இசைக்கு ராஜாவாக ஏன் இளையராஜா திகழ்கிறார்..?கடந்த 1999ம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு கட்டுரை, இன்றுவரை படிப்பவர்களுக்குச் சுவாரஸ்யத்தைத் தரமுடியுமா?

முடியும் என்கிறது, ‘Making music - The Ilaiyaraaja way!’ என்ற தலைப்பிலான கட்டுரை.‘இளையராஜா இசையமைக்கும் முறை’ எனப் பொருள்படும் இந்தக் கட்டுரை, இளையராஜா ஒரு திரைப்படத்திற்கு எப்படியெல்லாம் இசையமைப்பில் ஈடுபடுவார், அதற்காக எவ்வளவு மெனக்கெடுவார், படத்திற்கான பின்னணி இசைப்பதிவை எவ்வாறு செய்வார் என்பதை நேர்த்தியாகவும் நுட்பமாகவும் சொல்கிறது.அதனாலேயே, இருபத்திநான்கு ஆண்டுகளைக் கடந்தும் இன்றுவரை பலரால் படிக்கப்பட்டு சிலாகிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு, ‘மெட்ராஸ் பேப்பர்’ என்கிற இணைய இதழ், இந்தக் கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து ‘இளையராஜா எவ்வாறு இசையமைக்கிறார்’ என வெளியிட்டது. அப்போதும்கூட அவ்வளவு வைரலானது இந்தக் கட்டுரை.இதனை எழுதியவர் 80களின் இறுதியில் இளையராஜாவுடனும், அவரின் இசைக்குழுவினருடனும் தொடர்பில் இருந்த கார்த்திகேயன் நாகராஜன். ஆர்கெஸ்ட்ரா இசை மீது கொண்ட அதீத ஈர்ப்பால் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே, இளையராஜாவின் இசைக்குழுவுடன் நெருங்கிப் பழகி வந்தவர். அதுவே இளையராஜாவுடனும் நெருக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்போதும் சாலிக்கிராமத்தில் உள்ள தனது வீட்டில் ராஜாவின் இசையுடன் மற்ற ஆர்கெஸ்ட்ரா இசைகளையும், உலக சிம்பொனிகளையும் ரசித்துக் கேட்டுக்கொண்டே இருக்கிறார் கார்த்திகேயன். எப்படி இப்படியொரு கட்டுரையை எழுதத்  தோன்றியது என அவரிடம் கேட்டால் சிரிக்கிறார்.  ‘‘1988னு நினைக்கிறேன். இளையராஜாவுடனும் அவரின் இசைக்குழுவினருடனும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைச்சது.

பிறகு, என் பணிச்சூழலால் அந்த நெருக்கம் விலக நேரிட்டது. ஆனால், அந்த நினைவுகள் எனக்குள் ஒரு கவித்துவமாக மாறிப்போச்சு.  உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேர் இசைஞானியின் தீவிர ரசிகர்களாக இருக்காங்க. அவங்களுக்கு அவர் எப்படி இசையமைப்பார் என்கிற விஷயங்கள் எதுவும் தெரியாது. பத்திரிகைகளில்கூட அவரின் பேட்டிகள் வருமே தவிர ஒரு படத்திற்கு எப்படி இசையமைப்பை மேற்கொள்வார் என்கிற விவரங்கள் வராது.

அதை அருகிலிருந்து பார்த்தவன் என்கிற முறையில் அந்த அனுபவத்தை பகிரணும்னு தோணுச்சு. அதுவே கட்டுரையாச்சு. அப்ப, அதை டிஎஃப்எம்னு சொல்லப்படுற தமிழ் ஃபிலிம் மியூசிக் ஃபோரம் பக்கத்துல எழுதினேன்...’’ என்கிற கார்த்திகேயன், சாப்ட்வேர் கன்சல்டன்ட்டாக இருந்து ஓய்வுபெற்றவர். ‘‘எனக்கு பூர்வீகம் தஞ்சாவூர். எங்க அப்பா பள்ளி ஆசிரியராக இருந்தார். எங்க அம்மாவுக்கு இசையில் நிறைய ஆர்வம் இருந்தது. ஆனா, எனக்கு ஆர்கெஸ்ட்ரா இசையில், அதுவும் சினிமா இசையில் அபரிமிதமான ஆர்வம். அது எப்படி வந்ததுனே எனக்கு தெரியல. அப்ப, எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடல்கள் நிறைய கேட்பேன். அன்னைக்கு ரேடியோ, டேப் ரெக்கார்டர்தான்.

திருப்பத்தூர் கல்லூரியில் பி.காம் படிச்சிட்டு இருந்த நேரம்தான் ராஜா இசையமைப்பாளராக உள்ளே வர்றார். அப்ப, அவரின் இசை என்னை பெரிசா ஈர்க்கல. நான் எப்பவும்போல எம்.எஸ்.வியின் இசையில் லயிச்சுக்கிட்டே இருந்தேன். பிறகு, மும்பையில் வேலைக்குப் போனேன். அப்புறம், துபாய்ல வேலை செய்தேன். அங்கதான் மேற்கத்திய பாரம்பரிய இசையைப் புரிஞ்சுக்கிட்டேன்.

அதன்பிறகே இளையராஜாவின் இசை மற்ற இசையமைப்பாளர்களின் இசையிலிருந்து எப்படி வேறுபட்டதுனு தெரிஞ்சது. குறிப்பாக, எம்.எஸ்.வி இசையமைச்ச படங்கள்ல இசை உதவினு ஹென்றி டேனியல், தாஸ் டேனியல், ஜோசப் கிருஷ்ணா பெயர்கள் வரும். அவங்க பங்களிப்புகள்தான் மேற்கத்திய பாரம்பரிய இசைனு புரிஞ்சது.அதாவது சினிமாவில் வாசிக்கிற அத்தனை பேருக்கும் மேற்கத்திய நோட்டேஷன் கொடுத்தால்தான் வாசிக்கமுடியும். அதுக்கு ஹென்றி டேனியலும், தாஸ் டேனியலும், ஜோசப் கிருஷ்ணாவும்தான் எம்.எஸ்.விக்கு உதவிகரமாக இருந்திருக்காங்க.

இதுல ரெண்டு விஷயங்கள் இருக்குது. முதல்ல அரேஞ்ச்மெண்ட். அதாவது ஒழுங்கு செய்வது. உதாரணத்திற்கு, பல்லவிக்கும், சரணத்திற்கும் இடையில் ஒரு இசை வரணும். அந்த இசையை மேற்கத்திய நோட்டேஷன்ல எழுதுறது ரெண்டாவது பகுதிதான். ஆனா, முதல்பகுதி அங்க என்ன இருக்கணும்... என்ன பண்ணணும் என்பது. இதன் பெயரே அரேஞ்ச்மெண்ட்.
எம்.எஸ்.வி ட்யூன் தந்ததும் முதல்பகுதியில் என்ன என்ன வாத்தியக் கருவிகள் வேணும்... அதில் என்ன வாசிக்கணும்னு அரேஞ்ச்மெண்ட் செய்றவங்க அந்த உதவியாளர்கள், பிறகு, அவர்களே மேற்கத்திய நோட்டேஷன்ல எழுதுவாங்க.

அன்னைக்கு மேற்கத்திய இசை தெரிஞ்சவங்க கிறிஸ்துவர்களாக முக்கியமாக ஆங்கிலோ இந்தியர்களாக இருந்தாங்க. அவங்க சர்ச்ல வாசிக்கிறதால பாரம்பரிய மேற்கத்திய இசையை படிச்சாங்க. சங்கர்-கணேஷ் படங்கள்லகூட பிலிப்ஸ்னு ஒரு உதவியாளர் இருந்தார். அவர் சிறந்த கிடாரிஸ்ட். அதேநேரம், சிறந்த அரேஞ்சர். இளையராஜாவும், கிடார் ப்ளேயராகத்தான் ஆரம்பிச்சார். ஆனா, அவர் கிடார் மட்டும் கத்துக்கல. மேற்கத்திய பாரம்பரிய இசையின் தியரியையும் தன் தேவைக்கு மீறி கத்துக்கிட்டார். பொதுவாக, கிடார் போதும்னு நினைப்பாங்க. ஆனா, இவர்கிட்ட ஆர்வம் ரொம்ப இருந்தது. அதை சொல்லித்தர தன்ராஜ் மாஸ்டர்னு ஒருத்தர் இருந்தார்.

அப்படியாக இளையராஜா தன்னை டெவலப் பண்ணிக்கிட்டு கிடார் ப்ளேயருக்கு அடுத்த நிலையான உதவியாளர் என்கிற இடத்துக்கு போனார். ஹென்றி டேனியல், தாஸ் டேனியல் மாதிரி.

இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் ட்யூன் கொடுத்திடுவார். இவர் அரேஞ்ச்மெண்ட் வேலைகளை செய்வார். இவ்வளவு செய்கிறவருக்கு ட்யூன், தானாக போடமுடியாதா என்ன? அதைத்தான் பிறகு ராஜா செய்ய ஆரம்பிச்சார்.

அதனாலதான், அவரின் இசையில் உதவினு யார் பெயரையும் போடுறதில்ல. ஏன்னா, அவருக்கு எல்லா விஷயங்களும் அத்துபடி. கிரியேட்டிவ் ப்ராசஸ்ல யாரும் கிடையாது. அவரே ராஜா. அவரே எல்லாம். அவர் மிகச்சிறந்த கம்போஸர். அவர்போல டியூன் கம்போஸிங், நோட்டேஷன் எழுதுறதுனு எல்லாவற்றையும் ஒரே நபராக மேற்கொள்பவர்கள் யார்னு நான் தேடிப் பார்த்தபோது இந்தியாவில் இரண்டே பேர்கள்தான் இருப்பது தெரிஞ்சது.

முதல் நபர் ஷியாம் பெனகல் படங்களுக்கு வாசிக்கிற வன்ராஜ் பாட்டியா. அடுத்து, லக்ஷ்மிகாந்த் - பியாரேலால் இணையரில் பியாரேலால்...’’ என சிலாகித்தவர் சிறிது இடைவெளிவிட்டுத் தொடர்ந்தார். ‘‘நான் முதன்முதலாக இளையராஜாவை ஒரு ரசிகனாகத்தான் சந்திச்சேன். என் வேலை முடிஞ்சதும் தினமும் மாலை அவரின் ஸ்டூடியோவுக்குப் போவதை வழக்கமாக வச்சிருந்தேன்.

அங்க இளையராஜாவின் உதவியாளர் செளந்தரராஜன் இருப்பார். அவர் என்னை புரிஞ்சுகிட்டார். அவர்தான் இளையராஜாவிடம் என்னைப் பற்றிச் சொன்னார்.
அங்கதான் இளையராஜாவின் இசையமைப்பு முறை, பின்னணி இசைப் பதிவுனு எல்லாவற்றையும் கவனிச்சேன். அவர் சிறந்த இசையமைப்பாளர்னு ஏன் பாராட்டப்படுறார்னு அப்போதான் புரிஞ்சது.

ரொம்ப வேகமாக செயல்படுவார். ஒரு டியூனை உருவாக்குவதில் மட்டுமல்ல. அதில் மாற்றங்கள் இருந்தாலும் அத்தனை வேகமாக செய்வார். கடைசி டேக் போகிறவரை சின்னச்
சின்னதாக  திருத்தங்கள்  மேற்கொள்வார். ஒவ்வொரு நேரமும் அவருக்கு ஒரு எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கும். ஒரு சிற்பி மாதிரி செதுக்கிட்டே இருப்பார்.

எனக்கு ‘ஸ்டார் வார்ஸ்’ புகழ் இசையமைப்பாளர் ஜான் வில்லியம்ஸ் ரொம்பப் பிடிக்கும். அவர் அடிக்கடி, ‘இசை உருவாக்கம் என்பது ஒரு சிற்பி கல்லை செதுக்குவது போன்றது. அந்தக் கல்லை செதுக்கி செதுக்கிதான் சிலை எதுனு கண்டுபிடிக்கணும். இசையும் அப்படித்தான்’னு சொல்வார். இளையராஜாவின் கான்செப்ட்டும் அதுதான்.

முதல்ல டியூன் கம்போஸ் செய்வார். அடுத்து, பாடலுக்கான இசையமைப்புப் பணிகளை மேற்கொள்வார். இறுதியாக ரிகர்சல் முடிந்து ரிக்கார்டிங் நடக்கும். ஷார்ட் ஸ்கோர் (Short score) சீட்டில் அவரின் கையெழுத்து அத்தனை அழகாக இருக்கும். அதில் எங்கே வயலின் இசைக்க வேண்டும், எங்கே புல்லாங்குழல் வரவேண்டும், எங்கே பிராஸ் கருவிகள் பயன்படுத்த வேண்டும், எங்கே கோரஸ் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட எல்லா குறிப்புகளையும் தெளிவாக எழுதியிருப்பார்.  

அவர் இசையமைக்க அமரும்போது ஒரு ஃப்ளாஷ் போல முழுப்பாடலும் அவரின் மூளையில் தோன்றுவதாகச் சொல்வார். முதலில் முழுப்பாடலுக்குமான தாளமுறையும், இரண்டாவதாக முழுமையான ஆர்கெஸ்ட்ரா இசையும், மூன்றாவதாக குரல் வடிவங்களும் அவரின் மூளையில் தோன்றி மறையும் என்கிறார். அதேபோல படத்தில் அந்தப் பாடலின் சூழ்நிலைக்கு ஏற்ப இடையிசையையும் மேற்கொள்வார்.

அவரின் இசையில் இசைக்கருவிகள் அந்த டியூனிற்கு துணையாக இருக்குமே ஒழிய அதை ஒருபோதும் ஓவர்லுக் பண்ணாது. அந்தளவுக்கு அவரின் கற்பனா சக்தி அபரிமிதமானது. நரம்பிசைக் கருவிகளும், பிராஸ் இசைக்கருவிகளும் சேர்ந்து இசைக்கும் ஒருபகுதியில், ஒரு புல்லாங்குழல் இசையினையும் சேர்க்கும்போது புல்லாங்குழலுக்கான பகுதியை எந்தளவில் சேர்த்தால் மற்ற இசைக்கருவிகளுக்கிடையில் அது கேட்கக் கூடியதாக இருக்கும் என்பதை நுட்பமாகத் தெரிந்தவர் ராஜா.

இதேபோலதான் ரீ-ரிக்கார்டிங் எனப்படும் பின்னணி இசைப்பதிவிலும் அவரின் நேர்த்தியைப் பார்க்கலாம். அவருக்கு இசைஞானி, இசைச் சக்கரவர்த்தி, மேஸ்ட்ரோ என எத்தனை பட்டங்கள் வேண்டுமானாலும் தரலாம். உண்மையில் அவர் மாபெரும் கலைஞன்...’’ என்கிற கார்த்திகேயன், ‘‘எனக்கு அவரின்  இசையமைப்பில் உருவான ‘ஏழை ஜாதி’யில் வருகிற, ‘அதோ அந்த நதியோரம்...’ பாடல் ரொம்பப் பிடிக்கும். ஏன்னா, அது கிட்டத்தட்ட சிம்பொனி மாதிரி இருக்கும்...’’ என உருகுகிறார்.

சரி, இப்போதுள்ள இளம் இசையமைப்பாளர்களில் உங்களைக் கவர்ந்தவர் என்றோம். ‘‘நிறைய இருக்காங்க. சாம் சி.எஸ், ஜஸ்டின் பிரபாகர், டி.இமான், கண்ணன், ஷான் ரோல்டன் உள்ளிட்டவர்கள் ரொம்ப நல்லா பண்றாங்க. குறிப்பா, ‘ரெண்டாவது படம்’ என்கிற படத்துல இசையமைப்பாளர் கண்ணனின் ‘ரோஜா பூ ஒன்று...’ பாடல் இளையராஜா இசையின் அத்தனை குணங்களையும் இணைத்து செய்யப்பட்ட ஒரு அழகான அர்ப்பணிப்புனு சொல்லலாம்.

ஆனா, இன்னைக்கு திரைப்படப் பாடல்கள் டேஸ்ட் மாறிடுச்சு. ரசிகர்களுக்கு ஏற்ப இசையமைப்பாளர்கள் வாசிக்கிறாங்க. அதேபோல, இன்னொரு விஷயம்-இன்னைக்கு பெரும்பாலான இசையமைப்பாளர்களுக்குப் படத்தின் பின்னணி இசை பற்றி அக்கறையில்ல என்பது வேதனையாக இருக்கு...’’ என்கிறார் கார்த்திகேயன்.

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்