ரஜினி கமல் விஜய் மகேஷ் பாபு படங்களின் விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர்... இன்று முழுப் படத்தை டைரக்ட் செய்திருக்கிறார்!
ஐம்பது படங்களுக்கு மேல் விஷுவல் எஃபெக்ட்ஸ் செய்த அனுபவத்துடன் ‘திருடன் போலீஸ்’, ‘உள்குத்து’, ‘கண்ணாடி’ ஆகிய படங்களை இயக்கி முடித்திருக்கும் கார்த்திக் ராஜு, அடுத்தபடியாக ‘சூர்ப்பனகை’ என்னும் ஃபேன்டஸி படத்துடன் ‘ஹாய்’ சொல்கிறார்.‘சூர்ப்பனகை’னு பெயர் வைக்க என்ன காரணம்..? எந்த வரலாறையும் நான் கன்ஃபியூஸ் பண்ணிக்கவே இல்ல. அந்த கேரக்டருடைய குண நலன்களை மட்டும் எடுத்துக்கிட்டேன். சூர்ப்பனகைக்கு உள்ளேயும் ஒரு ஹீரோயினும் வில்லியும் இருக்காங்க. தனக்கு சரி என்று பட்டதை மட்டுமே அவங்க செய்திருக்காங்க. இந்த அடிப்படைல கதை இருந்ததால அந்தப் பெயரை சூட்டியிருக்கோம்.
அவங்களுக்குள்ள இருந்த அழகான காதல், அந்தக் காதலுக்காக அவங்க எந்த எல்லைக்கும் தைரியமா சென்றது... இந்த பேஸிக்கை மட்டும்தான் எடுத்திருக்கோம். படத்தின் நாயகி ரெஜினாவின் கேரக்டர் ஸ்கெட்ச் இதுதான். ரெஜினா பத்தி சொல்லுங்க? ‘கண்ணாடி’ படத்தோட தெலுங்கு வெர்ஷன்ல வேலை செய்துட்டு இருந்தப்ப ரெஜினா நடிச்ச ‘எவ்வரு’ படம் வெளியாச்சு. அந்த தெலுங்குப் படத்துல அவங்க ஏற்றிருந்த கேரக்டர் என்னை இம்ப்ரஸ் செய்தது.உண்மையை சொல்லணும்னா ‘சூர்ப்பனகை’ எழுதறப்பவே மனசுல ரெஜினாதான் வந்து நின்னாங்க.
திறமையான ஆர்ட்டிஸ்ட். முழுசா கதையைக் கேட்டாங்க. சீன் பை சீன் வாசிச்சுட்டுதான் ஸ்பாட்டுக்கு வருவாங்க. டேக்குக்கு போறதுக்கு முன்னாடி ‘இந்த டயலாக் எதுக்கு... இதை நான் ஏன் சொல்லணும்...’னு எல்லாம் நிறைய கேள்விகள் கேட்பாங்க. நாம சொல்ற பதில் கன்வின்சிங்கா இருந்தாதான் டேக்குக்கு ரெடியாவாங்க. படத்தின் கதை..? படத்துல ரெஜினா ஆர்க்கிடெக்ட். அவங்களைச் சுற்றி நடக்கிற ஃபேன்டஸி விஷயங்கள்தான் படம். தமிழ், தெலுங்கு இரண்டிலும் ஒரே சமயத்தில் எடுத்திருக்கோம். ஒவ்வொரு காட்சியையும் தமிழ், தெலுங்குல மாறி மாறி ஆன் த ஸ்பாட் பேசி ரெஜினா அசத்தினாங்க.
தெலுங்குல கிஷோர் நடிக்கிற கேரக்டரை தமிழில் மன்சூர் அலிகான் செய்திருக்காரு. சின்னச் சின்ன மாற்றங்கள் கேரக்டர்கள்ல இருக்கும். குறிப்பா தெலுங்குல கிஷோர் சார் சீரியஸ் & மாஸ். இங்க மன்சூர் சார் காமெடி & மாஸ். சில வரலாற்றுக் கதைகளையும் தொட்டிருக்கோம். குறிப்பா ஒளரங்கசீப் சார்ந்த சில காட்சிகள்.
சிறந்த பொழுதுபோக்குப் படமா உருவாக்கியிருக்கோம். குடும்பமா வந்தா ஜாலியா என்ஜாய் பண்ணலாம். 50 படங்களுக்கு மேல் விஷுவல் எஃபெக்ட்ஸ் செய்திருக்கீங்க... அத்தனையும் மாஸ் படங்கள்... அதை மிஸ் பண்றோம்னு வருத்தப்படறீங்களா? இல்ல. இயக்குநர் ஆகணும் என்பது என் கனவு. அதுக்கு விஷுவல் எஃபெக்ட்ஸ் வேலை பக்கபலமா இருந்தது. விஜய்க்கு மட்டுமே 11 படங்கள் செய்திருக்கேன். தெலுங்குல மகேஷ் பாபு கூட... அப்புறம் ‘படையப்பா’, ‘தசாவதாரம்’ படங்கள்ல விஎஃப்எக்ஸ் செய்ததை எல்லாம் எப்படி வாழ்க்கைல மறக்க முடியும்? அந்த அனுபவம்தான் இன்னைக்கு இயக்குநர் நாற்காலி கொடுத்திருக்கு. ஒரு டெக்னீஷியனாக ஒரு படம் இயக்கும்போது அதிலுள்ள பிளஸ் என்ன? இந்தப் படமே கிராஃபிக்ஸ் வேலைகள் அதிகம் இருக்கிற படம்தான். அதனால எனக்கு என்ன தேவைங்கறதை என்னால் கேட்டு வாங்க முடியுது. விஷுவல் எஃபெக்ட்டா என் வேலை போஸ்ட் புரடக்ஷனில்தான் இருக்கும். அப்படி ஒரு படத்தை முழுமையாக வெளிய கொண்டு வருகிற குழுவில் நான் இருந்ததால இப்ப என்னால ஒரு முழுமையான படத்தை கொடுக்க முடியுது. படத்தின் மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் பற்றி சொல்லுங்க..?
ஹீரோயின் ரெஜினா, தமிழில் மன்சூர் அலிகான், தெலுங்கில் கிஷோர், அக்ஷரா கவுடா... இவங்கல்லாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காங்க. படத்தில் ஒவ்வொருவருக்கும் டபுள் டபுள் ரோல். ஏன் எதுக்குனு படம் பார்க்கும்போது புரியும். இசை, சாம் சி.எஸ். படத்துல சில காட்சிகள்ல பீரியாடிக்காக வரும் அந்த சண்டைக் காட்சிகளை அழகா கோரியோகிராஃப் செய்திருக்கார் சூப்பர் சுப்பராயன் மாஸ்டர். ராஜ்சேகர் வர்மா படத்தை தயாரிச்சிருக்கார்.
தியேட்டர் ரிலீஸ்னு முன்னாடியே முடிவு செய்துட்டீர்களா? எங்க நேரம் தியேட்டர்கள் ஓபன் ஆகிடுச்சு. இந்தப் படம் முழுக்க முழுக்க தியேட்டர் அனுபவத்திற்காக எடுத்த படம். ஆனாலும் ஓடிடியை குறை சொல்ல முடியாது. அது இன்னொரு வகையான அப்டேட் டெக்னாலஜிதான். ஆனாலும் தியேட்டருக்கு வரும் மவுசு குறையவே குறையாது.
ஷாலினி நியூட்டன்
|