லைவ் ரிக்கார்டிங் எதற்காக..? பதில் சொல்கிறார் சவுண்ட் டிசைனர் மற்றும் சூப்பர்வைசிங் சவுண்ட் எடிட்டரான ஆண்டனி டி.ஜே.ரூபன்



“ஒரு காட்சியில் ஒலி வைப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் ஒலி இல்லாமல் அமைதியாக விடுவதும் பெரிய முடிவு...” என்கிறார், தமிழ், இந்தி, மராத்தி ஆகிய மொழி திரைப்படங்களில் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேல் சவுண்ட் டிசைனர் மற்றும் சூப்பர்வைசிங் சவுண்ட் எடிட்டராகப் பணிபுரிந்து வரும் ஆண்டனி டி.ஜே.ரூபன். எதனால் இந்தத்துறையை தேர்வு செய்தீர்கள்..? நான், இயக்குநர் பிரம்மா, நடிகர்கள் மைம் கோபி, குறிஞ்சிநாதன் எல்லோரும் லயோலா கல்லூரியில் படிக்கும்போது மைம் தியேட்டர் குரூப் வச்சிருந்தோம்.

எனக்கு இசையில் கொஞ்சம் ஆர்வம். அதனால் மியூசிக் & சவுண்ட் நான் பார்ப்பேன். இதனையடுத்து டான் போஸ்கோ இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்யூனிகேஷனில் ஃபாதர் ராஜ்குமார், ‘இங்க ஒரு ஸ்டூடியோ செட் பண்றோம், நீ வேலை பாரு’னு அழைத்தார். அந்த ஸ்டூடியோவின் முதல் எஞ்சினியரான எனக்கு அந்தத் தொழில்நுட்பம் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்த நேரத்தில், நண்பர் ஒருவர் மூலமாக பூனா திரைப்படக் கல்லூரி அறிமுகம் கிடைத்தது.

நாடு முழுவதிலும் இருந்து வருடத்திற்கு 8 பேர் மட்டும் சேரும் நிலையில், நமக்கும் கிடைக்குமா என்ற சந்தேகத்திலேயே அப்ளை செய்து, டான் போஸ்கோவில் சினிமா குறித்து படித்த புத்தகங்கள் உதவியோடு நுழைவுத் தேர்வும் எழுதி தேர்வானேன். அங்கு முறையாக படித்த பின் அடுத்து இதுதான் நம் வேலை என்று முடிவு செய்யும்போது, சவுண்ட் ரெக்கார்டிங்கா, மியூசிக் ரெக்கார்டிங்கா, சவுண்ட் டிசைனிங்கா, சவுண்ட் மிக்ஸிங்கா என சிறு குழப்பம். ஒவ்வொன்றும் வேறு வேறு. அந்த சூழலில் மராத்தி படம் இரண்டு, இந்தி படம் ஒன்று வேலை பார்த்த அனுபவத்தில் சவுண்ட் டிசைனிங் என முடிவு செய்தேன்.

திரைப்படங்களில் சவுண்ட் டிசைனிங்கின் முக்கியத்துவம்..?
இசை, வசனம் பேசுவது, சண்டைக் காட்சிகளில் வரும் சில சிறப்பு சத்தங்கள்... போன்ற ஒலிகளை நம் காதுகளில் கேட்கிறோம். இவைகள் தாண்டி மனதின் அக ஒலிகளாகவும் சில சப்தங்களைக் கேட்கிறோம். அதை பெரும்பாலும் நம் சமூக புரிதல் மற்றும் நம்மைச் சுற்றி இருக்கும் ஒலி அமைப்புகள் மூலம் படங்களில் பிரதிபலிக்கிறோம். அது படத்திற்கு படம் வேறுபடுகிறது.

என்னைப் பொறுத்தவரை ஒலி என்பது கண்ணுக்குத் தெரியாத உயிர். ஒரு காட்சிக்கான உணர்வைக் கொடுப்பது இசை. அதற்கு உயிர் கொடுப்பது ஒலி. உதாரணமாக ரயில் நிலையம், மார்க்கெட், கடற்கரை போன்ற இடங்களில் காட்சி அமைக்கும்போது பார்வையாளனை அந்தக்காட்சியோடு ஒன்ற வைத்து, நாமும் அங்குதான் இருக்கிறோம் என்கிற உணர்வைக் கொடுப்பது ஒலி. அதுவும் கதை சொல்லாடல்கள், அந்த மூடிற்குத் தகுந்தாற் போல் நிறைய பரிமாணங்களில் மாறுபடுகிறது. ஒரு சில நேரங்களில் நடிகர்களின் நடிப்பே அந்த காட்சியில் ஒலியின் தேவையை பூர்த்தி செய்துவிடுகிறது. அங்கு ஒலியோ, இசையோ தேவையிருக்காது. சைலன்ட் ரியாக்‌ஷன், வசனம் வைத்தே அங்கு முடிவு செய்துவிடலாம்.

இந்தக் காட்சிக்கு இதுதான் எமோஷனல் என இசை ஓர் உணர்வை நிர்ணயம் செய்துவிடும். ஆனால், அமைதி தனிப்பட்ட முறையில் பார்வையாளனிடம் ஓர் தாக்கத்தை ஏற்படுத்தும். இதை ஹாலிவுட் படங்களில் சரியாகப் பயன்படுத்துகிறார்கள்.     திரைப்பட விழாக்களுக்கான திரைப்படங்களுக்கு ஏன் லைவ் ரெக்கார்டிங்..?எதார்த்தமான வாழ்வை ஒட்டிய கதைகளுக்கு லைவ் ரெக்கார்டிங் தேவைப்படுகிறது. ஒரு காட்சிக்கான படப்பிடிப்பு நடத்தும்போது, அந்த இடம், கூட நடிக்கும் நடிகர்கள், அந்த காட்சிக்கான உணர்வு... என எல்லாம் ஒருங்கிணைந்து கிடைக்கும் எனர்ஜி வேறாக இருக்கும். அது டப்பிங்கில் வராது.

எனவே, திரைப்பட விழாக்களில் டப்பிங்கை செயற்கையான ஒரு விஷயமாக பார்க்கிறார்கள். தமிழ் சினிமா ஸ்டூடியோவிலிருந்து வெளியே வரும் வரை லைவ் ரெக்கார்டிங்தான். வெளிப்புறப் படப்பிடிப்புகளின்போது லைவ் ரெக்கார்டிங்கை கையாள்வதில் சில சிக்கல்கள் இருக்கிறது. அதற்கு இன்னும் நாம் தயாராகவில்லை. அதேபோல் சிறப்பு சப்தம் கொடுப்பதற்கும், லைவில் எடுப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. தெருவில் ஒருவர் நடக்கும்போது செப்பல் சத்தம் லைவ்வில் எடுப்பதற்கும், அதை ஸ்டூடியோவில் ரீ கிரியேட் செய்வதற்கும் நிறைய வித்தியாசங்களை உணரலாம்.

நடக்கும் ஒவ்வொரு அடியும், தரையின் ஒவ்வொரு டெக்ச்சரும் மாறும். ஸ்டூடியோவில் ஒரே இடத்தில் நடப்பார்கள். எந்த இடம், எந்த ஆப்ஜெக்ட், எப்படி யூஸ் பண்றாங்க, யார் யூஸ் பண்றாங்க, எந்த நேரத்தில்... என நிறைய காம்பினேஷன்ஸ் இருக்கிறது. இதை ரீ கிரியேட் செய்வது பெரிய பிராசஸ். அதை ஸ்டூடியோவில் கிரியேட் செய்யலாம். ஆனால், அது தெரிந்துவிடும்.
நுணுக்கமான இந்த ஒலி வேறுபாடுகளை பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்துவதை விட, எந்த மீடியத்தில் பார்த்தாலும் அதை உணர வைப்பதுதான் முக்கியம். இன்றைய காலகட்டத்தில் திரை
யரங்குகள் தாண்டி, ஓடிடி தளங்கள் மூலமாகவே அதிகம் பார்க்க வேண்டிய சூழல். திரையரங்குகளில் கேட்பதற்கும், வீட்டில் டிவி, செல்போன், லேப்டாப்பில் கேட்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. அதற்கேற்றாற்போல் பேலன்ஸ் செய்கிறோம்.

அதே வேளையில் இங்கு ஒரு படத்தின் சவுண்ட் டிசைனிங் என்பது அப்படத்தின் விநியோகத்தை பொறுத்தும் இருக்கிறது. அதாவது அந்தப்படத்தின் ஹீரோவிற்கு ஏற்றாற்போல் ஒலி வடிவமைப்பு, பின்னணி இசை, பாடல்கள் என எல்லாம் இணைந்தே இங்கு செயல்பட வைக்கிறது.   இயக்குநர்களுக்கு ஒலியைப் பற்றிய புரிதல் இருக்கிறதா..?இந்தி இயக்குநர்களோடு ஒப்பிடும் போது, தமிழ் இயக்குநர்கள் சவுண்டை விட இசைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நம் சினிமா கலாசாரம் அப்படித்தான் இருக்கிறது.

நான் வேலை பார்த்த இயக்குநர்களான பிரம்மா, மாரி, ரஞ்சித் போன்றோர் சவுண்ட் சைடு கொஞ்சம் கவனம் செலுத்துறாங்க. திரைக்கதை எழுதுவதிலிருந்தே சவுண்டின் வடிவமைப்பும் அதில் வந்துகொண்டே இருக்கும்.  ‘பரியேறும் பெருமாளி’ல் மாரி, ‘எங்க ஊரில் காலை எழும் போது இந்த பறவை சத்தம் கேட்பேன்’ என்று சொல்வார். இது போல் திரைக்கதையை விவாதிக்கும் போதே சில இயக்குநர்கள் இந்த மாதிரி சத்தம் வேண்டும் என்று கேட்பார்கள். அதற்கேற்றாற்போல் எங்கள் வேலை யினை அமைப்போம்.

நமக்கு அந்த உலகம் தெரியாது. அந்த உலகை இயக்குநர்கள் அறிமுகப்படுத்தும் போது அங்குள்ள மக்கள், நில அமைப்பு, கால நிலை... என ஒவ்வொன்றிற்கும் ஏற்றாற்போல் ஒலியினை டெக்னிக்கலாக எப்படி கொடுப்பது என்கிற விவாதம் தேவைப்படுகிறது.

செய்தி: அன்னம் அரசு

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்