தலையணை மந்திரம்!உண்மைதானே? மனைவி சொல்வது சரியாக இருந்தால் அதைக் கேட்டு நடப்பதில் என்ன தவறு இருக்கிறது? அப்படி கேட்டு நடந்த கணவர்கள் யாரும் கெட்டுப் போனதாக சரித்திரம் இல்லையே?பிரபலங்களுக்கு மட்டுமல்ல... சாதாரண மனிதர்களுக்கும் இது பொருந்தும். இதற்கு சமீபத்திய உதாரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நிகழ்ச்சி ஒன் றில், “நான் கெட்ட சிநேகிதர்களால், கெட்ட பழக்கங்கள் வைத்துக் கொண்டவன். நான் கண்டக்டராக இருந்தபோது எவ்வளவு பாக்கெட் சிகரெட் பிடித்தேன் என்பதற்கு கணக்கேயில்லை. காலையிலேயே பாயா, ஆப்பம் , சிக்கன் 65 சாப்பிடுவேன்.

சிகரெட், மது மற்றும் அசைவ உணவு என மூன்றையும் சேர்த்து சாப்பிடுபவர்கள் 60 வயதுக்கு மேல் வாழ்ந்ததே கிடையாது. இப்படிப்பட்ட பழக்கம் கொண்ட என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா. என்னை ஒழுக்கமாக மாற்றி இருக்கிறார்...’’ என்று ரஜினி பேசியது வைரலானது நினைவில் இருக்கலாம்.இதனைத் தொடர்ந்து அசைவம் உண்பது தொடர்பான வாதங்களும் எதிர்வாதங்களும் இணையத்தில் அனல் பறந்தன. அவை இங்கு தேவையில்லை.

அறிய வேண்டியதும், மனதில் கல்வெட்டாக பதிக்க வேண்டியதும் ஒன்றுதான். அது, மனைவி தன்னை நல்வழிப்படுத்தினார் என ரஜினி சொன்னதுதான்.ரஜினிகாந்த் மட்டுமல்ல, பலரது வாழ்க்கை அவர்களின் திருமணத்துக்குப் பிறகு மாறியிருக்கிறது. திருமணம் வரை ஒரு ரூட்டில் பயணித்தவர்கள், மனைவி வந்தபிறகு அவர்களின் அறிவுரைப்படி டிராக்கை மாற்றி புது ரூட்டில் பயணத்தைத் தொடர்ந்துள்ளனர். வெற்றியும் பெற்றுள்ளனர்.

அப்படி ரூட்டை மாற்றிய கணவர்களின் வரிசையில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருப்பவர் விராட் கோலி.2017ம் ஆண்டில் அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்யும் வரை விராட் கோலியின் குணமே வேறு. மைதானத்தில் சக வீரர்களை அடிக்கடி திட்டுவது, கோபத்தில் கத்துவது, அவுட் ஆகி வெளியில் செல்லும்போது பேட்டைத் தூக்கி வீசுவது, எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்வது... என்று கிரவுண்டில் அவர் செய்யாத சேட்டைகள் இல்லை. அந்தளவுக்கு ஆக்ரோஷமாக இருப்பார் விராட் கோலி.

எல்லாவற்றுக்கும் மேலாக கடவுள் நம்பிக்கை கொஞ்சம்கூட இல்லாத நபராக இருந்தார். கிரிக்கெட் போட்டிகளின்போது ஒவ்வொரு வீரருக்கும் ஒரு சென்டிமென்ட் இருக்கும். ஆனால், விராட் கோலிக்கு எந்த சென்டிமெண்டும் கிடையாது. மைதானத்துக்கு வந்தோமா ரன்களைக் குவித்தோமா என்று போய்க்கொண்டே இருப்பார்.இதற்கு உதாரணமாக ஒரு பேட்டியைச் சொல்லலாம். 2016ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன் செய்தியாளர் ஒருவர் கோலியிடம், “போட்டிகளின்போது பதற்றம் ஏற்படாமல் இருக்க தியானம், பூஜை போன்றவற்றை செய்வீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு அவரைப் பார்த்து புன்னகைத்த கோலி, ‘‘என்னைப் பார்த்தால் பூஜை செய்பவரைப் போல் இருக்கிறதா’’ என்று நக்கலாக பதில் சொன்னார். அந்த அளவுக்கு ஆன்மிகத்துக்கும் கோலிக்கும் இடையேயான தூரம் கண்டம் விட்டு கண்டமுள்ள இரு மைதான தூரம் அளவுக்கு இருந்தது.ஆனால், அனுஷ்கா சர்மாவை கரம்பிடித்த பிறகு டோட்டலாக மாறிப்போனார் கோலி. கோபம் குறைந்த கோலியை மைதானத்திலும் பிரஸ் மீட்களிலும் இப்போது பார்க்க முடிந்தது.

வழக்கமாக தனக்குப் பிடிக்காத ஏதாவது கேள்வியை செய்தியாளர்கள் கேட்டால் பிரஸ் மீட்டில் அவர்கள் மீது எரிந்து விழுவதுதான் கோலியின் வழக்கம். ஆனால், திருமணத்துக்குப் பின் முழுக்க முழுக்க சாந்த சொரூபியாக மாறினார். கடந்த 2 ஆண்டுகளாக ஃபார்ம் இழந்த நிலையில் இதைப்பற்றி செய்தியாளர்கள் விமர்சித்தாலோ, கேள்விகளைக் கேட்டாலோ கூட அமைதியாக புன்னகையுடனேயே அதை எதிர்கொண்டார்; பதில் அளித்தார்.

இது மட்டும்தான் மாற்றமா? இல்லை. மற்றொரு பெரும் மாற்றமும் திருமணத்துக்குப் பிறகு கோலிக்குள் நிகழத் தொடங்கியது. அது கடவுள் நம்பிக்கை. கோலிக்கு நேர் எதிராக கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர் அனுஷ்கா சர்மா. கோலி அவுட் ஆஃப் ஃபார்மில் ரன்களை குவிக்க திணறிக்கொண்டு இருந்த நேரத்தில் அவருக்குள் கடவுள் நம்பிக்கையை விதைத்தவர் சாட்சாத் அனுஷ்காதான். அத்துடன் அவரும் பல கோயில்களுக்கு சென்று தன் கணவருக்காக பிரார்த்தனை செய்தார்.

அனுஷ்காவின் வேண்டுதலோ அல்லது கோலியின் திறமையோ... ஏதோ ஒன்று, கிரிக்கெட் உலகில் மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார் விராட் கோலி. ஆம். கடந்த சில மாதங்களாக பழைய பன்னீர்செல்வமாக மாறி மைதானத்தில் எதிரிகளைப் பந்தாடி வருகிறார். இதையெல்லாம் ரசிகர்கள் லைவ் ஆக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
அதேசமயம். நாம் பார்க்காத ஒன்றும் அரங்கேறி வருகிறது.

போட்டிக்குப் பிறகு பார்ட்டிகளுக்குப் போவது, நண்பர்களுடன் சந்தோஷமாக இருப்பது... என்பவைதான் கோலியின் கடந்தகால வழக்கம். இப்பொழுதோ ஓய்வு நேரங்களில் மனைவியுடன் கழிக்கிறார். ம்ஹும். ‘அந்த’ அர்த்தத்தில் அல்ல. அனுஷ்கா சர்மாவுடன் கரம் கோர்த்தபடி கோயில் கோயிலாக ஏறி இறங்குகிறார். ஆலயம் தொழுவது சாலமும் நன்று என்கிறார்! 

தயானந்த சரஸ்வதி ஆஸ்ரமம், நீம் கரோலி பாபா கோயில், உஜ்ஜயினி மாகாளி கோயில்... என கோலியும் அனுஷ்கா சர்மாவும் தம்பதி சமேதராக வாரா வாரம் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரம் எந்தக் கோயிலிலும் விஐபி தரிசனத்தை மேற்கொள்வதில்லை. மாறாக மக்களோடு மக்களாக வரிசையில் நின்று கடவுளை வணங்குகின்றனர்.விராட் கோலியின் இந்த மாற்றத்துக்கு அவரது காதல் மனைவி அனுஷ்கா சர்மாதான் காரணம் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி சிக்ஸரைப் போன்றது.

கோலி அவுட் ஆஃப் ஃபார்மில் இருந்த காலத்தில், தனது வேண்டுதல்களும், கடவுள் நம்பிக்கையும் அவரை மீட்டுவரும் என்று உறுதியாக தன் கணவரிடம் அனுஷ்கா சொன்னாராம். அப்போது விராட் கோலி அதை நம்பவில்லையாம். கிண்டல் கூட செய்தாராம். ஆனால், மீண்டும், தான் ஃபார்முக்கு வந்ததும் அனுஷ்காவின் நம்பிக்கையை தன்னுடைய நம்பிக்கையாக மாற்றிக் கொண்டாராம்.

இப்படி ‘ராம்’, ‘ராம்’ என ஏகப்பட்ட வாக்கியங்களை முடிக்கும் அளவுக்கு உதாரணங்களை அடுக்குகிறார்கள் கோலியின் நண்பர்கள். இதனால் உணரப்படும் நீதி, கடவுள் பக்தி அல்ல; அல்லது அதுமட்டுமே அல்ல. மனைவி சொல்வது சரியாக இருந்தால் அதை கேள்வி கேட்காமல் பின்பற்ற வேண்டும். கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்... என்பதுதான் நீதி!

என்.ஆனந்தி