Fake News...



இந்தியா First!

சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள், வதந்திகளை வெளியிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. ம்ஹும். நாம் சொல்லவில்லை. 138 நாடுகளில் இருந்து 9,657 தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. இந்த தகவல்களின் உண்மைத் தன்மையை 94 நிறுவனங்கள் சரிபார்த்திருக்கின்றன. இதன் அடிப்படையில்தான் இந்தியாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
அதாவது அனைத்து நாடுகளுடன் ஒப்பிடும்போது சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பொய்யான செய்திகளில் இந்தியாவில்தான் 18.7% பதிவாகிறது.சமீபத்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுப்படி, தெலுங்கானா மாநிலத்தில் தவறான தகவல்கள் பகிரப்பட்டதாக 273 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 118 வழக்குகளும், உத்தரப்பிரதேசத்தில் 166 வழக்குகளும் பதிவாகி உள்ளன.

நகரங்களைப் பொறுத்தவரை ஐதராபாத்தில் 208 வழக்குகள், அதனைத் தொடர்ந்து சென்னையில் 42, தில்லியில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்திய தண்டனைச் சட்டம் 505-ன்படி, மதம், இனம், பிறந்த இடம், மொழி, சாதி அல்லது சமூகம், பகைமை, வெறுப்பு, இன உணர்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வதந்தி அல்லது செய்திகளை, தகவல்களை வெளியிடுபவர்கள், பரப்புபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்பது நடைமுறையில் இருக்கிறது.

ஆனாலும் போலித் தகவல்கள் பரப்பப்படுவது குறைந்தபாடில்லை. கொரோனா தொடர்பாக சித்தரிக்கப்பட்ட வதந்திகளை சிறந்த உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். யெஸ். இந்தியாதான், கொரோனா பற்றி சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை வெளியிடும் முக்கியமான நாடாகக் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய முதல் மூன்று மாதங்களில் பரப்பப்பட்ட தவறான தகவல்களால் கடந்த ஆண்டு சுமார் 6 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர், 800 பேர் உயிரிழந்தார்கள் என்ற தகவல் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

காம்ஸ் பாப்பா