முன்னாள் ஊழியரிடம் எதற்காக எலன் மஸ்க் மன்னிப்பு கேட்டார்?



இந்த வினாதான் உலகம் முழுக்க வைரலாக கேட்கப்பட்டது. அதற்கான பதிலும் கிடைத்திருப்பதுதான் சென்ற வார இணைய டிரெண்டிங்.டுவிட்டர் நிறுவனத்தின் மூத்த இயக்குனராக இருந்தவர் ஹல்லி தோலிஃப்சன்.
சென்ற வாரம் இவர் எலன் மஸ்க்கை tag செய்து, ‘‘ஒன்பது நாட்களுக்கு முன் நிறுவனத்தில் நான் பயன்படுத்தி வந்த கணினி வேலை செய்யாமல் நின்றது. சட்டென ‘நான் வேலையில் இருக்கிறேனா இல்லையா’ என சந்தேகம் வந்தது. இதை எச்.ஆரால் உறுதி செய்ய முடியவில்லை. உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். நீங்கள் எனது இ-மெயில்களுக்கு பதிலளிக்கவில்லை. அதனால் டுவிட்டரில் உங்களை tag செய்து கேட்கிறேன்...’’ என டுவிட் போட்டார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக மஸ்க், ‘‘நீ என்ன வேலை செய்துகொண்டிருந்தாய்?’’ எனக் கேட்டார்.அதற்கு ஹல்லி, ‘‘நான் இந்த கேள்விக்கு இங்கு பதிலளித்தால் நிறுவனத்தின் ரகசியத் தன்மையை உடைப்பது போலாகும். அதாவது நிறுவனத்தின் ரகசியத்தை உடைப்பது போன்ற தோற்றத்தையே எனது பதில் அளிக்கும். எனவே உங்கள் வழக்கறிஞர் எழுத்துபூர்வமாக உறுதியளித்தால் என்னால் அதனைச் செய்ய முடியும்...’’ என்றார்.

உடனே எலன் மஸ்க், ‘‘புரிகிறது... சொல்லுங்கள்...’’ என்றார்.இதனைத் தொடர்ந்து வேலைக்கு சேருவதற்கான நேர்காணல் போல, தான் செய்த வேலைகளை விளக்கினார் ஹல்லி.
இப்படி இன்டர்வியூ செய்வது போலவே மஸ்க்கும் கேள்விகளைக் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இவை அனைத்தும் டுவிட்டர் என்ற சமூக ஊடகத்தில் எல்லோரும் படிக்கும்படியாக நடந்தது என்பதுதான் ஹைலைட்.

யார் இந்த ஹல்லி தோலிஃப்சன்?

ஐஸ்லாந்தைச் சேர்ந்தவர். வயது 45. தொழில்முனைவர். 2021ல் Ueno டிசைன் என்ற தனது நிறுவனத்தை டுவிட்டருக்கு விற்றுவிட்டு அங்கு முழுநேர ஊழியராக பணியாற்றத் தொடங்கியவர்.

இவர்கள் இருவரது டுவிட் உரையாடலும் வைரலானது. அதில் மோஸ்ட் வைரல் ஆனது எலன் மஸ்க், ஒரு கட்டத்தில் தன்னையும் மீறி பதித்த டுவிட்.

‘‘இவர் ஒரு சுதந்திரமான செல்வந்தர். எந்த வேலையும் செய்யாமல் தனது இயலாமையை (மாற்றுத்திறன்) சாக்காகக் கூறி பணி செய்யாமல் தப்பிப்பவர்...’’ என டுவிட் போட்ட மஸ்க், கூடவே, ‘‘இதற்காக அவருக்கு அதிக மரியாதை கிடைக்கும் எனக் கூறிவிட முடியாது...’’ என பதிவிட்டார்.அவ்வளவுதான். நெட்டிசன்கள் பொங்கிவிட்டார்கள்.

பணியாளரை வேலையில் அமர்த்துவதும் நீக்குவதும் நிறுவனம் தொடர்பானது. அதற்காக மாற்றுத்திறனாளியை பொதுவெளியில் கிண்டலடிப்பதா... என ஈரேழு உலகில் இருந்தும் டுவிட் போட்டு இணையவாசிகள் எலன் மஸ்க்கை காய்ச்சி எடுத்துவிட்டார்கள்.

சில மணி நேரத்துக்குப் பிறகு மஸ்க் மீண்டும் டுவிட்டரில், தான் ஹல்லியின் நிலைமையை தவறாகப் புரிந்துகொண்டதற்கு மன்னிப்பு கேட்பதாக டுவிட் செய்தார்.
நெட் ரிசல்ட் என்ன..? ஹல்லி வேலையில் இருக்கிறாரா இல்லையா?

டுவிட்டரில் இருந்து ஹல்லியை அப்போது நீக்கியது உண்மை. போலவே மீண்டும் அவரை டுவிட்டர் நிறுவனத்தில் சேரச் சொல்லி வேண்டுகோள் வைத்திருப்பதும் நிஜம்.ஹல்லி என்ன செய்யப் போகிறார் என்பது இனி வரும் நாட்களில் தெரிந்து விடும்.

ஜான்சி