ஆட்டிசம் குழந்தைகளுக்கு உதவ இலவச app!சாதாரணமாக வாலுத்தனம் செய்யும் குழந்தைகளையே கவனிக்க பெற்றோர்கள் அலுத்துக்கொள்வதும், மன அழுத்தத்திற்கு ஆளாவதும், எரிச்சலடைவதும் நடக்கும் காலம் இது. அப்படியிருக்க தன் குழந்தை போலவே ஆட்டிசம் இருக்கும் மற்ற குழந்தைகளையும் மனதில் நினைத்து அதற்காகவே தங்கள் வாழ்நாட்களைக் கொடுத்து வருகிறார்கள் லக்‌ஷ்மி பாலகிருஷ்ணனும் அவரது கணவர் எஸ்.பாலபாரதியும்.

தங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் இருப்பதை அறிந்தது முதல் அவர்கள் சந்தித்த போராட்டங்களை, வலிகளை, முதல் நிலை அதிர்ச்சி தொடங்கி படிப்படியாக அக்குழந்தையுடனான வாழ்வியலுக்கு தங்களை பழக்கப்படுத்திக் கொண்ட விதத்தை எல்லாம் இன்ச் பை இன்ச் ஆக ‘எழுதாப் பயணம்’ புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் லக்‌ஷ்மி பாலகிருஷ்ணன். உண்மையில் இந்த நூல், ஆட்டிசம் குழந்தையுடன் வாழும் பெற்றோருக்கான நல்ல வழிகாட்டி என்றால் அது மிகையில்லை.

இப்போது அடுத்த கட்டமாக ஆட்டிசம் குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் பேருதவியாக இருக்கும்படியான மொபைல் செயலி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள் லக்‌ஷ்மி பாலகிருஷ்ணனும் எஸ்.பாலபாரதியும். ‘‘ஆட்டிசம் குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்கள் அல்லது கவனித்துக்கொள்வோர் எதிர்கொள்ளும் பெரிய பிரச்னையே தொடர்புகொள்ளும் மொழிதான். அதை சுலபமாக்க இந்த மொபைல் செயலி உதவும்...’’ என்றபடி பேச ஆரம்பித்தார் லக்‌ஷ்மி பாலகிருஷ்ணன்.

‘‘சின்ன வயதில் இருந்தே எனக்கு கதை, கவிதை எழுதுவதிலும் புத்தகம் வாசிப்பதிலும் ஆர்வம் உண்டு. என் மகன் கனிவமுதன் என்னை அனுமதிக்கும் நேரத்திற்குள் வீட்டில் இருந்தே என்ன செய்யலாம் என யோசித்தபோது எழுத்தை கையில் எடுத்தேன். 2006ல் இருந்தே வலைத்தளத்தில் எனக்கென ஒரு ப்ளாக் ஆரம்பித்து எழுதிக் கொண்டு இருக்கிறேன். சில பிரபல நாளேடுகளிலும் எனது கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக எழுதிய புத்தகம்தான் ‘எழுதாப் பயணம்’. தொடர்ந்து ஆட்டிசம் குழந்தைகள் வளர்ப்பு சார்ந்து இன்னும் சில புத்தகங்கள் வெளியிட்டிருக்கேன்.

ஆட்டிசம் குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் பயன்படும் வகையில் எவ்வித கட்டுரைகளும், ஆவணங்களும் இணையத்தில் இன்று வரையில் கிடையாது. அதாவது அவர்களுக்கென பிரத்யேக மருத்துவமும், மருந்தும் கூட கிடையாது. 2013ல் என் கணவரும் கவிஞரும் எழுத்தாளருமான எஸ்.பாலபாரதி ‘ஆட்டிசம்-சில புரிதல்கள்’ என்ற நூலை தமிழில் எளிய மொழியில் எழுதினார்.

 நிறைய பெற்றோர்கள் அதனால் பயனடைந்ததாக தெரிவித்தனர்..’’ என்னும் லக்‌ஷ்மி பாலகிருஷ்ணன், தன் மகனுக்கு மட்டுமின்றி மற்ற ஆட்டிசக் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே பிரத்யேகமாக பயிற்சியும் படிப்பும் முடித்திருக்கிறார்.

‘‘B.Ed ஸ்பெஷல் எஜுகேஷன், கவுன்சிலிங் மற்றும் சைக்கோ தெரபியில் எம்.எஸ்சி. முடித்திருக்கிறேன். அடுத்து ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்திலே ஓரிரண்டு வருடங்கள் வேலையும் செய்தேன். இதன் மூலம் என் மகன் போலவே இருக்கும் நிறைய குழந்தைகளுக்கும் என்னால் என்னென்ன பயிற்சிகள் கொடுக்க முடியுமோ, அல்லது கவுன்சிலிங் கொடுக்க முடியுமோ செய்கிறேன்.

ஆட்டிசம் என்கிறது மனநோயோ அல்லது பரவும் நோயோ இல்லை. அதைப் புரிய வைக்கவே நாங்கள் பல வருடங்களாக போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த ஆட்டிசம் என்பது ஸ்பெக்ட்ரம் பிரச்னை (Autism spectrum disorder (ASD). அதாவது ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் வீரியம் வேறுபடும்.

ஒரு சில குழந்தைக்கு சப்தமே ஆகாது, ஒரு சில குழந்தைக்கு அமைதியாக இருந்தாலே பிடிக்காது. சில குழந்தைகள் பேசுவாங்க, சில குழந்தைகளால் பேச முடியாது. சிலருக்கு சருமத்தில் கூட மாற்றங்கள் இருக்கும். அதனால் இதுதான் ஆட்டிசம் குழந்தைக்கான பயிற்சி என்பது கூட முழுமையான தொகுப்பு இல்லை. இப்போதைக்கு ஆட்டிசம் குழந்தைகளுக்கு பெரிய பிரச்னை அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரியப்படுத்தும் தொடர்பு. அதற்கான செயலியாதான் நாங்க ‘அரும்பு மொழி’ appஐ உருவாக்கினோம்.

நானும் என் கணவரும் பேசும்போது தோன்றிய செயலிதான் இது. எனக்கும் சாஃப்ட்வேர் துறையில் வேலை பார்த்த அனுபவம் இருக்கு. எங்களின் நண்பர் தமிழ்ச்செல்வன் சாஃப்ட்வேர் நிறுவனம் வைத்திருக்கிறார். அவர் உதவியுடன் இந்தச் செயலியை ‘அரும்பு தன்னார்வலர் அமைப்பு’ மூலம் உருவாக்கினோம்...’’ என்றவர் ‘அரும்பு மொழி’ (Arumbu Mozhi) செயலியின் வேலை என்ன என்பதையும் விளக்கினார்.  

‘‘இந்த செயலியை எந்தப் பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கேற்ப எடிட் செய்து பயன்படுத்தலாம். இதுபோல் சில செயலிகள் ஏற்கனவே இருந்தாலும் அவை அனைத்துமே ஏற்கனவே ரெக்கார்ட் செய்யப்பட்ட கணிணி குரல்களுடன் அல்லது அவர்கள் கொடுக்கும் மிகச்சில வசதிகளுடன் மட்டும்தான் பெற முடியும். ஆனால், ‘அரும்பு மொழி’ செயலியை யாரும் அவர்கள் குழந்தைகளின் புகைப்படத்துடன் எடிட் செய்து எளிமையாகப் பயன்படுத்தலாம். குறிப்பாக உங்கள் குரலில் நீங்களே ரெக்கார்ட் செய்து பயன்படுத்தலாம் என்பதே இந்தச் செயலியின் சிறப்பம்சம்.

உதாரணத்திற்கு, உங்கள் குழந்தை சாப்பிடும் ஒரு புகைப்படத்தை இணைத்து நீங்களே ‘எனக்குப் பசிக்குது’ என உங்கள் குரலில் பதிவு செய்து வைத்து குழந்தையிடம் கொடுத்து
விடலாம். ஒருவேளை குழந்தைக்குப் பசி என்றால் அந்தப் புகைப்படத்தைத் தொட்டால் போதும்... ஏற்கனவே நீங்கள் பதிந்த குரல் அதில் கேட்கும். இதுபோல் கடற்கரைக்குச் செல்ல வேண்டும், தண்ணீர் வேண்டும், விளையாடலாமா... என அவர்கள் நினைப்பதை அதில் புகைப்படமாகவும் உடன் குரல்கள் இணைத்தும் கொடுக்கலாம்.

பெரும்பாலும் ஆட்டிசம் குழந்தைகள் தாங்கள் நினைப்பதை சொல்லத் தெரியாமல்தான் கத்துவதும், அழுவதும், அடம் பிடிப்பதும் செய்வர். அதற்குத் தீர்வாக இந்தச் செயலி செயல்படும்.  
இதில் எங்களுக்கே ஆச்சர்யமான ஒன்று சில குழந்தைகள் இந்த குரல்களைத் திரும்பத் திரும்பக் கேட்பதால் அதைச் சொல்லவும் முயற்சித்து பேசவும் தொடங்குகிறார்கள் என சில பெற்றோர்கள் எங்களுக்குத் தெரிவித்தனர்.

இதைவிட ஆச்சர்யம் பக்கவாதம் வந்த நபர் ஒருவர்... அவருக்கு உடல் அசைவுகள் பெரிதாக இல்லை... அவருக்கு இந்தச் செயலி பெரும் உதவியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
நாங்கள் ஏதோ நினைத்து உருவாக்கிய இந்தச் செயலி பேச முடியாத, தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத நபர்களுக்கும் கூட உதவுகிறது என்பதை அறியும்போது மன
நிறைவாக உள்ளது.

எங்கள் குழந்தை நன்றாகவே பேசுவான், தேவாரம், திருவாசகம் உட்பட அத்தனையும் படிப்பான். அவனுக்கு இந்தச் செயலி தேவைப்படாது. எனினும் அவனது சின்ன வயதில் நாங்கள் அவனது தேவைகளை அறிந்து செயல்பட அவ்வளவு கஷ்டப்பட்டோம். அதை மனதில் வைத்தே மற்ற இளம் பெற்றோர்களுக்கு இது தேவையாக இருக்கட்டும் என உருவாக்கினோம்...’’ என்ற லக்‌ஷ்மி பாலகிருஷ்ணன் குரலில் அத்தனை தன்னம்பிக்கையும், மனநிறைவும் தெரிகிறது. கூகுள் பிளே ஸ்டோரில் (https://play.google.com/store/apps/details?id=org.arumbutrust.arumbumozhi&hl=en_IN&gl=US&pli=1) இந்த ‘அரும்பு மொழி’ செயலியை யார் வேண்டுமானாலும் இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்