மாஸ் உபேந்திரா, மகாராணி ஸ்ரேயா...



என்னதான் ஆணுக்கு நிகர் பெண் என சொல்லிக் கொண்டாலும், சினிமாவைப் பொறுத்தவரை ஹீரோக்களுக்கு கிடைக்கும் லைஃப்டைம் ஸ்டார் அந்தஸ்து ஹீரோயின்களுக்கு அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை.அதையும் தாண்டி திருமணம், குழந்தை என ஆனபின்னும் கூட தனக்கான ஸ்டார் அந்தஸ்தை இன்றளவும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா சரண்.
ஒரு வருடம் கூட இடைவெளி இல்லாமல் நடித்துக் கொண்டிருக்கும் ஸ்ரேயா, இதோ சென்ற வருடம் ‘த்ரிஷ்யம் 2’ இந்திப் படம் , ‘ஆர் ஆர் ஆர்’ என ஆஸ்கர் வரை மாஸ் காட்டி, இதோ அடுத்து கன்னட சினிமாவிலிருந்து பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் ‘கப்ஜா’ படத்தில் மகாராணி கெட்டப்பில் கெத்து காட்டுகிறார்.

எப்படி இருக்கீங்க? ராதா நலமா?

ஹாப்பியான நடிகையா மட்டும் இல்லாம ரொம்ப சந்தோஷமான அம்மாவாகவும் இருக்கேன். ராதாவுக்கு இப்ப ரெண்டு வயசு. துறுதுறுனு வாலுத்தனம் பண்றா. நானும் ஆண்ட்ரெயும்
( கணவர் ஆண்ட்ரெய் கொஸ்சீவ்) அவளைப் பார்த்துக்கவே தனியா எனர்ஜி பூஸ்ட் எடுத்துக்கணும் போல.

கொரோனா வேளையிலும் கூட உங்களுடைய படங்கள் வெளியானதே?

நீங்க கொடுத்த அன்புதான் அதற்கு காரணமா சொல்வேன். தொடர்ந்து நடிச்சிட்டே இருக்கணும்; தொடர்ந்து என் வேலையை நான் லவ் பண்ணணும் அப்படிங்கற ஆர்வத்தையும் ஆசையையும் தூண்டினது நீங்கதான். என் வேலையை நான் ரொம்ப நேசிக்கறேன். ஒரு சின்ன பிரேக் கூட எடுத்துடக் கூடாதுன்னு நினைச்சேன். அதனால்தான் எந்த வருஷமும் நான் இடைவேளை விடல.

கருத்தரிப்பு, குழந்தைப் பேறு, குழந்தை பிறப்பு... இதெல்லாம் ஏன் திட்டமிட்டு மறைச்சீங்க?

நான் வேலை செய்யறது விஷுவல் மீடியம்ல. என்னுடைய லுக்கும், வெளிப்புறத் தோற்றமும்தான் என்னுடைய வேலைக்கு முதல் ஆயுதம். குறிப்பா எந்த மன அழுத்தமும், பிரஷரும் இல்லாம என்னுடைய தாய்மையை நான் சந்தோஷமா அனுபவிக்க நினைச்சேன். யாருக்கும் பதில் சொல்லாம நான் நானாகவே டெலிவரி காலத்தில் உருவாகற எடை அதிகரிப்பு, என்னுடைய தோற்றத்தில் மாற்றம், இதெல்லாம் மகிழ்ச்சியான தருணமா பார்க்கணும்னு முடிவு செய்தேன்.

இன்னும் சொல்லணும்னா நான் என்னுடைய குழந்தை பற்றியோ அல்லது என்னுடைய டெலிவரி பத்தியோ பேச ஆரம்பிச்சா எனக்கு பட வாய்ப்புகள் குறைஞ்சிடுமோ என்கிற பயமும் இருந்துச்சு. எனக்கு மட்டுமில்ல, சினிமா, சீரியல் ஆர்ட்டிஸ்ட், ஏன் ஆங்கரிங் செய்யறவங்களுக்கும்கூட இந்த தயக்கம் இருக்கும்.

‘த்ரிஷ்யம் 2’, ‘ஆர் ஆர் ஆர்’, இப்போது ‘கப்ஜா’... நடித்தால் பான் இந்தியா படம் தான்னு முடிவு எடுத்துட்டீங்களா?

நடிச்சா நல்ல கதையில, குறிப்பா எனக்கு முக்கியத்துவம் இருக்கற படத்துல நடிக்கணும்னு முடிவு செய்தேன். அப்படி எடுத்த முடிவு என்னை பான் இந்தியா படங்களுக்கு சொந்தக்காரியாக்கிடுச்சு. அதிலும் ‘ஆர் ஆர் ஆர்’, கோல்டன் குளோப், ஆஸ்கர் விருதுவரை போயிருக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

‘கப்ஜா’ படம் பற்றியும் உங்கள் கேரக்டர் பற்றியும் சொல்லுங்க?

என்னுடைய கேரக்டர் பெயர் மதுமதி. நான் இந்தப் படத்தில் மகாராணியா நடிச்சிருக்கேன். பிரம்மாண்டமா, பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கற படம் இது. டைரக்டர் சந்துரு சார் பார்த்துப் பார்த்து ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருக்கார்.சுதீப் சாருக்கும் சிவராஜ் சாருக்கும் கெஸ்ட் ரோல்தான். ஆனாலும் மாஸ் கெஸ்ட் ரோல். எனக்கு உபேந்திரா சார் கூடதான் நடிக்க வாய்ப்பு கிடைச்சது.

‘நமாமி... நமாமி...’ பாடல் டான்ஸ்ல கலக்கியிருக்கீங்களே..?

டைரக்டர் ஆர்.சந்துரு சார், கோரியோகிராபர் சின்னி பிரகாஷ்... இவங்க ரெண்டு பேருக்கும் நான் இந்தப் பாடலுக்காக நன்றி சொல்லணும். இந்தப் பாடல் ஷூட் செய்யும் பொழுது எனக்கு சைனஸ், ஜலதோஷம், தலைவலி. சுத்தமா உடம்பு சரியில்ல. ஆனாலும் எனக்கு உற்சாகம் கொடுத்து, அந்தப் பாடலை அவ்வளவு அழகா உருவாக்கி இருக்காங்க. ரவி பஸ்ரூர் மியூசிக்ல அத்தனை மொழிகளிலும் இந்த பாட்டு ரொம்ப நல்லா வந்திருக்கு.

மீண்டும் நேரடி தமிழ்ப் படத்தில் எப்பொழுது ஸ்ரேயா சரணை பார்க்கலாம்?

என்னைப் பொறுத்த வரைக்கும் மொழி தடையே கிடையாது. எனக்கு நடிக்கப் பிடிக்கும், அது எந்த மொழியா இருந்தாலும் ஓகே. அதேசமயம் எனக்கு தமிழ் சினிமா ரொம்ப பெரிய அந்தஸ்து கொடுத்துச்சு. நான் நினைச்சுப் பார்க்க முடியாத அங்கீகாரம் எல்லாம் தமிழ் சினிமா மூலமாகத்தான் கிடைச்சது. நிச்சயமா நேரடித் தமிழ் படம் நடிக்க காத்துக்கிட்டு இருக்கேன்.

கன்னட டாப் ஸ்டார் உபேந்திரா உடன் நடித்த அனுபவம்..?

ரொம்ப வருஷமா உபேந்திரா சார் கூட ஒரு படத்தில் நடிக்கணும்ன்னு ஒரு ஆசை இருந்துச்சு. அது இப்ப பூர்த்தி ஆகியிருக்கு. ரொம்ப பெரிய ஸ்டார், அரசியலிலும் பிசியா இருக்கார். ஆனாலும் எந்த பந்தாவும் இல்ல. செம ஃபிரெண்ட்லியான நபர். ஸ்கிரீன் முன்னாடி வந்துட்டா அந்த கேரக்டர் ஆகவே இருப்பார்.ஸ்ரேயா பேசி முடித்ததும் கன்னட வாசனையுடன் தமிழில் ‘வணக்கம்’ என்றபடி வந்தார் கன்னட டாப் ஸ்டார் உபேந்திரா.

உங்களையும் இந்த பான் இந்தியா பூதம் விட்டுவைக்கவில்லையா?

இந்தியா முழுக்கவே எல்லா மொழிகளிலும் நல்ல நல்ல படங்கள் வந்துட்டுதான் இருந்துச்சு. இப்ப படம் பார்க்கற வாய்ப்புகள் அதிகரிச்சதுக்கு காரணம் ஓடிடி. அதனால ஒரு படம் உருவாகும் போதே இந்திய மக்களுக்கான படமா யோசிக்க வேண்டிய கட்டாயம். இதற்கான ஒரு பெயர்தான் பான் இந்தியா.

இயக்குநர், நடிகர், அரசியல்வாதி... உபேந்திரா யார்..?

ஒவ்வொரு உபேந்திராவும் அந்தந்த கேரக்டரில் அவங்கவங்க வேலை செய்துட்டு ரொம்பவே பிஸியா இருக்காங்க. இப்போதைக்கு நடிகர் உபேந்திரா
‘கப்ஜா’ பிஸியிலே இருக்கார்.

உங்க கேரக்டர் பத்தி சொல்லுங்க..?

இந்தப் படத்துல நான் ஒரு விடுதலைப் போராட்டத் தியாகியின் மகனா நடிச்சிருக்கேன். கூடவே ஒரு ரவுடியாவும் இருக்கேன். ஒரு விடுதலைப் போராட்டத் தியாகியுடைய மகன் ரவுடியானது எப்படி... அதற்குப்பின்னாடி இருக்கிற கதை என்ன... இந்த ஆர்கேஸ்வரா யார்... இதுதான் கதைக்களம்.

கன்னட சினிமா எப்ப முழிச்சிக்கிட்டதுன்னு நினைக்கிறீங்க?

இப்ப ஒரு சினிமாவை பார்க்கணும்னா பெரிதா மெனக்கெட வேண்டியதில்ல. கையிலே இருக்கற மொபைல்லயே படம் பார்க்கலாம். அதனால ஒவ்வொரு மொழியிலும் இருக்கற ஸ்டார்கள் பத்தியும் மக்கள் இன்டர்நெட் மூலமாக தெரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அந்த ஸ்டார் அந்தஸ்தையும் தக்க வச்சிக்க வேண்டிய கடமையும் வந்துடுச்சு.
அதனாலயே அந்தந்த மொழிக்கு படம் உருவாக்கினாலும், நடிக்கும் நடிகர்கள் பொறுத்து, பட்ஜெட், டெக்னீசியன்கள் அடிப்படையிலே பெரிய படங்கள் எடுக்கும்பொழுதே மத்த மொழிகளுக்கும் டப்பிங் செய்கிற கடமையும் இப்ப சேர்ந்திடுச்சு.

வட இந்திய - தென்னிந்திய சினிமான்னு ஒரு புது பிரிவு உருவாகி இருக்கே..?

அதை உடைக்கிறதுக்குதான் பான் இந்தியா அப்படிங்கிற டேக் லைன் உதவி செய்துட்டு இருக்கு. ஆனா, கடைசியில் ஜெயிக்கறது நல்ல கன்டென்ட், நல்ல கதை கொண்ட படங்கள்தான். மொத்தத்துல மக்களை சந்தோஷப்படுத்தற முக்கியமான மீடியத்துல சினிமாவுக்கு முதல் இடம். அதிலேயும் நாம அந்த மொழி, இந்த மொழி ,வட இந்தியா, தென்னிந்தியா இப்படியான பிரிவுகள் வேண்டாம்ன்னு நினைக்கிறேன்.

தமிழில் ‘சத்யம்’ படத்திற்கு அப்புறம் உங்களைப் பார்க்கவே முடியலையே?

இந்தக் கேள்வியை நானும் தமிழ் சினிமா இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள்கிட்ட கேட்கணும். நல்ல கேரக்டர், நல்ல படமா இருந்தா நிச்சயம் நடிக்க காத்துகிட்டு இருக்கேன்.
‘கப்ஜா’ கிட்டத்தட்ட இன்னொரு ‘கேஜிஎஃப்’ மாதிரியே தெரியுதே?

இல்ல. அந்தப் படம் அதனுடைய களத்துல பெஸ்ட்; இந்தப் படம் இதனுடைய களத்தில் பெஸ்ட்டா இருக்கும். ரெண்டுமே நீங்க படம் பார்க்கும்பொழுது வேறு வேறு படமாதான் ஃபீல் தரும்
ஒரே படத்தில் மல்டி ஸ்டார்... இது எப்படி சாத்தியமாச்சு?

ஷிவ்ராஜ்குமார், சுதீப் ரெண்டு பேருமே ரொம்ப ஃப்ரெண்ட்லியா அவங்கவங்க போர்ஷனை சின்ன ரோலா இருந்தாலும் மாஸ் ரோலா செய்திருக்காங்க. உண்மைய சொல்லணும்னா தயாரிப்பாளர்களுக்கு ஒரு மூணு பிக் ஸ்டார்களை வைத்து படம் எடுக்கற அளவுக்கு அவங்களால பணம் கொடுக்க முடிஞ்சா நிச்சயம் இந்தியா முழுக்கவே மல்டி ஸ்டார் படங்கள் நிறைய வரும்.

உங்க அடுத்தடுத்த படங்கள்..?

நீங்க கேட்ட உபேந்திரா ஸ்பெஷல் படமா அடுத்து ‘யுஐ’ ரிலீஸ் ஆகும். தொடர்ந்து ‘த்ரிசூலா’, ‘புதிவந்தா’ படங்களின் வேலைகள் போய்ட்டு இருக்கு. கூடிய சீக்கிரம் அறிவிப்புகள் வரும்.

ஷாலினி நியூட்டன்