Must Watchகிறிஸ்டோபர்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி அதிர்வுகளைக் கிளப்பிய மலையாளப்படம், ‘கிறிஸ்டோபர்’.  ‘அமேசான் ப்ரைமி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. நேர்மையான காவல்துறை அதிகாரி கிறிஸ்டோபர். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி தப்பிக்க நினைக்கும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காக சட்டத்தைக் கையில் எடுக்கும் போராளி.

ஐந்து பேரால் இரண்டு இளம் பெண்கள் கொடூரமான முறையில் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். குற்றவாளிகள் பிடிபடுகின்றனர். குற்றவாளிகளில் முக்கியமானவன் பெரிய இடத்தைச் சேர்ந்தவன். அதனால் குற்றவாளிகள் தப்பிப்பதற்கான வேலைகள் நடக்கிறது.

அப்போது ஐந்து பேரையும் என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்கிறார் கிறிஸ்டோபர். சமூக வலைத்தளங்களில் ஹீரோவாகிறார் கிறிஸ். ஆனால், மனித உரிமை ஆணையம் கிறிஸ்டோபருக்கு எதிராக திரும்புகிறது. கிறிஸ்டோபரின் பழைய வாழ்க்கையை தோண்டி எடுக்கின்றனர். உண்மையில் கிறிஸ்டோபர் யார்... அவர் ஏன் சட்டத்தை தன் கையில் எடுக்கிறார்... என்பதே மீதிக்கதை.

இதே பாணியில் நிறைய கதைகள் வெளிவந்திருந்தாலும் தனித்துவமான ஆக்‌ஷன் காட்சிகளால் வித்தியாசம் காட்டியிருக்கிறது இந்தப் படம். கிறிஸ்டோபராக கலக்கியிருக்கிறார் மம்முட்டி. படத்தின் இயக்குநர் பி.உன்னிகிருஷ்ணன்.

லூதர்: த ஃபாலன் சன்

ஒரு வித்தியாசமான இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படமாக ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகியிருக்கிறது ‘லூதர்: த ஃபாலன் சன்’. தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது இந்த ஆங்கிலப்படம். லண்டனில் முக்கியமான வணிகர் டேவிட் ராபி. இவர் ஒரு சீரியல் கில்லரும் கூட. இளம் துப்புரவுத் தொழிலாளி கேலமை கடத்திவிடுகிறான் டேவிட். கேலமின் அம்மாவிடம் “உங்கள் மகனைக் கண்டிப்பாக கண்டுபிடித்துத் தருகிறேன்” என்று வாக்கு தருகிறார் காவல்துறை அதிகாரி லூதர்.

புத்திசாலியான அதிகாரி இவர். கேலமை தேடும் வேட்டையில் இறங்குகிறார் லூதர். அப்போது டேவிட், லூதரின் பழைய வாழ்க்கையைத் தோண்டி எடுக்கிறார். அதில் சில குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கிறார் லூதர். அதையெல்லாம் தகுந்த சாட்சியுடன் டேவிட் வெளியிட, காவல்துறை அதிகாரியான லூதர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

அடுத்த சில நாட்களில் கேலம் உட்பட சில பேர் டேவிட்டால் கொல்லப்படுகின்றனர். சிறைக்குள் இருக்கும் லூதர் வெளியில் இருக்கும் சீரியல் கில்லரை எப்படி கண்டுபிடித்து தண்டிக்கிறார் என்பதை திரில்லிங்கும் ஆக்‌ஷனும் கலந்து சுவாரஸ்யமாக்கியிருக்கிறார்கள். லூதராக கலக்கியிருக்கிறார் இதிரிஸ் எல்பா. படத்தின் இயக்குநர் ஜேமி பைன்.  

கிராந்தி

கல்வி பின்புலத்தில் ஆக்‌ஷன் திரைப்படமாக ‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகியிருக்கிறது ‘கிராந்தி’. தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது இந்தக் கன்னடப்படம். பெரிய பிசினஸ்மேன் சலாத்ரி. 12 ஆயிரம் அரசுப் பள்ளிகளை தன்வசமாக்கி தனியார் பள்ளிகளாக மாற்ற நினைக்கிறார் சலாத்ரி. அவருக்கு கல்வி அமைச்சர் உறுதுணையாக இருக்கிறார்.  ஆனால், அரசுப் பள்ளிகள் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்களின் தேர்ச்சி நிலை தனியார் பள்ளிகளைவிட சிறப்பாக உள்ளது. அத்துடன் மாணவர்களின் வருகையும் நன்றாக இருக்கிறது. அதனால் அரசுப் பள்ளிகளைத் தனியார் மயமாக்குவது சிரமம்.

இந்நிலையில் சில அரசுப் பள்ளிகள் இயங்கிக் கொண்டிருக்கும்போதே இடிந்துபோவது போல் சூழ்ச்சி செய்கிறார் சலாத்ரி. அவருடைய சூழ்ச்சி வெற்றி பெறுகிறது. அரசுப் பள்ளிகள் இடிந்து விழுவதோடு இடர்பாடுகளில் சிக்கி குழந்தைகளும் மரணிக்கின்றனர். மக்களுக்கு அரசுப் பள்ளிகளின் மீது நம்பிக்கை போகிறது. சலாத்ரிக்கு எல்லாமே சாதகமாக இருக்கும் நிலையில் கிராந்தி வருகிறார். அவர் எப்படி சலாத்ரியின் திட்டங்களை முறியடித்து அரசுப் பள்ளிகளைக் காப்பாற்றுகிறார் என்பதே திரைக்கதை. கிராந்தியாக சிறப்பாக செய்திருக்கிறார் தர்ஷன். படத்தின் இயக்குநர் வி.ஹரிகிருஷ்ணா.

ரேகா

‘நெட்பிளிக்ஸி’ன் டாப் டிரெண்டிங் பட்டியலில் இருக்கும் மலையாளப்படம், ‘ரேகா’.கேரளாவில் உள்ள ஓர் கிராமம். அங்கே வசித்துவரும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் ரேகா. அதே ஊரைச் சேர்ந்த அர்ஜுன் மேல் காதலில் விழுகிறாள். பெற்றோருக்குத் தெரியாமல் போன் வழியாக தன்னுடைய காதலை வளர்க்கிறாள் ரேகா. அவளுடைய வீட்டில் பெற்றோர் இருக்கும்போது கூட ரகசியமாக வந்து ரேகாவைச் சந்திக்கிறான் அர்ஜுன்.  அப்படி ஒரு நாள் ரேகாவை சந்திக்க அவளின் வீட்டுக்கு வருகிறான் அர்ஜுன். அப்போது அவளுடைய அப்பா வீட்டுக்கு வெளியே உறங்கிக் கொண்டிருக்கிறார். அந்த இரவில் இருவரும் நெருக்கமாகிறார்கள்.

அடுத்த நாள் காலையில் ரேகாவின் அப்பா இறந்து கிடக்கிறார். அர்ஜுனுக்கு எவ்வளவு முறை அழைப்பு விடுத்தாலும் அவனது போன் பிஸியாக இருக்கிறது. அடுத்து ரேகா என்ன செய்கிறாள்... என்பதே மீதிக்கதை.பெண்ணியப் படங்களைப் பார்க்க விரும்புபவர்களுக்கு நல்ல சாய்ஸ் இது. கதாபாத்திரங்களின் தேர்வும், நடிப்பும்  கூடுதல் பலம். படத்தின் இயக்குநர் ஜித்தின் ஐசக் தாமஸ்.

தொகுப்பு: த.சக்திவேல்