணும். ஏன்னா, வேறு சத்தங்கள் எல்லாம் உள்ளே வர வாய்ப்பு இருக்கும். ஆனாலும், நம்பிக்கையாக செய்வோம்னு தோணுச்சு.
சவுண்ட் எஞ்சினியர் ராஜேஷ் சசீந்திரன்னு ஒரு நண்பர் அறிமுகமானார். அவர் ஏற்கனவே ‘தலைக்கூத்தல்’ படத்தில் லைவ் சவுண்ட் பண்ணினவர். அவர், ‘பண்ணுவோம் சார்’னு தைரியம் தந்தார்.

எப்போ ரிலீஸ்..?

சீக்கிரமே இருக்கும். இந்தப் படத்தைப் பொறுத்தவரை எனக்கு ரொம்ப திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கு. இதை ஆடியன்ஸும் ஏத்துப்பாங்கனு நம்புறேன். நல்ல படங்களை நம்ம ஆடியன்ஸ் எப்பவும் கொண்டாடத் தவறனதில்ல. இதை கரெக்ட்டா ரிலீஸ் பண்ணி ஆடியன்ஸ்கிட்ட சேர்த்திட்டால் போதும். அவங்க பார்த்துப்பாங்க. இந்தப் படம் முழுக்க முழுக்க என்டர்டெய்னிங்காக, ஜாலியாக இருக்கும். சிரிப்பாக இருக்கும்.

என்னுடைய சிறுகதையின் சிறப்புனு எல்லோரும் நகைச்சுவையைத் தான் குறிப்பிடுவாங்க. என் படத்துல அது இருக்கணும்னு நான் விரும்பி செய்திருக்கேன். அதனால நகைச்சுவையை நிறைய இடங்கள்ல வச்சிருக்கேன். அது கதையுடன் சேர்ந்த நகைச்சுவையாகவே இருக்கும். அப்புறம், இந்தப் படத்துல நடிச்ச எல்லோருக்குமே பெரிய பிரேக் கிடைக்கும்னு எனக்குத் தோணுது. ஏன்னா, அந்தளவுக்கு எல்லோரும் நல்லா பண்ணியிருக்காங்க.

பேராச்சி கண்ணன்