சிறுகதை - ஃபங்ஷன்...



செல்போன்
சிணுங்கியது.
எதிர்வீட்டு ராதாதான்.
“சொல்லுங்க ராதா...”
“சரியா ஆறு மணிக்கு கேக் கட்டிங்...
ஆதியை 5.55 வாக்கில
அனுப்பிடுங்க...”
“சரி...”
“அப்புறம்...”
அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்கு முன்பே தெரியும். ‘‘ஆதி மட்டும்தான் வருவான்.
அகிலேஷ் வர
மாட்டான்...”
“தேங்க்ஸ், வச்சிடறேன்...”
பற்றிக்கொண்டு வந்தது வாணிக்கு.

13 வயது மற்றும் 5 வயதில் மகன்கள். சின்னவனுக்கு ஆட்டிசம் பாதிப்பு இருக்கிறது என்பது தெரியும்போது அவனது வயது 3. கடந்த 2 வருடங்களாக எத்தனை மருத்துவர்கள், மருத்துவமனைகள், கோயில்கள், எதிர்கொண்ட கேள்விகள், கவலைகள், உறக்கம் தொலைத்த இரவுகள். “ஒன்றுக்கு ஒன்று துணையாக இருக்கும்னுதானே 8 வருஷத்துக்கு அப்புறம் குழந்தை பெத்துக்கிட்டோம். இப்படி முடியாத குழந்தை வந்திருக்கே?” என்று கவலைப்பட்டே முதல் ஆண்டு கழிந்தது.

எந்த வகையிலும் குறை சொல்ல முடியாத வாழ்க்கையில் அகிலேஷ் மாத்திரம்தான் இப்படி. அவன் மட்டும் மற்ற குழந்தைகள் போலவே இருந்திருந்தால் எத்துணை நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணாத நாட்கள் கிடையாது.ஒன்றுக்கு ஒன்று துணையாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆதிக்கும் அகிலேஷுக்கும் ஆகவேயில்லை. இவனுக்கு அண்ணா வேண்டும்... அவனுடன் விளையாட வேண்டும். ஆனால், சொல்லத் தெரியாமல் அலறுவான். அலறல்தான் அவனது பாஷை.

ஆனால், ஆதிக்கோ அவை அவமானச் சின்னங்களாகத் தெரிந்தன போலும்.
“என் ஃப்ரெண்ட்ஸ் கூட நான் விளையாடப் போறப்போ, இவன் ஏன்மா வரணும்?’’
“நீதானேடா அவனுக்கு இருக்க? கூட்டிட்டு போ...”“மாட்டேன். எனக்கு இவன் கூட விளையாட  வேண்டாம்...” பல சண்டைகள், பஞ்சாயத்துகள்.பிற குழந்தைகளுடன் சகஜமாகப் பழகுவது சின்னவனால் முடியாது என்பதால், அவனுக்கு என்று யாருமில்லை என்னையும் கணவரையும் தவிர. வேலை விஷயமாக மாதத்தின் 10 நாட்கள் பயணத்திலேயே அவர் கழிப்பதால், பெரும்பாலான நாட்களில் நானும் சின்னவனுமாக மாத்திரமே ஒருவருக்கு ஒருவர் துணை ஆறுதல்.

எட்டு மாதங்களுக்கு முன்பு இங்கு குடி வந்தபொழுது எல்லோருமே முதலில் சாதாரணமாகத்தான் பழகினார்கள். நாட்கள் செல்லச் செல்ல அகிலேஷ் குறித்து தெரிந்த பின்பு எங்கள் வீட்டிற்கு அவர்களின் குழந்தைகளை விளையாட அனுப்புவது குறைந்து பின் ஒரு கட்டத்தில் நின்றது. 

அவர்கள் வீட்டில் நடக்கும் பர்த்டே பார்ட்டி, அடுக்ககத்தில் நடக்கும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், விழாக்கள் என எதுவாக இருந்தாலும் அவர்கள் எங்களை, குறிப்பாக சின்னவனை ஒதுக்கிய விதம் என்னை மிகவும் பாதித்தது. ஒரு கட்டத்தில் இவர்கள் அழைக்கும் எதற்கும் போக வேண்டாம் என்று முடிவையே எடுத்திருந்தோம்.

ஆனாலும் பிற குழந்தைகளின் பர்த்டே பார்ட்டிகள் மற்றும் அவர்கள் அனைவரும் ஒன்றாக விளையாடும் பொழுது பால்கனியில் அமர்ந்தபடி அவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்க்கும் ஆதித்தனை நினைத்தும் பாவமாக இருந்ததனாலேயே எதிர்வீட்டுப் பிள்ளையின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு அவர்கள் ஆதித்தனை அனுப்பி வைக்கும்படி சொல்லிய போது சம்மதித்தேன்.

வெகு நாட்களுக்குப் பிறகு எங்களின் வீட்டுக்கு வந்த அழைப்பு அது. பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு அழைத்தார்கள்தான். ஆனால், ஆதித்தனை மாத்திரம்!
இரண்டு குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஒரு குழந்தையை மாத்திரம் அழைப்பது என்பது எந்த வகையில் நியாயம் என்று எனக்குத் தெரியவில்லை. கணவன் சக்தியிடம் போனில் கொட்டித் தீர்த்தேன்.

அவன்தான், “ சின்னவனை நினைத்துப் பார்க்கும் அளவுக்கு பெரியவனையும் கொஞ்சம் யோசி. அவன் கடைசியா எப்ப இதுமாதிரி ஒரு பார்ட்டிக்கு, போனான்? அனுப்பி வை. நம்ம குழந்தையை நாம பார்த்துக்கலாம் வாணீ. எதிர்வீட்டு ஆள் செஞ்சதை தப்புன்னு சொல்றோம். நாம அவங்க நிலையில் இருந்தா என்ன செஞ்சிருப்போம்னு தெரியாது இல்ல?”

“அவன் மட்டும் மற்ற குழந்தைகள் போலவே இருந்திருந்தா...”
“கனவே வாழ்க்கை இல்லைதானே? நீ பெரியவனை நல்ல கிஃப்ட்டோட அனுப்பிக் கொடு...”
“அவனை பெரியவன்னு சொல்லாதே. இவனைக் கண்டாலே அவனுக்கு...”
முடிக்க விடவில்லை. “அவன் இல்லாட்டா என்ன? நாம சேர்ந்து இருந்து எல்லாத்தையும் சாமாளிப்போம்...”

கணவன் சக்தி மாத்திரம் விஷயம் தெரிந்த நாளாக துவளும் போதெல்லாம் தோள் கொடுத்திருக்காவிட்டால், நானும் மனச்சிதைவுக்கு உள்ளாகியிருப்பேன். அவனின் நம்பிக்கை வார்த்தைகள்தான் எல்லாவற்றையும் சமாளிக்கலாம் என்ற நம்பிக்கையை எனக்கு ஊட்டிக்கொண்டே இருக்கின்றன.

இந்த சமுதாயம் தங்கள் வீட்டில் நடக்கும் பர்த்டே பார்ட்டிகளுக்கு அழைக்க நிர்ணயத்திற்கும் தகுதி எனது சின்னவனுக்கு இல்லை என்ற நிதர்சனம் புரிந்ததாலும், இந்த பர்த்டே பார்ட்டிக்கு அனுப்பிவிடாத பட்சத்தில் ஆதித்தன் மூர்க்கமாகி அவனது கோபம் சின்னவனின் மேல் திரும்பும் சாத்தியங்கள் அதிகம் என்பதாலும், இவை எல்லாவற்றிற்கும் மேலாக சக்தி சொன்னதாலும், அவனை மாத்திரம் அனுப்ப  ஒரு மனதாக முடிவு செய்தேன்.

நல்ல சட்டை மற்றும் பேன்ட்டை எடுத்து ஆதியிடம் கொடுத்தபடி, “டிவி ஸ்டாண்ட்ல கிஃப்ட் வாங்கி வச்சிருக்கேன். எடுத்துக்கிட்டு போ...” என்றேன்.“சரி...”“கிளம்பறதுக்கு ஒரு நிமிஷம் முன்னாடி சொல்லிடு ஆதி. நான் தம்பியைக் கூட்டிட்டு பெட்ரூமுக்குள் போயிடறேன். 

நல்ல டிரெஸ் பண்ணிக்கிட்டு நீ போறத பார்த்தா அவனும் கூட வரேன்னு அடம் பிடிப்பான்...”தான், அணிந்திருந்த டீ சர்ட்டை கழட்டி , நான் கொடுத்த சட்டையைப் போட்டபடியே ஆதி , “அவன் வரலையாம்மா?” என்றான்.
“இல்லைடா...”“ஏன் வரலை?”

என்றைக்கும் இல்லாத திருநாளாக இன்றைக்கு இப்படி அவன் சொன்னதும் தொண்டை அடைத்தது. முழுங்கியபடியே, “இல்லடா. ஆன்ட்டி உன்னை மாத்திரம்தான் அனுப்பி வைக்கச் சொன்னாங்க...”பேன்ட்டை அணிந்து கொள்ள கையில் எடுத்தவன் அப்படியே நின்று “ஏம்மா?” என்றான்.“அதான் பார்த்தோமே ஃபேமிலிடே கொண்டாடின போது... இவன் செகண்ட் ஃப்ளோர் நேகா பாப்பாவோட முடியை இழுத்து கலாட்டா ஆச்சே... இன்னிக்கி பர்த்டே பார்ட்டிக்கு போயிட்டு அங்கேயும் இதுமாதிரி எதுவும் பண்ணினான்னா? வேண்டாம்டா. வம்பு...”
“அதெல்லாம் ஒண்ணும் பண்ண மாட்டான். நான் பாத்துக்கறேன். நீங்களும்தான் கூட வரீங்க இல்லை? எதிர்வீடுதானே? ஒண்ணும் ஆகாது.

அப்படி அவன் ஏதாவது அடம் பிடிச்சா அவனை உடனே நீங்க நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுங்கம்மா...”“ஆன்ட்டி... அதான் மகேஷ் அம்மா... உன்னை மட்டும்தான் அனுப்பித் தரச் சொன்னாங்க. இவனை இல்லை...”ஒன்றுமே பேசாமல் நின்றான்.“நீயும் பர்த்டே பார்ட்டின்னு போய் ரொம்ப நாளாச்சுல்ல? தம்பியை ஸ்பெஷல் கிட்ஸ் படிக்கிற ஸ்கூலில்
போட்டதிலிருந்து நான் உன்னை எங்கேயுமே கூட்டிட்டுப் போகலை. இது உனக்கும் ஒரு சேன்ஜாயிருக்கும் .போய் ஃபிரண்ட்ஸ் கூட விளையாடு. என்ன கொடுத்தாலும் சாப்பிடு. ஆனா, ராத்திரி நம்ம வீட்டிலயும் கொஞ்சம் சாப்பிடணும் சரியா?”அவனிடம் சலனமே இல்லை.

“தம்பியை அனுப்பித் தரக்கூடாது, என்னை மட்டும் அனுப்பிக் கொடுக்கணும்னு அந்த ஆன்ட்டி சொன்னாங்களாம்மா?”சட்டென மனது வலித்தது. குழந்தை முன் அழுது விடுவேனோ என்ற பயத்தில் தலையை மேலும் கீழும் அசைத்தேன்.கையில் வைத்திருந்த பேன்ட்டைக் கீழே போட்டுவிட்டு, கழற்றிப் போட்டிருந்த டிராயரை மீண்டும் கையில் எடுத்து அணிந்தபடியே ஆதி, “நான் போகலைம்மா...” என்றான்.

“ஐயோ... ஏன்டா?”“என் தம்பியை வேண்டாம்ன்னு சொன்னா, அவங்க எனக்கும் வேண்டாம்மா. யாரு தம்பியையும் என்னையும் சேர்த்து இன்வைட் பண்றாங்களோ நான் அந்த பார்ட்டிக்கு போய்க்கறேன். இது வேண்டாம்மா...” என்றுவிட்டு என்னைக் கடந்து சென்று ஹாலில் டிவி பார்த்துக்கொண்டிருந்த சின்னவனின் அருகில் அமர்ந்து கொண்டான் பெரியவன் - இல்லை... இல்லை... பெரிய மனுஷன்!

எம்.எஸ்.அனுசுயா