ஒரு மனிதனை சாதி எந்தளவுக்கு சீரழிக்கும்னு இந்தப் படம் சொல்லும்...



பரபரப்புக்கு பஞ்சமில்லாத கோடம்பாக்கத்தில் ‘‘என் மகன் விஜய்யை பள்ளியில் சேர்க்கும்போது விண்ணப்பத்தில் மதம், சாதி என்கிற இடத்தில் தமிழன் என்று குறிப்பிட்டேன். அப்போதிருந்து விஜய்யின் சான்றிதழில் சாதி என்கிற இடத்தில் தமிழன் என்றுதான் தொடர்ந்து வருகிறது...’’ என்ற உண்மையை ஒரு மேடையில் போட்டு உடைத்தார் இயக்குநரும் விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர்.
 அந்த மேடை ‘சாயம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா. படத்தின் இயக்குநர் அந்தோணிசாமியிடம் பேசினோம்.படத்தோட போஸ்டரில் அரசியல் நெடி தூக்கலா இருக்குதே?எல்லாருமே அப்படித்தான் நினைக்கிறாங்க. இது அரசியல் படம் இல்ல.

முதல் பார்வை வெளியிட்ட போது ‘அதில் ஏன் எங்க கட்சி கொடியை பயன்படுத்தினீங்க’ன்னு தமிழகத்தில் உள்ள சில கட்சியினர் மிரட்ட ஆரம்பிச்சாங்க. ‘சாதிகள் இல்லையடி பாப்பா’னு பாரதி பாடினார். ஆனால், நம் நாட்டில் சாதிகளுக்கு பஞ்சமில்லை. சினிமா, அரசியல் என எல்லா இடங்களிலும் சாதி தலைவிரித்து ஆடுகிறது. சில காலங்களுக்கு முன் நேரடியாக சாதி வெளிப்பாடு இருந்தது. இப்போது மறைமுகமாக சாதிப் பாசத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

மாணவர்களிடையே சாதி அடையாளம் வேண்டாம் என்று சொல்வதுதான் படம். சாதிச் சாயம் பூசப்பட்ட மாணவனின் கதை இது. நட்பை பெரிதாக நினைக்கும் ஒருவனுக்கு சாதி பெரிதாகத் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் சாதி அவனுக்கு பெரிதாகத் தோன்றும்போது நட்புக்கு துரோகம் பண்ணுகிறான். சாதியால் அவன் வாழ்க்கை எப்படியெல்லாம் திசை மாறுகிறது என்பதை பொதுப் பார்வையில் சொல்லியிருக்கிறேன்.பெரியார், காமராஜர், முத்துராமலிங்கத் தேவர், அம்பேத்கர் என்று அரசியல் தலைவர்கள் வசனத்துல வந்து போவார்கள்.

என்னுடைய முதல் படத்தை காதல் படமாகவோ, பேய்ப் படமாகவோ எடுத்து சேஃப் ஆகியிருக்க முடியும். இந்தக் கதை பண்ணுவதற்கு காரணம், தலைநகரத்திலும் சில முக்கிய கல்லூரிகளில் சாதி இருக்கிறது. இதை நான் நேரடியாகப் பார்த்தும் இருக்கிறேன். நண்பர்கள் அனுபவித்ததை சொல்லக் கேட்டும் இருக்கிறேன். இதே நிலை தமிழ்நாட்டில் உள்ள பல கல்லூரிகளிலும் இருக்கிறது. மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும், படிக்கும்போது சாதி அரசியல் பார்க்க வேண்டாம் என்பதை பக்கா கமர்ஷியல் ஃபார்மூலாவில் சொல்லும் படம் இது.

உங்க ஹீரோ அபிசரவணன்  என்ன சொல்றார்?

சார் , சின்ன திருத்தம். இப்ப என்னுடைய ஹீரோ விஜய் விஷ்வா என்று தனது பெயரை மாற்றிக்கொண்டுள்ளார். நாங்கள் நண்பர்கள் இல்லையென்றாலும் இருவருக்குமிடையே நீண்ட நாள் பழக்கம் உண்டு. அவர் நடித்த ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’, ‘பட்டதாரி’, ‘மாயநதி’ படங்களைப் பார்த்திருக்கிறேன்.

என்னுடைய தொடர்பு எல்லைக்குள் விஜய் விஷ்வா இருந்தாலும் இந்தக் கதைக்கு அவர் அந்நியமாக இருந்ததால் அவருக்கு வாக்கு கொடுக்கவில்லை. விஜய் விஷ்வாவோ கேரக்டருக்காக தன்னை மாற்றிக் கொண்டு வந்தார். நடிப்புக்கு நேர்மையாக இருக்கிறார். இதுல ஃப்ரேம் லுக், ஆக்‌ஷன்னு நிறைய இடத்துல ஸ்கோர் பண்ணியிருக்கிறார்.

நாயகி சைனி. விஜய் ஆண்டனி நடித்த ‘இந்தியா பாகிஸ்தான் படம் பண்ணியவர். சொல்லப்போனால் இதுல அவங்களுக்கு ஸ்கோப் கம்மிதான். ஆனா, மனசுல இடம் பிடிக்குமளவுக்கு மேஜிக் பண்ணியிருப்பார்.

இவர்களுடன் பொன்வண்ணன், சீதா, இளவரசு, போஸ் வெங்கட், பெஞ்சமின், தென்னவன், எலிசபெத், செந்தி, ஆதேஷ் பாலா நடித்துள்ளனர். எல்லாரும் சீனியர் ஆக்டர்ஸ் என்பதால் என்னுடைய வேலை எளிதாகிவிட்டது. பாடல்கள் எப்படி வந்திருக்கு?நாகா உதயன் மியூசிக். ஆர்க்கெஸ்ட்ரா பேக்ர வுண்ட் உள்ளவர். எல்லா பாடல்களும் கதைக்குள் வரும் என்பதால் ரசிகர்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன். பாடல்களை யுகபாரதி, விவேகா, அந்தோணிதாசன், பொன் சீமான் எழுதியுள்ளனர்.

படத்துக்கு இரண்டு கேமராமேன்கள்-சலீம், கிறிஸ்டோபர். காரைக்குடி, தேவகோட்டை, வால்பாறை, மேல்மருவத்தூர்னு சுத்தி சுத்தி எடுத்திருக்கோம். படத்துல வேலை பார்த்த டெக்னீஷியன்ஸ் அனைவரும் அனுபவசாலிகள் என்பதால் தி பெஸ்ட் கொடுத்திருக்காங்க. உங்க சினிமா பயணம் எப்படி ஆரம்பித்தது?‘என் சோகக் கதைய கேளு தாய்க்குலமே’னு பாடாத குறைதான். அந்தளவுக்கு என்னுடைய சினிமா டிராவலில் டிராஜடி அதிகம். எனக்கு சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் அரசத்தூர்.

விவசாயக் குடும்பம். சினிமாவுக்கு அழையா விருந்தாளியாகத்தான் வந்தேன். ‘போதிமரம்’ படத்துல நடிக்க கூப்பிட்டாங்க. அது என்னுடைய நண்பருடைய படம். நட்புக்காக உதவி செய்ய வந்தேன். அது என்னை உபத்திரவத்துல மாட்டிவிட்டு சினிமாவில் எல்லா வேஷத்தையும் போட வைத்துவிட்டது. நஷ்டங்களை சந்தித்தேன். அப்படியே சினிமாவையும் கத்துக்கிட்டேன்.  சினிமாவுக்கு வந்து பத்து வருடம் ஆகிய நிலையில் தயாரித்து இயக்குநராகியிருக்கிறேன்.

மூத்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் என்ன சொன்னார்?இயக்குநர் எஸ்.ஏ.சி. சார் படங்கள் எனக்கு பிடிக்கும். அவருடைய படங்கள் சமூக அக்கறையோடு இருக்கும். விழாவுக்கு அழைத்தபோது, ‘சமூகத்திற்கு பயன்தரும் விதமான படங்களை எடுப்பவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்...’ என்று உற்சாகமாக வாழ்த்தினார்.

எஸ்.ராஜா