தியேட்டர்ல ரிலீஸ் ஆகறதில்ல... ஓடிடி ப்ளாட்ஃபார்ம்லயும் வாங்கறதில்ல... நாங்க என்னதான் செய்யறது..? கதறும் லோ பட்ஜெட் தயாரிப்பாளர்கள்



தமிழ் சினிமாவில் காலங்காலமாகத் தொடரும் வேதனை லோ பட்ஜெட் படங்கள்.‘‘மிகக் குறைந்த செலவுல தயாராகும் படம்னாலே தியேட்டர்கள் ரிலீஸ் செய்ய தயங்கறாங்க. அதையும் மீறி ரிலீசானா ஒரு ஷோதான் எங்களுக்கு கிடைக்குது. அதுவும் மார்னிங் அல்லது நூன் ஷோதான். ஈவினிங் ஷோ கிடைப்பது குதிரைக்கொம்பா இருக்கு...’’ என்ற புலம்பலை சினிமா தொடங்கிய நாள் முதல் கேட்கிறோம்.

இப்போது டெக்னாலஜி வளர்ந்து ஓடிடி ப்ளாட்ஃபார்ம் வந்திருக்கிறது. ‘‘இதுலயும் எங்க படங்களை வாங்க ஆளில்லை...’’ என கதறுகிறார்கள் லோ பட்ஜெட் தயாரிப்பாளர்கள். இந்தாண்டு ஜனவரியில் ஆரம்பித்து ஏப்ரலில் துவங்கிய லாக்டவுனுக்கு முன்னர் - அதாவது தியேட்டர்கள் மூடும் வரை கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 60 சின்ன படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகியுள்ளன. அத்தனையும் வந்த வேகத்தில் காணாமல் போனது தனிக்கதை. அதேநேரம் ரிலீஸுக்கு ரெடியாக கிடப்பில் இருக்கும் லோ பட்ஜெட் படங்கள் ஐநூறைத் தாண்டும் என்ற புள்ளிவிவரம் அதிர்ச்சியை அளிக்கிறது.

அப்படியென்றால் வெளியிடக் காத்திருக்கும் இந்த சின்ன பட்ஜெட் படங்களின் நிலை என்ன... எதனால் இந்தப் படங்களை புறக்கணிக்கிறார்கள்... என்பதை திரையுலகினரிடமே விசாரித்தோம். ‘‘இன்றைய காலகட்டம் சின்ன படங்கள் தயாரிக்க சரியான காலகட்டம் இல்ல...’’ என அதிர்ச்சியை கிளப்புகிறார் சி.வி.குமார். ‘அட்டகத்தி’, ‘பீட்சா’, ‘சூதுகவ்வும்’, ‘தெகிடி’ என மினிமம் பட்ஜெட் படங்களைத் தயாரித்து, அதிக வசூலையும், சக்சஸையும் அள்ளியவர் இவர்.‘‘இப்ப டெக்னாலஜி எளிதானதால சின்ன பட்ஜெட் படங்களைத் தயாரிக்கறது ஈசியா இருக்கு. ஆனா, அப்படித் தயாராகிற லோ பட்ஜெட் படங்களோட கன்டன்ட் ஆடியன்ஸை ஈர்க்கறதில்ல. கன்டன்ட் இருக்கற படங்களை ஓடிடியில் வாங்கறாங்க.

அதனால அப்படிப்பட்ட படங்கள் தியேட்டர்கள்ல ரிலீசானாலும் ‘நாம ஓடிடியில் ஃப்ரீயா பாத்துக்கலாம்’னு மக்கள் தியேட்டர்களுக்கு வராம விட்டுடறாங்க. சரியான கதையம்சங்களோடு இல்லாத படங்கள் டோட்டல் லாஸ்தான். அந்தப் படத்துக்காக போஸ்டர்
ஒட்டின காசு கூட திரும்ப வராது. ‘அப்புறம் எப்படி இவ்ளோ படங்கள் ரெடியாகுது’னு கேட்டா ஏதோ ஒரு நம்பிக்கையில் எடுக்கறாங்கன்னுதான் சொல்லணும்.

இது ஒரு கேம்பிளிங் வகை இண்டஸ்ட்ரி. அவனால முடியுதுனா நம்மளாலேயும் முடியும்னு நினைச்சு தயாரிப்பதுதான் அதோட தாத்பரியமே. கடைசி வரை முயற்சிப்போம் என்பதுதான் அவங்களோட ஐடியாலஜியாகவும் இருக்கு. முயற்சியும் பண்றாங்க. அந்த முயற்சி சரியான விதத்தில் இருக்கும்போது பிரச்னையில்ல. ஆனாலும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு இது சரியான காலகட்டமல்ல...’’ ஆணித்தரமாகச் சொல்கிறார் சி.வி.குமார்!
தயாரிப்பாளர் தனஞ்செயனும் இதே கருத்தை பகிர்கிறார். ‘‘சின்ன பட்ஜெட் படங்களை வாங்கறதில்ல என்பது உண்மை கிடையாது. சரக்கு இருக்கும் படங்களுக்கு ஓடிடியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்குது...’’ என பாசிட்டிவ்வாக பேசுகிறார்.

‘‘ஓடிடியில் வெளியான ‘ஏலே’, ‘மண்டேலா’ எல்லாம் சின்ன படங்கள்தானே... ‘செத்தும் ஆயிரம் பொன்’னுனு ஒரு படம். அதை ரெவன்யூ ஷேர்ல வாங்கினாங்க. அந்தப் படத்துக்கு அவ்ளோ ரீச். அதே மாதிரி ‘வி1’ படம். அதுல எல்லாருமே புதுமுகம்தான். அந்தப் படம் அமேஸான்ல மிகப்பெரிய ரீச். இந்தப் படங்கள்ல எல்லாம் கன்டன்ட் ஸ்டிராங்க். ஸோ, நல்ல கதை அம்சம் இருக்கும் படங்கள் ஏதாவது ஒரு ப்ளாட்
ஃபார்ம்ல ஸ்டிராங் ஆகிடும்.

ஒரு பெரிய ஆர்ட்டிஸ்ட் நடிச்ச படம்னா, அதுல ஆவரேஜ் கன்டன்ட் இருந்தாக் கூட ஆடியன்ஸ் அந்த படத்தை பார்த்திடுவாங்க. ஏன்னா, அந்த ஸ்டாருக்கான ஆடியன்ஸ் இருப்பாங்க. ஆனா, ஸ்டார் வேல்யூ இல்லாத படங்கள் கன்டன்ட் நல்லா இல்லேனா தேறுறது சிரமம் தான்...’’ அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் தனஞ்செயன்.த்ரிஷாவின் ‘கர்ஜனை’ இயக்குநரும் வரலட்சுமியின் ‘கன்னித்தீவு’ படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான சுந்தர் பாலுவும் தன் கருத்துகளை முன்வைக்கிறார்.

‘‘சினிமா நல்லா இருக்கற டைம்லயே சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைக்காது. சாட்டிலைட் ரைட்ஸ் கிடைக்காது. வெளிநாட்டு விநியோக உரிமை இருக்காது. ஒரு லோ பட்ஜெட் படம் ரிலீஸ் ஆகி, நல்லா இருக்குதுனு மவுத் டாக் வந்து வரவேற்பு அள்ளினாதான் எஃப்.எம்.எஸ். வியாபாரம், சாட்டிலைட் எல்லாம் தேடி வரும்.

ஆனா, படம் ரிலீஸ் ஆகுதோ இல்லையோ, சின்ன பட்ஜெட் படங்கள் எடுக்கறவங்க எடுத்துக்கிட்டேதான் இருப்பாங்க. யாரும் வாங்க முன்வரமாட்டாங்க என்பதெல்லாம் அந்த தயாரிப்பாளர்களுக்கு தெரியுமா தெரியாதா என்பது கூட தெரியலை.ஓடிடியில் கூட ஆர்ட்டிஸ்ட் வேல்யூ இருந்தா மட்டுமே படங்கள் வாங்கறாங்க. அவங்க கன்டன்ட் பத்தி கவலைப்படுறதில்ல. முன்னாடியெல்லாம் தியேட்டர்கள்ல ரிலீஸ் பண்ணும்போது ‘நீங்க ப்ரீ டிஸ்ட்ரிபியூஷன் கொடுங்க. ஓடினா காசு எடுத்துக்குங்க’னு சொல்லி படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணுவாங்க.

அதையேதான் இப்ப ஓடிடியிலும் பண்றாங்க. ‘நீங்க கொடுக்கற கன்டன்டை ஓடிடியில் போட்டு விடுறோம். என்ன ஷேர் வருதோ அதை எடுத்துக்குங்க’னு சொல்லிடறாங்க.இப்படி சின்ன பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்யறதுக்காக ஆந்திராவில் அல்லு அரவிந்த் ஆரம்பிச்ச ‘ஆஹா’ ஓடிடி, இன்னிக்கு பெரிய ஓடிடி தளத்துக்கு நிகரா இருக்குது.

அதை ஆரம்பிக்கும்போது சாதாரணமாகத்தான் ஆரம்பிச்சாங்க. சின்ன பட்ஜெட் படங்கள் மட்டுமில்ல, ஏற்கனவே ரிலீஸ் ஆன படங்களையும் அதில் வெளியிடவும் செய்யறாங்க. கூடவே அவங்களோட எக்ஸ்க்ளூசிவ் படங்களையும் ‘ஆஹா’ல கொண்டு வர... அது செம பிக்கப் ஆகி, இன்னிக்கு லீடிங் ஓடிடியா வளர்ந்திருக்கு.

அதைப்போல இங்கிருக்கும் தயாரிப்பாளர் சங்கமும் ஒரு ஓடிடி தளம் ஆரம்பிக்கலாம். சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஒரு வழி பிறக்கும்...’’ என தீர்வும் சொல்கிறார் சுந்தர் பாலு.அதுசரி... கன்டன்ட் பற்றி கவலைப்படாமல் ஒரு படம் ஏன் ரெடியாகிறது? அதற்கான அவசியம்தான் என்ன... ரகசியங்களை உடைக்கிறார் பெயர் சொல்ல விரும்பாத... அதேநேரம் திரைப்படத் துறையில் நாற்பதாண்டுகளாக தயாரிப்பாளராக வலம் வருபவர்.

‘‘வெறும் பத்து லட்சத்துல கூட படங்கள் ரெடியாகிட்டுதான் இருக்கு. இன்னிக்கு ஒரு கோடியில் ஒரு பிராப்பர் படம் பண்ணிட முடியும். இந்த மாதிரி படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கலைனு பொத்தாம் பொதுவா சொல்லிட முடியாது. சென்ற லாக்டனுக்குப் பிறகு ஐம்பது சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர் திறக்கலாம்னு அறிவிப்பு வெளியான நாள்ல இருந்து இப்ப வரை, ‘மாஸ்டர்’, ‘சுல்தான்’, ‘ஈஸ்வரன்’ மாதிரி ஒரு சில பெரிய படங்கள் தவிர வெளியான அத்தனை படங்களும் லோ பட்ஜெட் படங்கள்தான்.

ஓடிடியில் ‘வி1’, ‘அந்தகாரம்’ படங்களை வாங்கி வெளியிட்டதற்குக் காரணம் அதோட கன்டன்ட். கதையம்சம் வலுவா இருந்தாக் கூட, சில நல்ல படங்களை ஓடிடியில் வாங்கறதில்ல. அதுக்கு உதாரணம், மலையாளத்தில் செம பெயர் வாங்கின ‘த கிரேட் இண்டியன் கிச்சன்’.
அவங்க போகாத ஓடிடி ப்ளாட்ஃபார்ம்கள் கிடையாது. எங்கேயும் படத்தை வாங்கிக்கல. வேற வழியில்லாம ஒரு சாதாரண ஓடிடியில்தான் ரிலீஸ் பண்ணினாங்க. அது பெரிய வைரல் ஆன பிறகுதான் பிரைம்ல வாங்கி ரிலீஸ் பண்ணினாங்க.

சினிமாவில் ஒரு படத்தை விற்கவோ, இல்ல ரிலீஸ் பண்ணவோ மீடியட்டர்கள்தான் இப்ப வலுவான காரணியா இருக்காங்க. பெரிய கம்பெனிகளுக்கு சரியான மீடியேட்டர்கள் இருப்பாங்க. அவங்க சரியா வழிநடத்தவும் செய்வாங்க. ஆனா, சின்ன பட்ஜெட் படங்களுக்கு அப்படியில்ல. வெறுமனே கமிஷனுக்காக மட்டும் ஒர்க் பண்ற மீடியேட்டர்கள் இங்கே அதிகம். அவங்க எந்த புராடக்ட்டை எடுத்துட்டுப் போய் புஷ் பண்றாங்களோ அதான் ஓடிடியிலோ, தியேட்டர்களிலோ வெளியாகுது. கன்டன்ட் மட்டுமில்ல... கரெக்டான லிங்க்கும் இருந்தா மட்டுமே ‘த கிரேட் இண்டியன் கிச்சன்’ மாதிரி படங்கள் வெளிவரமுடியும்.

வாரத்துக்கு பத்து படங்கள் வெளியானா அதுல எட்டு படங்கள் உப்புமா படங்களா வந்து மாட்டிக்கும். அந்தப் படங்களின் நிலை என்ன தெரியுமா..? அது ரிலீசானாலே பெரிய வெற்றிதான். ‘அதான் உப்புமா படம்னு எடுக்கும்போதே தெரியுமே... அப்புறம் ஏன் அப்படிப் படங்களை எடுக்குறாங்க’னு கேட்காதீங்க. அது தனிக்கதை. தனி டாபிக். ‘ஊர்ல இருந்து மஞ்சப்பையை தூக்கிட்டு படம் தயாரிக்க வந்துட்டாரு’னு சொல்வாங்களே... அப்படி ஆட்கள் கரெக்ட்டா மாட்டுறது கமிஷன் மீடியேட்டர்கள் கண்ணுலதான்.

சினிமா பத்தி எந்த முன் அனுபவமும், விபரமும் இல்லாத தயாரிப்பாளர்களிடம் உப்புமா இயக்குநர், உப்புமா ஆர்ட்டிஸ்ட்கள்னு கோர்த்து விடுற மீடியேட்டர்கள் இங்கே அதிகம். அவங்களாலதான் இத்தனை சின்ன படங்கள் ரெடியாகுது. வெறுமனே பணத்தோடு வந்த தயாரிப்பாளர்களுக்கு யாரை எப்படி அணுகுவதுனு தெரியாததால இப்படி மீடியேட்டர்களிடம் மாட்டி, ஒரே படத்தோட பேக்கப் ஆகிடறாங்க.

இன்னொரு கதை, நானே தயாரிச்சு, நானே ஹீரோவா நடிக்கறேன் என்கிற ஆசையில் வருபவர்களும் அப்படி உப்புமா மீடியேட்டர்கள் கண்ணுலதான் சிக்குவாங்க.சரி; பாயிண்ட்டுக்கு வருவோம். இங்க எல்லாரும் கன்டன்ட் அவசியம்னு சொல்றாங்க. கன்டன்ட் இருந்தா ஓடிடியில் கொண்டு போய் சேர்த்திட முடியும். ஆனா, அப்படிப்பட்ட படங்கள் தியேட்டர்கள்ல வேலைக்கு ஆகாது. கன்டன்ட் உள்ள படத்தை டாப் ஹீரோவோ அல்லது டாப் நிறுவனமோ தயாரிச்சா மட்டும்தான் அந்தப் படங்கள் தியேட்டர்கள்ல ரிலீசாகும். இல்லேனா, எதாவது ஒரு ஷோ, ரெண்டு ஷோ கொடுத்து படத்தையும் கெடுத்து, பெயரையும் கெடுத்திடுவாங்க.

இல்லேனா, மவுத் டாக் ஓவரா கிரியேட் ஆகணும். ட்ரீம் வாரியர்ஸ் ‘அருவி’யை ரிலீஸ் பண்றதுக்குள்ள அவங்க நாக்கு தள்ளிடுச்சு. அந்தப் படம் கொடுத்த அனுபவத்தால, ‘இனிமே ஆர்ட்டிஸ்ட் வேல்யூ இல்லாம எடுக்கக் கூடாது’ங்கிற முடிவுக்கு வந்திருப்பதா சொல்றாங்க...’’ என உண்மைகளைப் போட்டுடைக்கிறார் அவர்.எது எப்படியோ, தயாரித்து முடித்த படங்கள் அத்தனைக்கும் நல்ல வழி பிறக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும் எதிர்பார்ப்பும்!

மை.பாரதிராஜா