உலகம் சுற்றும் 70 வயது பேராசிரியை!
‘‘ஒராங்குட்டனுடன் கை குலுக்கல், பாண்டா கரடியுடன் செல்ஃபி, ராஜநாகத்துடன் மல்லுக்கட்டு...’’ இப்படித்தான் சுதா மகாலிங்கத்தின் புகைப்படங்களைப் பார்க்கும்போது நம்மைச் சொல்ல வைக்கிறது.
வரலாற்றுப் புத்தகங்களில் மட்டுமே நாம் கேள்விப்பட்ட இன்கா நாகரிகம் முதல் ஆஸ்திரேலியாவின் பவளப்பாறைகள் வரை இவரது கால்தடம் பதியாத இடங்களே இல்லை. காடுகள், மலைகள் என கடந்த 25 வருடங்களில் 66 நாடுகளைச் சுற்றிப்பார்த்துவிட்டார். அத்துடன் இவர் எழுதிய 400 பயணக் கட்டுரைகள் அவரது ஃபுட்லூஸ்இண்டியன். காம்(footlooseindian.com) என்ற வலைத்தளத்தில் நம்மை மிரட்டுகிறது. இதை ‘ட்ராவல் காட் மஸ்ட் பி கிரேசி (Travel God Must Be Crazy)’ எனும் புத்தகமாகவும் பதிப்பித்திருக்கிறார். இன்று பெங்களூருவில் உள்ள ராஜாராமண்ணா மேலாய்வு நிறுவனத்தில் பேராசிரியையாக இருக்கிறார். 70 வயதான சுதாவை அலைபேசியில் பிடித்தோம். ‘‘அப்பாவுக்கு லால்குடி பக்கம். அம்மா கும்பகோணம். இந்த இரண்டு ஊர்களைப் பற்றி எனக்கு பெரிதாகத் தெரியாது. நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில்தான். அதனால் சென்னை கொஞ்சம் அத்துப்படி. எனது கணவர் அரசு வேலையில் இருந்தார். அவர் வேலை நிமித்தமாக ஊர் விட்டு ஊர் மாறும்போது நானும் மாறவேண்டியிருந்தது. இப்படியாக இந்தியாவில் மட்டும் 16 ஊர்களில் இருந்திருக்கிறேன். லண்டனில் 3 வருடம்.
ஊர் மாறும்போது என் வேலையையும் மாற்றிக்கொண்டிருக்கிறேன். ‘த இந்து’வின் ‘பிசினஸ்லைன்’ பத்திரிகையில் 10 வருடங்களுக்கு மேலாக பொருளாதாரம் தொடர்பான கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். அப்போது பக்கத்தில் இருந்த ஊர்களுக்கு போக மட்டுமே வாய்ப்பு கிடைத்தது...’’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட சுதா, உலக நாடுகளை திருமணத்துக்குப் பிறகுதான் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்.
‘‘திருமணத்துக்குப் பிறகு ஆயில் அண்ட் கேஸ் குறித்து ஆய்வுகள் செய்து பல கட்டுரைகளை எழுதினேன். அவை பல பத்திரிகைகளில் பிரசுரமாகின. இந்தத் துறை தொடர்பாக அரசு நிறுவனங்களில் ஆலோசகராக இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. தவிர, ஆயில் அண்ட் கேஸ் குறித்து கருத்தரங்குகளில் பேசுவதற்காக பல நாடுகள் அழைப்பு விடுத்தன.
இந்தக் கருத்தரங்கை ஒரு காரணமாக வைத்து எனது பயணத்தை ஆரம்பித்தேன். ஒரு மேப்பை வைத்துக்கொண்டு கருத்தரங்கு நடக்கும் இடத்துக்குப் பக்கத்திலுள்ள ஊர்களுக்கு விசிட் அடிப்பேன். அந்தப் பயண அனுபவங்களைக் கட்டுரையாக எழுதி இதழ்களுக்கு அனுப்புவேன். கூடவே எனது ஃபுட்லூஸ்இண்டியன்.
காம்(www.footlooseindian.com) வலைத்தளத்தில் புகைப்படங்களுடன் அக்கட்டுரைகளைப் பதிவேற்றுவேன்...’’ என்கிற சுதா, ஸ்பெயின் கிராண்டாவுக்குச் சென்றால் அங்கிருந்து ஆப்பிரிக்காவின் மொரோக்கோ வரை சென்றுவிட்டுத்தான் சொந்த ஊருக்குத் திரும்புவார். ‘‘மனிதனின் கால் தடங்களே படாத காடு, மலை, பாலைவனங்களைத்தான் பயணம் செய்ய தேர்ந்தெடுப்பேன். இதை சாகசப் பயணம் என்பார்கள். இப்படி சுமார் 66 நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அதுவும் தனியாளாக...’’ என்ற சுதா, தான் பயணித்த அரிய இடங்களைக் குறித்துப் பகிர்ந்தார். ‘‘பசிஃபிக் தீவுகளில் ஒன்று கேலபாகஸ். 2013ல் இங்கு சென்றேன். இந்தத் தீவுக்குச் சென்றுதான் பரிணாமக் கொள்கையைக் கண்டுபிடித்தார் டார்வின். பல அரிய வகை உயிரினங்கள் அங்கே வாழ்கின்றன. இந்தோனேஷியாவில் உள்ள போர்னியோ, அடர்த்தியான காடு. அங்குதான் ஒராங்குட்டான் குரங்குகளைப் பார்த்தேன். அந்த குரங்குகள் நம்மைவிட மூன்று மடங்கு பெரியது. ஆனால், சாதுவானது. வெட்கப்படும். நம்மைக் கண்டால் விலகிப் போக முயற்சிக்கும்.
சீனாவில் அழியக்கூடிய இனமாக அறிவிக்கப்பட்டுள்ள பாண்டா கரடிகளைக் கண்டு வியப்படைந்தேன். ஆஸ்திரேலியாவில் உள்ள உலகின் மிகப் பெரிய பவளப்பாறைகளை நீருக்கடியில் நீந்திச் சென்று பார்த்தேன். இதை பார்ப்பதற்காகவே 4 மாதங்கள் உடற்பயிற்சி செய்தேன்; நீச்சல் பயின்றேன்.நேபாளில் உள்ள முஸ்டேங்க் மலையின் உயரம் 13 ஆயிரம் அடி. மலையின் அடிவாரத்தில் ஓர் இந்து கோயில் கூட உண்டு. பலர் சிறிய விமானம் மூலம் இந்த இடத்துக்கு வந்து, சாமி கும்பிட்டுவிட்டு அதே விமானத்தில் வீட்டுக்குச் சென்றுவிடு வார்கள். ஆனால், அந்த மலையில் டிரெக்கிங் செல்ல 12 நாட்கள் ஆகும்.
மூன்று பேர் சேர்ந்து மலை உச்சிக்குச் சென்றோம். மேலே போகப்போக ஆக்சிஜன் அளவு குறையும். மெதுவாகத்தான் செல்ல வேண்டும். லடாக் மாதிரியான மலை உச்சி அது. அங்கு போய்விட்டால் அது பாலைவனம் போலத் தோன்றும். அங்கே ஒரு புல், பூண்டுகூட முளைக்காது.
இந்த இடம் புத்த சன்னியாசிகளுக்கு ஒரு பிரசித்தி பெற்ற இடமாகத் திகழ்கிறது. இந்த உச்சிக்குச் சென்று வருவது தியானம் போன்றது. துணிச்சலும், மனதிடமும் இருப்பவர்களால் தான் உச்சிக்குச் சென்று திரும்ப முடியும்...’’ என்கிற சுதா, 15ம் நூற்றாண்டில் ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு நதி மூலமாக வந்த நிகிடின் என்பவரின் நீர்த் தடத்தில் பயணித்த அனுபவங்களை விவரித்தார். ‘‘இந்திய அரசுத்துறை மூலமாக எண்ணெய் ஆய்வுகளுக்காக ரஷ்யா சென்றேன். ஒரு மாதத்தில் ரஷ்யா முழுவதும் பயணம் செய்தேன். இந்த நேரத்தில்தான் நிகிடின் பற்றிக் கேள்விப்பட்டேன். அவர் பயணித்த நதியை ஒட்டிய பாதையில் ஜீப்பில் பயணமானேன். ஆனால், இந்தியாவுக்கு வர கடல் தடையாக இருந்தது. ஈரான் வரை ஜீப்பில் பயணமானேன்.
இதுபோல பைபிள் நகரமான ஜெருசலேம், மிகப்பெரிய நூலக நகரமான அலெக்சாண்ட்ரியா, கிரேக்கத்தின் ஏதென்ஸ், பாரசீகத்தின் கவித்துவ நகரமான ஷிராஸ், அமேசானின் மழைக்காடுகள், வியட்நாமின் அங்கோர்வாட், மத்திய ஆசியாவின் புகழ்பெற்ற புக்காரா பாலைவனம், சிந்துவெளி நாகரிகத்தின் பழங்கால நகரமான லோத்தல், எகிப்திய பாலைவனம் என்று பல உலக ஆச்சரியங்களைப் பார்த்து, படமும் எடுத்திருக்கிறேன்...’’ என்று முடித்த சுதா, இன்னும் பார்க்கவேண்டிய இடங்களைப் பட்டியலிட்டு வைத்திருக்கிறார்.
டி.ரஞ்சித்
|