பெங்களூரு சிட்டு!



தமிழகத்திற்கு விடியல் கிடைத்த சந்தோஷம் போல, உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கிறார் ‘சூப்பர் டீலக்ஸ்’ மிருணாளினி ரவி. அக்மார்க் பெங்களூரு சிட்டு. டிக்டாக், டப்ஸ்மாஷில் கலக்கிய கலர்ஃபுல் காக்டெயில். இப்போது விக்ரமின் ‘கோப்ரா’, விஷாலின் ‘எனிமி’, சசிகுமாரின் ‘எம்ஜிஆர் மகன்’ என கெத்து காட்டுகிறார்.

‘‘ஆரம்பமே செம பில்டப்பா இருக்குல? அதான் பயமா இருக்கு...’’ கண்களை விரித்து சிரிக்கிறார் மிருணாளினி.
‘‘தெலுங்கில் வருண் தேஜுடன் நடிச்ச ‘கடாலகொண்டா கணேஷ்’ படத்தின் ஒரு பாடல் வெளியான டைம்ல இயக்குநர் பொன்ராம் சார் பேசினார். ‘உங்க லுக் இந்தப் பட கேரக்டருக்கு சரியா இருக்கும்’னு சொல்லி ‘எம்ஜிஆர் மகன்’ கதையை சொன்னார். எனக்குப் பிடிச்சிருந்தது. நாலே நாள்ல ஷூட் கிளம்பிட்டோம். இந்த லாக்டவுன் வரலேனா எங்க படம் ரிலீஸ் ஆகியிருக்கும்...’’  எனர்ஜி குறையாமல் பேசுகிறார் மிருணா.

டிக்டாக் to வெள்ளித்திரை... உங்க ட்ராவலை சொல்லுங்க?
என்ஜினியரிங் முடிச்சிருக்கேன். தமிழ்ப் பொண்ணுதான். அப்பாவுக்கு கடலூர். அம்மாவுக்கு பாண்டிச்சேரி. ஆனா, நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் பெங்களூருல. படிப்பை முடிச்சிட்டு ஒரு கம்பெனில ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். அப்ப டைம்பாஸுக் காக டிக்டாக், டப்ஸ்மாஷ்ல ஆர்வமானேன். ஒரு கட்டத்தில கேமரா முன்னாடி அதிக நேரம் செலவழிக்கறது எனக்கு பிடிச்ச ஹாபியாகிடுச்சு. என்னோட டிக்டாக் பாத்து ஒரு பொடிக் நிறுவனம், ‘எங்க பொடிக்குக்கு ஒரு போட்டோ ஷூட் பண்ணிக்குடுங்க’னு கேட்டாங்க.

வீட்ல பயங்கர ஷாக். போட்டோஷூட்டா... அதெல்லாம் கூடவே கூடாதுனு கண்டிச்சாங்க. ஒரு வழியா அவங்கள சம்மதிக்க வச்சு, ஷூட் கிளம்பினா... அப்பா, அம்மா, மாமானு ஃபேமிலியா கூட வந்தாங்க! இப்படி கும்பலா போய் ஷூட் முடிச்சிட்டு வந்தோம்.

சினிமாவுல நடிக்கணும்... ஆக்ட்ரஸ் ஆகணும்னு நினைச்சதில்ல. ஏன்னா, சினிமால எப்படி என்ட்ரி ஆகணும்னு தெரியாது. அப்பதான் ‘சூப்பர் டீலக்ஸ்’ சான்ஸ் தேடி வந்துச்சு. தெலுங்கிலும் வருண் படம் நடிச்சிட்டிருந்தேன். இப்ப, சசிகுமார் சார், விக்ரம் சார், விஷால் சார் படங்கள்னு லைஃப் பியூட்டிஃபுல்லா போயிட்டிருக்கு. நடிக்கற படங்கள்ல இருந்து சுவாரஸ்யமான இன்ஸிடென்ட்ஸ் சொல்லுங்க..?

சசிகுமார் சார் படத்துல அவருக்கும் எனக்கும் ரொமாண்டிக் சீன்ஸ் எல்லாம் கிடையாது. ஆனா, சத்யராஜ் சார், சமுத்திரக்கனி சார், சரண்யா பொன்வண்ணன் மேம்னு பெரிய ஆர்ட்டிஸ்ட்களோட தேனியில 60 நாட்கள் ஒரே குடும்பமா நடிச்சது மறக்க முடியாத தருணங்கள்.

பொன்ராம் சாரோட சொந்தக்காரங்க தேனில இருக்கறதால அவங்க வீட்ல இருந்து சாப்பாடு வரும். சத்யராஜ் சார் நியூட்ரிஷியஸ் டிப்ஸும், சரண்யா மேம் இண்டஸ்ட்ரீ டிப்ஸும் கொடுத்தாங்க. விக்ரம் சாரோட ‘கோப்ரா’ல நடிச்சது இப்ப வரை கனவு மாதிரி இருக்கு. அவரோட நானும் நடிப்பேன்னு நினைச்சுக் கூட பார்த்ததில்ல. அந்தப் படத்துல கே.ஜி.எஃப். ஹீரோயின், கிரிக்கெட்டர் இர்ஃபான் பதான்னு நிறைய பேர் இருக்காங்க. விக்ரம் சாரோட காம்பினேஷனும் எனக்கிருக்கு.

சார் ரொம்ப ஹேண்ட்சம். அவரோட ‘அந்நியன்’, ‘சாமி’ படங்கள் என் ஃபேவரைட். டிவில அவரோட பட பாடல்கள் வரும்போது ‘சாரோட நானும் நடிக்கறேன்’னு வீட்ல பெருமையா சொல்வேன். விஷால் சாரோட ‘எனிமி’ பத்தி பேசுறதுக்கு இன்னும் டைம் இருக்கு. சரியான நேரத்துல அந்தப் படம் பத்தி சொல்றேன்.

என்ன மாதிரி கேரக்டர்கள் பண்ணணும்னு விரும்புறீங்க..?
ஒரு ஆக்ட்ரஸா எல்லா ரோல்கள்லேயும் குட் நேம் வாங்கணும். ஆனாலும் ‘கஜினி’ல கல்பனா கேரக்டர்ல பிச்சு உதறிய அசின், ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ல ஜெனிலியாவின் துறுதுறு, ‘சம்திங் சம்திங்’ல த்ரிஷாவின் சைலண்ட் மாதிரி வெரைட்டி கேரக்டர்கள் பண்ணணும்னு ஆசை இருக்கு. பாக்கலாம்.   

மை.பாரதிராஜா