இந்தியாவில் பட்டையைக் கிளப்புமா ஆர்கானிக் ஃபேஷன்..?



பெருகி வரும் சூழல் குறித்த விழிப்புணர்வு பல துறைகளிலும் எதிரொலிக்கிறது. பிளாஸ்டிக் அல்லது எளிதில் மக்காத பொருட்களின் பயன்பாட்டை கூடுமானவரை அனைவருமே தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில்தான் அதிர்ச்சியை அளிக்கிறது ஒரு புள்ளி விவரம். அதாவது ஒவ்வொரு வருடமும் சுமாராக 11.1 மில்லியன் கழிவுகள் வீதம் ஃபேஷன் துறையில் வெளியிடப்படுவதாகவும், அதில் வெறும் 2 மில்லியன் மட்டுமே மறுசுழற்சிக்கு உரிய கழிவுகளாக இருப்பதாகவும் உள்ளது எனும் தகவல் முகத்தில் அறைகிறது.

இதனையடுத்து இப்போது இந்தியா முழுவதும் பல பெரிய, சிறிய பிராண்ட்கள் துவங்கி பிரபலங்கள் வரை பலரும் ஆர்கானிக் எனப்படும் தாவர அடிப்படையிலான துணிகளை அறிமுகம் செய்யத் துவங்கியுள்ளனர். இதில் அலியா பட் போன்ற பாலிவுட் பிரபலங்கள் முதல் செலிபிரிட்டி டிசைனர்கள் வரை பலரும் அடக்கம். குறிப்பாக இவர்கள் குழந்தைகளுக்கான ஆர்கானிக் உடைகளை அதிகம் அறிமுகம் செய்து வருகிறார்கள்.

ஒரு கிலோ எடை கொண்ட பாலிஸ்டர் உடைகள் சூழல் மாசுபாட்டில் 7 கிலோ எடை கொண்ட கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுவதாகக் கூறும் சமூக / ஃபேஷன் ஆர்வலர்கள், தங்களால் முடிந்த மாற்றத்தைக் கொண்டு வரவே இந்த ஆர்கானிக் மற்றும் மறுசுழற்சி உடைகள் உற்பத்தியில் அதிகம் மெனக்கெடுவதாகச் சொல்கின்றனர். ஆனால், இன்னமும் மக்களிடம் இது குறித்த விழிப்புணர்வு பெரிதாக இல்லை என்பதே இவர்களின் வருத்தம். பலரும் ஆர்கானிக் உடைகளின் விலையை மட்டுமே பார்க்கின்றனர். ஆனால், எந்த அளவுக்கு இவை உடலுக்கும், சூழலுக்கும் நன்மை தரும் என்பதைப் பார்க்க மறுக்கின்றனர்.

பத்து ரூபாய் மசாலா பாக்கெட்டில் கூட எக்ஸ்பைரி டேட், உள்ளடக்கப் பொருட்கள் துவங்கி அதன் சத்துக்கள் குறித்த அத்தனையும் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், ரூ.1000 கொடுத்து வாங்கும் உடையில் வெறும் ரேட் கார்ட் மட்டுமே இருக்கும். அதைக் கேள்வி கேட்கவும் நாம் தயாராக இல்லை.

ஆனால், ஆர்கானிக் உடைகளைப் பொறுத்தவரை எவ்வளவு சதவீதம் காட்டன், மறுசுழற்சி விவரங்கள் உள்ளிட்ட அத்தனை விவரங்களும் இருக்கும், அப்படிக் குறிப்பிடப்படவில்லை எனில் தரச் சான்று கிடைக்காமல் லைசென்ஸ் கேன்சல் ஆகும் என்பதே ஆர்கானிக் மெட்டீரியல்களின் சிறப்பு.
சமீபத்தில் குழந்தைகளுக்கான ஆர்கானிக் உடைகள் பிராண்ட் ஆரம்பித்திருக்கும் அலியா பட் தனது சமூக வலைத்தளத்தில், ‘Ed-a-Mamma - இது எனது புது பிராண்ட். முற்றிலும் இயற்கையான காட்டன் நூல்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆர்கானிக் உடைகள். ஒவ்வொரு உடையும் ஒரு விதைப் பந்துடன் வரும். குழந்தைகளிடம் மரம் வளர்க்கும் பழக்கத்தை அதிகரிக்கவே இந்த முயற்சி. மேலும் உடையிலும் இயற்கை பாதுகாப்பு குறித்த தீம்கள் அடங்கிய வாசகங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.

‘ஹோம்க்ரோன்’ (வீட்டு வளர்ப்பு) என்னும் பெயருக்கு ஏற்ப முழுக்க முழுக்க வீட்டுத் தோட்டங்களில் வளரும் பருத்தி உள்ளிட்ட தாவரங்களை மட்டுமே இந்த உடைகள் தயாரிப்பில் பயன்படுத்து கிறோம். 2 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான உடைகளாக சில டாப் ஷாப்பிங் தளங்களில் Ed-A-Mamma உடைகள் கிடைக்கும்...’- இப்படி அலியா பட் அறிவிக்க, பிரபல ஜெய்ப்பூர் டிசைனர் மிதாலி பார்கவா முற்றிலும் தாவர இழைகளால் நெய்யப்பட்ட குழந்தைகள் உடைகளை ‘Littleens’ என்னும் பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இவருடைய உடைகள் அனைத்தும் ஆரஞ்சு தோல்கள், கற்றாழை, வாழைநார், மூங்கில் உள்ளிட்ட நார்கள் அடிப்படையிலான உடைகள். குழந்தைகளுக்கு எவ்வித சூழல் அலர்ஜி மட்டுமின்றி தோல் அலர்ஜியும் கூட வராது என்கிறார். ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய நாடுகளுக்கு தனது உடைகளை ஏற்றுமதி செய்யும் மிதாலி அதில் 15% முதல் 20% மட்டுமே இந்தியாவில் விற்பனையாவதாக வருத்தத்துடன் சொல்கிறார்.  

இவர்கள் தவிர இந்தியாவின் டாப் பிராண்ட்களில் ஒன்றான ஜெயின் அமர்’ஸ் க்ளாத்திங், பெண்களுக்கான சிறப்பு ஆர்கானிக் உடைகளை ‘மேடம்’ என்னும் புதிய டேக் பெயரில் வெளியிட்டுள்ளது. ‘‘நெறிமுறை மற்றும் நிலையான ஃபேஷன்’ என்னும் கொள்கையுடன் 100% கார்பன் கால்தடத்தை நிராகரிப்பதே எங்களின் கடமை என முதற்கட்டமாக பெண்கள் உடைகளில் இந்த ஆர்கானிக் மெட்டீரியல்களைக் கொண்டு வந்திருக்கிறோம்’ என்கிறார் ஜெயின் அமர்’ஸ் க்ளோத்திங் நிர்வாக இயக்குநர் அகில் ஜெயின்.

இம்மூவர் மட்டுமல்ல, ‘ஸாரா’, ‘ஹெச்&எம்’  உள்ளிட்ட பல டாப் பிராண்ட்கள் தங்களது இணையதளம் துவங்கி கடைகள் உட்பட ஆர்கானிக் உடைகளுக்கென தனிப் பிரிவே ஒதுக்கி உள்ளனர். ஆனால் இவர்கள் அனைவரின் ஒரே ஆதங்கம் ‘நாங்க ரெடி... ஆனால், இன்னமும் இந்தியா இந்த மாற்றத்தைப் பொறுத்தவரை வேகமெடுக்கவில்லை...’ என்பதே. காரணம், ஆர்கானிக் உடைகளை பெரும் பொருட்செலவில் உற்பத்தி செய்ய வேண்டும். அத்துடன் அதன் தாவர டைகளும் விலை அதிகம். எனவே, உடையின் ரேட்டும் காஸ்ட்லி.

ஆனால், இதன் பயன்களை அறிந்து முதலில் மேல் தட்டு மக்கள் வாங்கி அணிய முன்வந்தால் உற்பத்தி அதிகரிக்கும்... மேல்தட்டு மக்களைப் பார்த்து நடுத்தர மக்களும் பின்னர் அடித்தட்டு மக்களும் ஆர்கானிக் உடைகளை வாங்கத் தொடங்குவார்கள். அப்போது அதிகரிக்கும் உற்பத்தியால் விலை குறையும்... என்கிறார்கள். எல்லாம் சரி... ஆர்கானிக் உடைகளை மறுசுழற்சி செய்து மீண்டும் உடைகளையே தயாரிப்பார்களா..?

இதற்கு பதில், இல்லை என்பதே. உலகம் முழுக்க பல தன்னார்வலர் குழுக்கள் ஃபேஷன் இண்டஸ்ட்ரி கழிவுகளைக் கொண்டு பல விதங்களில் ஏழைகளுக்கு உதவி வருகின்றனர். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த அமண்டா முன்ஸ் என்னும் பெண் தன் 23 வயதில் துவங்கிய ஃபேஷன் தொண்டு நிறுவனம் வாயிலாக ஃபேஷன் தொழிற்சாலைகளின் கழிவுகளைக் கொள்முதல் செய்து ஏழை மாணவர்களுக்கு தேவையான ஸ்கூல் பேக், பர்ஸ்கள் உள்ளிட்ட பல பொருட்களைத் தயாரித்து வழங்கி வருகிறார்.

இதில் ரெபெக்கா மின்காஃப், ஸாஃபுல், மார்செஸா, லிஸ்போர்ட்சாக், ஸ்டெல்லா&ரூபி, சிஸ்டர், ஏரோசோல்ஸ் உள்ளிட்ட பல டாப் அமெரிக்க பிராண்ட் ஃபேஷன் உற்பத்தித் தொழிற்சாலைகள், அமண்டாவுக்குக் கை கொடுக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் குறைந்தது 10 ஆயிரம் ஏழை மாணவர்களுக்கு அமண்டா மற்றும் அவரது குழு உதவி வருகிறது.
                      

ஷாலினி நியூட்டன்