எந்த இயக்குநரிடம் ஆபீஸ் பாயாக இருந்தாரோ அதே டைரக்டரின் தயாரிப்பில் படம் இயக்குகிறார்!ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கெளதம் கார்த்தி நடித்துள்ள படம் ‘1947 ஆகஸ்டு 16’. அறிமுக இயக்குநர் பொன்.குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏ.ஆர்.முருகதாஸிடம் ஆபீஸ் பாயாக கைகட்டி வேலை பார்த்தவர். இப்போது கைநீட்டி வேலை வாங்கும் இயக்குநராக உயர்ந்துள்ளார். ‘‘எனக்கு சினிமா பின்னணி இல்லை. ஒரு முறை நீண்ட சினிமா அனுபவம் உள்ள அசோசியேட் இயக்குநர் ஒருவர், ‘சினிமாதான் உன்னுடைய லட்சியம் என்றால் வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும். அப்போது உன்னிடம் தகுதி இருக்க வேண்டும். அதற்காக தகுதியை வளர்த்துக்கொள்’ என்றார்.

அந்த வார்த்தையைப் பிடித்துக்கொண்டு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சாரின் பட்டறையில் என்னை பட்டை தீட்டிக்கொண்டேன்...’’ என்று புன்னகை கலந்து பேசுகிறார் பொன்.குமார்.
‘1947 ஆகஸ்டு 16’ பீரியட் படமா?

ஆமா. 1947ல் சுதந்திரத்துக்கு முதல் நாளும் சுதந்திரத்துக்கு அடுத்த நாளும் ஒரு கிராமத்தில் என்ன நடந்துச்சு என்பதுதான் படம். 300 வருடங்கள் இந்தியாவுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்குமிடையே என்னவெல்லாம் நடந்துச்சு என்பதை 3 நாட்களில் சொல்லியுள்ளோம். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள புளியங்குடி என்ற கிராமத்தில் நடக்கும் கதை இது. ஆனால், உண்மைக் கதை கிடையாது. இப்படி இருந்திருக்கலாம் என்று சொல்ல வரும் கற்பனைக் கதை.

நம் நாடு சுதந்திரம் அடைந்து பல வருடங்களாகிவிட்டது. பிரிட்டிஷ்காரர்களும் இங்கு இல்லை. ஆனால், பிரிட்டிஷ்காரர்களின் சிந்தனையின் தாக்கம் அப்போது மட்டுமல்ல, இன்றளவும் தொடர்வது ஆச்சர்யமளிக்கிறது.
 பிரிட்டிஷ்காரர்களைப் பற்றி காந்தி கருத்து தெரிவித்தபோது நமக்கு உண்மையான எதிரி பிரிட்டிஷ்காரர்களின் சிந்தனைதான் என்று கூறியுள்ளார்.
உதாரணத்துக்கு, ஐடியில வேலை பார்க்கும் இளைஞர்கள் சாப்பிடச் செல்லும் இடத்திலும் சாப்பிடுவதில் கவனம் செலுத்தாமல் நாளைக்கு மானேஜர் ப்ராஜெக்ட் பற்றி கேட்பாரே என்று அதிகாரியை நினைத்து பயத்தை வெளிப்படுத்துவதைப் பார்க்கலாம்.

மானேஜர் அந்த இடத்தில் இல்லையென்றாலும் அந்த இடத்தில் ஒரு பயம் பரவுகிறது என்றால் அந்த  பயத்தை உண்டுபண்ணுவதுதான் பிரிட்டிஷ்காரர்களின் சிந்தனை என்று சொல்கிறேன்.
அது எந்த மாதிரியான பயம், அந்த பயத்திலிருந்து கிராம மக்கள் எப்படி வெளியே வந்தார்கள், அவர்கள் நினைத்தபடி உண்மையான சுதந்திரம் கிடைத்ததா, 16ம் தேதி அந்த கிராமத்தில் என்ன நடந்துச்சு என்பதுதான் படத்தோட கான்செப்ட்.

முதல் படமே ஏன் இவ்வளவு கனமான சப்ஜெக்ட் என்று கேட்கிறார்கள். இந்தக் கதையை என்னுடைய முதல் படமா பண்ணுவதற்கு காரணம், நான் கிராமத்திலிருந்து வந்தவன். எனக்கு வில்லேஜ் பிடிக்கும். அதை ரெகுலர் வில்லேஜ் சினிமாவா இல்லாமல் பீரியட் படமா பண்ணியிருக்கிறேன். புத்தகங்களைத் தாண்டி சில களப்பணிகளைச் செய்து இந்த ஸ்கிரிப்ட் பண்ணினேன். ஊர் பக்கம் இருக்கும் 90 வயது தாத்தா, பாட்டிகளைச் சந்தித்து சுதந்திரக் காலகட்டத்தில் நடந்த சில தகவல்களைத் திரட்டினேன். அதெல்லாம் சின்னச் சின்ன எமோஷனலா ஒர்க்அவுட்டாகியிருக்கு.

டீசர்ல கெளதம் கார்த்திக் முகத்தில் ஆவேசம் பொங்குதே?

கெளதம் கார்த்திக் இந்தக் கதைக்குள் வருவதற்கு முன் சில ஹீரோக்கள் சாய்ஸ்ல இருந்தாங்க. சில ஹீரோக்களுக்கு கதை பிடிச்சிருந்தது. ஆனால், கால தாமதத்தைத் தவிர்க்க முடியல. அதுக்கப்புறம்தான் கெளதம் கார்த்திக் சாரை அணுகி கதை சொன்னேன்.

இந்த கதைக்கு ஹீரோ தேவையில்லை. கதைக்கு ஏற்ற மாதிரி ஒரு கேரக்டர் தேவைப்பட்டது. அந்த மெட்டீரியலுக்கு கெளதம் கார்த்திக் பொருத்தமா இருந்தார். படத்தின் ஆரம்ப கட்ட வேலையிலிருந்து தொடர்ந்து எங்களுடன் டிராவல் பண்ணி பெரிய சப்போர்ட் கொடுத்து வர்றார்.

கெளதம் கார்த்திக் பிரமாதமா நடிப்பார் என்பது தெரிந்ததே. அதை சக நடிகரகளுக்குள்ளும் கடத்தும்விதமா ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர்களுடன் சேர்ந்து ப்ராக்டீஸ் பண்ணுவார். இதெல்லாம் நான் சொல்லாமலேயே நடக்கும். அது எனக்கு எனர்ஜியைக் கொடுத்தது.

ஹீரோயின் ரேவதி. இந்தக் கதைக்கு புதுமுகம் தேவைப்பட்டது. ஹீரோயின் என்றால் அவருடைய இமேஜ் மேல கவனம் போய்விடும். அதனால் புதுமுகம் நடிக்க வேண்டிய கதாபாத்திரம் என்பதால் ஆடிஷன் பண்ணினோம்.பரத நாட்டியக் கலைஞரான ரேவதியிடம் நடிக்க சம்மதமா என்ற கேட்டபோது, அதற்குத்தான் ஆசைப்பட்டேன் என்று உடனே சம்மதித்தார். ஜமீன் மகளாக கோயில் சிலை மாதிரி ஒரு கேரக்டர் பண்ணியிருக்கிறார். நடிப்பார்வம் இருந்ததால் மிகச் சரியான நடிப்பை வழங்கினார்.

புகழ், முக்கியமான கேரக்டர் பண்ணியிருக்கிறார். படத்துல கமிட்டானதும் முதல் வேலையா அவருடைய சுருள் முடியை பின்னாடி இழுத்துக் கட்டச் சொல்லிட்டேன். புகழிடம் 100 மடங்கு பெர்ஃபாமன்ஸை பார்க்கலாம். காமெடிக்காக முகத்தை கோணலாக்கி நடிக்காமல் கேரக்டரை உள்வாங்கி நடிச்சார்.

பிரிட்டிஷ்காரர்களாக ரிச்சர்ட், ஜேஷன் ஷா வர்றாங்க. லண்டன்லருந்து வரவழைச்சு நடிக்க வைத்தோம். டெடிகேஷனுடன் நடிச்சுக் கொடுத்தார்கள். அவர்களுக்கு இருந்த ஒரே பிரச்னை நம்மூர் வெயில். அதையும் பொருட்படுத்தாம எங்களுடைய நோக்கத்தை புரிஞ்சு சப்போர்ட் பண்ணினாங்க. போஸ்வெங்கட் போராளி கேரக்டரிலும், மதுசூதனன் ஜமீன் கேர்க்டரிலும் வர்றாங்க. இவர்களுடன் தாத்தா, பாட்டி கேரக்டர்ல நடிச்சவங்களும் கவனிக்க வைப்பாங்க.

செல்வா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். என்னுடைய நண்பர். ‘கத்தி’ படத்தில் நான் உதவி இயக்குநர். செல்வா உதவி கேமராமேன். தேர்ந்த கலைஞனாக ‘மாநகரம்’, ‘ஜிப்ஸி’, ‘மெகந்தி சர்க்கஸ்’ என ஆச்சர்யப்படுத்தியவர். செல்வா எனக்கு நண்பர் என்பதைத்தாண்டி மிகப் பிரமாதமான கேமராமேனாதான் இந்தப் படத்துக்குள் வந்தார்.ஷான் ரோல்டன் மியூசிக். ஃப்ரெண்ட்லியான மியூசிக் டைரக்டர். பீரியட் படம் என்பதற்காக பழைய இசைக் கருவிகளைத் தொடாமல் நவீன இசைக்கருவிகள் மூலம் பீரியட் ஃபீல் கொடுத்தார். அந்த எமோஷனல் மியூசிக் மக்களுக்கு பிடிக்கும். நான்கு பாடல்கள். எல்லாமே வெரைட்டியா வந்திருக்கு.

ஆர்ட் டைரக்‌ஷன் அமரர் சந்தானம். அவருடைய கடைசி படம் இது. ஆரம்பத்துல அவர் இந்தப் படத்துல இல்ல. ஆனாலும், எனக்காக சொந்த ஆர்வத்தில் படத்துக்கான வேலைகளை செய்து வைத்ததை காண்பித்தபோது நெகிழ்ந்து போனேன். படத்துல பெரிய உழைப்பு கொடுத்தார். படம் பார்க்கும்போது இந்த பட்ஜெட்டுக்கு இந்த செட் வாய்ப்பே இல்லனு
சொல்லுமளவுக்கு செட் ஒர்க் இருக்கும். அது சந்தானம் சாரால் மட்டுமே  சாத்தியமானது.

சீனியர் ஆர்ட் டைரக்டர் என்றில்லாமல், எல்லா நாட்களும் படப்பிடிப்புல ஓடி, ஆடி வேலை செய்தார். போஸ்ட் புரொடக்‌ஷனில் படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் சந்தானம் சார் நினைவில் வந்து போகிறார்.பெருமாள் செல்வம் சார் காஸ்டியூம் பண்ணியிருக்கிறார்.

துணியில ஊறிப்போனவர். ஒருவர் பக்கத்துல வரும்போதே கண்ணை மூடிக்கொண்டு அவர் பாலிஸ்ட்டர் அணிந்திருக்கிறாரா, காட்டன் டிரஸ் அணிந்திருக்கிறாரா என்பதைச் சொல்லிவிடுவார். துணிக்காகவே பிறந்தவர். பிரிட்டிஷ் கால கட்டத்தை துணியை வைத்து அப்படியே கொண்டுவந்தார்.

மேக்கப்மேன் அப்துல்லாவின் பங்கும் பேசப்படும். ‘எந்திரன்’, ‘இந்தியன் - 2’ என தொடர்ந்து ஷங்கர் சார் படம் பண்ணுபவர். கெளதம் கார்த்திக் ஸ்கின் டோனுக்கு பத்து கோட் அடிச்சால்தான் ‘டல்’ மேக்கப்பை கொண்டு வர முடியும். அதை சிறப்பாகப் பண்ணினார்.

இயக்குநர் முருகதாஸ் புரொடக்‌ஷன்ல என்ன ஸ்பெஷல்?

முருகதாஸ் சார் எப்போதும் சொல்லும் வார்த்தை... ‘என் உதவியாளரா இரு... என் பிள்ளையா கூட இரு. அதைப்பத்தி  எனக்கு கவலை இல்ல. நான் சினிமாவுக்கு நியாயமா இருப்பேன்’னு சொல்லி கதையில் கவனம் செலுத்துவார். ‘ராஜா ராணி’, ‘ரங்கூன்’ மாதிரியான படங்கள் அப்படி அவர் தயாரிப்பில் வந்தவை. எழுதிய கதையை வாங்கி படிச்சார். ‘நல்லா இருக்கு. நம்ம பேனர்ல பண்ணிக்கலாம்’னு அவரே தயாரிக்க முன்வந்தார். சமீபத்துல சார் படம் பார்த்துவிட்டு, ‘நம்ம புரொடக்‌ஷன்ல நல்ல படம் பண்ணியிருக்கிறோம். மக்களுக்கு தரமான படத்தை தரப்போறோம்’னு எமோஷனலா சொன்னார்.

ரசிகர்களுக்கு என்ன மெசேஜ் சொல்லப் போறீங்க?

எது சுதந்திரம் என்பதைச் சொல்லியுள்ளோம். பிரிட்டிஷ்காரர்கள் நாட்டை விட்டுப் போனாலும்  நம் மனதை அடிமைத்தனம் எனும் பயத்துக்கு பழக்கப்படுத்திவிட்டு போயி ருக்கிறார்கள். அந்த பயம் நம்மை விட்டு நீங்குவதுதான் உண்மையான சுதந்திரம். அந்த சுதந்திரம் இந்தக் கதையில் வரும் கிராமத்துக்கு கிடைச்சது. அதை இதுல சொல்லியுள்ளோம்.

ஆபீஸ் பாய் to டைரக்டர் பயணத்தை சொல்லுங்களேன்?

எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் கீழக்கலங்கல். வீட்டுக்கு ஒரே பையன். எங்க ஊர்ல இருந்து படம் பார்க்கணும்னா 40 கிலோமீட்டர் தூரத்துல இருக்கிற சங்கரன் கோவிலுக்குதான் போகணும். படிக்கும் காலத்தில் மாணவர் சங்க கூட்டத்துல கவிதை, கட்டுரைப் போட்டியில் என் பேர் மிஸ்ஸாகாது. ஐ.டி.ஐ. மரைன் டெக்னாலஜி முடிச்சதும் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தேன். கூரியர் வேலை, செல்ஃபோன் கம்பெனி வேலைன்னு பல வேலைகளைச் செய்தேன்.

முருகதாஸ் சார் ஆபீஸில் ஆபீஸ் பாய் வேலை காலியாக இருந்தது. சினிமாவைப் பற்றி எதுவும் தெரியாத எனக்கு அந்த வாய்ப்பு பெரியதாகத் தோன்றியது. சாரிடம் ‘கத்தி’, ‘ஸ்பைடர்’, ‘அகிரா’ ஒர்க் பண்ணினேன்.

உங்கள் குரு முருகதாஸிடம் கற்றது?

அயராத உழைப்பு. ரெஸ்ட் எடுத்துக்கொள்ளலாம். அந்த நேரத்துல படம் பாருங்க. புக் படிங்க, யோசிச்சு கதை பண்ணுங்கனு சொல்வார். நீங்க வெளியே போனபிறகு, சாராயம் காய்ச்சறவன் ஸ்கூல் பொண்ணை லவ் பண்ற மாதிரி கதை பண்ணுவீங்க. முடிவுல ஹீரோ திருந்தற மாதிரி க்ளைமாக்ஸ் வைப்பீங்க. ஆனால், நிஜத்துல பொண்ணுங்க அயோக்கியன்களை ஹீரோவா பாக்க ஆரம்பிச்சுடுவாங்க. அதனால், சமூக அக்கறையுடன் கதை எழுதுங்க, தொழில் தர்மத்துடன் சினிமா பண்ணுங்க, சினிமா உங்களுக்கு கொடுக்கும்னு சொன்னார்.
      
எஸ்.ராஜா