பழக்கம்
“ஒரு மாசம் ஓடினதே தெரியலம்மா...”“ஆமாம். வொர்க் பிரம் ஹோம்தானே? வந்து ஒரு மாசமாகிடுச்சு. இதோ, நீயும் குழந்தையைக் கூட்டிட்டு கிளம்பியாச்சு...”“ ம்ம்ம்ம்ம்….. உன்கூட பத்து நாள் இருந்துட்டு போலாம்னுதான் வந்தோம். கேஸ் கூடிக் குறைஞ்சுனு எல்லாமே பார்த்தாச்சு. இனியும் இங்க இருக்க முடியாது. வர வாரத்துல ராஜ் அல்ஜீரியாக்குப் போகணும். செப்டம்பரில் போயிருக்க வேண்டியது. சூழலைப் பார்த்து தள்ளிப் போட்டுட்டு இருந்தாங்க. இப்போ இவர் அங்கு போய் பிராஜக்ட் ஃபைனல் ஸ்டேஜை மேற்பார்வை பார்த்து மூணு மாசத்துல முடிச்சேயாகணும்னு நிலைமை. இனிமே தள்ளிப் போட முடியாது...”
“ஹ்ம்ம்... ஜாக்கிரதையா இருக்க சொல்லு. மாப்பிள்ளை வெளிநாட்டுக்குக் கிளம்பினதும் நீ திரும்ப இங்கே வந்துடலாமே?”“சூழலைப் பார்த்து முடிவு பண்றேன்மா...”“ரதி குட்டி! ஊருக்குப் போயிட்டு பாட்டியை மறந்துடுவியா..?” “மாட்டேன் பாட்டி. பிஸி ஆவேன். மறக்க மாட்டேன்...”ஒன்பது வயது பேத்தியின் பேச்சில் அத்தனை பக்குவம். எதைச் சொல்லிக் கொடுத்தாலும் அதை அப்படியே கிரகித்துக் கொள்ளும் புத்தி சாதுரியம்.
நாம் செய்தது ஏதேனும் பிடித்தது என்றால் மனம்திறந்து பாராட்டும் குணமும், பிடிக்கவில்லை என்றால் அதை நேர்பட பேசும் குணமும் இந்த வயதில் அபூர்வம். மனதில் தோன்றியதை நம் கண்களைப் பார்த்து பேசும் போது மட்டும் சிறுபிள்ளை தோரணை மறைந்துவிடும். அத்தனை சமத்து! ‘‘ரதி ! இந்த ட்ரிப் உனக்கு பிடிச்சிருந்ததா..?’’‘‘ரொம்ப பிடிச்சிருந்தது பாட்டி...’’‘‘என்னவெல்லாம் பிடிச்சது..?’’
‘‘நீங்க நிறைய நல்ல பழக்கங்கள் சொல்லிக் கொடுத்தீங்க. நானும் இனிமே காலைல ஒரு டைம் டேபிள் போட்டு அதுபோல நடப்பேன். ஒவ்வொரு வாரமும் புதுசா நல்லதா ஏதேனும் கத்துப்பேன்...’’ஆர்வம் பொங்க சொன்னகுழந்தையைப் பார்த்தபடியே சித்ராவிடம் , ‘‘நீ இங்க வந்தப்போ இருந்ததுக்கும், இப்பைக்கும் பாரு, குழந்தை என்னவெல்லாம் கத்துக்கிட்டா... கோலம் கூட போடறா. இன்னும் கொஞ்ச நாள் இருந்தா போதும். எல்லாமே கத்துப்பா. நீயும்தான் இருக்கியே! கண் பார்த்து கை செய்யணும்னு இருக்காம, எதையும் சொன்னாதான் செய்வ. எதுக்காச்சும் விதண்டா வாதம் பண்ணணும்னா மட்டும் போதும், தானா தெம்பு வந்துடும் உனக்கு...’’ என்றாள்.
சித்ரா புன்னகைத்தாள். ‘‘ரதிகுட்டி! உனக்கு சொல்லிக்கொடுத்த எல்லாத்தையுமே உங்க அம்மாவுக்கும் அவ உன் வயசா இருந்தப்ப நான் சொல்லிக் கொடுத்தேன்டா. ஆனா, அவ உன்னை மாதிரி கத்துக்கலை. நீதான் அதை சீக்கிரம் கத்துக்கிட்ட செல்லம்...” ‘‘அம்மா போதும். காலம் போன வயசுல கம்பேர் பண்ணிக்கிட்டு இருக்காத. நானும் அவளுக்கு நல்ல பழக்கங்கள் எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கேன்...’’‘‘யாரு ? நீயா..?’’‘‘ரதி ! நீ சொல்லு. உங்கம்மா சொல்லிக் கொடுக்காத எதையாச்சும் நான் உனக்கு சொல்லிக் கொடுத்தேனா?’’ ரதி இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறாள் என அவளையே பார்த்தேன்.
“ஹ்ம்ம் பாட்டி... கிருஷ்ணர் கதை ,ராமர் கதை எல்லாம் நீங்கதான் சொல்லிக் கொடுத்தீங்க. அதெல்லாம் என் ஃபிரெண்ட்ஸுக்கு சொல்லி எல்லாரையும் சர்ப்ரைஸ் பண்ணுவேன்!” என்ற குழந்தையைப் பெருமை பொங்கப் பார்த்தாள் அம்மா!“ஆனா எப்பப்பாரு இப்படி கம்பேர் பண்றது பிடிக்கல பாட்டி. அது பேட் ஹாபிட்!”“வாழ்க்கைக்குத் தேவையான குட் ஹாபிட்ஸ் சொல்லிக் கொடுக்காமல் இருக்கிறதும் பேட் ஹாபிட்தானே ? அதைத்தான் நான் உன் அம்மாகிட்ட சொல்றேன்...” அம்மா விடாமல் குழந்தையிடம் மல்லுக்கு நின்றாள்.
“நீங்க கூடத்தான் அம்மா என்னை மாதிரி சின்ன பொண்ணா இருந்தபோது சில குட் விஷயங்களை அம்மாவுக்கு சொல்லிக் கொடுக்கல...” “அதென்னடி நான் சொல்லிக் கொடுக்காத நல்ல விஷயத்தை உன் அம்மா உனக்கு சொல்லிக் கொடுத்திட்டா..?”
“நம்மளை யாராவது தொடக்கூடாத இடத்தில பேட் டச் பண்ணினா பயப்படாம அம்மா அப்பாகிட்ட வந்து சொல்லணும்னு அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கா. நீங்க அதை அம்மாக்கு சின்ன வயசுல சொல்லிக் கொடுக்கலையாமே?” குழந்தை சொன்னதும் அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். சற்று முன் பார்த்த பூரிப்பு மறைந்து விட்டிருந்தது!
எம்.எஸ்.அனுசூயா
|