பயணிகள் கவனத்துக்கு...
அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? எனில், இந்தச் செய்தி உங்களுக்குத்தான்.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் அடிக்கடி விதிகளை மாற்றியமைத்து வருகிறது. இதன்படி சமீபத்தில் ரயில்வே வெளியிட்டுள்ள விதிகளில் சில:விமானங்களைப் போல் ரயில்களிலும் குறிப்பிட்ட அளவு பொருட்களைத்தான் பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்ல முடியும். இதன்படி முதல் கிளாஸ் ஏசி வகுப்பு பெட்டியில் பயணம் செய்பவர்கள் 40 கிலோ வரையும், 2ம் வகுப்பு ஏசி மற்றும் 3ம் வகுப்பு ஏசியில் செல்பவர்கள் 35 கிலோ எடையுள்ள பொருட்களையும் எடுத்துச் செல்லலாம்.
ஸ்லீப்பர் பெட்டியில் செல்லும்போது ஒரு நபர் 15 கிலோ எடையுள்ள பொருட்கள் வரை மட்டுமே எடுத்துச் செல்லலாம். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது.
ரயில் பெட்டிகள், பிளாட்ஃபார்ம் மற்றும் ரயில் நிலைய வளாகத்தில் கண்டிப்பாக புகை பிடிக்கக்கூடாது. ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் மது குடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் தங்கள் முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்வதாக இருந்தால், ரயில் புறப்படுவதற்கு முன்பே ரத்து செய்துவிட வேண்டும். அப்போதுதான் அவர்களின் டிக்கெட் கட்டணத்தில் ஓரளவு பணத்தையாவது திரும்பப் பெற முடியும். பயணிகள் தங்கள் பயணத்துக்கு முன் எந்த நேரத்தில் டிக்கெட்டை ரத்து செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து ரயில்வே கொள்கைப்படி முன்பதிவு கட்டணத்தில் ஒரு பகுதி திரும்ப வழங்கப்படும்.
இரவு நேரத்தில் தங்கள் இயர்ஃபோன் இல்லாமல் மொபைல் போனில் சத்தமாக பேசவோ, பாட்டு கேட்கவோ கூடாது.இரவு 10 மணிக்கு மேல் நீல நிற விளக்கைத் தவிர மற்ற அனைத்து விளக்குகளையும் கட்டாயமாக அணைத்துவைக்க வேண்டும்.ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் இரவு 10 மணிக்கு மேல் டிக்கெட் பரிசோதனை செய்வதாகக் கூறி பயணிகளை தொந்தரவு செய்யக்கூடாது.
குழுக்களாகவோ, குடும்பமாகவோ பயணம் செய்பவர்கள் இரவு 10 மணிக்குமேல் தங்களுடன் பயணம் செய்யும் மற்ற பயணிகளிடம் பேசக் கூடாது. இது மற்ற பயணிகளுக்கு தொந்தரவாக இருக்கும்.நடு பெர்த்தில் பயணம் செய்பவர்கள் இரவு 10 மணிக்கு மேல் தங்கள் பெர்த்தை விரித்துக் கொள்ளலாம்.
இதற்கு கீழ் பெர்த்தில் இருப்பவர் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது.இரவு 10 மணிக்கு மேல் வெளி உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடக் கூடாது. வேண்டுமென்றால் முன்கூட்டியே இ-கேட்டரிங்கில் ஆர்டர் செய்து சாப்பிடலாம்.இரவு 11 மணி முதல் காலை 5 மணிவரை பயணிகள் தங்களின் செல்போன்களுக்கோ, லேப்டாப்புக்கோ ரயிலில் சார்ஜ் போடக் கூடாது.
ஜான்சி
|