இரண்டு நாள் விற்பனை ரூ.1,100 கோடி!
இரண்டு சக்கர வாகன வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்து டிரெண்ட் ஆகியிருக்கிறது ‘ஓலா’வின் இ-ஸ்கூட்டர். கடந்த ஜூலை மாதம் ‘எஸ் 1’, ‘எஸ் 1 ப்ரோ’ என இரண்டு மாடல்களில் இ-ஸ்கூட்டர்களை சந்தைக்குக் கொண்டுவருவதாக அறிவித்தது ‘ஓலா’. முன்பதிவு ஆரம்பித்த முதல் நாளிலேயே ஒரு லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன. உலகிலேயே அதிகளவில் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவைத் தன்வசமாக்கியது ‘ஓலா’.
முன்பதிவு எகிற, செப்டம்பர் 15ம் தேதியன்று இ-ஸ்கூட்டருக்கான பிரத்யேகமான இணையதளத்தில் வாகனத்தை வாங்குவதற்கான கதவு திறக்கப்பட்டது. முதல் 24 மணி நேரத்தில் ஒவ்வொரு விநாடிக்கும் 4 இ-ஸ்கூட்டர்கள் விற்பனையாகின. இரண்டு நாட்களில் மட்டும் 1,100 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது விற்பனை. கவர்ச்சியான மாடல், குறைவான எடை, எளிதான இயக்கம், விரைவிலேயே சார்ஜ் ஆகும் பேட்டரி... என இந்த ஸ்கூட்டரின் சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில், 2,400 கோடி ரூபாய் செலவில் இ-ஸ்கூட்டர் தயாரிப்பதற்கான ஆலையைப் பிரமாண்டமாக அமைத்துவரு கிறது ‘ஓலா’. உலகிலேயே மிகப்பெரிய இரண்டு சக்கர வாகனம் தயாரிக்கும் ஆலையாக இது மிளிரப்போகிறது. இங்கிருந்து வருடத்துக்கு ஒரு கோடி இ-ஸ்கூட்டர்கள் உற்பத்தியாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
5 விதமான வண்ணங்கள், மணிக்கு 90 கி.மீ வேகம் என அசத்தும் ‘எஸ் 1’ மாடலின் விலை ரூ.99,999. 10 வண்ணங்களில் மணிக்கு 115 கி.மீ வேகத்தில் செல்லும் ‘எஸ் 1 ப்ரோ’வின் விலை ரூ.1,29,999. இப்போது ஆர்டர் செய்த இ-ஸ்கூட்டர் அக்டோபரில் வீடு தேடி வரும்.
த.சக்திவேல்
|