என்னுடைய முதல் சைக்கிள், முதல் லேப்டாப் எல்லாம் இந்தச் சமூகம் வழங்கியதுதான்... சமூகம் எனக்குச் செய்ததில் ஒரு சிறு பங்கினை இப்போது நான் திருப்பிச் செய்கிறேன்...



சரியாக மே 11ம் தேதி தன் முகநூல் பக்கத்தில் இப்படியொரு பதிவை எழுதினார் கவிஞரும் தமிழ் ஆய்வு மாணவருமான றாம் சந்தோஷ்.
@Ram Santhosh - காலையில் ஒரு மெசேஜ் வந்தது. வீட்டில் ஒருவருக்கு கொரோனா. ஐந்து நாட்கள் ஆகிறதாம். சிலருக்குக் காய்ச்சல். ஒரு வாரத்திற்கு முன்பே என்னை விடுதியைக் காலி செய்யச் சொன்னார்கள். ஆனால் நான் இங்கேயே தங்கி விட்டேன்.

எனக்கு என் மீது அவ்வளவு நம்பிக்கை, ஊருக்கு போனால் சம்பவம் நிச்சயம் என்று. வீட்டில் உள்ளவர்கள் வியாபாரம் செய்வதால் கட்டுப்பாடு குறைவு. நானோ மகா பயில்வான். கிளைமேட் சேஞ்சிற்கே சும்மா சளி மூச்சு பிரச்சனை வரும். இதில். டேக் கேர் என்று மட்டும் பதில் அனுப்பினேன்.

All of you take care please.இப்படியொரு நிலைத்தகவலை றாம் சந்தோஷ் பதித்த இரண்டாம் நாள் - அதாவது மே 13 அன்று தன் முகநூல் பக்கத்தில் இன்னொரு நிலைத்தகவலை பதித்தார்.

அது இதுதான்:@Ram Santhosh - நிலுவையிலிருந்த  பல்கலைக்கழக மானியக் குழு (UGC) உதவித்தொகை  கிடைக்கப் பெற்றதும் அதை அப்படியே தமிழக முதலமைச்சரின் tncmprf@iob நிதிக்கு அனுப்பிவிட்டேன்.வாய்ப்பிருக்கும் நண்பர்கள் நாடு கண்டிருக்கும் இக்
கொடிய நிலையிலிருந்து மீள கரம் கோர்க்கலாம்.

#மக்களின்_பணம்_மக்களுக்காக_மக்களரசு_வழி.
றாம் சந்தோஷின் இந்தச் செயலைக் கண்டு அனைவரும் நெகிழ்கின்றனர். காரணம், பொருளாதார ரீதியாக வலுவான பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவரல்ல இவர்!

‘‘இயற்பெயர் சண்முக விமல் குமார். வாணியம்பாடி அருகேயுள்ள உதயேந்திரம் கிராமம்தான் என் சொந்த ஊர். கழிப்பறை இல்லாத, இப்போது அரசுப் புறம்போக்கு நிலத்தில் உள்ள ஒரு வீட்டில்தான் நான் வளர்ந்தேன்...” இயல்பாகப் பேசும் றாம் சந்தோஷுக்கு தன்னுடைய வாழ்க்கைச்சூழல் குறித்த எந்தப் புகாரும் கிடையாது.அடிப்படையில் தச்சரான இவரது தந்தை சர்க்கரை நோய் பாதிப்பினால் தச்சுத் தொழிலைத் தொடர முடியாமல், வீட்டுக்கு அருகே பெட்டிக் கடை ஒன்றை இப்போது நடத்திவருகிறார்.

பள்ளிக் கல்வி முடித்த றாம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் இளநிலை வேதியியல் சேர்ந்திருக்கிறார். பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு கட்டத்தில் படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்படவே, பேராசிரியர்களின் உதவியோடு கல்லூரிப் படிப்பை முடித்திருக்கிறார்.“பேராசிரியர்களின் உதவியோடு இளநிலை வேதியியல் முடித்துவிட்டேன். மேற்கொண்டு படிக்க பொருளாதார நிலை இடங்கொடுக்கவில்லை.

அப்போதுதான் ஆந்திர மாநிலம் குப்பம் நகரில் அமைந்திருக்கும் திராவிடப் பல்கலைக்கழகத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் உதவித் தொகையோடு தமிழ் முதுகலைப் படிப்பு இலவசமாக வழங்கப்படுகிறது என்பதை அறிந்தேன். இயல்பிலேயே தமிழ் மீது ஆர்வம் இருந்ததாலும், அப்போது கவிதைகள் எழுதத் தொடங்கியிருந்ததாலும் யோசிக்காமல் இதில் சேர்ந்துவிட்டேன்...” புன்னகைக்கிறார் றாம், முதுகலைப்படிப்பின்
இறுதியாண்டிலும் சோதனைகளைச் சந்தித்திருக்கிறார்.

ஆம். உதவித் தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், சான்றிதழ்களைப் பெறுவதிலும் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் இவர் மத்தியப் பல்கலைக்கழகம் ஒன்றில் மேற்படிப்பு சேரும் வாய்ப்பு நழுவிப் போனது. அந்தக் காலகட்டத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் மொழியியல் ஆய்வுத் திட்டம் ஒன்றில் உதவியாளராகதற்காலிகமாகப் பணியாற்றியிருக்கிறார்.

இப்படிப்பட்ட வாழ்க்கைச் சூழலில்தான் றாம் சந்தோஷுக்கு நிலுவையிலிருந்த ஆராய்ச்சி உதவித் தொகையாக ரூ.33,480  கிடைத்திருக்கிறது.உடனடியாக அத்தொகை முழுவதையும் முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு அனுப்பிவிட்டார்!

“என்னுடைய முதல் சைக்கிள், முதல் லேப்டாப் எல்லாம் இந்தச் சமூகம் வழங்கியதுதான். சமூகம் எனக்குச் செய்ததில் ஒரு சிறு பங்கினை இப்போது நான் திருப்பிச் செய்கிறேன். அவ்வளவுதான்! நம்மைப் பார்த்து வளரும் அடுத்த தலைமுறையினர் இதைத் தொடர்வார்கள்...” நன்றியும் நம்பிக்கையுமாக சொல்லும் றாம் சந்தோஷ், இலக்கியம் சார்ந்து கவிதை, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என இயங்கிக் கொண்டிருக்கிறார்; ‘சொல்வெளித் தவளைகள்’ என்கிற இவரது முதல் கவிதைத் தொகுப்பு ஆத்மாநாம் விருது பெற்றிருக்கிறது. இப்போது தனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு உள்ளிட்ட ஆறு நூல்களுக்கான பணியில் ஈடுபட்டுள்ளார்.                               

நிரஞ்சனா