இந்தியன் படத்தில் வர்மக் கலையை கமலுக்கு கற்றுக் கொடுத்தேன்... இந்தியன்2 வுக்கு இன்னும் அழைப்பு வரவில்லை!



வர்மக்கலை என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது கமல் நடித்து ஷங்கர் இயக்கிய ‘இந்தியன்’ படம்தான். கைவிரல்களைச் சுழற்றி ஒரே அடியில் எதிராளிகளை வீழ்த்தும் ‘இந்தியன்’ தாத்தாவின்  ஸ்டண்ட் காட்சிகள் அரங்கம் அதிர அப்ளாஸை அப்படம் வெளியானபோது அள்ளியது. அதிலிருந்து தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் வர்மக்கலை என்ற சொல் பிரபலமானது. விஷயம் இதுவல்ல. ‘இந்தியன்’ படத்துக்காக  கமலுக்கு  வர்மக்கலையைக் கற்றுக்கொடுத்தவர் மதுரையைச் சேர்ந்த 70 வயது இளைஞரான ராஜேந்திரன் என்பதுதான் ஹைலைட்.

‘ மஞ்சா வர்ம தற்காப்புக் கலை’ எனும் அமைப்பு மூலம்  50 வருடங்களுக்கு மேல் ஆர்வமுள்ளவர்களுக்கு வர்மக்கலை பயிற்சியளித்து வருகிறார் ராஜேந்திரன். ‘‘எல்லோரும் வர்மக்கலை என்றுதான் போட்டுக்கொள்வார்கள். ஆனால், நான் என்னை ‘மஞ்சா வர்மக்கலை நிபுணன்’ என்று சொல்லிக்கொள்கிறேன். காரணம், வர்மக் கலையிலும் பாரம்பரியமானது இந்த மஞ்சா கலை. சென்னைவாசிகள் ‘உன் நெஞ்சில் உள்ள மஞ்சா சோத்தை எடுத்திடுவேன்...’ என்று பேசிக் கேட்டிருக்கலாம். அந்த மஞ்சா என்பது இந்த வர்மக்கலையில் இருந்து எடுத்த சொல்தான்.

வர்மத்தில் நெஞ்சைப்பிளந்து ஒருவரை வீழ்த்தும் அடிமுறைக்கு ‘மஞ்சா அடி’ என்று பெயர்...’’ என்கிற ராஜேந்திரனின் வர்மக்கலை நிபுணத்துவத்துக்கு
ஆசானேஅவரது தந்தைதானாம். ‘‘மதுரையின் ஒரு குடிசைப்பகுதியில்  இருந்துகொண்டே நாம் கற்றுக்கொண்ட கலையை எப்படி பிரபலப்படுத்துவது என்று யோசித்தேன். மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது மூலமே கலையைப் பிரபலப்படுத்த முடியும் என்று உணர்ந்தேன். உடனே தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வசிக்கும் ஆர்வலர்களுக்குக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன்.

ஆனால்,  வர்மக்கலையைக் கற்றுக்கொடுப்பதற்கு முன்பாக குங்ஃபூ, கராத்தேவில் எல்லாம் சாம்பியன் பட்டம் பெற்றேன். காரணம், அப்போது இந்தக் கலைகள்தான் இளைஞர்களிடம் பிரபலமாக இருந்தது. வர்மக்கலைதான் குங்ஃபூ, கராத்தே உட்பட அனைத்து தற்காப்புக் கலைகளுக்கும்  தாய் என்பதை நானும் தெரிந்துகொண்டு, அதை இளைஞர்களுக்கும் சொல்லிக் கொடுக்கத்தான் அந்த அந்நியக் கலைகளைக் கற்று தேர்ச்சி பெற்றேன்...’’ என்கிற ராஜேந்திரன் வர்மக்கலை எப்படி மற்ற தற்காப்புக்கலைகளுக்குத் தாயாகிறது என்பதையும் விளக்கினார்.

‘‘மற்ற தற்காப்புக் கலைகள் உடல் வலிமைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஆனால், வர்மக்கலை மட்டுமே உடல், மனம், மூச்சு என்று பல்வேறு  விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. குங்ஃபூ, கராத்தேவில் குறிப்பிட்ட வயதுக்குப்  பின்பு விலகிவிடுவார்கள். ஆனால், வர்மக்கலையை சீராகக் கற்றுக்கொண்ட ஒருவர் எந்த வயதிலும் வர்மக்கலையைப் பயிற்சி செய்யவோ அல்லது களமாடவோ முடியும்...’’ என்றவர் வர்மக் கலை தோன்றிய இடம் தென்பாண்டி நாடு... அதனால்தான் கேரளா மற்றும் அதனோடு இணைந்த கன்னியாகுமரி, நாகர்கோவில் போன்ற இடங்களில் மட்டுமே இக்கலை பிரபலமாக இருக்கிறது என்கிறார்.

‘‘அன்றைய தென்பாண்டி நாட்டின் எல்லையாக இருந்த குற்றாலம், பாபநாசம் பகுதிகளில் வாழ்ந்த சித்தர் அகஸ்தியரால் தோற்றுவிக்கப்பட்டதுதான் இந்தக் கலை. பிறகு அது கன்னியாகுமரி, நாகர்கோவில், கேரளா என்று பரவலாகியிருக்கலாம். கேரளாவில் இருக்கும் வர்மக்கலையை ‘வடக்கன் முறை’ என்பார்கள். ‘ஒரு வடக்கன் வீரகதா’ என்றுகூட ஒரு  மலையாளப் படம் வந்திருக்கிறது. ஆனால், தமிழகத்தில் இருப்பது ‘தெக்கன் முறை’. கேரளாவில் இருக்கும் வடக்கன் கலையை ‘களரி’ என்பார்கள். தெற்கில் ‘வர்மக்கலை’.

கேரளாவில் கத்தி, ஈட்டி, வாள், சூலம் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால், தெக்கன் முறையில் வெறும் கையும் காலும்தான். ஒரு விரல் நுனியால்கூட நம்மை தற்காத்துக்கொள்ளும் முறை தெக்கன் முறையில் மட்டுமே உண்டு...’’ என்கிற ராஜேந்திரன் வர்மம் என்ற மூலச்சொல்லின் அர்த்தம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றிக் கூறினார்.

‘‘மர்மம் என்ற சொல்லிலிருந்துதான் வர்மம் வந்திருக்கிறது. அதாவது நம் உடலில் பல மர்மப்பகுதிகள் உண்டு. ஒவ்வொரு பகுதிக்கும் சிலபல சிறப்பு இயல்புகள் இருக்கும். அவற்றை தெரிந்துகொண்டு, அதற்கேற்ப நம்மை தற்காத்துக்கொள்ளும் முறைக்குத்தான் வர்மம் என்று பெயர்.
இக்கலையை சரிவர பயிலாமல் ஒருவரை நாம் தாக்க முயற்சித்தால், எதிராளி  மோசமான நிலைக்குப் போகலாம் அல்லது நம் தாக்குதல்களிலிருந்து இலகுவாக தப்பித்துக்கொள்ளலாம். ஆகவே உடல்கூறுகளைத் தெரிந்துகொள்வதுதான் வர்மக்கலையின் ஆரம்பப் பாடம்.

உடலில் மர்மம்  நிறைந்த  108 புள்ளிகள் உண்டு. புள்ளிகள் என்றால் நரம்புகள், நாளங்கள், எலும்புகள் இணைந்த இரத்த ஓட்டப்பகுதி அல்லது முடிச்சுகள்.  இந்த 108 புள்ளிகளையும் தாண்டி பல கிளைப் புள்ளிகள் இருக்கிறது. இவற்றையும் ஒரு வர்மக்கலைஞர் தெரிந்துகொள்ளவேண்டும். இந்தப் புள்ளிகளைத் தெரிந்து கொண்ட பிறகு அடிமுறைகள் உண்டு. இந்த அடி முறைகளைத் தொடு வர்மம், படு வர்மம், தட்டு வர்மம், நோக்கு வர்மம், இறுதியாக மெய்தீண்டாக் கலை என்று ஐந்து வகையாகப் பிரிக்கலாம்.

தொடு வர்மம் என்றால் மர்மப் புள்ளிகளில் ஒரு அழுத்தத்தை கொடுப்பதன் மூலம் முடிச்சுகளில் ஒரு விளைவை ஏற்படுத்துவது. இதைத்தான் அக்குபஞ்சர் சிகிச்சைமுறை பின்பற்றுகிறது. ஒரு விரலால் நாம் எதிராளியுடைய உடலின் சில புள்ளிகளை அழுத்துவதன் மூலமே அவரை மூர்ச்சையடையச் செய்வது  முதல் மரணம் வரை இட்டுச்செல்ல முடியும். அடுத்து படு வர்மம். பட்டுவிட்டது என்று சொல்வோம் அல்லவா... அதுதான் படு வர்மம். இது நாம் அறியாமலேயே நமது உடலின் மர்மப் புள்ளிகள் எதிலாவது மோதிக்கொள்வதைக் குறிக்கிறது. படுதல், பட்டது, விழுந்துவிட்டேன் என்பதை எல்லாம் இதில் சேர்க்கலாம்.

அடுத்து தட்டு வர்மம். இதுதான் வர்ம தற்காப்பு அடிமுறையின் உச்சம். தட்டு என்றால் அடித்தல் என்று அர்த்தம். அடுத்து நோக்கு வர்மம். எதிராளியைத் தொடாமல், படாமல், தட்டாமல் பார்வையிலேயே வீழ்த்துவதுதான் நோக்குவர்மம். ‘ஏழாம் அறிவு’ படத்தில் எதிராளியைக் கண்ணுக்குக் கண் பார்த்து வீழ்த்துவதுதான் நோக்குவர்மம் என்று விளக்கியிருப்பார்கள். ஆனால், உண்மையில் கண்ணை எல்லாம் பார்க்க வேண்டியதில்லை. நம் பார்வையில் இருக்கும் ஒருவரை வீழ்த்துவதுதான் நோக்கு வர்மம். ஒரு கையசைவில் ஒருவரை வீழ்த்திவிடலாம்.

அடுத்து மெய்தீண்டாக் கலை. கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து ஒருவரை வீழ்த்திவிடும் அடிமுறைக்கு பெயர், மெய்தீண்டாக் கலை. இதற்கு தியானம் முக்கியம்...’’ என்கிற ராஜேந்திரன் ‘இந்தியன்’ பட அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.‘‘‘இந்தியன்’ படத்தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அலுவலகத்திலிருந்து ஒரு போன் வந்தது. ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர் பேசுவதாகச் சொன்னார். நான் வர்மக்கலை தொடர்பாக எழுதிய புத்தகத்தைப் படித்ததாகவும்,  டைரக்டர் ஷங்கர் இயக்கப்போகும் ‘இந்தியன்’ படத்தில் வேலை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சொன்னார்.

பிறகு ஒருநாள் அந்த அலுவலகத்திலிருந்து ஒரு தந்தி வந்தது. சென்னைக்கு வந்து இயக்குநர் ஷங்கரை சந்தித்தேன். படத்தில் கமலுக்கு கிழவர் வேடம் என்பதால் அவரால்  ஓடி, பாய்ந்து சண்டை போட முடியாது. அதனால் எதிராளிகளை வீழ்த்துவதற்கு வர்மக் கலையில் ஏதாவது உண்டா என்று என்னிடம் கேட்டார்.

நான் வர்மக்கலையில்  உள்ள சில அடிமுறைகளைப் பற்றி எடுத்துரைத்தேன். பிறகு படத்தின் வசனகர்த்தாவான சுஜாதாவுடனும் நான் பேசவேண்டும் என்று சொன்னார். சுஜாதா வர்மக்கலை அடிமுறை விஞ்ஞான முறையில் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வர்மக்கலையே சயின்ஸ்தான் என்று கூறினேன். சில அடிமுறைகளைப் பற்றி விளக்கினேன்.

ஷூட்டிங்கின்போது கமலுக்கு வர்மக்கலை அடிமுறைகளைக் கற்றுக்கொடுத்தேன். கமலுக்கு அப்போது காலில் அடிபட்டிருந்தது. இருந்தாலும் பொறுமையாக வர்ம முறைகளை லாவகமாக கற்றுக்கொண்டு செய்தார்...’’ என்கிற ராஜேந்திரன் ‘இந்தியன் 2’வில் தன் பங்கு இருக்குமா என்று தெரியவில்லை என்கிறார்.

‘‘இதுவரை கூப்பிடவில்லை. ஒருவேளை ‘இந்தியனி’ல் இருக்கும் சில அடிமுறைகளை மாற்றி எடுக்கிறார்களோ என்னவோ.  ஒருவேளை இரண்டாம் பாகத்தில் வர்ம அடிமுறைகள் இல்லாமலும் இருக்கலாம். ஆனால்,   குங்ஃபூ, கராத்தே என்று வர்மக்கலைதான் உலகம் முழுவதும்  பரவிவருகிறது. ஒரிஜினலான வர்மக்கலையைக் கற்றுக்கொள்ளாமல் பலர் இருக்கிறார்களே என்ற ஆதங்கம்தான் என்னைக் கஷ்டப்படுத்துகிறது. வர்மக்கலை சிகிச்சை எனும் பெயரில் பலர் காசு பார்க்கிறார்கள். உண்மையில் வர்மக்கலையின் தற்காப்பு குறித்து தெரியாதவர்களால் எந்த சிகிச்சையும் செய்யமுடி யாது...’’ என்கிறார் ராஜேந்திரன்.

டி.ரஞ்சித்