சாதாரண மனிதனின் வாழ்க்கையில் கடவுள் வந்தால் எப்படி இருக்கும்..?



மலையாளத்தில் மார்க்கெட் இருந்தாலும் மல்லுவுட் இயக்குநர்கள் ஒரு கண்ணை கோலிவுட் பக்கம் வைக்கத் தவறுவதில்லை. அதற்கு உதாரணமாக ஃபாசில், பிரியதர்ஷன் போன்ற இயக்குநர்களைச் சொல்லலாம். அந்த வரிசையில், யோகிபாபு டைட்டில் ரோலில் நடிக்கும் ‘யானைமுகத்தான்’ படத்தின் மூலம் தமிழில் தடம் பதிக்க வந்துள்ளார் இயக்குநர் ரெஜிஷ் மிதிலா.
இவர் மலையாளத்தில் முன்னணி நடிகர்களை வைத்து சில படங்களை இயக்கி தயாரித்துள்ளார். சமீபத்தில் ‘யானைமுகத்தான்’ டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. ரிலீஸ் தேதி நெருங்குவதாலும், படத்தின் தயாரிப்பு பொறுப்பை ஏற்றுள்ளதாலும் கூடுதல் பரபரப்புடன் இருந்தார் ரெஜிஷா மிதிலா.

தமிழில் படம் பண்ண வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது?

படிச்சது பி.எஸ்ஸி. சினிமா பிடிக்கும் என்பதால் விஷுவல் துறையை செலக்ட் பண்ணினேன். அனிமேஷன் கிராபிக்ஸ் டிசைனராக கரியரை ஆரம்பித்தேன். ஒருகட்டத்தில் யார்கிட்டேயும் வேலை பார்க்காமல் டைரக்டா டைரக்டராயிட்டேன். மலையாளத்தில் மூன்று படங்களை இயக்கி முடித்துள்ளேன். இது நான் இயக்கும் நான்காவது படம்.

கோவிட் சமயத்தில் ஓடிடி.யில் ஏராளமான படங்களைப் பார்த்தேன். அதில் யோகிபாபுவின் ‘மண்டேலா’ என்னை அதிகம் கவர்ந்தது. ஏற்கனவே ரமேஷ் திலக் மூலம் யோகிபாபுவிடம் நல்ல பழக்கம் இருந்துச்சு. ‘மண்டேலா’ பார்த்ததும் யோகி பாபுவுக்கு ஃபோன் பண்ணி படம் பிடிச்சிருந்ததைச் சொன்னேன். பரஸ்பர விசாரிப்புக்குப் பிறகு என்னுடைய அடுத்த படத்தைப் பற்றி கேட்டார் யோகிபாபு.

மலையாளத்துக்காக ஒரு தீம் ரெடி பண்ணியிருந்தேன். அதைச் சொன்னதும், அவருக்கு பிடித்திருந்ததோடு, நானே பண்ணித் தர்றேன் என்றார். தமிழில் படம் பண்ண வேண்டும் என்பது என்னுடைய ஆசை. யோகி பாபு கேட்டதும் கடவுளே நேரில் வந்து வரம் தந்த மாதிரி இருந்துச்சு. ஏனெனில், யோகிபாபுவுக்கு தமிழ் இண்டஸ்ட்ரியில் இருக்கும் டிமாண்ட் பற்றி எனக்குத் தெரியாமல் இல்லை. அந்த வகையில் நான் தமிழ்ப் படம் இயக்க முக்கிய காரணமாக இருந்தார் யோகிபாபு.

‘யானைமுகத்தான்’ என்ன கதை?

இது ஃபேன்டஸி கலந்த  ஃபேமிலி படம். ஒவ்வொருவருக்கும் கடவுள் இப்படித்தான் இருப்பார் என்ற பார்வை இருக்கும். இதில் கடவுள் இப்படியும் இருப்பார் என்பதைச் சொல்கிறேன். கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே இருக்கும் கனெக்‌ஷன்தான் படம். அதை வழக்கமான ஸ்டைலில் சொல்லாமல் வித்தியாசமாகச் சொல்லியுள்ளேன்.ஒரு சாமான்யனின் வாழ்க்கையில் கடவுள் வருகிறார். அதற்கான காரணமும், கடவுள் வருவதற்கான நோக்கமும் புதுசா இருக்கும். அது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தைத் தரும்.

ரமேஷ் திலக் ஆட்டோ ஓட்டுநர். அவருடைய வாழ்க்கையில் ஒரு நாள் கடவுள்  வர்றார். அதன்பிறகு அவருடைய வாழ்க்கையில் ஒரு அதிசயம் நடக்கிறது. அது நம்ப முடியாதளவுக்கு ஆச்சர்யமான நிகழ்வு. அது எப்படி நடந்தது என்று ரமேஷ் திலக் காரணம் தேடுவதற்குள் யோகிபாபு அவருடைய வாழ்க்கைக்குள் வருகிறார். அவர் தன்னை கடவுள் என்று சொல்கிறார்.  
எல்லோருக்கும் கடவுள் பக்தி இருக்கும். ஆனால், கடவுள் நேரில் வந்து நான் கடவுள் என்று சொன்னால் யாரும் நம்பப் போவதில்லை. அப்படி இந்தக் காலத்தில் வருவது கடவுளுக்குத்தான் கஷ்டம். ஒருவரிடம் நான் கடவுள் என்று சொல்லி புரிய வைப்பதற்குள் கடவுளுடைய பாடு திண்டாட்டம்.

அப்படி ரமேஷ் திலக்கிடம் கடவுள் கன்வின்ஸ் பண்ணிய பிறகுதான், அந்தக் கடவுள் ஏன் வந்தார், வருகைக்கான நோக்கம் என்னவென்று தெரிகிறது. இதையெல்லாம் ரசிகர்கள் ரசிக்
குமளவுக்கு ஜனரஞ்சகமாகச் சொல்லியுள்ளேன்.

யோகிபாபு பிஸி நடிகராச்சே?

நீங்க என்ன கேட்க வர்றீங்கனு புரியுது. என்னுடைய நண்பர்கள் சிலர், யோகிபாபு பிஸி ஆர்ட்டிஸ்ட், படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வருவாரா என்றெல்லாம் சந்தேகக் கேள்வி எழுப்பினார்கள். ஆனால், அவரால் ஒரு நாளும் படப்பிடிப்பு தள்ளிப் போனதில்லை. அவர்தான் அடுத்தடுத்து என்னென்ன சீன் எடுக்கப் போறோம், எத்தனை மணிக்கு வரணும் என்றெல்லாம் ஆர்வத்துடன் கேட்டு ஒத்துழைப்பு கொடுத்தார்.

அழகன், கடவுள் என இரண்டு வேடத்துல வர்றார். அழகன் ஊரை ஏமாற்றி வயித்தைக் கழுவும் ஜாலியான கேரக்டர். அழகனுக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இருக்கும் என்பதை க்ளைமாக்ஸில் சொல்கிறேன்.யோகிபாபு வழக்கமான பாணியிலிருந்து வெளியே வந்து பண்ணியிருக்கிறார். கடவுள் கெட்டப் ஃப்ரெஷ் லுக்ல இருக்கும். படத்துல ரெண்டு, முணு இடங்களில் சிலிரிக்க வைக்கும் காட்சிகள் இருக்கிறது. யோகிபாபுவின் நடிப்பு பிரமாதம்னு பத்திரிகைக்காரர்கள் எழுதுமளவுக்கு உத்தரவாதம் தரும் ஃபெர்பாமன்ஸ் பண்ணினார்.

யோகிபாபுவுடன் வேலை செய்தது மறக்க முடியாத அனுபவம். அடுத்த படத்தையும் யோகிபாபுவை வைத்து தயாரிக்கிறேன். நடிகராக வந்து போகாமல் ஒரு குடும்ப உறுப்பினர் மாதிரி பழகினார். தமிழில் நான் சுலபமாக படம் பண்ணியிருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் யோகிபாபு. அவர்தான் படப்பிடிப்பை சுமுகமாக நடத்துவதற்கு உதவியாக இருந்தார்.  
ஊர்வசி முக்கியமான வேடம் பண்ணியிருக்கிறார். ரமேஷ் திலக் என்னுடைய பத்து வருட நண்பர். நடிப்பைத் தாண்டி பல இடங்களில் உதவியாக இருந்தார். இவர்களுடன் கருணா
கரன், பாலிவுட் நடிகர் உதய் சந்திராவும் இருக்கிறார்கள். நாலு படத்துல இந்தப் படத்தை இதயத்துக்கு நெருக்கமான படமா ஃபீல் பண்ணுகிறேன்.

‘மண்டேலா’ பரத் சங்கர் மியூசிக் பண்றார். சிவகார்த்திகேயனின், ‘மாவீர’னுக்கும் அவர்தான் மியூசிக். கார்த்தி ஒளிப்பதிவு பண்ணுகிறார். ரவிவர்மன் அசோசியேட். ‘பொன்னியின் செல்வன்’ பண்ணிய கையோடு என் படத்துக்குள் வந்தார். கார்த்தி சீக்கிரத்துல பெரிய ரவுண்ட் வருவார். சீக்கிரமாகவும், அதே சமயம் இருக்கிற செட்டப்ல சிறப்பாகவும் பண்ணக்கூடியவர். ராஜஸ்தானில் பாகிஸ்தான் பார்டரில் ஷூட் பண்ணினோம்.

தமிழ் சினிமா அனுபவம் எப்படி?

மலையாளம் என்னுடைய வீடு. அதே மாதிரி ஒரு ஃபீல் தமிழில் பண்ணும்போதும் இருந்துச்சு. மலையாளத்தை ஒப்பிடும்போது தமிழில் பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்கிறார்கள். தமிழ்ப் படங்களின் ரீச் அதிகம். படப்பிடிப்புத் தளத்தில் யூனிட்டில் உள்ளவர்கள் கொடுத்த ஒத்துழைப்பு அதிகம். சினிமாவைத்தாண்டி இங்குள்ளவர்கள் அருமையாகப் பழகுகிறார்கள். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகும் விதம் பிடித்திருக்கிறது. ஊருக்குப் போய் பல மாதங்கள் ஆகிவிட்டது. தமிழ்நாட்டை விட்டுப் பிரியாதளவுக்கு தமிழ்ப் பாசம் அதிகமாகியுள்ளது.

எஸ்.ராஜா