பரவும் காய்ச்சல்... எச்சரிக்கும் மருத்துவர்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கடந்த மார்ச் மூன்றாம் தேதியன்று டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டது. அடுத்த சில நாட்களில் அந்தப்பதிவு தலைப்புச் செய்தியாகி பலரையும் கவலைக்குள்ளாக்கியது. இந்தியாவில் இப்போது H3N2 வைரஸ் திரிபு வகை பரவி நிறைய தொற்றுகளை உண்டாக்கிவருகிறது என்பதே அப்பதிவு.
அதென்ன H3N2 வைரஸ்?
ஸ்வைன் ஃப்ளூ, பன்றிக்காய்ச்சல், இன்ஃப்ளூயன்சா, சீசனல் ஃப்ளூ... என பல பெயர்களில் அழைக்கப்படும் ‘இன்ஃபுளூயஃன்சா ஏ’ வைரஸ் குடும்பத்தின் இளந்தாரிப் பயதான் இந்த H3N2. இது சென்ற நூற்றாண்டில் இருந்தே மனிதர்களுக்கு ஃப்ளூ காய்ச்சலை உண்டாக்கிவருகிறது எனக் கருதப்படுகிறது. இன்ஃப்ளூயன்சா வைரஸ் அதன் மேற்பரப்பில் இருக்கும் H மற்றும் N எனும் இருவகைப் புரதங்களை வைத்து வகைப்படுத்தப்படும். H1N1 எனும் வகை கடந்த காலங்களில் பரவியது நினைவில் இருக்கலாம். அதைப்போன்ற மற்றொரு வகைதான் H3N2.
ஏற்கனவே உள்ள மற்ற ஃப்ளூ வைரஸ்கள், கோவிட் வைரஸ் போன்றவற்றில் இருந்து எந்த வகையில் இது வேறுபட்டது?
சுவாசப்பாதை தொற்றை உருவாக்கும் வைரஸ்களின் நோய் அறிகுறிகள், பாதிப்புகள் பெரும்பாலும் ஒரேமாதிரிதான் இருக்கும். வைரஸின் பெயரைத் தவிர பெரிய வித்தியாசங்களை நம்மால் உணர இயலாது. நோய் தடுப்பு முறைகள், சிகிச்சை முறைகளும் ஒரே மாதிரிதான்.
H3N2 வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன?
காய்ச்சல், இருமல், தொண்டை எரிச்சல், தலைவலி, மூக்கடைப்பு, குளிர் நடுக்கம், உடல் வலி, அசதி போன்றவை H3N2 வைரஸ் தொற்றின் அறிகுறிகள். ஆரம்ப நாட்களில் காய்ச்சல், உடல் வலி கடுமையாக இருக்கலாம். காய்ச்சல் குறைந்த பிறகும் இருமல் வரலாம். சிலருக்கு இரண்டு மூன்று வாரங்களுக்குக்கூட கடுமையான இருமல் தொடரலாம். ஒவ்வொருவருக்கும் அறிகுறிகளும், அதன் தீவிரமும் மாறுபடும்.
எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்வது?
கோவிட் சமயத்தில் பின்பற்றிய அதே வழிமுறைகள்தான். கூட்டமான இடங்களைத் தவிர்ப்பது நல்லது. முகக் கவசம் அணியலாம். தும்மும் போதும், இருமும் போதும் மூக்கு, வாயை கைக்குட்டையால் மூடிக்கொள்ளவும். கைகளை அடிக்கடி சோப்புப் போட்டு கழுவவும். அல்லது ஹேண்ட் சானிடைசர் பயன்படுத்தலாம். சுத்தம் இல்லாத கைகளை வைத்து தேவையில்லாமல் முகம், கண், மூக்கு போன்றவற்றை தொடக்கூடாது. பொது இடங்களில் மூக்கு சிந்துதல், எச்சில் துப்புதலை தவிர்க்கவும்.
அதையும் மீறி தொற்று ஏற்பட்டால்?
உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ளவும். பொது இடங்களுக்குச் செல்வதை தவிர்க்கவும். நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங்களை எடுக்கவும். காய்ச்சலுக்கு பாராசிட்டமால் எடுக்கலாம். மருத்துவரின் ஆலோசனை இன்றி ஆண்டிபயாடிக் மாத்திரைகளை எடுப்பது தவறு. மருத்துவரின் ஆலோசனை இன்றி அவற்றை பாதியிலேயே நிறுத்துவதும் தவறு. அனைத்து வைரஸ் நோய்களுக்குமே ஓய்வு மிக அவசியம். தேவையற்ற அலைச்சல், பணிகளை தவிர்த்துவிட்டு முழு ஓய்வு எடுக்கவும்.
எப்போதெல்லாம் கவனம் தேவை?
மூச்சுத்திணறல், மூச்சுவிடுவதில் சிரமம், நினைவு தப்புதல், வலிப்பு, தலைசுற்றல், உணவு எடுக்கமுடியாத நிலை போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லவும். H3N2 நோய்த் தொற்று பெரும்பாலும் சாதாரண வைரஸ் காய்ச்சலைப் போல கடந்து செல்லும் என்றாலும் நோய் எதிர்ப்புத் திறன் குறைபாடு உடையவர்கள், முதியவர்கள், சிறு குழந்தைகள், சர்க்கரை போன்ற இணை நோய் உடையவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம். கோவிட் தொற்றைப் போன்று நுரையீரலையும் பாதிக்கலாம். சில சமயங்களில் ஆக்ஸிஜன் வைக்கக்கூடிய தேவையும் ஏற்படலாம்.
எனவே இவர்கள் கவனமாக இருப்பது நல்லது. ஆண்டுக்கு ஒருமுறை போடப்படும் ஃப்ளூ காய்ச்சல் தடுப்பூசி இந்தத் தொற்றை தடுக்கும், அல்லது பாதிப்பை குறைக்கும். தேவைப்படுவோர் ஃப்ளூ தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
டாக்டர் சென் பாலன்
|